பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண் - உணவு பாதுகாப்பு 2018 -19

வேளாண் -உணவு பாதுகாப்பு 2018 -19 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம்

சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக 2014-15ஆம் ஆண்டு முதல் 2017-18ஆம் ஆண்டு வரை எண்ணெய்வித்துக்கள் மற்றும் எண்ணெய்ப்பனைக்கான தேசிய இயக்கம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டது. 2018-19ஆம் ஆண்டிலிருந்து இத்திட்டம் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்துடன் இணைத்து தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் எண்ணெய்வித்துக்கள், எண்ணெய்ப்பனை மற்றும் மரவகை எண்ணெய்வித்துப்பயிர்கள் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.

எண்ணெய் வித்துக்கள்

தமிழ்நாட்டில் எண்ணெய்வித்து பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, விதை மாற்று விகிதத்தை அதிகரிக்க புதிய இரகங்களை அறிமுகம் செய்தல், இறவையில் எண்ணெய்வித்து சாகுபடி பரப்பளவை உயர்த்துதல், கரும்பு, பயறுவகை, சிறுதானிய பயிர்களில் ஊடுபயிராகவும் நெல் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் தொடர் பயிராகவும் எண்ணெய்வித்துப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் சான்று விதைகளின் விநியோகம், ஆதாரம் மற்றும் சான்று விதைகள் உற்பத்தி போன்றவற்றிற்கு மானியம் வழங்குதல், புதிய சாகுபடி தொழில் நுட்பங்களை பெருமளவு விவசாயிகள் பயன்படும் வகையில் நிலக்கடலையில் பெரு விளக்க திடல் அமைத்தல், ஜிப்சம் இடுதல், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், களைக்கொல்லிகள் மற்றும் பயிர் பாதுகாப்பு கருவிகள் வழங்குதல் போன்ற செயல்பாடுகள் செயல்படுத்தப்படுகிறன.

2017-18ஆம் ஆண்டில், எண்ணெய்வித்துக்கள் மற்றும் எண்ணெய்ப்பனைக்கான தேசிய இயக்கம் -குறு இயக்கம்-1 திட்டத்தின் கீழ் ரூ.10.98 கோடி நிதி செலவினத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டமானது 2018-19ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் - எண்ணெய்வித்துக்கள் திட்டத்தின் கீழ் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

எண்ணெய்ப்பனை

இத்திட்டத்தின் நோக்கம் தரமான எண்ணெய்ப்பனை கன்றுகள் வழங்குவதோடு ஏற்கனவே பயிர் செய்யப்பட்டுள்ள எண்ணெய்ப்பனை மரங்கள் பராமரிப்பு, ஊடுபயிர் சாகுபடி, குழாய் கிணறு அமைத்தல், டீசல் மின்சார பம்பு செட்டுகள், பழக்குலை அறுவடை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விநியோகம் செய்வதாகும்.

2017-18ஆம் ஆண்டில் ரூ.4.43 கோடி நிதி ஒதுக்கீட்டில் கன்னியாகுமரி, சென்னை , நீலகிரி, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்கள் நீங்கலாக அனைத்துமாவட்டங்களிலும் எண்ணெய்வித்துக்கள் மற்றும் எண்ணெய்ப் பனைக்கான தேசிய இயக்கம், குறு இயக்கம் II திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டம் 2018-19ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் எண்ணெய்ப்பனை திட்டத்தின் கீழ் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

மரவகை எண்ணெய்வித்துப் பயிர்கள்

வேம்பு மற்றும் புங்கம் ஆகிய மரவகை எண்ணெய்வித்துப் பயிர்களுக்கான இயக்கம் திருவள்ளூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேம்பு மற்றும் புங்கம் மரவகை எண்ணெய்வித்துப் பயிர்களுக்கான நாற்றங்கால் அமைப்பதை ஊக்குவித்தல் மற்றும் தரிசு நிலங்களில் சாகுபடி செய்தல், ஊடுபயிர் சாகுபடி போன்றவை இவ்வியக்கத்தின் நோக்கமாகும். 2017-18ஆம் ஆண்டில், ரூ1.79 கோடி நிதி ஒதுக்கீட்டில் எண்ணெய்வித்துக்கள் மற்றும் எண்ணெய்ப்பனைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டம் 2018-19ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் - மரவகை எண்ணெய்வித்துக்கள் திட்டத்தின் கீழ் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

தென்னை

தமிழ் நாட்டில், நீண்ட கால பயிரான தென்னை 4.34 இலட்சம் எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டு ஆண்டு ஒன்றுக்கு 59,625 இலட்சம் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் உற்பத்தித்திறன் ஆண்டு ஒன்றுக்கு எக்டேருக்கு 13,711 தேங்காய்களாகும். தமிழ்நாட்டில் தென்னையின் பரப்பை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் உற்பத்தியினை அதிகரித்து மதிப்புக் கூட்டப்பட்ட தென்னை பொருட்களை உற்பத்தி செய்யலாம். தமிழ்நாடு அரசு தென்னையின் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கோடு தென்னை வளர்ச்சி வாரியத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தென்னை வளர்ச்சி வாரியத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

