பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / கொள்கை விளக்கக் குறிப்பு / மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாகம் 2 - 2018 - 2019
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாகம் 2 - 2018 - 2019

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாகம் 2 - 2018 - 19 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பணியிடைப் பயிற்சிகளை வழங்குவதில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் பங்கு

ஆசிரியர்களின் திறன் மேம்பாடு ஒரு தொடர் செயலாகும். பள்ளிகளில் பாடப்பகுதிகளை சிறப்பாக மாணவர்களிடையே கொண்டுசெல்லும் வகையில் ஆசிரியர்களின் பணித்திறனை மேம்படுத்தும் முக்கியப் பங்கினைப் பணியிடைப் பயிற்சிகள் ஆற்றுகின்றன. பள்ளி வகுப்பறைகளைப் பார்வையிட்டு ஆசிரியர்களுடன் கலந்துரையாடி மாணாக்கர்கள் அடைந்துள்ள கற்றல் விளைவுகளின் குறைபாடுகளைக் கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு பயிற்சிக் கையேடுகளைத் தயாரித்துக் குழந்தைகளின் கற்றல் முறைகளில் தரம் சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. வகுப்பறையில் உள்ள கற்றல் பிரச்சினைகளைக் களைவதற்கான புதிய உத்திகளை ஆய்வுசெய்யும் நோக்கில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயலாராய்ச்சிகளை மேற்கொள்கின்றன. ஆசிரியர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இத்தகைய ஆய்வுகள், ஆசிரியர்களின் பணித்திறனை மேம்படுத்தி அவர்களைக் கூர்சிந்தனைத்திறன் மிக்கவர்களாகவும், புதிய முயற்சிகளை நடைமுறைப் படுத்துபவர்களாகவும் மாற்றுகின்றன. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் முழுமையான ஆசிரியர் மேம்பாட்டு முயற்சிகளான புதிய உத்திகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தலைக் காணொலிகளாகப் பதிவுசெய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு உதவி புரிகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தாங்கள் கற்றவற்றை வகுப்பறைக்குக் கொண்டு செல்வதில் ஏற்படும் பாடப்பொருள் பரிமாற்ற இழப்பைத் தவிர்க்கும் பொருட்டு, தனித்தனிப் பயிற்றுநர் மற்றும் பயிற்சியாளர் கையேடுகள் தயாரித்து வழங்கப்பட்டன.

பணியிடைப்பயிற்சி - தொடக்கநிலை

தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடங்களில் கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள் நடத்தப்பட்டன. உள்ளூர் சுற்றுப்புற வளங்கள் மற்றும் துணைக்கருவிகளை அறிவியல் கருத்துக்களைப் புரிந்துகொள்ளும் வகையில் அறிவியல் மற்றும் கணிதப் பாடப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. வகுப்பறைகளில் பல்லூடகப் பயன்பாட்டை ஒருங்ணைத்தல்” சார்ந்து ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். மொத்தத்தில், பல்வேறு பாடம் சார்ந்த பயிற்சிகள், பள்ளிச் சுகாதாரம் மற்றும் குழந்தை உளவியல் போன்ற பொதுவான பயிற்சிகளால் 1,14,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பயனடைந்துள்ளனர்.

பணியிடைப்பயிற்சி - உயர்தொடக்க நிலை

ஐந்து வகையான பயிற்சித் திட்டங்களில், இரண்டு நாள் பாடம், செய்யுள், இலக்கணம் கற்பித்தல் பயிற்சியும், இரண்டு நாள் நடைமுறை இலக்கணம் மற்றும் வகுப்பறைத் தொடர்புப் பயிற்சியும் கணிதத்திறன் வளர்த்தல் மற்றும் கணித உபகரணப்பெட்டி பயன்படுத்துதல் பயிற்சியும் மூன்று நாள் அறிவியல் உபகரணப்பெட்டி மற்றும் உள்ளூர் சுற்றுப்புறவளங்களை பயன்படுத்துதல் பயிற்சியும், இரண்டுநாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள் மற்றும் இயற்கை வளங்களை நிலவரைபட நூலைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளுதல் மற்றும் கண்டறிதல் பயிற்சியும் நடத்தப்பட்டன. மேற்காண் பயிற்சிகளில் 70,000 ஆசிரியர்கள் பயனடைந்தனர். இதுதவிர மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தேசியக் கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து 6950 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளித் தலைமைத்துவமேம்பாட்டுப் பயிற்சி நடத்தப்பட்டது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்துடன் இணைந்து பட்டதாரி ஆசிரியர்களுக்குத் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை நடத்தியது. இப்பயிற்சியில் பாடக்கருத்துகளைப் புரியவைத்தல், மாணாக்கர்களை அரசுத்தேர்வுகளுக்கு ஆயத்தம் செய்தல், மீத்திறன் மிக்க மாணாக்கர்கள் மற்றும் மெதுவாகக் கற்போர் ஆகியோருக்கு ஏதுவான கற்பித்தல் முறைகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. பாடம் சார்ந்த பயிற்சி மட்டுமல்லாது, வகுப்பறைச் செயல்பாடுகளில் தொழில்நுட்பத்தினை இணைத்தல் மற்றும் வளரிளம் பருவ மாணாக்கர்கள் வழிகாட்டுதல் அளிக்க உளவியல் வழிகாட்டுதல் ஆகியவை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சியாக வழங்கப்பட்டது. இப்பயிற்சியின் வாயிலாக 37,630 பட்டதாரி ஆசிரியர்கள் பயனடைந்தனர்.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வகுப்பறைச் செயல்பாட்டுத் திறன்கள் மற்றும் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் பணியிடைப் பயிற்சியினை அளித்தது. இது தொடர்பான பயிற்சிக் கட்டகம் தயாரித்தல் பணிமனை நாமக்கல்லில் 2017, ஏப்ரல் 25 முதல் 28 வரை நடைபெற்றது. இப்பணிமனையில், ஒவ்வொரு பாடத்தைச் சார்ந்த 15 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சியில் வழங்கப்பட வேண்டிய கருத்துகள் குறித்து விவாதித்தனர். முதல் நிகழ்வாக, ஒவ்வொரு பாடத்திலும் தெரிவுசெய்யப்பட்ட கருத்துகள், துணைக் கருத்துகள் மற்றும் முக்கிய கருத்துகளை ஒவ்வொரு பாடக்குழு வல்லுநர்களும் கண்டறிந்தனர். மேலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புப் பாடப்பொருளுக்கும் 6 முதல் 10 ஆம் வகுப்புப் பாடப்பொருளுக்கும் இடையிலமைந்த தொடர்புகள் கண்டறியப்பட்டன. தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனப் பாடத்திட்டம் மற்றும் மாநிலப்பாடத்திட்டம் ஆகியன ஒப்பு நோக்கப்பட்டு, இரண்டு பாடத்திட்டத்திலும் விடுபட்ட பாடப்பொருள்கள் கண்டறியப்பட்டன. இச்செயல்பாடு, இயற்பியல், கணிதம், வேதியியல், உயிர்-தாவரவியல், உயிர்-விலங்கியல், வரலாறு, பொருளாதாரம், கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய 10 பாடங்களுக்கும் மேற்கொள்ளப்பட்டது.

