பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / கொள்கை விளக்கக் குறிப்பு / விதைச்சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்புத்துறை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

விதைச்சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்புத்துறை

விதைச்சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்புத்துறையின் (2018 – 2019) கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

விவசாயம் நமது தேசத்தின் உந்து சக்தியாக விளங்குகிறது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் வளர்ந்து வரும் மக்கள் தொகையின் தேவைகளை பூர்த்தி செய்தல் போன்றவை தற்போது மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே, உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், தன்னிறைவு அடையவும் விவசாயத்தில் தரமான இடுபொருட்களை பயன்படுத்துவது இன்றியமையாததாகிறது.

விதையானது ஒரு பயிரின் மகசூல், தரம், விளை பொருளின் சீரான தன்மை மற்றும் அதன் சந்தை விலை போன்றவற்றை நிர்ணயிப்பதற்கு அடிப்படை இடுபொருளாக விளங்குகிறது. எனவே ஒரு விவசாயியின் வருமானமானது, முழுவதுமாக தரமான சான்று விதைகளைச் சார்ந்தே உள்ளது. ஆகவே விவசாயிகள் விதையினை தேர்வு செய்யும்போது அதன் ஆதாரம் மற்றும் ரகம் போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

சான்று விதைகள் உற்பத்தியினை அதிகரிக்கச் செய்வதற்கும், விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்கச் செய்வதை உறுதி செய்திடவும், விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை கீழ்கண்ட திட்டங்களை செயல்படுத்துகிறது.

1. விதைச்சான்றளிப்பு

2. விதைத் தரக்கட்டுப்பாடு

3. விதைப் பரிசோதனை

4. பயிற்சி

5. அங்ககச்சான்றளிப்பு

விதைச் சான்றளிப்பு

விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்ககத்தின் விதைச்சான்றளிப்புப் பிரிவானது, அறிவிக்கை செய்யப்பட்ட பயிர் இரகங்களில் இந்திய குறைந்த பட்ச விதைச்சான்று தரங்களின்(IMSCS)படி சான்றளிப்புப் பணிகளை மேற்கொள்கிறது. விதைச் சான்றளிப்பு என்பது தரமான விதைகள் கிடைக்கச் செய்வதற்கு இந்திய குறைந்தபட்ச விதைச்சான்றுத் தரங்களின்படி (IMSCS) விதைகளின் தரங்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ள முளைப்புத்திறன், புறத்தூய்மை, இனத்தூய்மை மற்றும் விதை நலம் ஆகியவற்றைப் பாதுகாத்து நெறிமுறைப்படுத்தும் வழிமுறையாகும். விதைச் சான்று முகமை அதன் பணிகளை விதைகள் சட்டம் 1966, விதைகள் விதிகள் 1968-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி செயல்படுத்தி வருகிறது.

மொத்த சான்று செய்த விதை அளவில், சான்று செய்யப்பட்ட நெல் விதைகளின் அளவு 92 விழுக்காடு ஆகும். சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் காய்கறிப் பயிர்களில் சான்று விதைகளின் தேவை அதிகமாக உள்ளதால் இதன் உற்பத்தியை, அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இப்பயிர்களில் துறை மூலம் சான்று விதைகளின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. எனினும் சான்று விதை உற்பத்தியில் தனியார் விதை உற்பத்தியாளர்களின் பங்களிப்பை அதிகரித்திடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2017-18ஆம் வருடத்தில் 55,783 எக்டர் பரப்பளவில் பல்வேறு பயிர்களில் விதைப்பண்ணைகள் பதிவு செய்யப்பட்டு 69,244 மெட்ரிக் டன் விதைகளுக்கு சான்று வழங்கப்பட்டுள்ளது.