தென்னை வளர்ச்சி வாரியத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ், மண்டல தென்னை நாற்றுப்பண்ணை தோற்றுவித்தல் (தரமான நெட்டை x குட்டை மற்றும் குட்டை X நெட்டை தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்தல்), உற்பத்தியினை அதிகரிக்க ஒருங்கிணைந்த பண்ணையம் (செயல் விளக்க திடல்களை அமைத்தல்), தென்னையில் மறு நடவு மற்றும் புத்துயிர்ப்பு திட்டம் (வயதான, காய்ப்பற்ற மற்றும் நோய்வாய்ப்பட்ட மரங்களை வெட்டி அப்புறப்படுத்துதல், மறுநடவு செய்தல் மற்றும் தென்னந்தோப்புகளை உயிர்ப்பித்தல்) போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

2017-18ஆம் ஆண்டில் மண்டல தென்னை நாற்றுப்பண்ணை தோற்றுவித்தல் திட்டத்தின் கீழ் ரூ.125.11 இலட்சம் செலவில் 5.08 இலட்சம் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் கீழ் ரூ.97.20 இலட்சம் செலவில் 555.45 எக்டர் பரப்பில் செயல்விளக்கத் திடல்கள் அமைக்கப்பட்டன. மறுநடவு மற்றும் புத்துயிர்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.27.70 கோடி செலவில் 6,189.70 எக்டர் பரப்பில் செயல்படுத்தப்பட்டன. மேற்கண்ட அனைத்து திட்டங்களும் 2018-19ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம்

2017-18ஆம் ஆண்டில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், தென்னங்கன்றுகள் விநியோகம் திட்டத்தின் கீழ் ரூ.12.15 இலட்சம் மானியத்தில் 51,749 தென்னங்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டன. இதைத்தவிர சிவப்புக்கூன் வண்டு கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூ.78.28 இலட்சம் மானியத்தில் 11,418 எக்டர் பரப்பில் செயல்படுத்தப்பட்டது.

நீரா பானம் உற்பத்தி

தென்னை விவசாயிகளின் நலன் கருதி தென்னையிலிருந்து நீரா” உற்பத்தியை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை எண்.41, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (VIII) துறை , நாள் 21.12.2017 என்ற ஆணையை வெளியிட்டுள்ளது. தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு உரிமம் வழங்குவதற்கான பரிந்துரை மற்றும் நீரா உற்பத்தி தொடர்பான நடவடிக்கைகள் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் விபரம் விரிவாக வேளாண் வணிகப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரும்பு

முக்கிய பணப்பயிரான கரும்பு தமிழ்நாட்டில் 3.05 இலட்சம் எக்டரில் இறவை பயிராக சென்னை , கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக சாகுபடி செய்யப்படுகிறது. இது மொத்த பயிர் சாகுபடி பரப்பில் 5 சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில் கரும்பு சராசரியாக 318 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது, இதன் சராசரி உற்பத்தித்திறன் எக்டருக்கு 104 மெட்ரிக் டன் ஆகும்.

தமிழ்நாடு அரசு, கரும்பு சாகுபடியில் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக குறைந்த நீர், சமசீரான உரப்பயன்பாடு மற்றும் ஒரு பரு கரணை நாற்றுக்கள் கொண்ட ஓர் உன்னத திட்டமான நீடித்த நிலையான கரும்பு சாகுபடித்திட்டனை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

நீடித்த நிலையான கரும்பு சாகுபடி

நீடித்த நிலையான கரும்பு சாகுபடித் திட்டம் நிழல் வலைக் கூடம் அமைத்து ஒரு பரு கரணை நாற்றுகள் உற்பத்தி செய்து விநியோகம் செய்தல், சொட்டு நீர் பாசன அமைப்பை நிறுவுதல், மண்வள மேம்பாடு மற்றும் கூடுதல் வருமானத்திற்காக ஊடுபயிர் சாகுபடி ஆகிய சிறப்பு அம்சங்களுடன் கரும்பு உற்பத்தித்திறனை அதிகரித்திடும் வகையில் கடந்த 2011-12ஆம் ஆண்டு முதல் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017-18ஆம் ஆண்டு இத்திட்டம் சர்க்கரை ஆலைகளின் ஒத்துழைப்புடன் ரூ.18.33 கோடி செலவில் 1,597 நிழல்வலைக் கூடங்கள் அமைத்து 9 கோடி நாற்றுகள் 15,177 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திட விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

2018-19ஆம் ஆண்டு கரும்பு உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் சர்க்கரை கட்டுமானத்தை உயர்த்த தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கரும்பு விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்யும் பழைய இரகங்களை புத்துயிர்ப்பு செய்யவும், புதிய இரகங்களை ஊக்குவிக்க வல்லுநர் விதைகள் மற்றும் திசு வளர்ப்பு மூலம் உற்பத்தி செய்த நாற்றுக்களை விநியோகம் செய்தல், ஒரு பரு கரணை நாற்றுகள் நடவு மற்றும் ஊடுபயிராக பயறு வகைகளை சாகுபடி செய்தல் தொடர்பான செயல்விளக்கங்கள் மற்றும் மண் வளத்தை மேம்படுத்த கரும்பு தோகைகளை இயந்திரம் மூலம் தூளாக்கி மக்க வைத்தல் ஆகிய இனங்களில் 55,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்

கரும்பு

கரும்பு பயிர் சார்ந்த சாகுபடி முறையானது கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, அரியலூர், தஞ்சாவூர் ஆகிய ஏழு மாவட்டங்களிலும், கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017-18ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் கரும்புப்பயிரில் ஊடுபயிராக பயறுவகை சாகுபடி தொடர்பான செயல்விளக்கங்கள் மற்றும் மாநில அளவிலான பயிற்சி போன்ற இனங்கள் ரூ.42.96 இலட்சம் நிதி செலவினத்தில் செயல்படுத்தப்பட்டன.