மாநில அளவிலான கட்டகம் தயாரித்தல் பணிமனை கிருஷ்ண கிரியில், 2017 மே மாதம் 10 முதல் 12 வரை ஆங்கிலம், பொருளாதாரம், கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிர்-தாவரவியல், உயிர் விலங்கியல் ஆகிய பாடங்களுக்கு நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டக் கட்டகம் தயாரித்தல் பணிமனை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மாநிலக் கல்வி மேலாண்மை மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2017 மே மாதம் 18 முதல் 20 வரை தமிழ் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களுக்கு நடத்தப்பட்டது.

'கட்டகச் செறிவூட்டப் பணிமனை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2017, ஜூன் மாதம் 1 மற்றும் 2 ஆகிய நாள்களில் நடத்தப்பட்டது. இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட பாடக்கருத்துகள் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களால் ஆய்வு செய்யப்பட்டு செழுமைப்படுத்தப்பட்டன. கருத்தாளர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி, அனைத்து மாவட்டங்களிலும் அறிவியல் பாடங்களுக்கு மூன்று நாட்களும் கலைப்பாடங்களுக்கு இரண்டு நாட்களும் வழங்கப்பட்டன. அனைத்துப் பாடங்களுக்கும், மாவட்ட வாரியான வல்லுநர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். மாவட்ட அளவிலான முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பயிற்சி 2017, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் 16,161 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பயனடைந்தனர்.

ஆங்கிலம் - ஆசிரியர்களுக்கான இணைய வழித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி

இணையம் வாயிலாகப் பணிமேம்பாட்டுத் தேவைக்காகப் பதிவுசெய்யும் ஆசிரியர்களுக்கு இணையவழிப் பயிற்சியினை வழங்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் பிரிட்டிஷ் கவுன்சிலும் ஒப்பந்தம் செய்துள்ளன. இது இருவழி உரையாடல் வகுப்புகள், கலந்துரையாடல் அரங்கங்கள் போன்றவற்றைக் கொண்ட ஆறு வார இணையவழிப் பயிற்சியாக அமையும். இப்பயிற்சி ஆசிரியர்களின் கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான மிகச் சிறந்த வாய்ப்பினைக் கொண்டுள்ளது. வகுப்பறைச் செயல்பாடுகளில்

தொழில்நுட்பத்தினை இணைத்தலின் வழியே ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த இப்பயிற்சி வழிவகுக்கிறது. இது எண்ணியல் கல்வித் தகவல் தொடர்பு சார்ந்த 21ஆம் நூற்றாண்டுத் திறன்களை வளர்க்கும் வகையில் உள்ளதால் பல ஆசிரியர்கள் இப்பயிற்சியினை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

கல்வியாளர் மற்றும் அலுவலர்களுக்குப் பணி மேம்பாட்டுப்பயிற்சி

தகவல் தொழில்நுட்பப்பயிற்சி

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சாஸ்திரா பல்கலைக் கழகத்துடன் இணைந்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றும் கல்வியாளர்களுக்கு ஆறு நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சியாகத் தகவல் தொழில்நுட்பப் பயிற்சி ஏழு அணிகளாக வழங்கியுள்ளது. இதன்மூலம் 280 கல்வியாளர்கள் தகவல் தொழில்நுட்பப் பயிற்சியினைப் பெற்றனர்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட கல்வியாளர்களுக்கு நுழைநிலைப்பயிற்சி

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், புதியதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கல்வியாளர்களுக்கு ஐந்து நாள் நுழைநிலைப் பயிற்சியினை அளித்தது. கல்வியாளர்களுக்கு, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் எதிர்நோக்கும் பணிகள், ஆசிரியர் பணித்திறன், வட்டார வளமையம் மற்றும் தொகுப்பு வளமைய அமைப்புமுறை ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு ஆற்ற வேண்டிய பங்குகள் பற்றி விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியினால் புதியதாகப் பணியில் சேர்ந்த 111 கல்வியாளர்கள் பயனடைந்தனர்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கான நிர்வாக மற்றும் திறன் மேம்பாடு பயிற்சி:

