பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - கொள்கை விளக்கம்

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கொள்கை விளக்கம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக முழுமையான பல்நோக்குடைய மாநில கொள்கையை 1994ம் ஆண்டில் முன்னோடியாக நடவடிக்கை எடுத்து வகுத்தது. பல்வேறு வகைகளில் மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் பெற்று உய்யும் வகையில் செயல்பட்டதைக் கருதி 2013-14ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு "சிறந்த மாநிலம்” என்ற தேசிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான தடைகள் அனைத்தையும் நீக்கி இந்த சமுதாயத்தில் அவர்கள் ஏனையோருடன் எல்லா வகையிலும் சமமான பங்குதாரர்களாக முழுப்பங்கேற்று சமுதாயத்தின் வெள்ளோட்டத்தில் அவர்களை இணைப்பதே இம்மாநில அரசின் முதன்மையான கருத்தியல் கொள்கையாகும். இம்மாநிலத்தில் அனைவருக்கும் ஊனமில்லா தன்மையை உருவாக்கவும், ஊனத்தின் காரணமாக மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசால் பல்வேறு புதுமையான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சமூகத்தின் வழியே, மறுவாழ்வுத் திட்டங்கள் கிடைக்கப்பெற்று பயன்பெறும் வகையில் பல நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு பல்வேறு வகையான திட்டங்களை ஒருங்கிணைத்து பலதரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டப் பணிகளை பெற்று பயன்பெறும் வகையில் பதிவு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அரசு சாரா அமைப்புகள் (Non Governmental Organisations) மூலம் செயல்படுத்தி வருகிறது.

இவ்வகையில் கடந்த 6 ஆண்டுகளில் வரவு செலவு திட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்காகவும், மாற்றுத்திறனாளிகளுக்கென பணியாற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் பல நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அதற்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமாக உயர்த்தியுள்ளது.

புதிதாக இயற்றப்பட்ட, ஊனமுற்ற நபர்கள் உரிமைகள் சட்டம், 2016 மாற்றுத்திறனாளிகள் பல்வேறு உரிமைகளை பெறுவதை உறுதிபடுத்திடவும், பலவகையான ஊனத்தினை உள்ளடக்கிய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு அனைத்து மாற்றுத்திறனாளிகளது நலன்களைக் காத்து பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மறுவாழ்வு சேவைகள் அவர்களுக்கு கிடைத்திடும் வகையில் தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பற்றிய முழுமையான தகவல் தொகுப்பை உருவாக்கவும் மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் முறையாகப் பதிவு செய்து அடையாள அட்டைகள் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் - 2016

மத்திய அரசினால் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016 இயற்றப்பட்டு, 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் நாளிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டமானது மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது உரிமைகள் மற்றும் அதிகாரப் பங்களிப்பு வழங்கும் விதத்தில் பின்வரும் கொள்கையின் அடிப்படையில் இயற்றப்பட்டுள்ளது.

(i) மாற்றுத்திறனாளிகளுக்கு சுயமரியாதை, பிறரை சாராது முடிவெடுக்கும் திறன் அடங்கிய தனிப்பட்ட பொருளாதார நிலை;

(ii) பாரபட்சமின்மை

(iii) முழுமையான பங்கேற்பு மற்றும் சமுதாயத்துடன் ஒன்றிணைதல்; மற்றும்

(iv) வேற்றுமை நிறைந்த சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகளின் மாறுபட்ட நிலையினை மனித நேயத்துடன் மதித்தல்.

புதிய சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வகைப்பாட்டில் பின்வரும் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன :

(அ) மூளை முடக்குவாதம், உயரம் குறைவு தன்மை , தசைச்சிதைவு பாதிப்பு, அமிலம் உள்ளிட்ட அரிக்கும் தன்மையுடைய வேதிப்பொருளின் தாக்கத்தினால் உருவத்தோற்றம் பாதிப்பு;

(ஆ) பேச்சு மற்றும் மொழி தடை பெற்ற நிலை

(இ) அறிவு சார்ந்த குறைபாடுகளான கற்றலில் குறைபாடு, புறஉலக சிந்தனையின்மை , மனநலம் பாதிப்பு மற்றும் மத்திய நரம்பு மண்டல பாதிப்பு, பார்கின்சன்ஸ் நோய்;

(ஈ) இரத்த சோகை) சம்பந்தமான குறைபாடுகளான ஹீமோபீலியா, தலசீமியா, சிக்கிள் செல் நோய்; மற்றும்

