பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மெட்ரிகுலேசன் பள்ளிகள் - 2018 - 2019

மெட்ரிகுலேசன் பள்ளிகள் - 2018 - 19 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன

முன்னுரை

மெட்ரிகுலேசன் பள்ளிகள் அரசுடன் இணைந்து ஆங்கில வழியில் கல்வியினை வழங்கி வருகிறது. ஆரம்ப காலங்களில் மெட்ரிகுலேசன் பள்ளிகளானது சென்னை பல்கலைக்கழகத்தாலும் மதுரை பல்கலைக்கழகத்தாலும் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளன. இந்த பள்ளிகள் நிர்வாகம் மற்றும் நிதி சம்பந்தமாக தன்னாட்சி பெற்றிருந்தன. 1978 ஆம் ஆண்டில், இவ்வகைப் பள்ளிகள் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் நிர்வாக ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டன. மேலும், 2001 ஆம் ஆண்டு மெட்ரிகுலேசன் பள்ளிகளைச் செவ்வனே நிர்வகிக்க தனி இயக்ககத்தின் அவசியம் உணரப்பட்டு, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் 2001 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் முதன்மைப் பணியானது அரசாங்கத்தால் நிர்ணயம் செய்யும் விதிகளை பூர்த்தி செய்யும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதும், மெட்ரிகுலேசன் பள்ளிகள் நிர்வாகத்தினை கண்காணிப்பதுமாகும். இப்பள்ளிகளில் 38.80 லட்சம் மாணாக்கர்கள் கல்வி பயில்கின்றனர்.

தொலைநோக்கு

மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பாதுகாப்பான கற்கும் சூழலில் தரமான கல்வி அளிக்கப்படுவதை உறுதிசெய்வதே மெட்ரிகுலேசன் இயக்ககத்தின் தொலை நோக்காகும்.

நோக்கங்கள்

*புதிய மெட்ரிகுலேசன் பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்குதல்

*அரசாங்கத்தால் அவ்வப்போது நிர்ணயம் செய்யும் விதிகளை பூர்த்தி செய்யும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல்

*போதுமான பாதுகாப்பான உட்கட்டமைப்பு வசதியினை உறுதி செய்தல்

*பள்ளிகளில் பயிலும் மாணாக்கரின் பாதுகாப்பினை உறுதிசெய்தல்

*குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009ஐ நடைமுறைப்படுத்த மாநில தொடர்பு அமைப்பாக செயல்படுதல்

*அரசாங்கத்தால் நிர்ணயம் செய்யும் கல்வித் தகுதியின்படி ஆசிரியர்கள் நியமனத்தை உறுதி செய்தல்

*குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்வதற்காக அனைத்து பள்ளிகளிலும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையை (CCE) நடைமுறைப்படுத்துதல்

நிர்வாகப் பொறுப்புகள்

அங்கீகாரம் மற்றும் அனுமதி

அரசாங்கத்தால் நிர்ணயம் செய்யப்படும் நிபந்தனைகளை நிறைவு செய்யும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், புதிய பள்ளி துவக்க அனுமதி வழங்குதல் ஆகியவை இவ்வியக்ககத்தால் மேற்கொள்ளப்படுகிறது. அரசால் வரையறுக்கப்படும் நிபந்தனைகளை நிறைவு செய்யும் மெட்ரிகுலேசன் பள்ளியினை மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரமானது அதிகபட்சமாக 3 ஆண்டு காலத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்பட்ட அங்கீகாரம் முடிவடையும் நிலையில் உள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதுப்பித்து ஆணை வழங்கப்படுகிறது.