2018-19ஆம் ஆண்டிலும், இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பருத்தி

பருத்தி பயிர் ஒரு முக்கியமான வணிகப்பயிராகும். நூற்பாலைகளின் வளர்ச்சி மற்றும் பருத்தி பயிரிடும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதில் பருத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், கரூர், புதுக்கோட்டை , கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்கள் தவிர ஏனைய 25 மாவட்டங்களில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் பருத்தி சராசரியாக 1.51 இலட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்படுகின்றது. பருத்தியின் ஆண்டு சராசரி உற்பத்தி 4 இலட்சம் பேல்கள் ஆகும். பருத்தியின் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினைப் பெருக்குவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கம்

தமிழ்நாட்டில் பருத்தி சாகுபடி பரப்பினை விரிவுபடுத்துவதன் மூலம் பருத்தியின் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகப்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கம் என்ற இலட்சியத்திட்டம் 2014-15ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இவ்வியக்கமானது ஐந்தாண்டு முடிவில் பருத்தியின் சாகுபடி பரப்பினை 6 இலட்சம் ஏக்கராக (2.40 இலட்சம் எக்டர்) உயர்த்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

வேளாண்மை துறையின் சீரிய முயற்சியால் இறவை மற்றும் மானாவாரி பகுதிகளில் நீர் சேமிப்பு முறைகளை கையாண்டும், டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியினை தொடர்ந்து பருத்தி சாகுபடியினை ஊக்குவித்தும் 2014-15ஆம் ஆண்டில் சுமார் 89,325 ஏக்கர் (35,730 எக்டர்) பரப்பளவில் கூடுதலாக பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

இவ்வியக்கத்தின் கீழ், இறவை நிலங்களில் கோடை பருத்தி சாகுபடி மற்றும் டெல்டா பகுதிகளில் நெல் சாகுபடியினைத் தொடர்ந்து பருத்தி சாகுபடிசெய்து சாகுபடி பரப்பு விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

தரமான பருத்தி சான்று விதைகள் உற்பத்தி மற்றும் விநியோகம், சொட்டு நீர்ப்பாசனம், மேம்படுத்தப்பட்ட உழவியல் முறைகள், ஒருங்கிணைந்த பாசன முறை, உர மேலாண்மை, களை, பூச்சி மேலாண்மை முறைகளை கையாளுதல் மற்றும் பருத்தி அறுவடையில் இயந்திரமயமாக்கல் போன்ற இனங்கள் பருத்தி சாகுபடி மேற்கொள்ளும் மாவட்டங்களில் செயல்படுத்தப் படுகின்றன.

இது தவிர அடர்நடவுசாகுபடி மற்றும் இயந்திர அறுவடைக்கு உகந்த பருத்தி இரகங்களை கண்டறிவதற்கான ஆராய்ச்சியும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2017-18ஆம் ஆண்டு இத்திட்டம் ரூ.3.84 கோடி நிதி செலவினத்தில் செயல்படுத்தப்பட்டது. மேலும் இத்திட்டம் 2018-19ஆம் ஆண்டிலும் ரூ.10.62 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம்- பருத்தி

பருத்திப் பயிரின் பரப்பு மற்றும் உற்பத்தியினை உயர்த்தும் நோக்கில், தரமான விதைகள் உற்பத்தி மற்றும் விநியோகம், பருத்தி அறுவடைக்கருவி விநியோகம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு இடுபொருட்கள் அடங்கிய தளைகள் விநியோகம், இளஞ்சிவப்பு நிற காய்ப்புழுக்களை கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறிகள் விநியோகம், போன்ற இனங்கள் கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தென்னிந்திய நூற்பாலைக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2018-19ஆம் ஆண்டில் தொடர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய உணவுப்பாதுகாப்புத் திட்டம்-பருத்தி

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் பருத்தி பயிர் சாகுபடி சார்ந்த அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பருத்திபயிர் சார்ந்த சாகுபடி முறை விழுப்புரம், சேலம், தர்மபுரி, கோயம்புத்தூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 11மாவட்டங்களிலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்களிலும் செய்லபடுத்தப்பட்டுவருகிறது. 2017-18ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, உள்நாட்டு, மிக நீள் இழை இரக பருத்தி விதை உற்பத்தி மற்றும் அடர்நடவுக்கான முன்மாதிரிசோதனைத் திடல்கள் அமைத்தல் போன்ற இனங்கள் ரூ.47.15 இலட்சம் நிதி செலவினத்தில் செயல்படுத்தப்பட்டன. இத்திட்டத்தினை 2018-19ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள்

