பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண் காப்பீட்டுத் திட்டங்கள் 2018 -19

வேளாண் காப்பீட்டுத் திட்டங்கள் கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

வெள்ளம், வறட்சி, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் தமிழ்நாட்டில் பயிர் சாகுபடி பெரிதும் பாதிக்கப்படுகிறது. வேளாண்மையை இலாபகரமாக மேற்கொள்ள விவசாயிகள், அரசு மற்றும் இதர பங்குதாரர்கள், ஒருங்கிணைந்து செயல்பட்ட போதிலும் பல்வேறு இயற்கை இடர்பாடுகள் பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை வெகுவாக பாதிக்கின்றன.

இவை சிறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் வருமானத்தை பாதிப்பதோடு, வேளாண் பிரிவில் தொய்வு நிலையை ஏற்படுத்துவதுடன் விவசாயிகளின் வறுமையை அகற்றவல்ல திறனையும் பாதிக்கின்றன. இது போன்ற அசாதாரண சமயங்களில், பல்வேறு இடர்பாடுகளால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் மற்றும் தென்னைக் காப்பீட்டுத் திட்டம் போன்ற பயிர் காப்பீட்டுத் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி, இயற்கை இடர்பாடுகளால் பயிர் இழப்பு ஏற்படும் போது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குதல்; பண்ணை வருவாயை நிலைப்படுத்தி வேளாண் பணிகளில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபடுவதை உறுதி செய்தல் ; புதிய அதிநவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் தங்கள் வயல்களில் பின்பற்றுவதை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்

இத்திட்டம், காரீப் 2016 முதல், சென்னை நீங்கலாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள் மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, 2016-17 மற்றும் 2017-18ஆம் ஆண்டுகளில் இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம் (Agriculture Insurance Company of India Limited), ஐசிஐசிஐ லம்பார்டு பொதுக் காப்பீட்டுக் கழகம் (ICICI Lombard General Insurance Company) மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டுக்கழகம் (New India Assuurance Company Limited) ஆகிய மூன்று காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2018-19ஆம் ஆண்டில், இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம் (Agriculture Insurance Company of India Limited), சோழமண்டலம் பொதுக் காப்பீட்டுக் கழகம் (Cholamandalam General Insurance Company) மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டுக் கழகம் (New India Assurance Company Limited) ஆகிய மூன்று காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு முன்னர் செயல்படுத்தப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்யப்படாத நிகழ்வுகளான விதைப்பு பொய்த்தல், நடவு செய்ய இயலாத நிலை, அறுவடைக்குப் பின் இழப்பு, பகுதி சார்ந்த பல்வேறு இயற்கை இடர்பாடுகள் (புயல், ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பருவம் தவறிய மழை, வயல்களில் வெள்ள நீர்த்தேக்கம்) போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்காக இத்திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்யப்படுவதுடன் பயிர் வளர்ச்சி பருவத்தில் இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் பயிர் பாதிப்புகளுக்கும் விரைந்து இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடன்பெறும் மற்றும் கடன்பெறா விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஒரே மாதிரியான காலக்கெடு மற்றும் காப்பீட்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், மிக துல்லியமாக பயிர் இழப்பீட்டுத் தொகை பெறும் வகையில் நெல், மக்காச்சோளம், உளுந்து, பச்சைப் பயறு நிலக்கடலை, பருத்தி, கரும்பு போன்ற முக்கிய பயிர்கள் "வருவாய் கிராம் அளவில் காப்பீடு செய்யப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து உணவு தானியப் பயிர்கள் (தானியங்கள், சிறுதானியங்கள் மற்றும் பயறுவகைகள்) எண்ணெய்வித்துப் பயிர்கள், பருத்தி, கரும்பு, ஆண்டுப் பயிர்கள் மற்றும் வணிகப் பயிர்கள் காப்பீடு செய்யப்படுகின்றன. பயிர்க்கடன் பெற்று, அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகள் கட்டாயமாகவும், கடன் பெறாத விவசாயிகள் அவர்களின் விருப்பத்தின் பேரிலும் இத்திட்டத்தில் பதிவு செய்யப்படுகின்றனர். காப்பீட்டுக் கட்டணத் தொகையில் விவசாயிகளின் பங்குத் தொகை தவிர மீதமுள்ள தொகை மத்திய மற்றும் மாநில அரசுகளால் சமமாக பகிர்ந்து கொள்ளப்படும். வேளாண் பயிர்களின் காப்பீட்டுக் கட்டணத் தொகையில் விவசாயிகளின் பங்குத் தொகை கீழ்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