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்காக மூன்று நாள் நிர்வாக மற்றும் திறன் மேம்பாடு பயிற்சியை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்தியது. இப்பயிற்சியானது கலைத்திட்ட உருவாக்கம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், கோப்புகள் மேலாண்மை , சட்டப் பிரச்சினைகள், நிருவாக விதிமுறைகள், ஒழுங்கு நடவடிக்கைகள், கணக்குப் பராமரிப்பு, நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டமிடல், பயிற்சி மேலாண்மை, கல்வித்துறை மற்றும் இதர துறைகளுடன் இணைந்து பணியாற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. இப்பயிற்சியில், மொத்தம் 64 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களும், முதுநிலை விரிவுரையாளர்களும் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கல்வியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி :

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கல்வியாளர்களுக்கான மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்தியது. இப்பயிற்சி 4 சுற்றுகளாக நடைபெற்றது. இப்பயிற்சியானது கலைத்திட்ட மேம்பாடு, தகவல் அறியும் உரிமைச்சட்டம், கோப்புகள் மேலாண்மை , சட்டப் பிரச்சனைகள், பணியாளர் விதிகள், ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைகள், கணக்குகள் பராமரித்தல், நிறுவன வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த திட்டமிடல், பயிற்சி மேலாண்மை மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பிற துறைகளுடன் இணைந்து பணியாற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. இப்பயிற்சியின் வாயிலாக மொத்தம் 377 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கல்வியாளர்கள் தங்கள் பணித்திறனை மேம்படுத்திக் கொண்டனர்.

புதியதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான நுழைநிலைப்பயிற்சி

புதியதாக பணியமர்த்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இரண்டு நாள் நுழைநிலைப் பயிற்சியினை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அளித்தது. மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நிருவாக விதிமுறைகள் சார்ந்த பல்வேறு கூறுகள், தகவல் அறியும் உரிமைச்சட்டம், கோப்புகள் மேலாண்மை , ஒழுங்கு நடவடிக்கைகள், நிருவாகப் பிரச்சினைகள், கல்விசார் ஆய்வுகள் போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி மூலம் புதியதாக நியமிக்கப்பட்ட 10 அலுவலர்கள் பயனடைந்தனர்.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பயிற்சி

புதுதில்லியிலுள்ள தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் கல்வி நிபுணர்களைக் கொண்டு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மூன்று நாள் மேலாண்மைப் பயிற்சியை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இரு சுற்றுகளாக நடத்தியது.

இப்பயிற்சியானது, பள்ளி நிருவாகம், பள்ளி வளர்ச்சித் திட்டங்கள், பள்ளித் தலைமைப்பண்பு, கல்விசார் மேற்பார்வை, தகவல் அறியும் உரிமைச்சட்டம், நிருவாக விதிமுறைகள், ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் கோப்புகள் மேலாண்மை போன்றவற்றைப் பற்றிய ஒரு உள்ளார்ந்த புரிதலை மையப்படுத்தி அமைந்திருந்தது. இப்பயிற்சியின் மூலம் 398 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும் 397 கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும் பயனடைந்தனர்.

எண்ணியல் முயற்சிகள்

கல்விச் செயற்கைக்கோள்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மாநிலத்தில் 58 இடங்களில் கல்விச் செயற்கைக்கோள் காணொலிக் கருத்தரங்கு வசதியினை ரூ.2,54கோடி செலவில் உருவாக்கியுள்ளது. இதன் ஒளிபரப்பு மையம் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் முதன்மைத் திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தவும், பள்ளிக் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதை மேலாய்வு செய்யவும் இக்கல்விச் செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப் படுகின்றனர். பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள், குழந்தை உளவியல் அறிஞர்கள் மற்றும் பாடம் சார்ந்த வல்லுநர்கள் ஆகியோருடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவ ஆசிரியர்கள் கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். கல்விச் செயற்கைக்கோள் வாயிலாக உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தொடர்பான வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மெய்நிகர் வகுப்பறைகள்

2016-17 ஆம் கல்வியாண்டில் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த இணையவழிக் கல்வித் திட்டம்' தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், 770 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 11 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மெய்நிகர் வகுப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணாக்கர்களின் கற்றலில் மெய்நிகர் வகுப்பறைகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 2017-18 ஆண்டில், தமிழ்நாட்டில், 192 பயிற்சிச் சுற்றுகள் மெய்நிகர் வகுப்பறைகள் வாயிலாக நடத்தப்பட்டன. 6 முதல் 12 ஆம் வகுப்புவரைப் பயிலும் மாணாக்கர்கள், பாட வல்லுநர்கள் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களுடன் உரையாடி முக்கிய பாடங்களின் கருத்துகளில் ஆழ்ந்த புரிதலைப் பெற்றனர்.