டெல்டா பகுதியில் அதிக நீர் தேவை கொண்ட நெல் சாகுபடியானது மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவையும், அணையின் நீர் இருப்பு மற்றும் கர்நாடக அரசால் திறந்து விடப்படும் நீரின் அளவை சார்ந்தே உள்ளது. நிலையற்ற மழைபொழிவு, மேட்டூர் அணையிலிருந்து குறைந்த நீர் இருப்பினால் காலதாமதமாக நீர் திறப்பு போன்ற காரணங்களினால், டெல்டா பகுதியில் இயல்பான நெல் சாகுபடி பாதிக்கப்படும் சமயங்களில், தமிழ்நாடு அரசானது விரைந்து செயல்பட்டு சிறப்பு முன்னோடி திட்டங்களை அறிவித்து, சாகுபடியினை நிலைப்படுத்தும் வகையில் குறைந்த நீர்தேவைஉடைய பயறுவகை சாகுபடி மற்றும் இதர நவீன மாற்று உத்திகளை கையாண்டு சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை பாதுகாத்து உற்பத்தியினை உறுதிசெய்கிறது.

குறுவை சாகுபடி தொகுப்பு 2017 (Kuruvai Package)

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் முழுமையாகவும், கடலூர், திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் டெல்டா வட்டாரங்களில் உள்ள விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கத்துடனும், நிலத்தடி நீரினை பயன்படுத்தி குறுவை சாகுபடியினை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும், குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் 2017, ரூ.56.92 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் சிறப்பு நோக்கமாக, அதிக நீர்த்தேவை கொண்ட நெல் பயிருக்கு பதிலாக, குறைந்த நீர்தேவை உடைய பயறு வகை சாகுபடியினை ஊக்கப்படுத்தவும், நெல் மற்றும் பயறு வகை பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன், நெற்பயிரில் இயந்திர நடவு, துத்தநாக சல்பேட் மற்றும் உயிர் உரங்கள் 80,000 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளவும், நுண்ணூட்டக்கலவையானது 25,000 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளவும், பயறு வகை சாகுபடியினை ஊக்கப்படுத்தும் வகையில் உயர் விளைச்சல் இரக பயறுவகை விதைகள், டிஏபி இலைவழி கரைசல் மற்றும் உயிர் உரங்கள் 57,743ஏக்கர் பரப்பிற்கு 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டன.

மேலும், மழைநீர் மற்றும் பாசன நீரினை முழுமையாக பயன்படுத்தும் வகையில், உழவு மானியம் 60,000 ஏக்கர் பரப்பிற்கு வழங்கப்பட்டது. பாசன நீர் குழாய்கள் 75 சதவீத மானியத்தில்1,574 அலகுகள் வழங்கப்பட்டுள்ளன.

காவேரி டெல்டா வெண்ணாறு பகுதி மற்றும் கல்லணை பகுதியின் மண்வளத்தினை மேம்படுத்தும் வகையில் பசுந்தாள் உர விதைகள் 20,682 ஏக்கர் பரப்பிற்கு 100 சதவீத மானியத்தில்வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில்1,64,215 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டத்தினால் டெல்டா மாவட்டங்களில், நெல் மற்றும் பயறு வகைகளில் 3.43 இலட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது.

சம்பா சாகுபடி தொகுப்பு 2017 (Samba Package)

சம்பா பருவ சாகுபடிக்காக மேட்டூர் அணையில் நீர் இருப்பு போதிய அளவு இல்லாததால், காலதாமதமாக 2.10.2017 அன்று திறக்கப்பட்ட நிலையில், டெல்டா மாவட்டங்களான, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களின் டெல்டா வட்டாரங்களிலும் பெய்த மழையினை கொண்டு, நேரடி நெல் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 28.09.2017 அன்று சம்பாதொகுப்புத்திட்டம் 2017 ரூ41.15 கோடி நிதி ஒதுக்கீட்டில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

இத்தொகுப்புத்திட்டத்தின் கீழ், 4.99 இலட்சம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பினை ஊக்கப்படுத்த உழவுமானிய உதவித் தொகையும், 3,638 மெட்ரிக் டன் சான்று நெல் விதைகளுக்கு விநியோக மானியமும், 2.47 இலட்சம் ஏக்கர் நேரடி நெல் விதைப்பில் உண்டாகும் களைகளை கட்டுப்படுத்த களைக்கொல்லி உபயோகத்திற்கு உதவித்தொகையும் 621 உழுவை இயந்திரங்களுக்கு விநியோக மானியமும் வழங்கப்பட்டன.

