பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / கொள்கை விளக்கக் குறிப்பு / மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாகம் 1 - 2018 - 2019
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாகம் 1 - 2018 - 2019

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2018 - 19 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் முறைகளில் தரம்வாய்ந்த மாற்றங்களைப் பயன்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. சிறந்த கல்வி வல்லுநர்களின் உதவியோடு, 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்குக் கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை உருவாக்கும் பொறுப்பும் இந்நிறுவனத்திற்கு உள்ளது. புதுமையான கற்பித்தல் முறைகளில் ஆசிரியர்களின் திறன்களை வளர்ப்பதில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பெரிதும் ஈடுபட்டுள்ளது. ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுத் திட்டங்களை இந்நிறுவனம் வடிவமைத்து வருகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் துணையோடு தேவை அடிப்படையிலான தரமான பணியிடை பயிற்சியினை வழங்குவதில் இந்நிறுவனம் உதவி புரிகிறது. வகுப்பறைகளில் எழும் கல்வி சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணவும் ஆசிரியர்களைச் சிந்தனைத் திறன் கொண்ட கல்வியாளர்களாக மாற்றவும் உதவும் செயல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உதவுகிறது.

அண்மையில், தகவல் தொழில்நுட்பத்தின் உதவியோடு மாணாக்கர்களை 21 நூற்றாண்டிற்கேற்ற கற்போராக மாற்றவும், அவர்கள் பல்வேறு மெண்திறன்களைப் பெறவும் உதவுவதில் இந்நிறுவனம் முனைந்துள்ளது. பள்ளிப் படிப்பை முடித்தபின் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாணவும் தகுந்த உயர்கல்வி மற்றும் பணிகளைத் தேர்வுசெய்யவும் மாணாக்கர்களுக்கு வழிகாட்டும் திட்டத்தையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் குழந்தைகளின் தரமான கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்துவதில் மின்னியல் தொழில்நுட்பத்தினை முழுமையாகப் பயன்படுத்திக் குழந்தைகளின் கற்றல் அடைவுத் தரத்தினை மேம்படுத்துவதில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முன்னிலை வகித்து வருகிறது.

தொலைநோக்கு

நடைமுறை வாழ்க்கைச்சூழலுடன் தொடர்புபடுத்தி நுண்ணறிவுத் திறனுடன் மாணாக்கர்கள் கற்கும் வகையில், எண்ணியல் பாடங்கள் மற்றும் துணைக்கருவிகள் ஆகியவற்றைக் கொண்டு வகுப்பறைகளை வளப்படுத்தி, மெய்நிகர் வகுப்பறைகள், ஊடாட்ட ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றைக் கொண்ட மின்வழிக்கற்றல் தளத்துடன் எண்ணியல் முறையில் முனைந்து செயல்படும் பள்ளிக் கல்வி முறையை முன்னேற்றுவது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

நோக்கங்கள்

• கலைத்திட்டம், பாடத்திட்டம், பாடநூல்கள், துணை நூல்கள் ஆகியவற்றை உருவாக்குதல்

ஆசிரியர்களுக்கான பணிமுன் மற்றும் பணியிடைப் பயிற்சிகளை ஒருங்கிணைத்தல்

• புதுமையான கல்வி உத்திகளையும் பயிற்சிகளையும் உருவாக்கிப் பரவலாக்குதல்

* கற்றல் துணைக் கருவிகள், பல்லூடக எண்ணியப் பொருள்கள் மற்றும் சார்ந்த விளக்க நூல்கள் ஆகியவற்றை உருவாக்குதல்

* பள்ளிக்கல்வியின் தரமேம்பாட்டிற்கும் அதனைத் தகுந்த குறைதீர் தொடர் நடவடிக்கைகள் வாயிலாகத் தக்கவைப்பதற்கும் தேவையான அமைப்புகளையும் அணுகுமுறைகளையும் வடிவமைத்தல், நடை முறைப்படுத்துதல் மற்றும் மதிப்பிடுதல்

* பள்ளிக்கல்வி சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், உதவுதல், ஊக்குவித்தல் மற்றும் வழிகாட்டல்

* ஆசிரியர்களின் பணி மேம்பாட்டிற்கான செய்திமடல்கள், ஆய்விதழ்கள் ஆகியவற்றை வெளியிடுதல்

*கல்வி மற்றும் பிற தொடர் சேவைகளை வழங்குவதற்காக, சார்ந்த இயக்குநரகங்கள் மற்றும் துறைகள், பல்கலைக் கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், பிற கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள்/முகமைகள் ஆகியவற்றுடன் இணைந்து செயலாற்றுதல்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களின் மறுசீரமைப்பு

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் வழிகாட்டுதல்களின்படி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களை வலுப்படுத்தும் பொருட்டு, மிக அதிக அளவில் பணிகளை வழங்கிடவும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்கள் மறுகட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

இப்புதிய கட்டமைப்பு பின்வரும் 5 பிரிவுகளை கொண்டுள்ளது.