வேளாண் பயிர்களின் காப்பீட்டுக் கட்டணத் தொகையில் விவசாயிகளின் பங்குத்தொகை

பயிர்

பருவம்

விவசாயிகளால் செலுத்தப்பட வேண்டிய அதிகபட்ச காப்பீட்டு கட்டணவிகிதம்

அனைத்து உணவு தானிய பயிர்கள் (அனைத்து தானியங்கள், சிறு தானியங்கள் மற்றும் பயறு வகைகள்) மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்கள்

காரிப்

காப்பீட்டுத் தொகையில் 2 சதவீதம் அல்லது காப்பீட்டு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் சரியான காப்பீட்டுக் கட்டணம். இதில் எது குறைவோ

ராபி

காப்பீட்டுத் தொகையில் 15 சதவீதம் அல்லது காப்பீட்டு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் சரியான காப்பீட்டுக் கட்டணம் இதில் எது குறைவோ

வருடாந்திர வணிகப் பயிர்கள் வருடாந்திர தோட்டக்கலைப் பயிர்கள்

காரிப் மற்றும் ராபி

காரீப் காப்பீட்டுத் தொகையில் 5 சதவீதம் அல்லது காப்பீட்டு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் சரியான காப்பீட்டுக் கட்டணம். இதில் எது குறைவோ

2017-18ஆம் ஆண்டில், மொத்த சாகுபடி பரப்பில் 40 சதவீதம் காப்பீடு செய்ய திட்டமிடப்பட்டு, 13.91 இலட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு (3.27 இலட்சம் கடன் பெறும் விவசாயிகள், 10.64 இலட்சம் கடன் பெறா விவசாயிகள்), 27.56 இலட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. காப்பீடு கட்டண மானியத்தில், மாநில அரசின் பங்காக காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு ரூ.522 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதுவரை ரூ.309.40 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

2018-19ஆம் ஆண்டில், மொத்த சாகுபடி பரப்பில் 50 சதவீத பரப்பு காப்பீடு செய்ய திட்டமிடப்பட்டு இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதைத் தவிர, தென்னை காப்பீட்டுத் திட்டமும், அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

பயிர்காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிவாரணம்

பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டம் – 2016-17:

2016-17ஆம் ஆண்டில், காப்பீட்டுக்கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்காக ரூ.565 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு, இதுவரை, 10.78 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.3,274 கோடி இழப்பீட்டுத் தொகை ஒப்பளிப்பு செய்யப்பட்டு ரூ.3,137 கோடி 10.29 இலட்சம் விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டு, அதில் 9.71 இலட்சம் விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.3,018 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒப்பிடுகையில், விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் - 2015-16

2015-16ஆம் ஆண்டில், மாநில அரசின் 50 சதவீத காப்பீட்டு கட்டணமாக இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்திற்கு ரூ. 51.46 கோடி வழங்கப்பட்டு, பயிர் மகசூல் குறைவால் பாதிக்கப்பட்ட 3.62 இலட்சம் விவசாயிகளுக்கு சம்பா நெற் பயிர் மற்றும் ராபி பருவ பயிர்களுக்கு மொத்தம் ரூ.494,20 கோடி இழப்பீட்டுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை (டான்சிடா)

தரமான விதைகளை குறித்த காலத்தில் விவசாயிகளுக்கு விநியோகிக்கவும், சான்று விதை உபயோகத்தை விவசாயிகள் மத்தியில் பெருமளவு ஊக்குவிக்கவும் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை (டான்சிடா), தமிழ்நாடு சங்கங்களின் பதிவு விதி 1978 - சட்டம் 27, 1975ன் கீழ் சங்க அமைப்பாக 30.04.2015 அன்று பதிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமையின்கீழ், 880 வேளாண்மை விரிவாக்க மையங்கள்(அம்மா சேவை மையங்கள்), 40 அரசு விதைப்பண்ணைகள், 23 மாநில தென்னை நாற்றுப்பண்ணைகள், 16 தென்னை ஒட்டு சேர்ப்பு மையங்கள் மற்றும் 35 நவீன விதை சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட 116 விதை சுத்திகரிப்பு நிலையங்கள், நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துக்கள், பருத்தி ஆகிய பயிர்களின் விதை உற்பத்தி, சுத்திகரிப்பு, சேமிப்பு மற்றும் விநியோகம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளன. மேலும் தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி மற்றும் விநியோகப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

2017-18ஆம் ஆண்டில் 26,189 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் பருத்தி ஆகிய பயிர்களின் சான்று விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, 23,271 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 12.93 இலட்சம் தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.