இத்தொகுப்புத்திட்டத்தினை செயல்படுத்தியதன் விளைவாக, டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவத்தில் 10.70 இலட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2,52,407 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

நீடித்தமானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் மானாவாரி சாகுபடி விவசாயிகளுக்கான மகத்தான திட்டம்

நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம், 2016-17ஆம் ஆண்டு முதல் நான்காண்டுகளில் மூன்று கட்டங்களாக ரூ.802.90 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்திட திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 25 மாவட்டங்களில் 25 இலட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள் தொகுப்பு அடிப்படையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் வேளாண்மை, வேளாண்மை பொறியியல், கால்நடை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகிய துறைகளின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க, சிறப்புக் கவனம் செலுத்தும் வகையில் அடிப்படைத் தகவல்களை சேகரித்தல், கிராம பஞ்சாயத்து அளவிலான விவசாயிகள் குழுக்கள் அமைத்தல், திறன் மேம்பாட்டு பயிற்சி, நுழைவுக் கட்டப்பணிகள் மேற்கொள்ளுதல், கோடை உழவுப்பணிகள் / நீர்ப்பிடிப்பு / மழைநீர் சேகரிக்கும் உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், உழவு மானியம், விதை மற்றும் வேளாண் இடுபொருட்களுக்கான மானியம், பழக்கன்றுகள் வழங்குதல், மதிப்புக்கூட்டு இயந்திரங்கள் வழங்குதல், வாடகை இயந்திர மையம் அமைக்க நிதி வழங்குதல் மற்றும் கால்நடை நலன் பராமரித்தல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 200 மானாவாரி தொகுப்புகளில் 2017-18ஆம் ஆண்டில், இறுதிக்கட்ட திட்டப்பணிகளும், இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 400 தொகுப்புகளில் ஆரம்ப கட்ட திட்டப்பணிகளும் ரூ.153.67 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2017-18ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள்

*அடிப்படை புள்ளிவிவரம் சேகரித்தல்

முதற்கட்டமாக 200 மானாவாரி தொகுப்புகள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது. 2016-17ஆம் ஆண்டில், தொகுப்பின் அடிப்படை புள்ளி விவர சேகரிப்புக்காக தொகுப்புக்கு ரூ.25,000 வீதம் ரூ. 50 இலட்சம் வழங்கப்பட்டு அடிப்படை புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக, 2017-18ஆம் ஆண்டில் 400 தொகுப்புகள் கண்டறியப்பட்டு, அடிப்படை புள்ளி விவரம் சேகரித்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

* மானாவாரி கிராம விவசாயிகள் மேம்பாட்டு குழு

அமைத்தல்

ஒவ்வொரு மானாவாரித் தொகுப்பிலும், கிராம் அளவில் முன்னோடி விவசாயியை தலைவராகக் கொண்டு "மானாவாரி கிராம விவசாயிகள் மேம்பாட்டுக் குழு" அமைக்கப்பட்டு ஒரு குழுவுக்கு ரூ.10,000/- வீதம் 200 மானாவாரித் தொகுப்புகளில் 876 குழுக்களுக்கு மொத்தம் ரூ.87.6 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாதாந்திர குழு கூட்டம் நடத்துதல் உள்ளிட்ட பணிகள் 2016-17ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 2017-18ஆம் ஆண்டில் இரண்டாம் கட்ட 400 தொகுப்புகளில் ரூ. 1,54 கோடி நிதி செலவில் 1,541 விவசாயிகள் மேம்பாட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

*திறன் மேம்பாட்டு பயிற்சி

201617ஆம் ஆண்டில் முதல்கட்ட 200 மானாவாரி தொகுப்புகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக ரூ.1.39 கோடி செலவில் 1,125 அலுவலர்களுக்கும், 46,428 விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2017-18ஆம் ஆண்டில் இரண்டாம் கட்ட 400 மானாவாரி தொகுப்புகளில் ரூ.4.16 கோடி நிதி ஒதுக்கீட்டில், 2,120 அலுவலர்களுக்கும் மற்றும் 1.55 இலட்சம் விவசாயிகளுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

* நுழைவுக் கட்டபணிகள் - மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல்

முதல்கட்டமாக 2016-17ஆம் ஆண்டில் நுழைவு கட்ட பணிகளாக, குழுவுக்கு பொதுவான மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்திட தொகுப்பிற்கு ரூ.5 இலட்சம் வீதம் 200 தொகுப்புகளுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மழை நீர் சேகரிப்பை மேம்படுத்தி மானாவாரி விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக 210 தடுப்பணைகள், 14 கிராம குளங்கள், 32 சமூக குளங்கள் மற்றும் 55 ஊரணிகளை ஆழப்படுத்துதல் ஆக மொத்தம் 311 பணிகள் நிறைவுற்றுள்ளன. இரண்டாம் கட்டமாக 2017-18ஆம் ஆண்டில் புதிய 400 தொகுப்புகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைத்திட ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

*நிலமேம்பாட்டு பணிகள்

கோடை உழவுப்பணி

2017-18ஆம் ஆண்டில், முதல் கட்ட 200 தொகுப்புகளுக்கு நில மேம்பாட்டு பணிகளுக்காக கோடை உழவுப்பணி மூலம் மழைநீரினை சேகரித்திட எக்டருக்கு ரூ.1,250 வீதம் 2 இலட்சம் எக்டருக்கு பின்னேற்பு மானியமாக ரூ.25 கோடி மானியம், 2,11,532விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மழைநீர்சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல்