கலைத்திட்டக் கல்விப்பிரிவு:

இப்பிரிவானது கலைத்திட்டப் பாடங்கள், தொழிற்கல்விப் பாடங்கள், கலை மற்றும் பணி அனுபவப் பாடங்களை உருவாக்குவதற்காக அவை தொடர்புடைய கலைத்திட்ட வடிவமைப்பு, பாடத்திட்ட வடிவமைப்பு, பாடப்புத்தகம் மற்றும் பாடம் சார்ந்த கூடுதல் புத்தகங்களான மாணாக்கர் கையேடுகள், ஆசிரியர் கையேடுகளை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ளும்.

கல்வியியல் ஆய்வு கள ஆய்வு மற்றும் மதிப்பீட்டு பிரிவு:

இப்பிரிவானது மாணாக்கர்கள் கற்றலின் காலமுறை மதிப்பீடுகளான மாநில அடைவு ஆய்வு மற்றும் தேசிய அடைவு ஆய்வு ஆகியவற்றை நடத்துதல், தேசிய அடைவு ஆய்விற்கு பிந்தைய செயல்பாடுகளை வடிவமைத்தல் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகிய முக்கியப் பணிகளை மேற்கொள்கிறது. மேலும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது, மாணாக்கர்களின் அடைவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளை ஆய்ந்தறியவும் அதன் முடிவுகளை தேவையின் அடிப்படையில் ஆசிரியர் பயிற்சிகளை வடிவமைப்பதற்கும் பயன்படுத்த தர நிலை ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது.

ஆசிரியர் கல்வி, தலைமைத்துவம் மற்றும் மேலாண்மைப் பிரிவு:

இப்பிரிவு, ஆசிரியர்களை உருவாக்குவதில் தற்போது எழும் புதிய முறைகளை கண்டறிவதில் கவனம் செலுத்தும், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட அளவிலான கல்வித்துறை தலைமை அலுவலர்கள் ஆகியோரின் தலைமைப் பண்புகளை மேம்படுத்தும் பொருட்டு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய கல்வியியல் திட்டமிடல் மற்றும் நிருவாகப் பல்கலைக்கழகம், அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை மற்றும் மும்பையிலுள்ள டாடா சமூக அறிவியல் நிறுவனம் ஆகியவற்றுடன் சுமூகமாக ஒன்றிணைந்து செயல்படும்.

தகவல்தொடர்பு தொழில்நுட்பப்பிரிவு:

இப்பிரிவு, திக்ஷா தளத்தின் மூலம் பாடம் தொடர்பான மின்னணு பாடப்பொருள் உருவாக்குதல், குறைகளைக் களைதல், அவ்வளங்களைப் பரவலாக்குதல் மற்றும் பரிமாற்றம் செய்தல் போன்றவற்றிற்கான பணித்திறனை வளர்க்கிறது.

திட்டம் மற்றும் மேற்பார்வைப்பிரிவு:

இப்பிரிவானது அனைத்துப் பயிற்சி நிகழ்வுகளையும் மேற்பார்வையிடுதல் மற்றும் மாவட்ட சார்ந்த ஆசிரியர்களின் தேவைகளை நிறை வேற்றுவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் பயிற்சிக்கான தேவைகள் குறித்த பின்னூட்டத்தை வழங்கவும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கல்வியாளர்கள் மற்றும் மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுவைப் பள்ளிகளைப் பார்வையிடுமாறு நெறிப்படுத்துகிறது.

