பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / கொள்கை விளக்கக் குறிப்பு / வேளாண்மைத் துறையின் நோக்கங்களும் அணுகுமுறைகளும் 2018 - 19
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண்மைத் துறையின் நோக்கங்களும் அணுகுமுறைகளும் 2018 - 19

வேளாண்மைத் துறையின் நோக்கங்கள், அணுகுமுறைகள் மற்றும் சாதனைகள் (2018 - 19) பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில், வேளாண்மை 65 சதவீத கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரமாகவும், வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடியதாகவும், உணவுப்பாதுகாப்பினை உறுதி செய்வதாகவும் உள்ளது. மேலும் கிராமப்புற மக்கள் நகர்ப்புறத்திற்கு இடம்பெயர்தலை தவிர்க்கிறது.

பாரம்பரிய பண்ணையம் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்து பராமரித்தலில் பெயர் பெற்ற தமிழ்நாடு, உணவு பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்களுடன் விவசாயிகளுக்கு உகந்த சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் புதிய உத்திகளை அறிமுகப்படுத்தி செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாடு அரசானது, காலநிலை மாறுபாடு, மண் வள பாதிப்பு, நீர் பற்றாக்குறை, தேவைக்கு அதிகமான இடுபொருள் பயன்பாடு மற்றும் பூச்சி, நோய் தாக்குதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பான சாகுபடி முறைகளைக் கையாண்டு சந்தைக்கேற்ற பயிர் சாகுபடி செய்து உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரித்து விவசாயிகள் வருமானத்தைப் பெருக்கும் பல கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் சீரான கொள்கைகள் மற்றும் முன்னேற்றத்திற்கான உத்திகள் விவசாயிகளிடத்தில் வேளாண்மையை ஒரு நீடித்த இலாபகரமான தொழிலாக தக்க வைத்துள்ளது. இதைத்தவிர தமிழ்நாடு அரசானது கடந்த ஆண்டுகளில் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான அனைத்து அம்சங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக விவசாயிகளை ஒருங்கிணைத்து "கூட்டுப்பண்ணையம் செய்வதன் மூலம் இடுபொருள் செலவைக் குறைத்து மதிப்புக் கூட்டுதல் மூலம் விளைபொருட்களுக்கான நல்ல விலையை பெறுதல், கூட்டு அணுகுமுறை மூலம் விவசாயிகளின் விலை நிர்ணயிக்கும் திறனை ஊக்குவித்தல்; நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் மூலம் மானாவாரி நிலங்களில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி போன்ற பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கச்செய்தல்; உணவு தானிய உற்பத்தியில் பயிர்சார்ந்த அணுகுமுறைகளான திருந்திய நெல் சாகுபடி, இயந்திர நடவு, நேரடி நெல்விதைப்பு, தீவிர பயறு சாகுபடி, நடவு துவரை, உயர் விளைச்சல் தரக்கூடிய பயறு வகை இரகங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் நீர் குறைவாக தேவைப்படும் சிறுதானியங்கள் சாகுபடியினை ஊக்குவித்தல்; இயற்கை சீற்றங்களான வறட்சி மற்றும் வெள்ளத்தின் போது விவசாயிகளுக்கு உதவிட சிறப்பு தொகுப்புத் திட்டங்களாக குறுவை சாகுபடி தொகுப்புத்திட்டம், சம்பா சாகுபடி தொகுப்புத்திட்டம் மற்றும் பயறு வகை தொகுப்புத்திட்டம் போன்றவற்றை செயல்படுத்துதல், எண்ணெய் வித்துக்கள், எண்ணெய்பனை மற்றும் மரஎண்ணெய்ப்பயிர்களுக்கான ஒருங்கிணைந்த உற்பத்தி மேம்பாட்டுத்திட்டங்கள்; தென்னை மரங்களிலிருந்து நீரா உற்பத்திக்கு அனுமதி; பணப்பயிர்களுக்கான இயக்கமாக தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கம், நீடித்த நிலையான கரும்பு சாகுபடித் திட்டம் - ஒரு பரு கரணை மூலம் கரும்பு நாற்றுகள் உற்பத்தி மற்றும் நடவு; நுண்ணீர்ப்பாசனம் மூலம் துளி நீரில் அதிக பயிர் சாகுபடி; இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர்ப்பாதிப்புகளிலிருந்து விவசாயிகளை பாதுகாத்திட பயிர் காப்பீடு மூலம் இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குதல்; தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமையின் (Tamil Nadu State Seed Development Agency) மூலம் தரமான சான்று பெற்ற விதை மற்றும் தென்னங்கன்றுகள் கொள்முதல் மற்றும் விநியோகம்; நிலையான சுற்றுச்சூழலுக்கான வேளாண் நடைமுறைகளான வேளாண் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு (Agro Eco System Analysis) அடிப்படையிலான ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு, சுற்றுச் சூழலுக்கு உகந்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மாதிரி கிராமங்கள், உயிரி பூச்சிக்கொல்லிகள் மற்றும் உயிரி பூச்சிக்கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்து வழங்குதல், மண்வள மேம்பாட்டிற்கான பசுந்தாள் உர விதை விநியோகம், பண்ணைக்கழிவுகளை மக்கச்செய்திட புளுரோட்டஸ் காளான் சிறுதளை பைகள் விநியோகம், கரும்பு தோகை நிலப்போர்வை அமைத்தல், மண்புழு உரத் தொட்டிகள் நிறுவுதல், அம்மா உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியாவுடன் நீலப்பச்சைப்பாசி மற்றும் அசோலா உற்பத்தி மற்றும் விநியோகம்.