(உ) பல்வகை குறைபாடு

தேசிய அடையாள அட்டை மற்றும் பதிவு புத்தகம் வழங்குதல்

தமிழகத்தில் உள்ள 11.79 இலட்சம் மாற்றுத் திறனாளிகளில் அநேக மாற்றுத்திறனாளிகளுக்கு (99%) அவர்களது ஊனத்திற்கான சான்றிதழ்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் போன்ற அடிப்படை ஆவணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் பெறும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது. 40% மற்றும் அதற்கு மேலாக ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தொடர்பு கொண்டு அங்கே பதிவு செய்யலாம். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், அவ்வாறான விண்ணப்பங்களைப் பரிசீலித்து தேசிய அடையாள அட்டையும், உதவிகள் பெறுவதற்கான பதிவு புத்தகத்தையும் வழங்குவார். அவ்வாறு தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராவதன் மூலம் அதன் பல்வேறு சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதுவரை தமிழகத்தில் 11,79,303 மாற்றுத் திறனாளிகளுக்கு ஊனத்திற்கான சான்றிதழ்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வரசு புதிய சட்டப் பிரிவு 34-ன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 4 சதவிகித இடஒதுக்கீட்டினை, அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், குழுமங்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிய கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஆணை வெளியிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவிகித இட ஒதுக்கீட்டினை உயர்கல்வியிலும், விவசாய நில ஒதுக்கீடு மற்றும் வீட்டுவசதி ஒதுக்கீட்டிலும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. மேலும் மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான வழக்குகளில் விரைவில் தீர்வு காண ஏதுவாக சிறப்பு நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிய சட்டத்தின் பிரிவு-19(2)ல் வலியுறுத்தியுள்ளவாறு, மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் முதற்கட்ட நடவடிக்கையாக 1000 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 50.00 இலட்சம் செலவில் திறன் மேம்பாட்டு கழகம் மூலம் தொழிற்பயிற்சி வழங்க அரசாணை (நிலை) எண்.67, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (S2) துறை, நாள் 12.04.2017-ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் (சம வாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம் 1995, பிரிவு 52ன் படி பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 593 தொண்டு நிறுவனங்கள் பதிவு மற்றும் அங்கீகாரம் பெற்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படுகின்றன.

மனநல மறுவாழ்வு மையங்கள் பதிவு

தமிழ்நாடு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் பதிவு விதிகள் 2002ன் அடிப்படையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனநல மறுவாழ்வு மையங்கள், முறைப்படுத்தப்படுகிறது. இவ்விதிகளின்படி, இம்மையங்கள் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும். இவ்விதிகளை அமுல்படுத்துவதால், அனுமதியற்ற மையங்கள் செயல்படுவது தடுக்கப்படுவதோடு, அனுமதி பெற்ற மையங்களை வரன்முறைப்படுத்தவும் மற்றும் கண்காணிக்கவும் சாத்தியமாகிறது.

மாற்றுத்திறனாளிக்களுக்கான சிறப்புப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல்

தமிழ்நாடு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம், 1973ன்படி, தமிழகத்தில் செயல்படும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியருக்கான சிறப்பு பள்ளிகளுக்கு அங்கீகாரம் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரால் வழங்கப்படுகிறது. இதுவரை 397 சிறப்பு பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்களை பதிவு செய்தல்

மாற்றுத்திறனாளிகள் (சம வாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம் 1995, பிரிவு 51ன்படி, மாற்றுத்திறனாளிகளுக்காக சேவைபுரியும் எந்த ஒரு நிறுவனமும், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களால் வழங்கப்படும் பதிவுச் சான்றிதழை பெறவேண்டியது மிகவும் அவசியம். பிரிவு 52 மற்றும் 53ன்படி மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் மட்டுமே, பதிவுச் சான்றிதழை வழங்கவும், புதுப்பிக்கவும் மற்றும் ரத்து செய்யும் அதிகாரம் படைத்தவர் ஆவார்.