விதை மற்றும் நடவுபொருட்களுக்கான துணை இயக்கம்

தமிழ்நாட்டில் விவசாயிகளின் விதைத் தேவையை பூர்த்தி செய்யவும், தரமான விதைகள் குறித்த காலத்தில் கிடைக்க செய்யவும், விதை உற்பத்தியில் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் நோக்கத்துடனும், தேசிய வேளாண் விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப இயக்கத்தின் (National Mission on Agricultural Extension and Technology) & விதை மற்றும் நடவு பொருட்களுக்கான துணை இயக்கம் சென்னை மற்றும் நீலகிரி மாவட்டம் நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல், சிறுதானியங்கள், பயறுவகை பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் ஆதார மற்றும் சான்று விதைகள் விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்யப்படுவதுடன், விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகளும் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகின்றன. இதனால் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான மேம்படுத்தப்பட்ட தரமான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து உயர் விளைச்சல் பெறுவதால் அவர்களின் பண்ணை வருமானம் அதிகரிக்கிறது.

பயிர்பாதுகாப்பு

நீடித்த நிலையான வேளாண்மை வளர்ச்சியிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நவீன வேளாண் தொழில்நுட்ப செயல்பாடுகளிலும், தமிழ்நாடு அரசு குறிப்பிடத்தக்க சாதனை புரிந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு வகுத்துள்ளது. பின்விளைவுகள் பற்றி அறியாமல் அதிக அளவில் இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பூச்சி, நோய் கண்காணிப்பினை தீவிரப்படுத்துதல், ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை குறித்த பயிற்சி அளித்தல், விவசாயிகளுக்கு கிராம் அளவில் உயிரி கட்டுப்பாட்டுக் காரணிகள் உற்பத்தி செய்ய தேவையான தொழிநுட்பங்கள் மற்றும் பயிற்சி அளித்தல். பாரம்பரிய மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல். அரசு தானியங்கி வானிலை ஆய்வு மையங்களை நிறுவி, வானிலை காரணிகளை பதிவு செய்து விவசாயிகளுக்கு பூச்சி நோய் தாக்குதல் குறித்த முன்னறிவிப்பு போன்ற சேவைகளை வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு வழங்கிவருகிறது.

பூச்சி மற்றும் நோய் கண்காணிப்பு முறைகள்

பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் பயிர்களை பாதுகாக்கவும் பூச்சிநோய் கண்காணிப்பு செய்வது மிகவும் அவசியமானதாகும். இதன் ஒரு பகுதியாக வயல்களில் நிரந்தர பூச்சிநோய் கண்காணிப்பு திடல்கள் அமைத்து வாராந்திர இடைவெளியிலும், வயல் சுற்றுக்கண்காணிப்பு முறை மூலம் பூச்சி, நோய்கள் கண்காணிக்கப்பட்டு அதனடிப்படையில் முன்னறிவிப்பும் செய்யப்படுகிறது. மேலும், குறுஞ்செய்திகள், குரல்வழிச்செய்திகள், வானொலி, தொலைக்காட்சி, துண்டுப்பிரசுரங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் பயிர்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் குறித்த முன்னறிவிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேலாண்மை

தமிழ்நாடு அரசு பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு உகந்த வேளாண் சுற்றுச்சூழலை பாதுகாக்க, நவீன விவசாயத்தில் தேவையின்றி அதிகளவில் பயன்படுத்தப்படும் இரசாயன பூச்சிக் கொல்லிகளுக்கும், களைக்கொல்லிகளுக்கும் மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேலாண்மையை ஊக்குவிக்கிறது.