பங்கேற்பு உத்தரவாத சான்றளிப்பு முறையின் (Participatory Guarantee System) கீழ் குழு அணுகுமுறையின் மூலம் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல், பாரம்பரிய வேளாண் பொருட்களின் பயன்பாட்டினை ஊக்குவித்தல், விற்பனை முனைய கருவி (Point of Sale) மூலம் உரவிநியோகத்தினை முறைப்படுத்துதல்; மண்வள அட்டை இயக்கத்தின் கீழ் மண் பரிசோதனை அடிப்படையிலான உரப்பரிந்துரை; விவசாயிகள் பயிற்சி மையம், நீர் மேலாண்மை பயிற்சி மையம், மாநில வேளாண் விரிவாக்க மேலாண்மை நிலையம் மற்றும் மாநில வேளாண் மேலாண்மை விரிவாக்க பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் மூலம் விவசாயிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல்; நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான வேளாண்மை சார்ந்த தொழில்நுட்ப பரிமாற்றம்; விவசாயிகள் சார்ந்த ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கத்திட்டத்தின் மூலம் வேளாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு திட்டங்களை விவசாயிகளிடையே பிரபலப்படுத்துதல் மற்றும் வயல்மட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகாணுதல தமிழ்நாட்டிலுள்ள, 880 அம்மா சேவைமையங்கள் மூலம் தரமான, சான்று பெற்ற விதைகள், உயிர் உரங்கள், உயிரி கட்டுப்பாட்டு காரணிகள், நுண்ணூட்ட உரக்கலவைகள் மற்றும் தென்னங்கன்றுகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்படுகின்றன.

நன்மை பயக்கும் தொழில்நுட்பங்களை கடைபிடித்து செயல்படுத்துவதால் சந்தைப் படுத்துவதற்கு ஏற்ற பயிர்களின் உற்பத்தியினை இருமடங்காக்கும் சூழ்நிலையினை சாதகமாகக் கொண்டு தமிழ்நாடு தொலை நோக்கு பார்வை 2023-ன் இலக்கினை துரித பொருளாதார வளர்ச்சியின் மூலம் அடையப்பெற்று இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழும்.