பாடப்புத்தகங்களை எண்ணியமாக்குதல் (மின்பதிப்பு)

வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பாடநூல்களை நவீன எண்ணிய மின் நூல்களாக மாற்றும் பணியினை தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பாடநூல்கள் மின்-பதிப்பு 3.0 வடிவமாக மாற்றப்பட்டுள்ளன. தனித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள மின்-பதிப்பு, படிப்பானின் உதவியுடன் பாடப்பொருளைத் தெரிவுசெய்யவும், அதனைப் பெரிதாகக் காட்டவும், சில பகுதிகளைக் கோடிட்டுக் காட்டவும், திரை, எழுத்து, வண்ணம் ஆகியவற்றை, சிறப்புக்கவனம் தேவைப்படும் குழந்தைகள் உட்பட அனைத்துக் குழந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றவும் இயலும். தேவைப்படும் இடங்களில், இப்பாடநூல்களுடன் பல்லூடகப் பாடப்பொருளையும் தேவைப்படும்போது இணைக்க இயலும். தற்போது, 10 ஆம் வகுப்புப் பாடநூல்கள் மின்பதிப்பு முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 01.04.2017 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பாடநூல்கள் தமிழ்நாடு மின்நூல் படிப்பான் என்று பெயரிடப்பட்ட ஆண்ட்ராய்டு செயலி மூலம்

மாணாக்கர்களுக்குக் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன. இந்த செயலியில் மாணாக்கர்கள் 10 ஆம் வகுப்பின் ஆங்கில வழி மற்றும் தமிழ்வழிப் பாடநூல்களைக் காண இயலும். அனைத்து வகுப்புப் பாடநூல்களையும் மின்பதிப்பு முறைக்கு மாற்றியமைத்து அனைவரும் இவற்றை எளிதாகப் பெறும் வகையில் இதனைப் பரவலாக்கும் பணியினை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

டெய்சி(எண்ணியஅணுக்கத் தகவலறிமுறை)

பாடப்பொருள்களை ஒலி வடிவமாக்கி அவற்றை மின் பாடப்பதிப்புடன் இணைக்கும் பொறுப்பு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய முயற்சி மாற்றுத்திறனாளிகள், குறிப்பாகப் பார்வைத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு உதவும். இதன் முதல் முயற்சியாக, டெய்சி மென்பொருள், 10 ஆம் வகுப்பின் 5 எண்ணியப் பாடநூல்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதி, படிப்படியாக, அனைத்து மின்-பதிப்புப் பாடங்களுடனும் இணைக்கப்பட்டுவிரிவுபடுத்தப்படும்.

கற்றல் மேலாண்மை அமைப்பு

கற்றல் மேலாண்மை அமைப்பினை நடைமுறைப் படுத்த அரசு முன்மொழிந்துள்ளது. இத்திட்டம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பாடங்களையும் உள்ளடக்கியுள்ளதாகும். வகுப்பறைகளைத் தாண்டி கற்றலை உறுதிசெய்யும் வகையில், காணொலிக் காட்சிகள், வலைதளம் சார்ந்த தேர்வுகள் மற்றும் அலைபேசிச் செயலிகள் போன்றவை இத்திட்டத்தின் வாயிலாக உருவாக்கப்படும். கற்றல் மேலாண்மை அமைப்பு என்பது பாடப்பொருள் பரிமாற்றம், கற்றலைக் கண்காணித்தல் மற்றும் அரசுப் பள்ளி மாணாக்கர்களின் கற்றல் அடைவுகளை ஆவணப்படுத்துதல் ஆகியவற்றிற்கான மென்பொருள் செயலியாகும். ஆசிரியர்கள் பாடப்பொருளை விளக்கவும், தேர்வுகள் மற்றும் பயிற்சிகள் நடத்தவும், மாணாக்கர் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் பதிவுகளைப் பராமரிக்கவும் இது உதவுகிறது. கற்றல் மேலாண்மை அமைப்பு ஆசிரியர்கள், மாணாக்கர்கள் மற்றும் பிற கல்விப் பங்கேற்பாளர்கள் 24x7 நேரமும்

பயன்படுத்த உதவும். இந்த மெய்நிகர் கற்றல் சூழல் சீரான கற்றலை மட்டுமன்றி, கலைத்திட்டம், அதன் பரிமாற்றம், கற்றல் கருவிகளின் பயன்பாடு மற்றும் பயனுள்ள கல்வித் தொடர் செயல்களுக்கேற்ற பொருள் நிறைந்த மதிப்பீடு போன்றவற்றின் மீதும் தெளிவான கவனம் செலுத்துகிறது. ஒளி ஒலி ஊடகம், பரிமாற்ற ஊடகம், கூடுதல் கற்றல் சாதனம், பயிற்சி ஏடு, இணைய வளம் மற்றும் உள்ளூர் வளங்களிலிருந்து ஒப்புருவாக்கம் மற்றும் குறிப்புதவி வளங்கள் ஆகிய வடிவங்களில் இதிலுள்ள பாடப்பொருள் அமைந்திருக்கும். முதற்சுற்றில் 40 இலட்சம் மாணாக்கர்களுக்குப் பயனளிக்கும் வகையில் ரூ. 2 கோடி பொருட்செலவில் இத்திட்டம் செயல் படுத்தப்படும்.

தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள்

ஆங்கில ஒலிப்பியல் மற்றும் கற்பித்தல் உத்திகள் சார்ந்த பயிற்சி:

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பெங்களூரு, தென் இந்திய மண்டல ஆங்கில நிறுவனத்துடன் இணைந்து 29.01.2018 முதல் 02.02.2018 வரை ஆங்கில ஒலிப்பியல் பயிற்சியை நடத்தியது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் ஆங்கில ஒலிப்பியல் மற்றும் கற்பித்தல் உத்திகளை மேம்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும். பங்கேற்பாளர்களுக்குச் சரியான உச்சரிப்பு மற்றும் ஒலியன்கள் ஒலிப்புமுறை போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது. உயிரொலிகள், மெய்யொலிகள், மற்றும் இணையுயிரொலிகளின் உச்சரிப்பு மட்டுமல்லாது சொல்லழுத்தம், சொற்றொடர் அழுத்தம் மற்றும் குரலேற்றத்தாழ்வு பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பங்கேற்பாளர்களுக்கு உச்சரிப்பிற்கான இரட்டைச்சொற்கள் பற்றிய பயிற்சியும் அளிக்கப்பட்டது. பங்கேற்பாளர்களின் மொழித் திறனை மேம்படுத்த மொழி ஆய்வகத்தை பயன்படுத்துவது பற்றியும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், 3 ஆசிரியர்கள், 1 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கல்வியாளர் மற்றும் 1 ஆசிரியர் பயிற்றுநர் ஆகியோர் பங்கேற்றனர். இரு சுற்றுகளில் நடத்தப்பட்ட இப்பயிற்சியின் மூலம் 161 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் பயனடைந்தனர். இதற்காக மாநிலத் திட்டக் குழு ரூ88.20 இலட்சம் வழங்கியது. முதன்மைக் கருத்தாளர்களைக் கொண்டு மாவட்ட அளவில் நடத்தப்பட்ட இப்பயிற்சியின் வாயிலாக, அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களில் 7013 பேர் பயனடைந்தனர்.