நீடித்த நிலையான சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு எளிமையான பயிர்பாதுகாப்பு முறைகளை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறை அரசால் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இம்முறையில் பயிரின் வளர்ச்சிப்பருவம், நிலை, நோய் எதிர்ப்பு சக்தி, தீமை மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளுக்கு இடையிலான விகிதம், மண்ணின் தன்மை, வானிலை, விவசாயிகளின் அனுபவம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு செயல்படுத்தப்படும் வேளாண் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு அடிப்படையிலான ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறையானது, வேளாண் உற்பத்தி செலவினை குறைப்பதோடு பூச்சிக்கொல்லிகளுக்கு எதிராக பூச்சிகளின் எதிர்ப்புத்திறன் அதிகரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பினை தவிர்க்கவும் வழிவகை செய்கிறது.

இம்முயற்சிகளின் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகளை கையாண்டு நஞ்சற்ற புதிய தலைமுறைகளை உருவாக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை மாதிரி கிராம் திட்டத்தை கடந்த 2015-16ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டமானது உயிரி கட்டுப்பாட்டுக்காரணிகளை விவசாயிகள் கிராம அளவில் உற்பத்தி செய்திட ஊக்குவித்து தொழில்நுட்பங்களையும், பயிற்சிகளையும் வழங்கி உற்பத்தி செய்த உயிரி கட்டுப்பாட்டுக்காரணிகளை தங்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்கிறது. தமிழ்நாடு அரசு இத்திட்டத்தின் மூலம் இதுவரை 250 மாதிரி கிராமங்களை உருவாக்கி உள்ளது.

சூரிய ஒளியால் இயங்கும் விளக்குப் பொறி விநியோகம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நஞ்சற்ற உணவு உற்பத்தி செய்வதற்கும் அதிகப்படியான இரசாயன பூச்சிக்கொல்லி பயன்பாட்டினை தவிர்ப்பதற்கும் முன்னோடி நடவடிக்கையாக சூரிய ஒளியால் இயங்கும் விளக்குப் பொறிகளை விவசாயிகளுக்கு மானிய விலையில் அரசு விநியோகம் செய்து வருகிறது. இவ்விளக்குப் பொறியானது தீமைசெய்யும் பூச்சிகளை வயல்வெளியில் கவர்ந்து அழிக்கிறது. 2017-18ஆம் ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் 20,000 விளக்குப்பொறிகள் 50சதவீத மானிய விலை அல்லது அதிகபட்சமாக எக்டருக்கு ரூ.2,000/- என்ற அளவில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டது.

பயிர்பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள்

பூச்சி, நோய் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது விவசாயிகள் பாதிப்பு அடைவதை தவிர்க்கவும், பூச்சி கொல்லிகளின் எஞ்சிய நஞ்சு உணவுப் பொருட்களில் கலப்பதை தவிர்க்கவும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனை நிலையங்களில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பூச்சிக்கொல்லி தெளிப்பது தொடர்பான விழிப்புணர்வு முகாம் கிராம், வட்டார அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை (செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை) உள்ளடக்கிய பிரசுரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பூச்சிக்கொல்லிகள் விற்பனை செய்வது பூச்சிக்கொல்லி ஆய்வாளர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. பாதுகாப்பான முறையில் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பு குறித்தான குறும்படம் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் பங்கேற்கும் அனைத்து கூட்டங்களிலும் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

உரங்கள்

விவசாயிகளின் தேவையில் சிறப்பு கவனம் செலுத்துவதோடு, பயிர் பருவம், மண் வகை, மண்வளம், பண்ணை வாரியான பயிர்த்திட்டம் மற்றும் பயிர் சாகுபடி முறைகளின் அடிப்படையில், வேளாண்மைத்துறை ஆண்டுதோறும் உர விநியோகத் திட்டத்தை வகுத்து செயல்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அரசிடமிருந்து உரிய நேரத்தில் உர ஒதுக்கீட்டினைப் பெறவும், பருவ வாரியான உர விநியோகத் திட்டத்தை வகுக்கவும், போதுமான உரங்களை முன்கூட்டியே இருப்பு வைத்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