பண்ணை அளவில் மழை நீரை சேகரிக்கவும் மண் அரிப்பினை தடுக்கும் வகையில் வயல் வரப்புகள், பண்ணைக்குட்டைகள் மற்றும் ஊரணிகளை ஆழப்படுத்துதல் (இராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய பணிகளுக்காக 2017-18ஆம் ஆண்டில், முதல் கட்ட 200 தொகுப்புகளுக்கு ஒவ்வொரு தொகுப்பிற்கும் ரூ.7.50 இலட்சம் வீதம் ரூ.15 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

விதை மற்றும் இடுபொருள்கள் வழங்குதல்

2017-18ஆம் ஆண்டில், முதல் கட்ட 200 தொகுப்புகளுக்கு 50 சத மானிய விலையில் சிறுதானியங்கள், பயறுவகைகள், பருத்தி மற்றும் எண்ணெய்வித்துக்களில் குறிப்பிட்ட இடுபொருட்களுக்காக 5 இலட்சம் ஏக்கருக்கு ரூ. 50 கோடி மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள் வழங்குதல்

மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள் அமைப்பதற்காக முதற் கட்ட 200 தொகுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 தொகுப்புகளில் முன்னோடித்திட்டமாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் / கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ஒவ்வொரு தொகுப்பிற்கும் ரூ.10 இலட்சத்திற்கு மிகாமல் அல்லது இயந்திர மதிப்பில் 75 சதவீதத்தொகை என்ற விகிதத்தில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயறு உடைக்கும் இயந்திரங்கள், எண்ணெய் பிழியும் இயந்திரங்கள் மற்றும் சிறு தானிய அரவை இயந்திரங்கள் போன்ற மதிப்புக்கூட்டும் இயந்திரங்களை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பண்ணைக்கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையம்

படித்த, வேலை வாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் பொருட்டு, பண்ணைக் கருவிகளை வாடகைக்கு வழங்கும் மையம் அமைப்பதற்காக ஒவ்வொரு தொகுப்பிற்கும் ரூ.8 இலட்சம் வீதம் ரூ.16 கோடி நிதி செலவில் 24 மாவட்டங்களில், 200 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கால்நடை நலமேம்பாட்டு பணி

கால்நடைத்துறையின் மூலம் கால்நடை நல மேம்பாட்டிற்காக முதல் கட்ட 200 தொகுப்புகளில் ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ள கால்நடைகளுக்கு தாது உப்புகள் வழங்குதல், இனவிருத்தி குறைபாடுக்கான சிகிச்சை மற்றும் மடிவீக்க நோய் சிகிச்சை ஆகிய பணிகள் ஒரு தொகுப்பிற்கு ரூ.10 இலட்சம் வீதம் ரூ.20 கோடி செலவினத்தில் கால்நடைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாதுளை மற்றும் நெல்லிகன்றுகள் விநியோகம்

2017-18ஆம் ஆண்டு 7,540 மாதுளை மற்றும் 32,755 நெல்லிக்கன்றுகள் 200 தொகுப்புகளில் உள்ள மானாவாரி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, அதில் 35,425 கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் 14480 மாதுளை மற்றும் 51,723 நெல்லிக்கன்றுகள் பருவமழை துவங்கியவுடன் வழங்கப்பட உள்ளன.

2018-19ஆம் ஆண்டில், இரண்டாம் கட்ட 400 தொகுப்புகளில் எஞ்சிய ஐந்து முக்கிய பணிகளும் மூன்றாம் கட்ட 400 தொகுப்புகளில் ஆரம்ப கட்ட பணிகளும் ரூ.32116 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கம் - மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டம்

மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டம் சென்னை, நீலகிரி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் நீங்கலாக 21 மாவட்டங்களில், மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும், மானாவாரி பயிர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

மானாவாரி பகுதியில் ஒருங்கிணைந்த பண்ணையம்

தொகுப்பு அணுகுமுறையில் சிறு மற்றும் குறு விவசாயிகளை மையமாக கொண்டு, இருபோக பயிர்கள், கறவை மாடுகள், ஆடுகள் வளர்ப்புடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணைய முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பண்ணை அளவில் வாழ்வாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, பயிர் இழப்பு ஏதும் ஏற்பட்டால், கூடுதல் வருமானம் மூலம் ஈடுசெய்யவும் இம்முறை வழிவகுக்கும்.

இப்பண்ணைய முறையில் கறவை மாடு ஒன்றுக்கு 50 சத மானியத்துடன் தானியம் (அ) பயறு வகைகள் (அ) எண்ணெய் வித்துகள் (அ) பருத்தி இவற்றை முதல் பயிராக கொண்டு இரு போக சாகுபடியுடன் வரப்பு பயிரும் பயிரிட ரூ. 27,500/- மானியம் அல்லது ஆடு வளர்ப்பிற்கு (9 ஆடுகள் + 1 கிடா) 50 சதவீத மானியத்துடன் தானியம் (அ) பயறு வகைகள் (அ) எண்ணெய் வித்துகள் (அ) பருத்தி இவற்றை முதல் பயிராக கொண்டு இரு போக சாகுபடியுடன் வரப்பு பயிரும் பயிரிட ரூ. 23,500/- வழங்கப்பட்டு வருகிறது.