இதுவரை 196 நிறுவனங்கள் குறைபாடுள்ள குழந்தைகளை ஆரம்ப நிலையில் கண்டறிவது என்பது மிகவும் இன்றியமையாதது. ஆரம்பநிலையில் கண்டறிவதால் இக்குழந்தைகளின் கேட்கும் தன்மையை அதிகரிக்கக் கூடிய பொருத்தமான காதொலி உபகரணங்களை பொருத்தி ஆரம்பநிலை பயிற்சியை குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள்ளாகவே துவங்கிட இயலும். எனவே, உயர் தொழில்நுட்பம் மூலம், குழந்தை பிறந்த உடனே செவித்திறன் குறைபாட்டினை அறிவதற்கான வாய்ப்பும், அதை சரிசெய்திடுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரித்துள்ளன. தற்போது, செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை ஆரம்பநிலையில் கண்டறிந்திடுவதற்கான மையங்கள் 27 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில், ஏறக்குறைய 10,000 குழந்தைகளுக்கு செவித்திறன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையங்கள்

அ) ஆரம்பநிலைப் பயிற்சி மையங்கள்:

செவித்திறன் குறைபாடு என்பது மரபு வழியில் பொதுவாக ஏற்படும் குறைபாடுகளில் ஒன்றாக, 1000 குழந்தைகளில் 2 முதல் 4 குழந்தைகளிடம் இக்குறைபாடு காணப்படுகிறது. வயதிற்கேற்ற பேச்சுத்திறன், மொழித்திறன் அறியும் திறமை ஆகியவற்றின் வளர்ச்சியில் செவித்திறன் முக்கியமானதால், ஆரம்ப நிலையில் இக்குறைபாட்டினைக் கண்டறிந்து பயிற்சி அளிப்பது மிகவும் அவசியமானதாகும். எனவே செவித்திறன் பாதிக்கப்பட்ட மழலையர் மற்றும் இளஞ் சிறார்களுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையங்கள், குழந்தைகள் 5 வயதை அடையும் முன்னரே போதிய பேச்சு மற்றும் மொழி வளர்ச்சி பெற்று 1-ஆம் வகுப்பில் சேருவதற்கு ஆயத்தமாகும் அளவிற்கு தீவிர பயிற்சி அளிப்பதை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இம்மையங்கள் 29 மாவட்டங்களில் தொடங்கப்பட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்படுகின்றன. 2% வயதிற்கு குறைவுடைய செவித்திறன் குறையுடைய இதர ஊனம் ஏதும் இல்லாத குழந்தைகள் இம்மையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். சேர்க்கைக்கு குறைந்தபட்ச வயது வரம்பு ஏதும் இல்லை. பெற்றோரில் ஒருவர் குழந்தையுடன் மிகவும் துரிதமாக உள்ளதாகத் தெரிவிக்கிறது. செயல்திறன் பாதிப்புக்கு உட்பட்ட குழந்தைகள், குழந்தை பருவத்தில் பெறக்கூடிய வளர்ச்சி நிலையினை இழந்திடும் அபாயத்தினை ஆரம்ப நிலை பயிற்சி மூலம் தவிர்க்கலாம். இளங்குழந்தைகளுக்கு ஏற்படும் ஊனத்தைத் தடுக்கும் நோக்கோடு, ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் அவர்களின் தேவைகள், சிறப்புக் கல்வி, சிறப்புப் பயிற்சி போன்றவை இளங்குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோர்களுக்கும் வழங்கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையங்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர் / பாதுகாவலர் ஆகியோர் அவரவர் வீடுகளில் இருந்து ஆரம்பநிலை பயிற்சி மையங்களுக்கு வந்து திரும்பிச் சென்றிட அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்திட அனுமதி அளிக்கப்படுகிறது. ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.10,000/- வழங்கப்படுகிறது.

ஆரம்பநிலை பயிற்சி மையத்திற்கு வருகை தருவது அவசியமாகும். இம்மையங்களில் 263 ஆண் மற்றும் 229 பெண் குழந்தைகள் பயிற்சி பெறுகின்றனர். 55 சிறப்பாசிரியர்கள் இம்மையங்களில் பணிபுரிகின்றனர்.

ஆ) மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையங்கள்

6 வயதிற்குட்பட்ட மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் 31 மாவட்டங்களில் (தருமபுரி மாவட்டம் நீங்கலாக) தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்படுகின்றன. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்/குடும்பத்தினரைப் பயிற்றுவித்து, அதன் மூலம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் இயக்கம், அன்றாட வாழ்க்கையில் ஒட்டுறவாடுதல், அன்றாடச் செயல்கள், சமூகமயமாக்கல் மற்றும் பிற திறன்களை இக்குழந்தைகளிடம் உருவாக்குவதே இம்மையங்களின் நோக்கமாகும்.