விதை சான்றளிப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட பரப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட விதையளவு (2017-18)

வ. எண்

தலைமையிடம்

பரப்பு (எக்டரில்)

சான்றளிக்கப்பட்ட விதையளவு (மெட்ரிக் டன்)

1

காஞ்சிபுரம்

1376

1860

2

திருவள்ளூர்

962

1057

3

கடலூர்

2031

1725

4

விழுப்புரம்

3373

4242

5

வேலூர்

1584

1167

6

திருவண்ணாமலை

1382

910

7

சேலம்

1677

624

8

நாமக்கல்

732

2381

9

தர்மபுரி

988

531

10

கிருஷ்ணகிரி

938

623

11

கோயம்புத்தூர்

2503

1805

12

ஈரோடு

6188

29168

13

திருச்சிராப்பள்ளி

1753

673

14

பெரம்பலூர்

910

1570

15

கரூர்

524

238

16

புதுக்கோட்டை

1239

641

17

தஞ்சாவூர்

7819

2009

18

நாகப்பட்டினம்

2551

1876

19

திருவாரூர்

6663

1905

20

மதுரை

2024

6259

21

தேனி

809

1416

22

திண்டுக்கல்

2136

1891

23

ராமநாதபுரம்

744

336

24

சிவகங்கை

475

425

25

விருதுநகர்

1036

502

26

திருநெல்வேலி

1958

2771

27

தூத்துக்குடி

1313

491

28

கன்னியாகுமரி

95

148

மொத்தம்

55,783

69,244

2018-19ஆம் ஆண்டில் 57,000 எக்டர் பரப்பளவில் விதைப்பண்ணைகள் பதிவு செய்து 1.10 இலட்சம் மெட்ரிக் டன் விதை உற்பத்திக்கு சான்றளிப்பு செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கி வரும் 846 அங்கீகரிக்கப்பட்ட விதை சுத்தி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற வயல் மட்ட விதைக்குவியல்களுக்கு சுத்திகரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, சான்று விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

அரசு நிதியுதவி பெறும் திட்டங்கள்

நடப்புத்திட்டங்கள்

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2016-17ஆம் ஆண்டில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்கக வளாகத்தில் பயிற்சி கூடம் கட்டுமானத்திற்கும் மற்றும் பயிற்சி கூடத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதி மேற்கொள்ளவும் ரூ.155.42 இலட்சத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

நிதிநிலை அறிக்கை அறிவிப்பு - 2017:

நிதிநிலை அறிக்கை 2017-ல் அறிவித்தபடி விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்ககத்தின் கீழ் இயங்கும் விதைப் பரிசோதனை ஆய்வகங்களின் தரத்தை மேம்படுத்தவும், தேவையான உபகரணங்களை கொள்முதல் செய்வதற்காகவும் ரூ.100 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு முழுமையாக இத்திட்டம் முடிக்கப்பட்டுவிட்டது.

விதை சான்றளிப்பை கணினி மயமாக்குதல்

விதைச்சான்று நடைமுறைகளை துரிதப்படுத்த மற்றும் எளிதாக்கிடவும் விதைச்சான்றளிப்பை கணினிமயமாக்கும் பொருட்டு பிரத்யேகமான "SPECS” எனும் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

வேளாண் இயக்குநரகத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவானது, இப்பிரத்யேகமான "SPECS” எனும் மென்பொருள் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டமானது இந்தியாவில் உள்ள விதைச்சான்றளிப்பு முகமைகளில் முதன்மையாக இங்கு தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது ஒரு சிறப்பம்சமாகும். இந்த மென்பொருள் திட்டமானது, விதைச் சான்றளிப்பை இணையதளத்தின் மூலம் செயல்படுத்த ஏதுவாக இருப்பதுடன், சான்றளிப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளவும், சான்றளிப்பு துறையின் அனைத்து பிரிவின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும், முறையான கண்காணிப்பிற்கும் மேலும் வெளிப்படை தன்மையுடன் இயங்கவும் உதவுகிறது. இந்த திட்டமானது விவசாயிகள் / விதை உற்பத்தியாளர்கள், இணையதளத்தில் பதிவு செய்வதற்கும் மற்றும் சான்றளிப்பு செயல்முறையின் முன்னேற்ற நிலையினை தெரிந்து கொள்ளவும் ஏதுவாக உள்ளது.