உருவம் அறிச்செயலித் தொழில்நுட்பம்

மேம்படுத்தப்பட்ட மெய்நிகர் வடிவாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட உருவம் அறிச் செயலித் தொழில்நுட்பம் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் கற்றல் திறனை வளப்படுத்த உதவுகிறது. உருவம் அறிச் செயலியின் உதவியோடு, மாணாக்கர்கள் தங்கள் பாடங்களில் உள்ள பாடப்பொருள்/இருபரிமாண அசைவூட்டப் பாடப் பொருள்/வகுப்பறை ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட தற்போதைய பாடநூல்களிலுள்ள பாடங்களுடன் தொடர்புடைய காணொலிக் காட்சிப் பதிவுகள் ஆகியவற்றைக் காட்டிலும் தற்போது எங்கேயும் எப்பொழுதும் மாணாக்கர்கள் பாடங்களை முப்பரிமாண மெய்நிகர் பொருட்களாக அணுகுகிறார்கள். தற்போதைய பாடப் பொருளில் எவ்வித மாற்றமும் செய்யாமல் நடைமுறையில் உள்ள பாடப் புத்தகங்களோடு பல் ஊடகப் பாடப்பொருள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. 141 அறிவியல் மற்றும் கணக்குப் பாடக் காணொலிகள் பாடவல்லுநர்களால் உருவாக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வல்லுநர்குழுவால் ஆராய்ந்து மதிப்பீடு செய்யப்பட்டது. அலைபேசி, கையடக்கக் கணினி, மடிக்கணினி மற்றும் கணினி போன்ற பட உட்கிரகிப்புத் தொழில்நுட்பச் செயலிக்கு இணக்கமான கருவிகளின் தொகுப்பில், ஒவ்வொரு ஆண்டிலும் பதிவேற்றம் செய்யப்படும் பாடக்கருத்து சார்ந்த படங்களின் முப்பரிமாண மாதிரிகள், அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களின் குறிப்பிட்ட காணொலிக் காட்சிகள் ஆகியவை அடங்கிய எண்ணியல் பாடப்பொருள்களைப் பல ஆண்டுகளுக்குப் பேணிக்காக்கும் திறன் வாய்ந்தது இச்செயலி. இப்புரட்சிகரமான செயலி 7680 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளில் பயிலும் 20 இலட்சம் மாணாக்கர்கள் பயனடையச் செய்துள்ளது.

பிற முக்கிய செயல்பாடுகள் மற்றும் முனைப்புகள்

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடுப் பயிற்சித் தாள்களின் வாயிலாக மாற்றுமுறை மதிப்பீடு

2016 ஆம் ஆண்டு அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பயிற்சித் தாள்களுக்கு ஆசிரியர்கள்

மற்றும் மாணாக்கர்களிடமிருந்து மிகுந்த வரவேற்புக் கிடைத்ததின் அடிப்படையில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு பயிற்சித் தாள்களை தயாரித்தளிக்கத் திட்டமிட்டுள்ளது. இப்பயிற்சித்தாள்கள் மாணாக்கர்கள் பாடக்கருத்தை அறிந்து கொள்வதிலும் ஆசிரியர்கள் வினாத்தொடுக்கும் திறனையும் உயர்த்த உதவும். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 2018-19 ஆம் ஆண்டில்1,6மற்றும் 11ஆம் ஆகியவகுப்புகளுக்குப் புதிய பாடநூல்களின் அடிப்படையில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு பயிற்சித் தாள்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 30 இலட்சம் குழந்தைகள் பயனடைவர்.

தேசிய அடைவு ஆய்வு - 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அனைவருக்கும் கல்வி இயக்கத்துடன் இணைந்து, மாநிலத்தின் கல்வித் தரத்தின் நிலையை அறிந்துகொள்வதற்காக 2017 நவம்பர் 13 அன்று, 31 மாவட்டங்களின் தெரிவு செய்யப்பட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு அடைவுத் தேர்வை நடத்தியது. 2017 - 18 ஆம் ஆண்டில், 3 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு மொழி, கணிதம் மற்றும் சூழ்நிலையியல் ஆகியவற்றிலும், 8 ஆம் வகுப்பிற்கு மொழி, கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கிய கற்றல் விளைவுகளின் அடிப்படையிலும் இத்தேர்வு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மாவட்ட அறிக்கை அட்டை ஒவ்வொரு கற்றல் விளைவிலும் மாணவர்களின் செயல் திறனைத் தெளிவாகக் காட்டியது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேர்வில் மாணாக்கர்களின் அடைவின் அடிப்படையில் தேசிய அடைவு ஆய்விற்குப் பிந்தைய செயல்பாடுகளை மேற்கொள்ள உள்ளது. கற்றல் விளைவுகளின் அடிப்படையில் பல்வேறு வழிகளில் மாணாக்கர்களை மதிப்பிடவும், அதற்கேற்றவாறு வகுப்பறைச் செயல்பாடுகளில் மாற்றங்களைக் கடைபிடிக்கவும், தொடக்க மற்றும் உயர்தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கற்றல்விளைவுகள் சார்ந்து பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தேசிய அடைவு ஆய்வு - வகுப்பு 10 சுற்று -2