உற்பத்தித்திறனில் தேசிய அளவில் தமிழ்நாட்டின் நிலை

பயிர்

தேசிய அளவில் தமிழ்நாட்டின் நிலை

தமிழ்நாட்டின் உற்பத்தித் திறன்(கிலோ கிராம்/ எக்டர்)

தேசிய அளவில் சராசரி உற்பத்தித் திறன் (கிலோ கிராம் எக்டர்)

மக்காச்சோளம்

1

6,549

2,509

கம்பு

1

2.613

1,154

நிலக்கடலை

1

2,509

1,486

மொத்த எண்ணெய் வித்துக்கள்

1

2,230

 

968

அரிசி

2

3,918

2,404

சிறுதானியங்கள்

2

3,759

1,596

கரும்பு மெடன்

2

103

71

தென்னை

2

9,238

6,721

சோளம்

3

1,558

780

உணவு தானியங்கள்

3

3,090

2,056

சூரியகாந்தி

4

1,089

697

துவரை

4

957

656

பருத்தி

5

442

432

(ஆதாரம்:வேளாண்மை புள்ளியியல் ஒரு பார்வை, 2016 இந்திய அரசு, நான்காம் முன்மதிப்பீடு)

வேளாண் பிரிவில் உள்ள இடர்பாடுகளை களைவதற்கு தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட முயற்சிகள் வேளாண்மையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வேளாண் உற்பத்தியின் வளர்ச்சியை துரிதப்படுத்தியதன் விளைவாக உணவு தானிய உற்பத்தியில் 100 இலட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமாக 2011-12 (101.52 இலட்சம் மெட்ரிக் டன்), 2013-14 (110.02 இலட்சம் மெட்ரிக் டன்), 2014-15 (127.95 இலட்சம் மெட்ரிக் டன்), 2015-16 (113,85 இலட்சம் மெட்ரிக் டன்) ஆகிய வருடங்களில் நமது மாநிலம் சாதனை அடைந்துள்ளது.

தமிழ்நாடு நீர்ப்பற்றாக்குறை மாநிலமாக இருப்பதால், இருக்கும் நீரை பாசனத்திற்கு சிக்கனமாக பயன்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தற்போது பாசனத்தின் போது வீணாகும் நீரை சேமிக்க வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு நீரை சிக்கனமாக பயன்படுத்தி தரமான விளைபொருட்களை உற்பத்தி செய்யும் நோக்கத்தோடு, தமிழ்நாடு அரசு துளி நீரில் அதிக பயிர் சாகுபடியினை கொண்டு வருவதற்கு நுண்ணீர்ப் பாசனத்தை தமிழ்நாட்டில் பிரபலப்படுத்திட தீவிர முயற்சி எடுத்து வருகிறது. தேசிய அளவில் தமிழ்நாடு மட்டுமே சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கி வருகிறது. இதுநாள் வரை மொத்த பாசனப் பரப்பில் நுண்ணீர்ப்பாசனப்பரப்பு ஒரு சதவீதமாக உள்ளது. தமிழ்நாடு அரசு நுண்ணீர்ப் பாசனத்தின் கீழ் அதிக பரப்பளவை கொண்டு வருவதற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு பயிர் சார்ந்த உத்திகள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், 2016-17ஆம் ஆண்டில் பல்வேறு இயற்கை இடர்பாடுகளான தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்தது, கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்படாதது, பெரும்பாலான அணைகளில் நீர் தேக்கம் குறைவானது, வர்தா புயல், தீவிர வறட்சி ஆகியவற்றால் முதன்மைப் பயிர்களில் குறைந்த பரப்பளவில் சாகுபடி செய்த பயிர்கள் பாதிக்கப்பட்டதாலும் உணவு தானிய உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டு 52.38 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியே அடையப்பட்டுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளின் உணவு தானிய உற்பத்தி

பயிர்

உணவு தானிய உற்பத்தி (இலட்சம்மெட்ரிக்டன்)