விதை தரக்கட்டுப்பாடு

விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்ககத்தின் விதை தரக்கட்டுபாட்டு பிரிவானது தற்பொழுது நடைமுறையில் உள்ள விதைச் சட்டங்களை அமல்படுத்தி விதை தரங்களை கண்காணித்து தரமான விதை விநியோகத்தினை முறைப்படுத்துகிறது.

விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் விதை தரக் கட்டுப்பாட்டு பிரிவு, தற்பொழுது நடைமுறையில் உள்ள விதைச் சட்டங்களான விதைகள் சட்டம் 1966, விதைகள் விதிகள் 1968, விதைகள் (கட்டுப்பாடு) ஆணை , 1983 மற்றும் சுற்றுப்புறச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 ஆகியவற்றினை செயல்படுத்தி மாநிலத்தில் உள்ள வேளாண் பெருமக்களுக்கு தரமான விதை விநியோகத்தினை உறுதி செய்கிறது. விதைச்சான்றுத் துறையின் மூலமாக மாநிலத்தில் உள்ள விதை விற்பனையாளர்களுக்கு விதை விற்பனை உரிமம் வழங்கப்படுகிறது.

தற்பொழுது, விதைச்சான்றுத் துறையின் விதை ஆய்வு பிரிவின் கீழ் 9,360 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் மாநிலத்தில் செயல்பட்டு வருகின்றன. விதை ஆய்வாளர்களால் விதை விற்பனை நிலையங்கள் ஒரு வருடத்திற்கு குறைந்தது 6 முறைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விதைக் குவியல்களிலிருந்து தரப் பரிசோதனைக்காக விதை மாதிரிகள் எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்படும் விதை மாதிரிகள் அறிவிக்கை செய்யப்பட்ட விதைப் பரிசோதனை நிலையங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது. பகுப்பாய்வு முடிவுகளின் அடிப்படையில் தரமற்ற விதைக் குவியல்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விதை ஆய்வு பிரிவு விதை ஆய்வாளர்களால் கண்டறியப்படும் விதைச் சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

2017-18ஆம் ஆண்டில் விதை விற்பனை நிலைய ஆய்வுகளின் இலக்கான 68,500-க்கு 68,796 விதை விற்பனை நிலைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் விதைகளின் தரத்தை உறுதி செய்திட நிர்ணயிக்கப்பட்ட 66,000 விதை மாதிரிகள் இலக்கிற்கு 67,150 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட தரமற்ற ரூ.852 இலட்சம் மதிப்பிலான 1,168 மெட்ரிக் டன் அளவு கொண்ட 1,457 விதைக் குவியல்கள் வேளாண் பெருமக்களுக்கு விற்பனை செய்வதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது.

2018-19ஆம் ஆண்டில் 68,500 விதை விற்பனை நிலைய ஆய்வுகள் மேற்கொள்ளவும், 66,000 விதை மாதிரிகளில் தர பரிசோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விதைப் பரிசோதனை

விதை தரத்தை பரிசோதனை செய்து தரம் உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் விதை பரிசோதனை பணிகள் அறிவிக்கை செய்யப்பட்ட விதை பரிசோதனை நிலையங்களில், மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விதைக் குவியலின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கு விதை தரப் பரிசோதனையானது இன்றியமையாததாக இருப்பதுடன் விவசாயிகளுக்கு விதையின் தரத்தினை பற்றிய முக்கிய தகவல்களையும் தருகிறது.