கற்பித்தல், கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இம்மையங்களில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக வழங்கப்படுகின்றன. இம்மையங்களில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்மையங்களில் 881 சிறுவர்கள் மற்றும் 591 சிறுமியர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. 144 சிறப்புப் பயிற்சியாளர்கள் மற்றும் இயன்முறை பயிற்சியாளர்கள் இம்மையங்களில் பணிபுரிகின்றனர்.

(இ) பார்வை குறைபாடுடைய குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் :

கண்பார்வையற்ற குழந்தைகளின் தேவை மிகவும் தனித்துவம் வாய்ந்தது என்பதால், தனது சூழலை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவதற்கான தனிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். பிறவியிலேயே கண்பார்வையற்ற மற்றும் கண்பார்வை குறையுடைய குழந்தைகளின் புரிந்துகொள்ளும் அனுபவம் மாறுபட்டதாக இருக்கும். இக்குழந்தைகளின் 85 சதவீத வளர்ச்சிநிலை பார்வைத் திறனைப் பொறுத்தே அமைவதால் வளர்ச்சி நிலையும், தாமதம் ஏற்படக்கூடிய அபாயத்தினை எதிர்நோக்குகின்றனர். எனவே பயிற்சி என்பது அவர்களது பார்வை திறன் ஆரம்பநிலை மற்றும் இதர திறன்களை வளர்ப்பதற்கும் அவசியமாகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு பார்வையற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் அனுபவமிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் சென்னை, கோயம்புத்துார், கடலூர், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நிறுவப்பட்டு செயல்படுகின்றன. இக்குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை கருத்தில்கொண்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. 6 வயதிற்குக் கீழ் உள்ள 70 ஆண் மற்றும் 58 பெண் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைகிறார்கள். இம்மையங்களில் 14 சிறப்பாசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

(ஈ) மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையம், திருச்சி மாவட்டம்:

மூளை முடக்குவாதம் என்பது ஒரு அசாதாரணமான நிலை என்பதால் இதனைக் குணப்படுத்த தசைப் பயிற்சியாளர், தொழில்முறை பயிற்சியாளர், பேச்சுப் பயிற்சியாளர் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் ஆகிய பல்துறை நிபுணர்கள் கொண்ட குழுவின் மூலம் பயிற்சி அளிப்பது அவசியமாகிறது. இம்மையங்களில் இக்குழுவினர் இணைந்து 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மழலை தூண்டுதல் பயிற்சியும், 3-6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு குறித்த காலத்திற்குள் தூண்டுதல் பயிற்சியும் அளிக்கின்றனர். இம்மையத்தில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 39 ஆண் மற்றும் 14 பெண் குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.

(உ) புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் - திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூர்:

மன இறுக்கம் அல்லது புற உலக சிந்தனை அற்றவர்களுக்கு தனித்துவமிக்க சிகிச்சை / பயிற்சி தேவைப்படுகிறது. இம்மையத்தில் ஆரம்ப நிலைப் பயிற்சி மூலம் சிகிச்சை முறைகள் மற்றும் நடத்தைப் பயிற்சி அளிப்பதால், அவர்களுடைய நிலையில் நல்ல மாறுதலுக்கான வழிவகுக்கும். பிரதிபலிப்பு திறன், மொழி, அறிவை புரிந்து கொள்ளும் திறன், பயன்படுத்தும் திறன், முறையான விளையாட்டுத்திறன் மற்றும் சமூக பயிற்சி இவை அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு முன்னோடி திட்டமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 3 ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இம்மையங்களில் 78 புற உலக சிந்தனையற்ற குழந்தைகள் பயிற்சி பெறுகிறார்கள்.

ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு இணை உணவு மற்றும் சத்துணவு வழங்குதல்:

மாற்றுத் திறனுடைய குழந்தைகள் சாதாரண குழந்தைகளைப் போலவே ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மோசமான சுகாதார கேடுகள் மற்றும் வளர்ச்சிப் படிநிலைகளில் தாமதமும் ஏற்படுகிறது. இத்தகைய நிலையினை களைந்திடும் விதமாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களின் மூலம் ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இணை உணவு மற்றும் சத்துணவு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 78 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் 2463 மாற்றுத் திறனுடைய குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள்.