செயல் மற்றும் பணிகள்

*நெறிமுறைகள், கல்விக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவதில் மாநிலத்தின் முதன்மைக் கல்வி அமைப்பாகச் செயல்படுதல்

*உலகம் முழுவதும் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் விரைவான மாற்றங்களைக் கருத்தில் கொண்டு கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் உருவாக்குதல்

*குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009க்கு ஏற்ப, ஆசிரியர் மையக் கற்பித்தலை மாணாக்கர் மையக் கற்றலாக மாற்றும் வகையில் கற்றல் அடைவுகளைக் கடைப்பிடிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்தல்

*மாநிலம் முதல் வட்டாரம் வரையிலும் தொடக்க நிலை முதல் மேல்நிலை வரையிலும் அனைத்து நிலைகளுக்கும் தேவை அடிப்படையிலான பயிற்சித் திட்டங்களைத் திட்டமிடல், வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல்

*கடினப் பாடப்பொருளை விளக்கிக்கூற ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் பொருத்தமான எண்ணியல் முறைப் பாடப்பொருளை உருவாக்குதல்

*தேசிய மற்றும் மாநில அளவிலான அடைவுத் தேர்வுகளின் முடிவுகளை ஆராய்ந்து மாணாக்கர்களின் கற்றல் அடைவுகளை பாதிக்கும் இடைவெளிகளைக் கண்டறிந்து பொருத்தமான குறைதீர் நடவடிக்கைகளை வடிவமைத்தல்

*தொடக்க மற்றும் உயர்தொடக்க நிலைகளுக்கு தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ள கற்றல் அடைவுகளை உள்ளடக்கிய உத்திகளைப் பயன்படுத்தி கற்றல் வெளியீடுகளை மேம்படுத்துதல்

*ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல் உத்திகளை அடையாளம் காணல், ஆவணப்படுத்துதல் மற்றும் தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அனைவரும் பயன்பெறச் செய்தல்

*மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கல்வியாளர்களைக் கொண்டு முறையான பள்ளிப்பார்வை மேற்கொண்டு அவர்களின் வாயிலாக அவ்வப்போதே ஆசிரியர்களுக்குப் பணிசார் உதவிகளை வழங்குதல் கணினிவழிக் கற்றல் தளம் மற்றும் ஊடாட்டுத் திறன் பலகைகளைப் (Interactive Smart Board) பயன்படுத்தி புத்தாக்கம் செய்யப்பட்ட எண்ணியல்முறைப் பாடப்பொருள் மற்றும் கற்பித்தல் முறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்தாளர்களுக்கு பணித்திறன் பயிற்சி வழங்குதல்

*பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்திற்கு ஆய்வு மற்றும் கல்விசார் உதவிகளை வழங்குதல்

*காலமுறை ஆய்வுகளின் வாயிலாக, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் செயல்பாடுகளை மதிப்பிடுதல் மற்றும் சீர்தூக்கல்

*மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், வட்டார வளமையங்கள் மற்றும் குறு வளமையங்கள் ஆகியவற்றின் அடிப்படைப் பணித்திறனை மேம்படுத்த பரிந்துரைகளை வழங்குதல்

*மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மின்னியத் தளத்தைப் பயன்படுத்திக் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்கும் பணிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்

*ஆசிரியர் பயிற்றுநர்களின் பணித்திறன்களை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

*ஒற்றைச் சாளர முறையில் தொடக்கக் கல்விப் பட்டயப் பயிற்சிக்கு மாணாக்கர்களைத் தெரிவு செய்தல்

*தொடக்கக் கல்விப் பட்டயப் பயிற்சிக்கான ஆசிரியர் கல்விக் கலைத்திட்டத்தை வடிவமைத்தல் மற்றும் அவ்வப்போது சீரமைத்தல்

*தொலைதூரப் பகுதிகளிலுள்ள மாணாக்கர்களின் கற்றலை மேம்படுத்த கல்விச் செயற்கைக்கோள் வசதியை முறையாகப் பயன்படுத்துதல்

*அங்கன்வாடிப் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தத் தேவையான பயிற்சிகளை வழங்குதல்

*மாநிலக் கல்வி மேலாண்மை மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக மாவட்ட அளவிலான அனைத்துக் கல்வி அலுவலர்களுக்கான பயிற்சிகளை ஒருங்கிணைத்தல்

*தமிழ்நாடு தொலைநோக்கு 2023 இலக்கினை அடைதல் மற்றும் பணிகளுக்கான வழிகாட்டல் மற்றும் உயர்படிப்புகளைத் தேர்வு செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் உயர்நிலை மற்றும் மேனிலை நிலைகளில் கற்றலைச் சீரமைத்தல்

*ஆசிரியர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வியில் உரிய மதிப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துதல்

*மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் கல்வியாளர்கள் நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட ஏற்பாடு செய்தல்

*தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகம், மண்டல ஆங்கில நிறுவனம், தென்னிந்தியா, பெங்களூரு, மண்டல கல்வி நிறுவனம், மைசூரு, கலாச்சாரம் மற்றும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், தேசிய அமைப்புகளான ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல நிதியம், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் மற்றும் பல அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டுக் கல்வித்தரம் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணத் தக்க ஆதரவைப் பெறுதல்