2017-18 ஆம் கல்வியாண்டில், 54 புதிய மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு துவங்க அனுமதியும் ஏற்கனவே செயல்படும் 98 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 நடைமுறைப்படுத்துதல்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, பிரிவு 12(1) (சி) இன் கீழ் தனியார் சுயநிதிப் பள்ளிகளில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

2013-14 ஆம் கல்வியாண்டு முதல் 2016-17 ஆம் கல்வி ஆண்டு வரையிலான காலத்திற்கு 25% இட ஒதுக்கீட்டில் சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி கட்டணத் தொகை ரூ.401.98 கோடி மாநில அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 2017-18 ஆம் கல்வியாண்டில், 90,607 குழந்தைகள் சேர்க்கை செய்யப்பட்டுள்ளனர். பிரிவு வாரியாக சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:

வ எண்

பிரிவு

சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகள்

1

வாய்ப்பு மறுக்கப்பட்டவர்

18,275

2

நலிவடைந்த பிரிவினர்

71,905

3

ஆதரவற்றவர்

39

4

எச்.ஐ.வி

7

5

சுகாதாரப்பணியாளர் குழந்தைகள்

118

6

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள்

263

மொத்தம்

90,607

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 இல், பிரிவு 12(1) (சி) இன்படி 25% இட ஒதுக்கீட்டில் மாணாக்கர் சேர்க்கை செய்ய அரசால் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணாக்கர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மையினை உறுதிப்படுத்த இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையானது இணைய வழியாக விண்ணப்பித்தலின் மூலம் தகுதியுடைய மாணாக்கர்களுக்கு தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேர்ந்திட வழிவகுத்துள்ளது. தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஒரு பள்ளியின் மாணாக்கர் சேர்க்கை எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாக இருந்தால், குலுக்கல் முறைத் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலரால் நியமிக்கப்பட்ட ஒரு அலுவலரின் முன்னிலையில் மாணாக்கர்கள் தேர்வு நடைபெறுகிறது. எச்.ஐ.வி மூன்றாம் பாலினத்தவர், சுகாதாரப் பணியாளர்களின் குழந்தைகள், சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர். பொதுமக்கள் இணைய வழியில் இலவசமாகப் பதிவு செய்ய மாவட்ட மற்றும் வட்டார அளவில் உள்ள கல்வி அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முன்முயற்சியின் மூலம் மாணாக்கர்கள் சேர்க்கை நடைமுறையினால் வெளிப்படைத் தன்மை அறிமுகப்படுத்துவதுடன் இப்பணியினை மேற்பார்வை செய்யும் அலுவலர்களின் பணிச்சுமையினை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முயற்சிகள்

இணையவழியாக அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்தல்

தற்போது உள்ள நடைமுறையின்படி துவக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தினை பரிசீலனை செய்வது சிக்கலாகவும் நேரத்தை ஈர்ப்பதாகவும் உள்ளது. மேலும், இந்நடைமுறையால் ஆய்வு அலுவலர்களுக்கு போதிய நம்பகத்தன்மையான புள்ளி விவரம் பராமரிப்பதில் சிரமம் உள்ளது. இதனை சரிசெய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. இந்த புதிய முயற்சியினால், புதிதாக பள்ளி தொடங்க அனுமதி, ஆரம்ப அங்கீகாரம் புதுப்பித்தல், கூடுதல் வகுப்பு துவக்க அனுமதி, மெட்ரிகுலேசன் பள்ளியை மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தக் கோருதல் சார்ந்த விண்ணப்பங்களை அதன் தொடர்புடைய ஆவணங்களுடன் பள்ளி நிர்வாகங்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

இந்த இணைய விண்ணப்பம், துறை சார்ந்த கள அலுவலர்களுக்கு மாற்றப்பட்டு, ஆய்வு அலுவலர் பள்ளியினை நேரடியாக ஆய்வு செய்து உரிய பரிந்துரையுடன் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநருக்கு அனுப்பிவைப்பார். மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர், சார்ந்த பள்ளி விவரங்கள் மற்றும் பரிந்துரைகளை பரிசீலனை செய்து தகுதிபெறும் பட்சத்தில் உரிய ஆணைகள் பிறப்பிப்பார். இந்த புதிய முயற்சியால் பள்ளி நிர்வாகங்களுக்கு எளிமையான சேவையினை அவர்தம் பள்ளிகளிலேயே எவ்வித சிரமமுமின்றி வழங்கிட இயக்ககம் உறுதி செய்கிறது. மாநில அரசால் இம்முயற்சிக்கு ரூ.10 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடைப்பயிற்சி

மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் முதன்முறையாக பணியிடைப் பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயிற்சிக் கட்டகங்கள் பின்வரும் தலைப்புகளில் தயாரிக்கப்பட்டுள்ளன:

• குழந்தை உளவியல்

* ஆசிரியர் மாணவர் உறவு

* குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகளைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் அதற்குத் தீர்வு

* கல்வியில் தகவல் மற்றும் தொழில் நுட்ப செயல்திறன்

* தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு

* வளரிளம் பருவத்தினருக்கேற்ற பள்ளிச் சூழலை உருவாக்குதல்

* தண்டனைகளும் எதிர்மறை விளைவுகளும், அதனை தவிர்ப்பதற்கான தேவைகளும்

* திறன்சார்ந்த மதிப்பீட்டு முறைகள்

• மதிப்பீட்டு முறைகளில் புதிய அணுகுமுறைகள்

* 11ஆம் வகுப்புப் பாடத்திட்டம் மற்றும் பொதுத்தேர்வு

* போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்தல்

* உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல்கள்

இந்த புதிய முயற்சியானது தனியார் பள்ளிகளில் பயிலும் ஆசிரியர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், தங்கள் பணியில் வளர்ச்சியினை அடையவும் வாய்ப்பாக அமையும்.

பேருந்து அட்டை வழங்குதல்

பள்ளி மாணாக்கர்கள் எவ்வித சிரமமுமின்றி பள்ளிக்கு வந்து செல்ல அரசால் பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. விலையில்லா பயண அட்டை வழங்கும் இத்திட்டமானது மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 3,32,132 மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.

தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவும், கூடுதலாக கட்டண வசூலிலும், நன்கொடை வசூலிலும் ஈடுபடும் பள்ளிகளின் செயல்பாட்டை சட்டரீதியாக தடுக்கவும், தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல்) சட்டம், 2009 உருவாக்கப்பட்டது. தமிழகத்திலுள்ள சுமார் 10,200 தனியார் பள்ளிகளுக்கு 2017-18 ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 6500 பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயக் குழுவால் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளுக்கு 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆம் கல்வியாண்டுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய ஆவணங்கள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் பள்ளிகளில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக பெறப்படும் மனுக்கள் தீர்வு செய்வதிலும் கட்டண நிர்ணயக்குழு ஈடுபட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட பள்ளியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்த ரூ.63,86,290/-ஐ மாணாக்கர்களிடம் திரும்ப வழங்க கட்டண நிர்ணயக் குழுவால் ஆணையிடப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளை முறைப்படுத்துதல்

தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளிகளானது, தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும்) சட்டம், 1973, தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும்) விதிகள், 1974, மெட்ரிகுலேசன் பள்ளி ஒழுங்குப்படுத்தல் விதித்தொகுப்பு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் விதித்தொகுப்பு, ஆகிய விதிகளின்படி நிர்வகிக்கப்பட்டு வருகின்றன

தமிழ்நாடு பொதுப்பாடத்தின்படி மாநிலத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மாநிலப் பள்ளிக் கல்வி பொதுப்பாட சட்டம், 2010 இன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. எனவே, அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் மற்றும் விதிகளை வகுத்திட மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

முடிவுரை

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் மாணாக்கர்களுக்கு பாதுகாப்பான கற்றல் சூழலும் தரமான கல்வியை அளிப்பதிலும் ஈடுபாடு கொண்டுள்ளதுடன் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதையும் உறுதி செய்கிறது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை,

2.83870967742
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top