2017-18ஆம் ஆண்டு பயிர்த்திட்டத்துடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணைய இனத்தில் இருபோக பயிர்கள் 10,376 எக்டரில் பயிரிடப்பட்டு 8,541 கறவை மாடுகளும் 18,350 ஆடுகளும் ரூ.27.79 கோடி செலவில் 10,376விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

மதிப்புக் கூட்டுதல் மற்றும் பண்ணை மேம்பாட்டு நடவடிக்கைகள்

இவ்வினத்தின் கீழ் நிரந்தர மண்புழுஉரக்கூடம் அமைத்திட ஒரு கூடத்திற்கு ரூ.25,000/- மானியமும், அடர்திறன் பாலித்தீன் கொண்ட மண்புழு படுக்கை அமைத்திட ஓர் அலகிற்கு ரூ.6,000/மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சிகள் (பயிற்சி ஒன்றுக்கு ரூ.10,000/-) விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது. 2017-18ஆம் ஆண்டில் நிரந்தர மற்றும் அடர்திறன் பாலித்தீன் கொண்ட மண்புழு படுக்கைகள் 1,040 எண்கள் ரூ.1.61 கோடி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய இனங்களைக் கொண்ட மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டம் 2017-18ஆம் ஆண்டில் ரூ. 30 கோடி நிதியில் செயல்படுத்தப்பட்டது.

2018-19ஆம் ஆண்டு பகுதி சார்ந்த பயிர் திட்டம், தீவனப்பயிருடன் கூடிய மரவளர்ப்பு மற்றும் மரம் அல்லாத வன பொருள்கள் உற்பத்தி, தேனீ வளர்ப்பு, நிரந்தர மண்புழு உரக்கூடம் முதலிய இனங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டுப்பண்ணையம்

சிறு, குறு விவசாயிகள் தனிப்பட்ட முறையில் தேவையான புதிய வேளாண் தொழில் நுட்பங்களை செயல்படுத்துவதிலும், கடன் பெறுவதிலும், விற்பனை செய்வதிலும் சிரமங்கள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு, கூட்டாக வேளாண் இடுபொருட்கள் கொள்முதல் செய்யவும், சாகுபடி செலவினை

குறைக்கவும், நிதித்தேவையை பூர்த்தி செய்யவும், விவசாயிகள் குழுவாக சேர்ந்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யவும் கூட்டுப்பண்ணையத் திட்டம் (Collective Farming) என்ற முன்னோடித்திட்டம் 2017-18ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்களை அமைத்து பின்னர் இந்த குழுக்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனமாக மேம்படுத்தப்படும். கூட்டுப்பண்ணைய முறையில் விவசாயம் மேற்கொண்டு கடன் வசதி பெறவும், புதிய தொழில் நுட்பங்களை நடைமுறைப்படுத்தவும், சந்தை வாய்ப்பு இணைப்புகளை ஏற்படுத்தவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் விவசாயிகள், அவர்களுக்குத் தேவையான இடுபொருட்களை, கூட்டாக மொத்த விலையில் வாங்கும் போதும் விளை பொருட்களை கூட்டாக விற்கும் போதும் நல்ல விலை கிடைக்க வழிவகை செய்தல், பயிர் சாகுபடியில் கூட்டு நிர்வாகம் மேற்கொள்ளுதல், அறுவடைக்கு பின் நிர்வாகம், விநியோகத் தொடர் மற்றும் மதிப்புக்கூட்டு முறையினை திறம்பட அமைத்தல் ஆகிய முறைகளினால், அவர்களது தொழிலினை இலாபகரமாக மாற்றுவதோடு வலுவடையவும் செய்யும்.

2017-18ஆம் ஆண்டில் இத்திட்டத்தில் 20 சிறு, குறு விவசாயிகள் கொண்ட 10,000 உழவர் ஆர்வலர் குழுக்கள் (Farmer Interest Groups) ஆரம்பிக்கப்பட்டன. இத்தகைய ஐந்து உழவர் ஆர்வலர் குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 100 விவசாயிகளைக் கொண்ட 2,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் (Farmer Producer Groups) உருவாக்கப்பட்டன. ஏழு முதல் பத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஒன்றிணைக்கப்பட்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனமாக (Farmer Producer Company) மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கும் (Farmer Producer Groups) மூலதன நிதியாக ரூ. 5இலட்சம் வீதம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு இந்நிதியை பயன்படுத்தி அக்குழு உறுப்பினர்கள் விவசாயம் செய்வதற்கு தேவையான டிராக்டர், சுழற்கலப்பை, விதைக்கும் கருவி போன்ற இயந்திரங்கள் வாங்கப்பட்டன. இதன்படி 2017-18ஆம் ஆண்டில் 1,988 உழவர் உற்பத்தியாளர் குழுக்களால் தங்களுக்கு தேவையான 8,721 பண்ணை இயந்திரங்கள் ரூ.99.40 கோடி மதிப்பில் வாங்கப்பட்டு 1,98,800 சிறு, குறு விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்ப மைப்பு (Tamil Nadu Small Farmers Agri Business Consortium) நிதியுதவியுடன் விவசாயிகளின் விளைபொருட்களை ஒருங்கிணைத்து மதிப்புக்கூட்டி நல்ல விலைக்கு விற்பனை செய்திட தேவையான உதவிகளை செய்யவழிவகை செய்யப்பட்டுள்ளது.