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மறுவகைப்படுத்துதல் செய்தல்

கலைத்திட்டம் மற்றும் இதர காரணங்களினால் ஆசிரியர்களின் பணியிடை பயிற்சிக்கான தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு 20 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் உள்ள வசதிகளை கொண்டு தனிச்சிறப்புடன் பணியிடை பயிற்சிக்காகவே பயன்படுத்திக் கொள்ளவும் மற்றும் மீதமுள்ள 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பணிக்கு முன்பான பயிற்சியினையும் பணியிடை பயிற்சியினையும் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் இது குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மறுவகை படுத்தப்பட்டுள்ளன.

ஆய்வுப்புலம் - 2017-18 இன்செயல்பாடுகள்

ஆய்வுத்திட்டங்கள்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைந்து ஆய்வு முன்மொழிவுகளைக் கூர்ந்தாய்ந்து மேலாய்வு செய்ய இரண்டு பணிமனைகளை நடத்தியது. இப் பணிமனைகளின்போது நடைபெற்ற கருத்தாடல் அமர்வுகள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கல்வியாளர்கள், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்துதல் சார்ந்த ஆய்வு முறைகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு முடிவைக் கணித்தல் ஆகியவற்றில் திறன்பெற வழிவகுத்தன. இதன்வழி மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கல்வியாளர்கள் 64 பேர் பயனடைந்துள்ளனர். இப்பணிமனையின்போது மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கல்வியாளர்களால் முன்வைக்கப்பட்ட 32 ஆய்வு முன்மொழிவுகளும் மறுசீரமைக்கப்பட்டு இறுதி செய்யப் பட்டன. அனுமதிக்கப்பட்ட இந்த ஆய்வுகள் அனைத்தும் இப்பொழுது நிறைவடையும் நிலையில் உள்ளன. ஆய்வுச் செயல் திட்டங்களின் முதன்மையான பகுதிகளாக அமைந்துள்ளவை பின்வருமாறு:-

*பள்ளிகளில் சிறந்த கற்பித்தல் முறைகள் குறித்த தனியாள் ஆய்வுகள்

*முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டின் தாக்கம்

*வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளின் கல்விசார் பிரச்சினைகள்

*நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கற்போரின் பிரச்சினைகள்

*கல்வியில் மாணாக்கர்களின் பின்னடைவுக்கான காரணங்கள் அதைக் களைவதற்கான உத்திகள்

*தொடக்கப்பள்ளி மாணாக்கர்களின் படித்தல், எழுதுதல் மற்றும் பேசுதலில் காணப்படும் சிக்கல்கள்

*கணிதம் கற்றலில் காணப்படும் சிக்கல்கள்

*கற்றல் குறைபாடுகளைக் கண்டறிதல் மற்றும் அவற்றைக் களைவதற்கான இடையீடுகள்

மாவட்ட அளவிலான செயலாராய்ச்சிகள்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தொடர்ச்சியாக மண்டல அளவிலான ஆராய்ச்சிப் பணிமனைகளை நடத்தி 308 செயல் ஆராய்ச்சி முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் வழங்கியது. இச்செயலாராய்ச்சிகள் பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டன. ஆராய்ச்சிகள் மற்றும் செயலாராய்ச்சிகளின் முடிவுகள் தொகுக்கப்பட்டு அவற்றை ஆராய்ச்சித் தொகுப்பறிக்கையாகத் தயாரித்து மாவட்ட மற்றும் மாநிலக் கருத்தரங்கம் வாயிலாகப் பள்ளிக் கல்வித்துறையின் அனைத்துநிலை உறுப்பினர்களுக்கும் பரவலாக்கப்படும்.

தரமான பணி முண்பயிற்சி

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மாணவ ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கற்றல் கற்பித்தலில் புதுமையான உத்திகளையும், அணுகுமுறைகளையும் மாணவ ஆசிரியர்கள் பெறும் வகையில் பணிமுன்முயற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவஆசிரியர்கள் அறிவியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை சிறப்பாக கற்பிக்க ஏதுவாக ஆய்வகங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவ ஆசிரியர்களின் கணினி பயன்பாட்டினை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு கணினி பயிற்சி அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. மாணவ ஆசிரியர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் வகையில் யோகா பயிற்சிகளை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. நிறுவன வளாகங்கள் துய்மையாகவும் பசுமையாகவும் பராமரிக்கப்பட்டு வருவதுடன் மாணவ ஆசிரியர்களுக்கு தூய்மையை கடைபிடிக்கும் பழக்கமும் ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள்

மொத்தத்தில் 362 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வழங்கப்படும் தொடக்கக்கல்வி பட்டயப் படிப்பில் முதலாமாண்டில் 4807 மாணாக்கர்களும் இரண்டாம் ஆண்டில் 6905 மாணாக்கர்களும் பயின்று வருகின்றனர்.