10ஆம் வகுப்பிற்கான தேசிய அடைவு ஆய்வுச் சுற்று - 2, பிப்ரவரி 5, 2018 அன்று மாநிலம் முழுவதும் 2560 அரசு, அரசு நிதி உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 85459 மாணாக்கர்களுக்கு நடத்தப்பட்டது. ஐந்து கலைத்திட்டப் பாடங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மாணாக்கர்களின் அடைவுகளைக் காட்டும் மாவட்ட அறிக்கை அட்டைகள் தயாரிக்கப்பட்டன. 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்குத் தேசிய அடைவுச் சோதனைக்குப் பிந்தைய இடையீடுகளை 2018-19ஆம் ஆண்டில் பயிற்சியாக வழங்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தப் பயிற்சிகள் அனைத்துப் பாடங்களிலும் அமைந்துள்ள கருத்துகளை மாணாக்கர்கள் அறிந்து கொள்ள உதவும் வகையில் வகுப்பறைகளில் தகுந்த மாற்றங்களை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு உதவும். 2021 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள பன்னாட்டு மாணாக்கர் அடைவு ஆய்வினை எதிர்கொள்ளத் தக்க தன்னம்பிக்கை வழங்கும் வகையில் இத்தேசிய அடைவு ஆய்வுக்குப் பிந்தைய இடையீடுகள் மாணாக்கர்களின் திறன்களைக் கட்டமைக்கும்.

மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டுதல்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 20.03.2017 அன்று வல்லுநர்களின் உதவியுடன் மாநில அளவிலான வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் சார்ந்த பயிற்சியினை நடத்தியது. இத்திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து நான்கு நபர்கள் கொண்ட குழு பங்கேற்றது. மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் ஆகியோர் 2017 ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய நாள்களில் இப்பயிற்சியினை வழங்கினர்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டுதல் கையேடுகளை 3,00,000 பிரதிகள் அச்சிட்டு உதவியது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்ககம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் செயல்பட்டு, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தனித்தனி உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக் கையேடுகளையும், பதிவு மற்றும் கருத்தூட்டல் படிவங்களையும் வழங்கியது. பயிற்சியில் கலந்துகொண்ட அனைத்துமாணாக்கர்களுக்கும் ஆலோசனைக் குறிப்புகள் அடங்கிய கையேடுகள் வழங்கப்பட்டன. இப்பயிற்சியின் மூலம் மாநிலம் முழுவதும் 15 இலட்சம் மாணாக்கர்கள் பயன்பெற்றனர்.

விழுமியம் ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல் மற்றும் கற்பித்தல்

மாநிலத்திலுள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு விழுமியம் ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல் கற்பித்தல் பயிற்சியை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்கியது. இப்பயிற்சி மாணாக்கர்களிடம் ஒழுக்கத்தை உறுதிசெய்வதனால், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கல்வியின் தரம் மேம்படும். ஏறத்தாழ 100 விழுமியங்கள் கண்டறியப்பட்டு அவை பாடக் கருத்துகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இப்ப யிற்சியினால் 10000 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 6700 உயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 40000 ஆசிரியர்கள் பயனடைந்தனர். இதனால் 45 இலட்சம் மாணாக்கர்கள் பயனடைந்தனர்.

பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வுச் செயல்பாடுகள்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், வருவாய்த்துறையின் பேரிடர் மேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் துறையுடன் இணைந்து பாடத்திட்டம், பாடநூல்களைத் தயாரித்தல் மற்றும் பயிற்சிச் செயல்பாடுகளை நடத்துதல் ஆகியவற்றை மேற்கொண்டது. பேரிடர் மேலாண்மை வல்லுநர்களான பேரிடர் மேலாண்மை இயக்குநர், ஜே.ஆர்.டி. டாடா பேரிடர் கல்வி நிறுவனக் கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் என்ற அரசுசாரா நிறுவனம் ஆகியவர்களைக் கொண்டு 7 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடநூல்களில் இணைக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மைப் பாடப்பொருள்களை மறு ஆய்வு செய்தது. இவ்வல்லுநர்கள் அளித்த ஆலோசனைகள் இறுதி செய்யப்பட்டு, பாடநூல்களை மாற்றியமைக்கும்போது அவை நடைமுறைப்படுத்தப்படும். பேரிடர் மேலாண்மைப் பாடப்பகுதிகளை 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் மற்றும் புவியியல் பாடநூல்களிலும், தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி வளநூல்களிலும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேசிய திறந்த வெளிப்பள்ளி தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புப் பாடப்பொருளை வலையொளிப் பதிவேற்றம்

தேசிய திறந்த வெளிப் பள்ளிப் படிப்பிற்கான இணையவழித் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பின் பாடப்பொருளைத் தமிழில் மொழிபெயர்க்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உதவி செய்துள்ளது. 25,000 தனியார் பள்ளி ஆசிரியர்கள் இதனைப் பயின்றுவருகின்றனர். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பின் பாடப்பொருளை தேவையான விளக்கங்களுடன் ஒலிக் கோப்புகளாக மாற்றி அவற்றை வலையொளிப்பதிவேற்றம் செய்துள்ளது. இந்த வலையொளிப் பதிவுகளை எந்த நேரத்திலும் பதிவிறக்கம் செய்து கேட்கும் வாய்ப்புள்ளதால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் இதற்கு மிகுந்த வரவேற்பினை அளிக்கிறார்கள். இம்மாற்றத்திற்கான முயற்சியை திறந்தவெளி பள்ளிகளுக்கான தேசிய நிறுவனம் பாராட்டியுள்ளது.