விதைச்சான்றளிப்பு மற்றும் விதைத்தரக் கட்டுப்பாடு ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் இத்துறையின் அறிவிக்கை செய்யப்பட்ட விதைப் பரிசோதனை நிலையங்களிலிருந்து வழங்கப்படும் விதைப்பரிசோதனை முடிவுகளை சார்ந்துள்ளது. இந்திய குறைந்தபட்ச விதைச்சான்று தரங்களின் படி விதைப் பரிசோதனை நிலையங்களில் முளைப்புத்திறன், புறத்தூய்மை , ஈரப்பதம், விதை நலம் மற்றும் பிற ரக விதை கலப்பு போன்ற இனங்களுக்காக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

நமது மாநிலத்தில், தற்போது 33 அறிவிக்கை செய்யப்பட்ட விதைப் பரிசோதனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. விதைச்சான்றளிப்பு பிரிவிலிருந்து பெறப்படும் சான்று விதை மாதிரிகள், விதை ஆய்வு பிரிவிலிருந்து பெறப்படும் ஆய்வாளர் விதை மாதிரிகள் மற்றும் விவசாயிகள், விதை விற்பனையாளர்கள் மற்றும் விதை உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் பணி விதை மாதிரிகளும் அறிவிக்கை செய்யப்பட்ட விதை பரிசோதனை நிலையங்களில் பரிசோதனை செய்யப்படுகின்றன. பயிர் வளர்ப்பு பரிசோதனை, ஒரு குறிப்பிட்ட விதைக் குவியலின் இனத்தூய்மையை உறுதி செய்திட வழி வகை செய்கிறது. விதைச்சான்றளிப்பில், இனத்தூய்மையினை உறுதிப்படுத்தப்பட வேண்டிய விதை மாதிரிகளுக்கும், விதை ஆய்வுப் பிரிவிலிருந்து பெறப்படும் விதை மாதிரிகளுக்கும் இனத்தூய்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

இனத்தூய்மை பரிசோதனையானது விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்கத்தின் கட்டுப்பாட்டில், கோயம்புத்தூர் மாவட்டம் கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வரும் பயிர் வளர்ப்புப் பண்ணையில் மேற்கொள்ளப்படுகிறது. விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்ககத்தின் கீழ் இயங்கி வரும் மாநில விதைப்பரிசோதனை நிலையத்தில் விதை முளைப்பு திறனுக்கான ஒப்பீட்டு பரிசோதனை மற்றும் பருத்தியில் பி.டி.நஞ்சு கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பி.டி.நஞ்சு பரிசோதனைக்கான விதை மாதிரிகள் விதை ஆய்வுப் பிரிவின் விதை ஆய்வாளர்களால் அனுப்பப்படுகிறது.

2017-18ஆம் ஆண்டில் 82,204 விதை மாதிரிகள் தரப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், 2018-19ஆம் ஆண்டில் 92,000 விதை மாதிரிகள் தரப் பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு விதைப் பரிசோதனை குழுமம் அங்கீகாரம் பெற்ற விதைப் பரிசோதனை நிலையம்

இந்தியாவிலேயே பொதுத் துறை ஆய்வகங்களில் முதன் முதலாக கோவை விதைப் பரிசோதனை நிலையம் 2014ஆம் ஆண்டில் பன்னாட்டு விதைப் பரிசோதனை குழுமத்தின் அங்கீ காரம் (ISTA - International Seed Testing Association) பெற்றது மிகவும் பெருமைக்குரியதாகும். இப்பரிசோதனை நிலையம் அனைத்து உலக நாடுகளில் இருந்து பெறப்படும் விதை மாதிரிகளையும் பரிசோதனை செய்திடும் வசதிகள் மற்றும் திறன் கொண்டதாகும். கோயம்புத்தூர் விதைப் பரிசோதனை நிலையமானது 2007ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு விதைப் பரிசோதனை குழுமத்தின் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றது. பன்னாட்டு விதைப் பரிசோதனை குழுமத்தின் அங்கீகாரமானது தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறி பயிர்களுக்கு முளைப்புத்திறன், புறத்தூய்மை மற்றும் பிற பயிர் இனங்களை கண்டறியும் பரிசோதனைக்காக வழங்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு விதைப் பரிசோதனை குழுமத்தின் (ISTA) மறு அங்கீகாரத்திற்கான தணிக்கை ஏப்ரல் 2017-ல் நடைபெற்று ISTA அங்கீகாரமானது 2019ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாய்வகம் ISTA அங்கீகாரம் பெற்ற ஆய்வகம் என்பதால் ஏற்றுமதிக்கு தகுதியான ஆரஞ்சு நிற விதைக்குவியல் சான்றிதழ் மற்றும் நீல நிற விதை மாதிரி சான்றிதழ்களும் இவ்வாய்வகம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின், வேளாண் அமைச்சகத்தால், இந்திய நாட்டின் மிகச்சிறந்த விதைப் பரிசோதனை நிலையத்திற்காக வழங்கப்படும் விருது 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் எட்டாவது தேசிய விதைக் கழக கூட்டம், ஹைதராபாத்தில் நடைபெற்ற போது கோயம்புத்தூர் விதை பரிசோதனை நிலையத்திற்கு வழங்கப்பட்டது.