நடமாடும் சிகிச்சைப் பிரிவுகள்

ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் மாவட்ட தலைநகரங்களில் உள்ளதால் 0-6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் துணையாளரின் உதவியுடன் இம்மையங்களுக்கு வர இயலாத நிலை உள்ளது. இத்தகைய குழந்தைகளுக்கு உதவுவதற்காக மாநிலம் முழுவதும் 32 நடமாடும் சிகிச்சைப் பிரிவுகள் ரூ.4.49 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது. இச்சிகிச்சைப் பிரிவுகளில் ஆரம்ப நிலையில் குறைபாடுகளை தடுக்கும் நோக்கில் மறுவாழ்வு சிகிச்சை மற்றும் பணிகளுக்கு தேவையான அனைத்து உபகரண வசதிகளும் அமைக்கப்பட்டு பயனாளிகளின் இருப்பிடத்திற்கே, இவ்வசதிகள் சென்றடையும் வண்ணம் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையினை உறுதிபடுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளூர் முகாம்கள் மற்றும் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதுவரை 964 முகாம்கள் மூலம் 8878 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

மாநில வள மற்றும் பயிற்சி மையம், சென்னை மாவட்டம்

அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் சிறப்புச் சேவைகள் மற்றும் அனைத்துத் தகவல்களும் ஒரே குடையின் கீழ் வழங்கும் நோக்கோடு சென்னையில் மாநில வள மற்றும் பயிற்சி மையம் 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இரயில் போக்குவரத்து சலுகை, மாற்றுத்திறனாளி உதவியாளர் ஒருவருடன் பயணம் செய்வதற்கான பேருந்து பயணச் சலுகை, வருமானவரி விலக்கு மற்றும் அரசு தேர்வுகளில் கூடுதல் நேரம் ஆகிய சலுகைகள் பெற ஏதுவாக 4208 மாற்றுத் திறனாளிகளுக்கு ஊனத்திற்கான சான்றிதழ்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

செவித்திறன் பாதிக்கப்பட்ட, மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட, புற உலகச் சிந்தனையற்ற மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் மற்றும் புலன் சார்ந்த ஒருங்கிணைப்பு மையம் ஆகியவையும் இப்பயிற்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 0-5 வயதிற்கு கீழ் உள்ள 1682 மாற்றுத்திறனுள்ள குழந்தைகள் இம்மையத்தில் பயிற்சி பெறுகின்றனர். பல்வேறு வகையான பயிற்சி வகுப்புகளும் இம்மையத்தில் நடத்தப்படுகின்றன. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ் அனைத்து சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அன்னையர்களுக்கு பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் குழந்தைகள் கல்வி நிதி அமைப்பின் (UNICEF) கீழ் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு சிறப்பு குழந்தைகளுக்கான சத்தான உணவு மற்றும் சத்துணவு முக்கியத்திற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் CSR நிதியின் மூலம் புதிய இயன்முறை சேவை மைய கட்டடம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு தற்போது அம்மையம் மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், சென்னையில் செயல்பட்டு வருகிறது.

வட்டார வள மற்றும் பயிற்சி மையம், திருச்சி மாவட்டம்

இம்மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊனத்திற்கான சான்றிதழ் மற்றும் உதவிகள் பதிவு புத்தகம் வழங்கப்படுகிறது. இம்மையத்தில், புறஉலக சிந்தனையற்றோர், பல்வகை ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆரம்ப பயிற்சி மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான பகல்நேர மையம் மற்றும் ஆலோசனை மற்றும் தகவல் மையங்கள் செயல்படுகின்றன. மேற்குறிப்பிட்டுள்ள சேவைகளினால் 5000 மாற்றுத் திறனாளிகள் பயனடைந்துள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லங்கள்

மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் சமுதாயத்தின் பார்வையில் ஒதுக்கப்படுபவர்களாக உள்ளதால் அவர்களின் நலன்களை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது அரசின் முக்கிய கடமையாகும். ஆரம்ப நிலையிலேயே மனநல பாதிப்பு கண்டறியப்படுமானால், அதனை முற்றிலும் குணப்படுத்த இயலும். எனவே, மன நோய் குறித்து தவறான எண்ணம் கொள்ள வேண்டிய தேவையில்லை. எனவே, மற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களைப் போலவே மனநலம் பாதிக்கப்பட்டோர்களும் கவனிக்கப்பட வேண்டும் என்பதுடன் சாதாரண நபர்களுக்கான சூழலைப் போலவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உருவாக்க வேண்டியது அவசியம்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறைவிடம், உணவு, மருத்துவம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை வழங்குவதற்காக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இல்லத்திலும் அதிகபட்சமாக 50 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தற்பொழுது 1385 மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

சிறப்புப் பள்ளிகள்

ஊனத்தின் நிமித்தம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இலவச கட்டாய ஆரம்பக்கல்வி மற்றும் உயர்கல்வியிலிருந்து விடுபடக்கூடாது என்பதனை உறுதி செய்திடுவதற்கான குறிக்கோளில் தமிழ்நாடு அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. இக்குறிக்கோளினை அடைந்திடும் விதமாக தமிழ்நாட்டில் 76 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளிகள் சிறப்புக் கல்வியை அளித்து வருகின்றன.