இணையவழி வானொலிச் சேவை

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள உத்தமசோழபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், பள்ளிக் கல்விக்கான இணையவழிப் பண்பலைக் கல்வி வானொலிச் சேவையினைத் தொடங்கியுள்ளது. மேலும் இது மாணாக்கர்கள் இசை, நாடகம், உரையாடல் போன்ற நிகழ்த்துக் கலைகளில் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளும் களமாகவும் பயன்படுகிறது. இந்தப் புதிய முயற்சி மாவட்டத்திலுள்ள 21 ஒன்றியங்களைச் சென்றடைந்து 4000 ஆசிரியர்கள் மற்றும் 60000 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் இந்த ஒலிபரப்பால் பயன்பெறுகின்றனர்.


இணையவழிவானொலிச்சேவை

மாபெரும் திறந்தநிலை இணையவழிக் கல்வி

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பரிந்துரையின்படி, சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், ஆசிரியர்களின் தொடர்பணித்திறன் மேம்பாட்டுக்காக மூன்று இணையவழிக் (online) கல்வியை வழங்கத் திட்டமிட்டுள்ளது. பணியிலிருக்கும் ஆசிரியர்களின் தேவைக்கிணங்க இக்கல்வி வழங்கப்படும். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இதற்காக 'செயல் ஆராய்ச்சிக்கான சான்றிதழ்க் கல்வி” என்ற சான்றிதழை வழங்க உள்ளது.

பயிற்சி மேலாண்மைத் தகவல் முறைமை முன்னோட்ட ஆய்வு

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆலோசனையின்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் பயிற்சி மேலாண்மைத் தகவல் முறைமை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இப் பயிற்சி மேலாண்மை தகவல் அமைப்பு கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்டுள்ளது:

*தரவுகளைச் சேகரித்தல் மற்றும் ஆசிரியர்களைப் பற்றிய மேம்படுத்தப்பட்ட தகவல்களைப் பராமரித்தல்

*பயிற்சி நாட்காட்டியை ஒருங்கிணைத்தல்

*ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும் தக்க நேரத்தில் தகவல்களைத் தெரிவித்தல்

*ஆசிரியர்களின் வருகையையும், பற்றுச் சீட்டுகளையும் இணையவழியில் உரிய நேரத்தில்விநியோகித்தல்

*பயிற்சியுடன் தொடர்புடைய ஆவணங்களையும், வளங்களையும் பராமரிப்பதற்கான ஒரு காப்பகத்தைப் பராமரித்தல்

எதிர்காலத்தில், இம்முறைமை மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும்.

தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி

தனியார் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அவ்வப்போது மேம்படுத்துவதற்கு ஏதுவாகத் தமிழக அரசு, அரசாணை (நிலை) எண்.228, பள்ளிக் கல்வித் துறை, நாள் 06.11.2017-இன்படி, அனைத்து தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் செயல்திட்டத்தை உருவாக்க ஆணை பிறப்பித்துள்ளது. இப்பயிற்சியினால் மாநிலத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் பணித்திறன் மேம்படும்.

மலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கான பயிற்சி

மலேசிய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மலேசியத் தமிழ் ஆசிரியர்களுக்கான ஐந்து நாள் செறிவான பயிற்சியை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்தியது. எதிர்காலத்தில் தமிழ்மொழி பேசும் சமுதாயத்தின் பணித்திறன் தேவைகளுக்கு ஏற்ப இது போன்ற பயிற்சித் திட்டங்கள் இணையவழி மற்றும் இணையவழியல்லாத முறையில் அளிக்கப்படும்,

ஆசிரியர்களுக்குத் தகவல் தொலைத் தொடர்புத்தொழில்நுட்பப் பயிற்சி

தமிழ்நாட்டிலுள்ள 500 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 2018ஜூன், 30க்குள் எண்ணியல் கல்விப் பயிற்சி வழங்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இப்பயிற்சிக்கான தகவல் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பப் பாடத்திட்டம் மற்றும் பாடப்பொருள்

ஆகியவற்றைப் பயிற்சியாளர்களுக்குக் கட்டணமின்றி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கும். மைக்ரோசஃப்ட் பிரிமியம் மேகக் கணிமைத் தொழில் நுட்பம், மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 365 மென்பொருள் ஆகியவற்றின் வாயிலாக இலக்குகளாகத் தெரிவுசெய்யப்பட்ட அனைத்துப் பள்ளிகளும் பயன் பெறும். தமிழகப் பள்ளிகளின் கற்பித்தல் பரப்பை இம்மேகக் கணிமைத் தொழில்நுட்பம் மாற்றியமைக்க உதவும்.