சர்வதேச விதை சந்தையில் காய்கறி விதைகளின் தேவை அதிகரித்து கொண்டு வருகிறது. பன்னாட்டு விதை பரிசோதனை குழுமத்தின் (ISTA-International Seed Testing Association) அங்கீகாரத்தினைப் பெற்ற கோயம்புத்தூர், விதை பரிசோதனை ஆய்வகமானது சிறு தொழில் முனைவோர், ஏற்றுமதியாளராக மாறுவதற்கு ஒரு நுழைவாயிலாக அமைந்துள்ளது. இந்த விதை பரிசோதனை நிலையத்தின் சேவைகளை விளம்பரப்படுத்தி விதை ஏற்றுமதியாளர்களை ஈர்க்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

எனவே, ISTA அங்கீகாரத்தை பயன்படுத்தி ஏற்றுமதி சார்ந்த விதை உற்பத்தி திட்டங்களை வாய்ப்புள்ள இடங்களில் செயல்படுத்தலாம்.

டி.என்.ஏ.மரபணு ஆய்வகம்

தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரும் விதை உற்பத்தி தொழிலில், அதிகரித்து வரும் தேவைக்கேற்ப விதை பரிசோதனை பணிகள் நாளுக்கு நாள் மேம்படுத்தப்படுவதுடன்

நவீனமயமாக்கப்படவும் வேண்டும். இந்த நிலையை கருத்தில் கொள்வதோடு மட்டுமல்லாமல் விதை தரங்களை உறுதிபடுத்துவதில் சிறப்பாக செயல்பட, இந்த அரசின் சீரிய முயற்சியால் ரூபாய் 58.75 இலட்சம் மதிப்பில் டி.என்.ஏ.மரபணு ஆய்வகம் நிறுவப்பட்டது.

இவ்வாய்வகமானது, நாட்டிலுள்ள இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களுள் முதன்மையானதாக விளங்குகிறது. மேலும் டி.என்.ஏ மரபணு ஆய்வகமானது "மாநில டி.என்.ஏ மரபணு ஆய்வகமாக", விதைச்சட்டம் 1966-ன் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டு, தற்போது தமிழ்நாட்டில் பிரதானமாக பயிரிடப்படும் அறிவிக்கை செய்யப்பட்ட 15 நெல் இரகங்களுக்கு இனத்தூய்மை பரிசோதனை செய்யும் திறன் பெற்றதாக உள்ளது.

பயிர்வளர்ப்பு பரிசோதனை பண்ணை

இனத்தூய்மை மற்றும் முளைப்புத்திறன் ஆகிய இரண்டும் விதையின் மிக முக்கிய தர காரணிகள். பயிர் வளர்ப்பு பரிசோதனை மூலம் பயிர் இரகங்களின் இனத்தூய்மை கண்டறியப்படுகிறது. இத்துறையை சேர்ந்த விதைச்சான்றளிப்பு மற்றும் விதை தரக்கட்டுப்பாட்டு பிரிவிலிருந்து அவ்வப்போது விதை மாதிரிகளை இனத்தூய்மை பரிசோதனைக்காக பயிர் வளர்ப்பு பண்ணைக்கு மதிப்பீடு செய்ய அனுப்பி வருகின்றனர்.