  • இதில் 22 அரசு சிறப்புப் பள்ளிகள் (10 பார்வை குறைபாடுடையோருக்கான பள்ளிகள், 10 செவித்திறன் குறைபாடுடையோருக்கான பள்ளிகள், 1 கை, கால் பாதிக்கப்பட்டோருக்கான பள்ளி, 1 மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி செயல்பட்டு வருகின்றன.
  • 54 அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன.

மேற்படி 22 அரசு சிறப்புப் பள்ளிகளில் பார்வை குறைபாடுடையோருக்கான மூன்று மேல்நிலைப்பள்ளிகள் அடங்கும். அவை பூவிருந்தவல்லி (ஆண்கள்), திருச்சிராப்பள்ளி (பெண்கள்), தஞ்சாவூர் (இருபாலர்) ஆகும். மேலும், இரண்டு செவித்திறன் குறைபாடுடையோருக்கான மேல்நிலைப்பள்ளிகள் முறையே தருமபுரி மற்றும் தஞ்சாவூரில் இயங்கி வருகின்றன.

இந்தச் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகளுக்கு இலவச தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுப் பொருட்கள், கற்பித்தல் மற்றும் கற்றல் உபகரணங்கள், சூரிய ஒளி மூலம் வெந்நீர் பெறும் சாதனம், உயர்தர மின்சலவை இயந்திரம் ஆகியவையும் இச்சிறப்புப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆண்டிற்கு ஒரு முறை இச்சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

மேலும், சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு (அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்) உணவூட்டு மானியமும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 2012-2013ம் ஆண்டில், தமிழக அரசு ஒரு மாணவருக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.450/- என வழங்கி வந்த உணவூட்டு மானியத்தை ரூ.650/என உயர்த்தி அளித்துள்ளது. 2014-2015ம் நிதியாண்டில் பிப்ரவரி 2015 முதல், காலை பள்ளிக்கு வந்து மாலையில் வீடு திரும்பும் மாணவர்களுக்கும், மற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களைப் போலவே மதிய வேளையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்புக்கல்வியின் பலனாக, பத்தாம் வகுப்பில் பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, பூவிருந்தவல்லி, தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய சிறப்புப் பள்ளிகள் மற்றும் 12ம் வகுப்பில் பார்வையற்றோர் அரசு மகளிருக்கான மேல்நிலைப்பள்ளி, திருச்சி ஆகிய சிறப்புப் பள்ளிகளில் பயிலும் பார்வையற்ற மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். சிறப்புப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிக்கு சொந்த கட்டடம் ரூ.1.16 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை

அனைத்து மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியருக்கும் இலவசக் கல்வி தமிழ்நாடு அரசால் அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர் கல்வி பயிலும் காலக்கட்டத்தில் ஏற்படும் இடைநிகழ் செலவுகளை மேற்கொள்ளும் பொருட்டு, அம்மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இக்கல்வி உதவித்தொகையானது மாணவ/மாணவியர் பயிலும் வகுப்புக்கு ஏற்றவாறு இருக்கும். மேலும், இளங்கலைப் பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் தொழிற் கல்வி மற்றும் ஏனைய கல்விப் பிரிவில் பயில்வோருக்கும், அவர்கள் பயிலும் கல்வி பிரிவிற்கு ஏற்றவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பார்வை குறைபாடுடைய மாணவ / மாணவியர் தேர்வு எழுதிட உதவும் வகையில், அவர்கள் தேர்வு எழுத உதவுபவர்களுக்கு ஒரு தேர்வுத் தாளுக்கு ரூ.250/- வீதம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகையானது 2015-2016ம் ஆண்டிலிருந்து ரூ.250/-லிருந்து ரூ.300/- ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. கீழ்க்கண்ட 6 பார்வை குறைபாடுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பயிலும் சுமார் 500 மாணவர்கள் இந்தத் திட்டத்தால் ஒவ்வொரு ஆண்டும் பயனடைந்து வருகின்றனர்:

  1. அரசு பார்வை குறைபாடுடையோருக்கான ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பூவிருந்தவல்லி.
  2. அரசு பார்வை குறைபாடுடையோருக்கான பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி.
  3. அரசு பார்வை குறைபாடுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்.
  4. சிறுமலர் பார்வை குறைபாடுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி, சென்னை.
  5. புனித லூயிஸ் பார்வை குறைபாடுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி, சென்னை.
  6. இந்திய பார்வை குறைபாடுடையோருக்கான சங்கம் மேல்நிலைப்பள்ளி, மதுரை.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்குதல்:

தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களுக்கும் ப்ரெய்லி புத்தகங்கள் உட்பட இலவச பாட புத்தகங்களை வழங்கி வருகிறது.