மனிதவள மேம்பாட்டுத் துறையின் தர மேம்பாட்டு முயற்சிகளில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பங்கேற்பு

எஸ்.எஸ்.ஏ.சாகுன்

தொடக்கக் கல்விப் பிரிவில் காணப்படும் புதுமைகளையும் முன்னேற்றங்களையும் புலப்படுத்துவது அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் இணையதளமான எஸ்.எஸ்.ஏ. சாகுன் ஆகும். இத்தளத்தில் காணொலிக் காட்சிகள், நிகழ்முறை ஆய்வுகள், சான்றுகள் மற்றும் உருக்காட்சிகள் வடிவில் ஆசிரியர்களின் பயிற்று முறைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. வகுப்பறைகளில் புதுமை படைப்பதில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் காணொலிக் காட்சிப் பதிவுகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் பதிவேற்றம் செய்துள்ளது. 01.12.2017, அன்றைய நிலவரப்படி, 1994 கல்விக் காணொலிக் காட்சிகள் சாகுனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சாகுனில் உள்ள எண்ணியல் வளங்களை இதுவரை 21 இலட்சம் பேர் பார்வையிட்டு, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கிய எண்ணியல் பாடங்களின் பரந்த பயன்பாட்டுக்குச் சான்று பகர்ந்துள்ளனர். முக்கிய கல்விக் குறியீடுகளில் மாநில அளவிலான செயல்திறனை அளவிடுவதற்கான இணையவழிக் கண்காணிப்புக் கட்டகம் இவ்விணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

மாநில மற்றும் மாவட்ட அளவில் சங்கங்கள் அமைத்தல்

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் அறிவுரையின்படி, தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975இன் கீழ் மாநில அளவிலான சங்கம் மற்றும் மாவட்ட அளவிலான சங்கங்கள் அமைக்கப்படுகின்றன. மாநில அளவிலான சங்கத்தின் பங்கு மற்றும் பணிகளானது, முதன்மையாக ஆசிரியர்களின் பணித்திறன் மேம்பாட்டிற்க்கான வளங்களை பெற்றுத்தருதல் மற்றும் மாவட்ட அளவிலான சங்கங்களை மேற்பார்வை செய்யும் தலைமைச் சங்கமாக பணியாற்றுதல் ஆகியன ஆகும். மாவட்ட அளவிலான சங்கங்களின் பங்கு மற்றும் பணிகளாக, ஆசிரியர்களின் பணித்திறன் மேம்பாடு குறித்த பயிற்சிக்கான வளங்களை பெறுதல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் கற்பித்தல் முறைகள், உடல்நலக் கல்வி, சாலைப் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்றவை குறித்த கல்விசார் பாடப்பொருட்களை உருவாக்குதல் ஆகும். பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு மற்றும் தனியார் பொதுத்துறை பங்களிப்பு முறையின் கீழ் நிதியைப் பெற்று தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதும் இச்சங்கங்களின் பணிகள் ஆகும்.

ஆசிரியர்களுக்கான தேசியத்தளம்

ஆசிரியர்களின் சுயகற்றலுக்கும் வகுப்பறைப் பயன்பாட்டிற்கும் பயன்படும் இணையவழிக் கல்வியையும், வளங்களையும் மாநிலங்கள் வழங்குவதற்கு ஏதுவாக ஆசிரியர்களுக்கான தேசியத் தளம் எனும் இணையதளத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தொடங்கியுள்ளது. பணியில் இருக்கும் ஆசிரியர்களுடன் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனக் கல்வியாளர்கள் இணைந்து உருவாக்கும் அசைவூட்டப் படங்கள், மொழியாக்கம் செய்யப்பட்ட அறிவியல் காணொலிக் காட்சிகள் மற்றும் பாடம் சார்ந்த காணொலிக் காட்சிகள் போன்ற எண்ணியல் கல்வி வளங்களை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இத்தளத்தில் தொடர்ந்து பதிவேற்றம் செய்துவருகிறது. ஏற்கனவே 2000க்கும் மேற்பட்ட கல்விக் காணொலிக் காட்சிகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. புதிய பாடநூல்கள் பள்ளிகளைச் சென்றடையும்போது அவை சார்ந்த எண்ணியல் வளங்கள் உருவாக்கப்பட்டு ஆசிரியருக்கான தேசியத் தளத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பதிவேற்றம் செய்யப்படும். தொடர் கற்றலை ஆசிரியர்களிடையே உறுதி செய்ய இணையவழிக் கல்வி வாய்ப்புகளுடன் வகுப்பறைப் பயன்பாட்டிலுள்ள வளங்களைப் பெற மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆசிரியர்களுக்கு உதவும்.

மனித வள மேம்பாட்டுத் துறையால் உருவாக்கப் பட்டுள்ள தேசிய எண்ணியல் மேடையான திக்சா, ஆசிரியர்களுக்கான கற்பித்தல், கற்றல் மற்றும் பணித்திறன் மேம்பாட்டிற்கான வளங்களை வழங்குகிறது. மாநில அரசும் மற்றும் பிற நிறுவனங்களும் தங்களின் ஆசிரியர் சார்ந்த முனைப்புகளில் தடங்கலின்றி ஒருங்கிணைக்கத்தக்க திறந்த, கட்டகமாக்கப்பட்ட மற்றும் பரவலாக்கத் தக்க தொழில்நுட்பத்தினை திக்சா கொண்டுள்ளது. சுய கற்றலுக்கும் வகுப்பறை கற்பித்தலுக்கும் இவ்விணைய தளத்தினைப் பயன்படுத்துவதைப் பரவலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

நிதி ஒதுக்கீடு

மாறிவரும் புதிய கற்றல் கற்பித்தல் முறைகளையும், புதிய பாடப்புத்தகங்களையும் 21 ஆம் நூற்றாண்டுத் திறன்களையும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகையில் அவர்களைத் தயார்செய்யும் பணியில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பணிகளை மேற்கொண்டுவருகிறது. ஆசிரியர்களின் பணித்திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள், அவர்கள் எண்ணியல் கற்றல் தளங்களை முறையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதோடு, எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையைப் பெற மாணவர்களுக்கு வழிகாட்டுவதையும் உறுதி செய்யும். 2018-19 ஆம் நிதியாண்டில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு ரூ.83.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top