பயிர்வளர்ப்பு பரிசோதனை பாத்திகளை பயிர்வளர்ச்சி பருவம் முழுவதும், குறிப்பாக பூப்பது முதல் முதிர்ச்சி அடையும் பருவத்திற்கு முக்கியத்துவம் அளித்து பரிசோதனை செய்யப்படுகிறது. அனைத்து செடிகளும் தனித்துவமான புறத்தோற்ற குணாதிசயங்கள் கண்டறிய உட்படுத்தப்பட்டு பயிர் ரகங்களின் தூய்மைத் தன்மை அறியப்படுகிறது.

பயிற்சி

இத்துறையில் உள்ள கள அலுவலர்களுக்கு பல்வேறு பணிகளான வயலாய்வுகள், விதை சுத்திகரிப்பு, விதை மாதிரிகள் எடுத்தல், விதைப் பரிசோதனை செய்தல் மற்றும் விதைச் சட்டங்கள் குறித்த இனங்களில் சிறப்பாக பணிபுரிய உரிய முறையில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தரமான விதை உற்பத்தி மற்றும் விதை விநியோகத்தினை மேம்படுத்த இத்துறையின் பயிற்சி பிரிவின் மூலம் கீழ்க்கண்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

ஆற்றுப்படுத்தும் பயிற்சி:

இப்பயிற்சி விதைச்சான்றுத் துறையில் புதிதாக பணியேற்கும் தொழில் நுட்ப அலுவலர்களுக்கு விதைச்சான்று நடைமுறைகள், வயலாய்வுகள், பயிர் இரகங்களை கண்டறிதல், சுத்திகரிப்புப்பணி, விதை மாதிரிகள் எடுத்தல், சான்றட்டை பொருத்துதல், விதைப் பரிசோதனை நடைமுறைகள் மற்றும் விதைத்தரக்கட்டுப்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

புத்தூட்டப்பயிற்சி

இப்பயிற்சி விதைச்சான்றுத் துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு விதை உற்பத்தி, விதைப் பரிசோதனை மற்றும் விதை ஆய்வுப் பிரிவுகளில் புதிய தொழில் நுட்பங்கள் பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது.

விதை உற்பத்தியாளர் பயிற்சி

இப்பயிற்சி தரமான விதை உற்பத்தியை மேம்படுத்த விதை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விதை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

விதை விற்பனையாளர் பயிற்சி:

இப்பயிற்சி தரமான விதை விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தரமான விதைகளை விற்பனை செய்வது, சேமித்து வைப்பது மற்றும் விதைச் சட்டங்கள் குறித்தும் பயிற்சியளிக்கப்படுகிறது.

வெளிமாநிலப் பயிற்சி

விதைச்சான்றுத் துறையில் உள்ள 18 அலுவலர்கள் புதிய தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்வதற்காக வெளிமாநில பயிற்சிக்கு 2017-18ஆம் ஆண்டில் அனுப்பப்பட்டுள்ளனர்.

2017-18ஆம் ஆண்டில் 47,000 நபர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 47,418 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2018-19ஆம் ஆண்டில் 47,320 நபர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அங்ககச் சான்றளிப்பு