அரசு சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக சீருடை வழங்குதல்:

அரசு சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நான்கு இணை சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம்:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் பார்வை குறைபாடுடைய மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பார்வை குறைபாடுடைய மாணவர்களை கல்வி கற்க ஊக்குவிக்கும் பொருட்டு இலவசமாக DVD Player கல்வி உபகரணம் வழங்குதல்:

வளர்ந்து வரும் கல்வியின் அவசியத்தை கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புதிய கல்வி கற்கும் உபகரணங்களை, அவர்கள் நன்றாக கல்வி கற்கும் பொருட்டு அளிக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

இதனை நன்குணர்ந்த தமிழ்நாடு அரசு, பார்வை குறைபாடுடைய மாணவ / மாணவியர்களுக்கு, குறிப்பாக அரசு பார்வை குறைபாடுடையோருக்கான ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பூவிருந்தவல்லி, அரசு பார்வை குறைபாடுடையோருக்கான பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி மற்றும் அரசு பார்வை குறைபாடுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூரில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் பார்வையற்ற மாணவ / மாணவியர்களுக்கு இலவசமாக DVD Player with Head Phones and Pen Drive 4 w உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு வழங்கப்படும் ஊக்கத்தொகை:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளில் 10ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறன் படைத்த மாணவ / மாணவிகள் கல்வியைத் தொடர முடியாமல் இடையில் படிப்பை நிறுத்துவதைத் தவிர்க்கும்பொருட்டும், அவர்கள் உயர்கல்வியைத் தொடரவும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

செவித்திறன் குறைபாடுடைய, வாய்பேச இயலாதவர்களுக்கான பி.காம்., பி.சி.ஏ. பட்டப்படிப்பு:

செவித்திறன் குறைபாடுடைய மற்றும் பேச இயலாதவர்களுக்காக சென்னை மாநிலக் கல்லூரியில் பி.காம்., மற்றும் பி.சி.ஏ., பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இப்பாடப்பிரிவுகளில் தலா 15 மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இத்திட்டம் செவித்திறன் குறைபாடுடைய மற்றும் பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணவர்களும் பட்டப்படிப்பு மேற்கொள்வதற்கு உதவி செய்கிறது.

சட்டப்படிப்பு பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை:

சட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள், சட்டப்புத்தகங்கள் வாங்கிக் கொள்வதற்கும் மற்றும் வழக்கறிஞர் சங்கத்தில் (Bar Council) வழக்கறிஞராக பதிவு செய்து கொள்வதற்காகவும், ரூ.3,000/உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக 15 மாணவர்கள் இத்திட்டத்தினால் பயனடைகின்றனர்.

செவித்திறன் மற்றும் பார்வை குறையுடையோருக்கான அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மானியம்:

அரசு அங்கீகாரம் பெற்ற செவித்திறன் மற்றும் பார்வை குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மானியமாக ஒரு சிறப்பு ஆசிரியருக்கு மாதம் ரூ.10,000/- வீதம் 12 மாதங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சிறப்புப் பள்ளிக்கு 3 சிறப்பாசிரியர்கள் வீதம் இந்த ஊதிய மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

பயிற்சி திட்டங்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் பொருட்டு அவர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சி அளிக்க அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக பின்வரும் பயிற்சிகள் கட்டணமின்றி வழங்கப்பட்டு வருகின்றன:

(அ) மாற்றுத்திறனாளிகளுக்கு பல்லூடகப் பயிற்சி மற்றும் இலக்க புகைப்படப் பயிற்சி:

கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட 200 மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னையில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் வட்டார அலுவலகத்தின் மூலம் ஒரு மாதம் பல்லூடகப் பயிற்சி மற்றும் இலக்க புகைப்பட பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன் மாற்றுத்திறனாளிகள் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். பல்லூடகப்பயிற்சி பெற்ற நபர்கள் பொழுதுபோக்கு நிறுவனங்களில், குறிப்பாக தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் விளம்பரத்துறை போன்றவற்றில் அதிகம் தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு வருடமும் இத்திட்டத்தின்கீழ் 200 மாற்றுத் திறனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.