விற்பனை முனையக் கருவி (Point of Sale) வாயிலாக உரபரிவர்த்தனை

விற்பனை முனையக்கருவியினை கொண்டு உர விற்பனை செய்யும் முறை 2018 ஜனவரி 1ஆம் தேதி முதல் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பிரத்தியேக நேரடி மானியம் வழங்கும் திட்டத்தில் உர மானியத்தொகை மானிய உரங்கள் விற்பனை முனையக் கருவி வாயிலாக விவசாயிகளிடம் விற்பனை செய்த பின்னர் உர நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன்படி சில்லறை உர விற்பனை நிலையங்களில் நிறுவியுள்ள விற்பனை முனையக்கருவியினை கொண்டு மானிய உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், விற்பனை முனையக் கருவியில் ஆதார் அட்டை (அல்லது) விவசாய கடன் அட்டை (KCC Card), (அல்லது) வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்தி உரங்கள் வழங்கப்படுகின்றன. மானியஉரங்களை வாங்குபவர் கூடுதலாக பணம் செலுத்த வேண்டியதில்லை. தற்சமயம் நடை முறையில் உள்ள மானிய சில்லறை விற்பனை விலையிலேயே உரங்களை வாங்கிடலாம்.

சிறப்பு அம்சங்கள்:

* உரம் விற்பவர் மற்றும் வாங்குவோரின் முழு தகவல்களை அறிந்திடலாம்.

* மானிய உர விற்பனையில் வெளிப்படையான நடைமுறை பின்பற்றப்படுகிறது (கூடுதல் விலைக்கு உரங்களை விற்க இயலாது)

* விவசாயிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப (அல்லது) மண்வள அட்டையின்படி (அல்லது) கிராம மண்வள குறியீடு அடிப்படையில் மானிய உரங்களை வாங்கிடலாம்.

* வேளாண்மை அல்லாத பிற பயன்பாட்டிற்கான உர விற்பனை முற்றிலுமாக தடுக்கப்படுகிறது. நிகழ்கால உர இருப்பு அறியப்படுவதால் உரம் அதிகமாக தேவைப்படும் பகுதிகளை உடனுக்குடன் அறிந்து உரங்களை அனுப்பிட உதவுகிறது.

* சரியான விகிதாசாரத்தில் உரத்தினை பயன்படுத்த விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

தனியார் மற்றும் கூட்டுறவு சில்லறை உர விற்பனை நிலையங்களுக்கு 11,442 விற்பனை முனையக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

விற்பனை முனையக்கருவி வாயிலாக உரங்களை விற்பனை செய்யும் திட்டத்தின் செயலாக்கத்தினை கண்காணிக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மண் வள பாதுகாப்பு

மண் என்பது பயிர் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு தேவையான சத்துக்களை உள்ளடக்கிய களஞ்சியமாக விளங்குகிறது. இதன் மூலம், பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது. சுற்றுப்புற மாசு மற்றும் தீவிர பயிர்சாகுபடியின் காரணமாக, மண்ணில் உள்ள சத்துக்கள் குறைந்து வருகிறது.

எனவே, தமிழ்நாட்டில் மண்ணின் வளத்தை மீட்டெடுக்கும் அடிப்படையில் 2015-16ஆம் ஆண்டு முதல் அரசால் மண்வள அட்டை" இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மண் ஆய்வு அடிப்படையில் உரப்பரிந்துரைகள் பல்வேறு பயிர்களுக்கு வழங்கப்படுகிறது.

மண்வகையீடு மற்றும் நில பயன்பாட்டு நிறுவனம்

இந்நிறுவனத்தின் நோக்கம் நில அளவை மேற்கொண்டு மண்ணின் ஆதாரங்களை பட்டியலியிடுவதுடன் மண்ணின் தன்மை, பௌதீக மற்றும் வேதியியல் பண்புகளை கள ஆய்வு மற்றும் ஆய்வக பகுப்பாய்வுகள் மூலம் அறிந்து சர்வதேச அளவில் தரமான மண் வகையீடு செய்து வகைப்படுத்துதல் ஆகும். பிறகு அவ்வகையான மண்ணின் பரப்பு ஒப்பீட்டு மண் வரைபடங்களின் அடிப்படையில் வரைபடமாக்கப்பட்டு இறுதியில் நிலத்தின் பயன்பாடுகளை அறிந்து கொள்ள முடிகிறது. மண் வகையீடு மற்றும் நில பயன்பாட்டு நிறுவனம் கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது.