தமிழக அங்ககச் சான்றளிப்புத் துறை, அங்கக உற்பத்தி சாகுபடி முறையினை ஆய்வுகள் செய்து, தேசிய அங்கக உற்பத்தி திட்டம் (NPOP) என்ற தரத்தின் அடிப்படையில் அங்ககச் சான்றளிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை, மத்திய அரசின் வணிக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் புதுடில்லியில் உள்ள வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (APEDA) நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும், இத்துறையில் பின்பற்றப்படும் விதிமுறைகள் மற்றும் தரக் கொள்கை, ஐரோப்பிய ஐக்கிய நாடுகளின் தரத்திற்கு ஒப்பானதாகும். இத்துறை நமது நாட்டில் உள்ள அரசு அங்ககச் சான்றளிப்புத் துறைகளுள், தனி விவசாயிகள் பதிவு செய்த நிலையில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. மேலும், தமிழக அங்ககச் சான்றளிப்புத் துறையில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு தேசிய அங்கக உற்பத்தித் தரங்கள் மற்றும் தமிழக அங்ககச் சான்றளிப்புத் துறையின் தரங்கள் குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.

அங்ககச்சான்றளிப்புத் துறையில் அதிக அளவு விவசாயிகளை கொண்டு வர வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் கீழ் உள்ள அட்மா (ATMA) திட்டத்தில் ஒருங்கிணைந்து அங்ககச்சான்று பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது தமிழகத்திலிருந்து அங்கக உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும். அங்கக விவசாயிகளின் நன்மைக்காக பிரத்யேகமாக www.tnocd.net என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இணைய தளத்தில், பதிவு செய்த விவசாயிகளின் முகவரி, பயிர் விபரங்கள் மற்றும் புதிதாக பதிவு செய்யும் விவசாயிகளுக்கு தேவைப்படும் படிவங்கள், தொடர்பு கொள்ள அலுவலர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் இதர விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அங்ககச் சான்றளிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு அங்ககச்சான்றளிப்பு துறை அலுவலர்கள் தேசிய அளவிலான பயோபேக் (Bio Fach) (நியூ டெல்லி) மற்றும் அங்கக மற்றும் சிறுதானியங்கள் வர்த்தக காட்சி (Organic and Millets Trade Fair) பெங்க ளூர் மற்றும் பல்கலைக்கழக கண்காட்சிகளில் கலந்துகொண்டு மாவட்ட மற்றும் வட்டார அளவில் விவசாயிகளுக்கு அங்ககச்சான்று பற்றி பயிற்சியளித்தனர். 2017-18ஆம் ஆண்டில் 30,207 ஏக்கர் நிலப்பரப்பில் அங்ககச்சான்றளிப்பிற்காக ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. 2018-19ஆம் ஆண்டில் 31,000 ஏக்கர் பரப்பில் அங்ககப் பண்ணைகள் ஆய்வு மேற்கொண்டு சான்றளிப்பு பதிவின் கீழ் வாய்ப்புச் சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அங்ககச் சான்றளிப்பின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பரப்பு விபரம் (2017-18)

வ. எண்

அங்ககச் சான்று ஆய்வாளர் தலைமை இடம்

மாவட்டம்

பதிவு செய்யப்பட்ட பரப்பு

(ஏக்கர்)

1

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி

11,654

2

திருச்சிராப்பள்ளி

திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம்

5,013

3

மதுரை,

மதுரை விருதுநகர், திருநெல்வேலி, சிவகங்கை இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி

5,067

4

வேலூர்,

வேலூர் திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர்

8,473

மொத்தம்

30,207

பணியாளர்கள் விபரம்

விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றளிப்புத் துறையானது விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநர் தலைமையில் கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநர் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு விதைச்சான்று இணை இயக்குநர், ஒரு விதை ஆய்வு இணை இயக்குநர், ஒரு தரமேலாளர், 15 விதை ஆய்வு துணை இயக்குநர்கள், 37 உதவி இயக்குநர்கள், 150 விதைச்சான்று அலுவலர்கள், 70 விதை ஆய்வாளர்கள், 63 வேளாண்மை அலுவலர்கள் (விதை பரிசோதனை) மற்றும் 6 அங்ககச்சான்று ஆய்வாளர்கள் தொழில் நுட்ப அலுவலர்களாக இத்துறையில் பணியாற்றுகின்றனர். மேலும் இத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உறுதுணையாக 500 அமைச்சு பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை

2.97674418605
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top