(ஆ) செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு பொருத்துநர் பயிற்சி:

கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டாண்டு பொருத்துநர் பயிற்சியளிப்பதற்காக சிறப்பு பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, தற்போது 21 மாற்றுத்திறனாளிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும், பயிற்சிக் காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.300/- வீதம் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

இட ஒதுக்கீட்டின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துதல்

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், குழுமங்கள் மற்றும் அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகின்றது. தற்போது புதியதாக இயற்றப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் 2016ன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவிகித இட ஒதுக்கீட்டினை அரசு பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் செயல்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு தொகுதி A மற்றும் B பிரிவில் உகந்த பணியிடங்களை கண்டறியும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

தலைமைச் செயலாளர் தலைமையில், பல்வேறு அரசுத்துறை செயலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவினை அரசு அமைத்துள்ளது. இக்குழு, அரசு, அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் மூன்று விழுக்காடு இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதை கண்காணிக்கும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்ட காலிப்பணியிடங்களில், பணியிடம் நிரப்பும் வருடத்தில் மாற்றுத்திறனாளிகள் இல்லாதபட்சத்தில், அப்பணியிடங்களை மூன்று ஆண்டுகளுக்கு முன் கொணர அரசாணை (நிலை) எண்.200, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, நாள் 26.12.2006ல் ஆணையிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் (சமவாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம் 1995ல் வலியுறுத்தியுள்ளவாறு மாநில அரசுத் துறைகளில், தொகுதி ஏ மற்றும் 'பி' பிரிவுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அரசாணை (நிலை) எண் 99, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை, நாள் 26.02.1988ல் தொகுதி A, B, C மற்றும் முன் கீழ் உகந்த பணியிடங்களை கட்டாயமாக கண்டறிய அரசு சார்பு நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் அரசாணை (நிலை) எண் 10, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நாள் 04.03.2014ன்படி, பல்வேறு அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1928 பணியிடங்கள் பின்னடைவு பணியிடங்களாக கண்டறியப்பட்டு நிரப்பப்பட ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசாணை (நிலை) எண்.13, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, நாள்.02.03.2016ல் தொகுதி 'ஏ' மற்றும் 'பி' பிரிவுகளில் 263 பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்களாக கண்டறியப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

(அ) திறன் மேம்பாட்டு பயிற்சி:

தமிழ்நாடு தொலைநோக்கு 2023ல் வலியுறுத்தியுள்ளவாறு, மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்காக ஆயிரக் கணக்கான மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

(ஆ) தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு வழங்கல் :

தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவதற்கு அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சிறு தொழில்கள் மற்றும் பெட்டிக்கடைகள்

மாற்றுத்திறனாளிகள் சுயமாக தொழில் செய்யவும், குறுதொழில் நிறுவனங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதன்பொருட்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வங்கிக் கடன் பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், மூன்றில் ஒரு பங்கு அல்லது ரூ.10,000/- இதில் எது குறைவான தொகையோ, அத்தொகை மாநில அரசால் மானியமாக வழங்கப்படுகிறது.

(அ) பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்:

பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு, சுயவேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில், வங்கிக் கடன் பெற ஊக்குவிக்கப்படுகிறது. அதன்படி, உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவை ஆகிய பிரிவுகளில் சுய தொழில் செய்ய வங்கி மூலம் கடன் பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கடன் பெறும் போது விளிம்புத் தொகையாக செலுத்த வேண்டிய 5 விழுக்காடு பங்குத் தொகைக்கான நிதியினை, மாநில அரசே ஏற்கிறது. இத்திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் உரிய விண்ணப்பங்களை நேரடி கணினி தொடர்பு (online) மூலம் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்விண்ணப்பங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவில் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

(ஆ) வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு, சுயவேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில், வங்கிக் கடன் பெற ஊக்குவிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கடன் பெறும் போது, விளிம்புத் தொகையாக செலுத்த வேண்டிய 5 விழுக்காடு பங்குத் தொகையை மாநில அரசே ஏற்கிறது. இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் உரிய விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட தொழில் மையத்திற்கு அனுப்ப வேண்டும். அவ்விண்ணப்பங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவில் பரிசீலிக்கப்படும்.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை

2.88571428571
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top