மாவட்ட ஆசிரியர் கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் வழங்கப்படும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பயிற்சிகள்

ஆசிரியர் தகுதித் தேர்வை மாணவ ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப் பட்டயப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்வதை உறுதிப்படுத்த அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. உள்ளூர் வல்லுநர்களின் உதவியுடன் அனைத்து இரண்டாமாண்டு மாணாக்கர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பயிற்சியினை இந்நிறுவனம் அளித்து வருகின்றன. இதற்கான மாதிரித் தேர்வுகளும் செய்முறை அமர்வின் பொழுது நடத்தப்படுகின்றன.

கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல்

அரசாணை (நிலை) எண் 146, பள்ளிக்கல்வித் துறை, நாள் 30.06.2017 இன்படி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் எம். அனந்தகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் கலைத்திட்ட உருவாக்கக் குழு உருவாக்கப்பட்டது. மேலும் கணிதம், அறிவியல், கலை மற்றும் மனித நேய பாடங்களுக்கான கலைத் திட்டங்களை உருவாக்குவதற்காகத் துணைக்குழுக்களும் உருவாக்கப் பட்டன.

சென்னை , கலைவாணர் அரங்கில் 20.07.2017 அன்று புதிய கலைத்திட்டம் உருவாக்குதல் சார்ந்த கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில், கல்விமுறையில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசிக்க ஆசிரியர்கள், கல்வியாளர்கள், கல்விச் சிந்தனையாளர்கள், உலகளாவிய கல்வி வல்லுநர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் அழைக்கப்பட்டிருந்தனர் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இவ்வல்லுநர்கள் பள்ளிக்கல்விக் கலைத் திட்டத்தினைச் சீரமைக்கப் பல்வேறு கருத்துகளையும் பரிந்துரைகளையும் வழங்கினர்.

வரைவுக் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டு, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இவற்றை , உலகம் முழுவதிலும் 20 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 2 இலட்சம் கல்வி ஆர்வலர்கள் முழுப்பாடத்திட்ட ஆவணத்தை மதிப்பீடு செய்யும் நோக்கில் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது சார்ந்து 7000 ஆக்கப்பூர்வமான கருத்துகள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பெறப்பட்டு வல்லுநர்களின் சீரிய ஆலோசனைகளுக்குப் பிறகு பாடத்திட்டம் செறிவூட்டப்பட்டு இறுதிசெய்யப்பட்டது.

புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப பாடநூல்களைத் தயாரித்தல்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பாடநூல்களை உருவாக்குவதற்கெனப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இருந்து புதிய குழுக்களை உட்படுத்திப் பாடநூல்கள் உருவாக்கும் பணியைத் தொடங்கியது. பாடநூல் தயாரித்தலில் முதல்கட்ட பணிகள் நிறைவுபெற்றுள்ளன. 1, 6, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்குச் சிறுபான்மை மொழிப்பாடங்கள் உட்பட 174 தலைப்புகளில் நூல்கள் உருவாக்கப்பட்டு அச்சிடப்பட்டன. கற்பித்தலுக்கான பொருட்கள் தயாரித்தலில் ஒரு பகுதியாகப் புதிய உத்திகளைச் செயல்படுத்த மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் புதிய பாடப்புத்தகத்திலுள்ள கருத்துகளை வகுப்பறையில் ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்த ஆசிரியர் கையேடு தயாரிக்கப்படுகிறது. குழந்தைகளின் கூர்சிந்தனைத் திறனை வளர்க்கும் வகையில் பயிற்சி ஏடுகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இணைய தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட விரைவுத் துலக்கக் குறியீடுகள், புதிய பாடநூல்களைக் காணொலிக் காட்சிகளுடன் இணைப்பதால் பாடக்கருத்துகளைக் கற்பதை மேம்படுத்தும். அனைத்து வகுப்புகளுக்கும் பாடநூல்களை 2018-19 ஆம் கல்வியாண்டின் நிறைவுக்குள்ளேயே முழுமையாகத் தயாரித்து முடிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை,

2.93548387097
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top