201819ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ், இரண்டு இலட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து ரூ. 100.42 கோடி நிதி ஒதுக்கீட்டில் கூடுதலாக 2,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்தி, உழவர் உற்பத்தியாளர் நிறுவனமாக மேம்படுத்தப்படும்.

ஒருங்கிணைந்த பண்ணையம் (Integrated Farming System)

ஒருங்கிணைந்த பண்ணையம் - பண்ணை அளவில் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் சூழலுக்கேற்ற பண்ணை முறைகளை பகுதிக்கேற்ப கடைப்பிடித்து செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பண்ணை உற்பத்தித்திறனை மேம்படுத்தி நீடித்த நிலையான வளம் பெறும் வகையில் தட்பவெப்ப மண்டலங்களுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணைய முறை

நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான தொழில் நுட்ப ஆலோசனைகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் அளிக்கப்படும்.

2018-19ஆம் ஆண்டில், 2,500 ஒருங்கிணைந்த பண்ணைய மாதிரிகள் திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், விழுப்புரம், ஈரோடு ஆகிய ஐந்து மாவட்டங்களில், மாவட்டத்திற்கு ஒரு வட்டாரத்தில் 500 மாதிரிகள் வீதம் செயல்படுத்தப்பட உள்ளது. நஞ்சை, புஞ்சை, தோட்டக்கால் சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணைய மாதிரிகளில் ஏதாவது ஒன்று 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வீதம் நாட்டுப்பசுக்கள், ஆடு, நாட்டுக்கோழிகள், வாத்து, வீட்டுத் தோட்டம், பழச்செடிகள் மற்றும் தீவனப்பயிர்கள், சாண எரிவாயு கலன், பண்ணைக்குட்டைகள், தேனீ வளர்ப்பு, வேளாண் காடுகள், தீவன மரங்கள் மற்றும் தீவனப்புல் கரணைகள், நிரந்தர மண்புழு உற்பத்திக்கூடம் மற்றும் இதர இனங்களுக்காக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5,000 பயனாளிகள், விவசாய குடும்பங்களில் பயனடைய உள்ளனர். மேலும் விவசாயிகள், அலுவலர்களுக்கான பயிற்சிகள் மற்றும் விவசாயிகளுக்கு கண்டுணர் சுற்றுலா நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் ரூ.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

பருவ நிலை மாற்றங்களுக்கான மேலாண்மை நடவடிக்கைகள்

அதிக சவால்களை எதிர்கொள்ளும் வேளாண்மை தொழிலானது, மாறுபடும் சீதோஷ்ண நிலை, வானிலை மாற்றங்கள், அடிக்கடி ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள், உரிய நேரத்தில் போதிய நிதி வசதியின்மை போன்ற பல்வேறு காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இவை விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் வருமானத்தை பாதிப்பதோடு, வேளாண் பிரிவு மற்றும் விவசாயிகளின் வறுமையை குறைக்கும் திறனையும் பெரிதும் பாதிக்கிறது.

வானிலை மாற்றங்களால் வேளாண்மையில் ஏற்படும் எதிர்மறை நிகழ்வுகளின் தாக்கத்தை குறைக்கும் வகையில் முறையான மற்றும் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை, பருவ நிலை மாறுதல்களுக்கு ஏற்ப இடுபொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், நுண்ணீர் பாசன முறைகளை கடைப்பிடித்தல், வானிலை மாற்றங்களுக்கு உகந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்துதல் போன்ற பல்வேறு உத்திகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், பயிர் இழப்பீட்டு நிவாரணம், பயிர் காப்பீடு மற்றும் மாற்றுப் பயிர்த் திட்டம் போன்ற உத்திகள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும் விவசாயிகளின் வருமான இழப்பினை குறைத்திடவும் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஒகி -2017 புயலால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு

ஒகி புயலானது தமிழ்நாட்டின் தெற்கு கடற்கரை பகுதியை 30.11.2017 அன்று கடந்து, மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்தில் வீசிய காற்று மற்றும் அதனை தொடர்ந்து பெறப்பட்ட மிக அதிக மழையின் காரணமாக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சுமார் 10,547 ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது மட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றின் காரணமாக பல தென்னை மரங்கள் சாய்ந்து அதிக அளவில் பாதிப்பினை ஏற்படுத்தியது.

வயலில் தேங்கிய நீரினை வெளியேற்றவும், மறு நடவு செய்து பயிர் எண்ணிக்கையினை பராமரிக்கவும், யூரியா மற்றும் துத்தநாக சல்பேட் கரைசலை இலை வழியாக தெளிக்கவும் தக்க பயிர் பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் கடைபிடிக்கவும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், சுமார் 88 சதவீத பயிர் பரப்பு, பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டது.

எனினும், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களில் 1,351,48 ஏக்கருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, இடுபொருள் மானியமாக ரூ.79.04 இலட்சம் பாதிக்கப்பட்ட 4,879 விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை

3.16666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top