உயிரியில் மண்மேலாண்மை முறைகள்

சுற்றுச்சூழல் வேளாண்மை மண்ணின் பல்லுயிரியல் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் வேளாண்மை உற்பத்தியினை பெருக்கவும் இன்றைய சூழ்நிலையில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. மண், நீர் ஆதாரம் மற்றும் பயிர் மேலாண்மையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு வள ஆதாரங்களை முறையாக பயன்படுத்துதல், விவசாயிகளின் நிலங்களில் உள்ள உற்பத்தி இழப்பினை தடுத்தல், இலாபத்தினை பெருக்குதல் மற்றும் சுற்று சூழலினை பாதுகாப்பதில் உறுதியாக செயல்பட்டு வருகிறது.

நீலப்பச்சைப்பாசி உற்பத்தி மற்றும் விநியோகம்

நீலப்பச்சைப்பாசி காற்றிலுள்ள தழைச்சத்தினை நெல் வயலில் நிலைநிறுத்திடும் தன்மை உடையதால் மண் வளத்தை அதிகரிக்கச் செய்கிறது. 2017-18ஆம் ஆண்டில் மாநில விதைப்பண்ணை மூலம் 516 மெட்ரிக் டன் நீலப்பச்சை பாசி ரூ.15.71 இலட்சம் நிதி செலவில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.

பசுந்தாள் உரவிதைகள்

பசுந்தாள் உரப்பயிர்கள் தழைச்சத்தினை நிலை நிறுத்தும் பாக்டீரியாக்கள் மூலம் வேர்முடிச்சுகளில் தழைச்சத்தினை நிலைநிறுத்துகிறது (எக்டருக்கு 60 முதல் 100 கிலோ தழைச்சத்து). மேலும் மண்ணில் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்தினை கரைத்து பயிருக்கு கிடைக்கச் செய்கிறது.

புளூரோட்டஸ் காளான் சிறு தளை பைகள் உற்பத்தி மற்றும் விநியோகம்

மக்கிய உர பயன்பாட்டினால் பயிர் உற்பத்தி அதிகரிப்பு, இரசாயன உரங்களின் பயன்பாடு குறைதல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் முதலிய நன்மைகளை பெறலாம். இதனை கருத்தில் கொண்டு பண்ணைக் கழிவுகளை மக்கிய உரமாக மாற்றுவதற்கு புளுரோட்டஸ் காளான் சிறுதளை பைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம்

அங்ககப் பண்ணையத்தை ஊக்குவிக்க பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மூன்றாண்டு தொடர் திட்டமாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் நோக்கம் குழு அணுகுமுறையின் மூலம் பங்கேற்பு உத்திரவாத சான்றளிப்பு (PGS-Participatory Guarantee System) முறையை செயல்படுத்துவதே ஆகும். விவசாயிகளை குழுக்களாக ஒருங்கிணைத்து, திறன் மேம்பாட்டு பயிற்சி, அங்கக இடுபொருட்கள் கொள்முதல், அங்கக இடுபொருட்கள் உற்பத்தி மையம் அமைத்தல், உணவுப்பொருளில் தங்கும் நச்சுப்பொருளை அறிய பகுப்பாய்வு, சான்றளிப்புக்கட்டணம், அங்கக உற்பத்திப் பொருட்களை சிப்பமிடுதல், பெயரிடுதல் மற்றும் தரக்குறியிடுதல் முதலியவற்றிற்கான நிதியுதவி குழுக்களுக்கு அளிக்கப்படுகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் அங்ககப் பொருட்களுக்கு குழுக்களில் இருக்கும் சக முன்னோடி விவசாயியின் வயலாய்வு அறிக்கையின் அடிப்படையில் பங்கேற்புடன் கூடிய சான்றளிப்பு வழங்கப்படும். பத்து மாவட்டங்களில் 2,096 ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மையினை (PGS சான்றளிப்பு முறை) செயல்படுத்த 42குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திட்டத்தின் முதலாம் ஆண்டு திட்டக்கூறுகள் ரூ.295.83 இலட்சம் நிதி செலவில் முடிவுற்றது. இரண்டாம் ஆண்டு திட்டக்கூறுகள் ரூ.198.22 இலட்சம் நிதிச்செலவில் 2017-18ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. பங்கேற்பு சான்றளிப்பு முறை மூலம் சான்றளிக்கப்பட்ட சிறுதானியங்கள் மற்றும் பயறுவகைகள் தமிழ்நாடு அங்கக விளைபொருட்கள் "TOP (Tamil Nadu Organic Products) என்ற வணிக குறியீட்டுடன் (Brand) சந்தைப்படுத்தப்படுகிறது.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை

3.3
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top