2011-12

2012-13

2013-14

2014-15

2015-16

2016-17

2017-18

அரிசி

74,59

40.50

71.15

79.49

73.75

35.54

65.92

சிறு தானியங்கள்

23.24

13.42

32.73

40.79

34.25

13.45

37.36

பயறு வகைகள்

3.69

2.13

6.14

7.67

5.85

3.39

6.09

மொத்தஉணவு தானியங்கள்

101.52

56.05

110.02

127.95

113.85

52.38

109.37

(*மூன்றாம் முன்மதிப்பீடு)

2018 - 19ஆம் ஆண்டிற்கான பயிர் சாகுபடி பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் இலக்கு

தமிழ்நாடு விவசாயிகளின் பொருளாதார நிலையினை மேம்படுத்திடவும் இரண்டாம் பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையிலும், விவசாயிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்களின் ஒத்துழைப்போடு, தமிழ்நாடு அரசானது அனைத்து பயிர்களிலும் முன்னோடி தொழில்நுட்பங்களை செயல்படுத்திட கீழ்கண்ட அணுகுமுறைகளை வகுத்துள்ளது.

அணுகுமுறைகள்

1. மகசூல் மற்றும் இடுபொருள் பயன்பாட்டு திறனுக்கிடையே உள்ள இடைவெளியை புதிய வேளாண் தொழில் நுட்பங்கள் வாயிலாக குறைத்தல், அந்தந்த பகுதிகளுக்கு உகந்த, தொழில்நுட்பங்கள் எளிதில் சென்றடையக்கூடிய வகையில் துல்லிய பயிர்மேலாண்மை.

2. கூட்டுப்பண்ணையம் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை அமைத்து வேளாண் வணிக முயற்சிகளில் பங்கெடுப்பதன் மூலமாக விவசாயிகளின் பொருளாதார நிலையினை மேம்படுத்துதல்.

3. மானாவாரி பயிர் சாகுபடியில் பரப்பு விரிவாக்கம் செய்து உற்பத்தியை உயர்த்துதல் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளின் வாயிலாக விவசாயத்தை ஊக்கப்படுத்துதல்.

4. மண்வளத்தை மேம்படுத்துவதன் மூலம் பயிர்சாகுபடியில் உற்பத்தித்திறனை அதிகரித்தல்.

5. சிறந்த தொழில்நுட்பங்களின் வாயிலாக பாசன நீர், இடுபொருள் மற்றும் வள ஆதாரங்களின் பயன்பாட்டுத்திறனை அதிகரித்தல், நுண்ணீர்ப் பாசனம் மற்றும் சிறந்த நீர் சேமிப்பு தொழில்நுட்பங்கள், பகுதிக்கேற்ற இடுபொருள் மேலாண்மை, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான வேளாண்மை ஆகியவற்றின் மூலம் வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்தல்.

6. நீடித்த நிலையான விவசாய முறையை தீவிரப்படுத்துவதன் மூலம் கிராமப்புற விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்தல்.

7. மண்வளத்திற்கு புத்துயிர் அளித்தல், சமச்சீரான உரப் பயன்பாடு மற்றும் சிறப்பான நீர் பயன்பாடு வாயிலாக, பயிர் சாகுபடி செலவை குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல்.

8. சிறந்த மேலாண்மை உத்திகளைக்கொண்ட துல்லியமான இடுபொருள் விநியோகத்தின் மூலம் தேவையான தரமான இடுபொருட்கள் சிரமமின்றி கிடைக்க வழிவகை செய்தல்.

9. வேளாண் சமுதாயம் குறிப்பாக பண்ணை மகளிர் மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் சமூக பொருளாதார உதவித் திட்டங்களை செயல்படுத்துதல்.

10. பண்ணைகளில் ஏற்படும் சூழ்நிலை, குறிக்கோள் மற்றும் தடைகளுக்கு ஏற்ப வேளாண்மை மற்றும் அதன் சார்பு துறைகளை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றுதல்.

11. சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் வகையில் பயிர்-மரம், கால்நடைகளை ஒருங்கிணைத்து, வேளாண் கழிவுகள் மற்றும் வேளாண் துணை விளைபொருட்களின் மறு சுழற்சியை மேம்படுத்துதல்.

12. மானாவாரி நிலங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல்.

13. வானிலை முன்னறிவிப்பு அடிப்படையிலான மாற்று திட்டங்களை தயாரித்தல் மற்றும் பயிர் காப்பீடு செய்தல் மூலம் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பினை ஈடுசெய்தல்.

14. தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் விதை உற்பத்தி முதல் அறுவடை வரையிலான தொழில்நுட்பங்களை வழங்குதல்.

15. வேளாண் சேவை அமைப்புகளை வலுப்படுத்துவதுடன் வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி தீவிர பன்முகத்தன்மை கொண்ட வேளாண்மையை மேற்கொள்ள வழிவகை செய்தல்.

16. புதிய தகவல் பரிமாற்றங்களின் வாயிலாக விவசாயிகளுக்கு உகந்த தொழில்நுட்பங்களை வழங்கி, இலாபகரமான சந்தை விவரங்களை அறிந்திட வழிவகை செய்தல்.

2017-18ஆம் ஆண்டில், தென்மேற்கு பருவ காலத்தில் பெய்த அதிகமான மழையும், வடகிழக்கு பருவ காலத்தில் பெய்த சராசரி மழையும் உணவு தானிய பயிர்களின் சாகுபடியினை அதிக பரப்பளவில் மேற்கொள்ள ஊக்கப்படுத்தியது. தமிழ்நாடு அரசு, 2018-19ஆம் ஆண்டில் பகுதிக்கேற்ற மற்றும் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களை செயல்படுத்தி 110 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி அடைய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

2018 - 19ஆம் ஆண்டுத் திட்டம்

பயிர்

பரப்பு (இலட்சம் எக்டர்)

உற்பத்தித் (இலட்சம் மெட்ரிக் டன்)

உற்பத்தி திறன் (கிலோ /எக்டர்

அரிசி

18.50

69.50

3757

சிறுதானியங்கள்

9.00

34.00

3778

பயறு வகைகள்

9.40

6.50

691

மொத்த உணவு தானியங்கள்

36.90

110.00

 

எண்ணெய் வித்துக்கள்

5.00

12.00

2400

பருத்தி (*)

2.40

7.37

522

கரும்பு{")

3.25

370.52

114

மொத்தம்

47.55

 

 

(*) உற்பத்தி (170 கிலோ கொண்ட இலட்சம் பொதிகள்);

(*) உற்பத்தித்திறன் (மெட்ரிக் டன்/எக்டர்)

பருவநிலை - மழையளவு

இந்திய வானிலை ஆய்வுத்துறை கணிப்பின்படி 2017ஆம் ஆண்டு இயல்பான மழை ஆண்டாக கணிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் குளிர்காலம் (39.1 மி.மீ, +25 சதவீதம்) மற்றும் தென்மேற்கு பருவமழை காலத்தில் (414.3 மிமீ, +29 சதவீதம்) அதிகமான மழையும் கோடைகாலம் (122.6மிமீ, -4சதவீதம்) மற்றும் வடகிழக்கு பருவ மழை காலத்தில் (399 மிமீ, 9 சதவீதம்) இயல்பான மழையும் பெறப்பட்டது.

பயிர்நிலை

தமிழ்நாட்டில் வேளாண்மையானது, பெரும்பாலும் மழைநீரையும், ஆற்றுநீரையும் நம்பியே உள்ளது. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் பருத்தி மற்றும் கரும்பு பயிர்கள் பெரும்பாலும் மேம்படுத்தப்பட்ட விவசாய தொழில் நுட்பங்களை பின்பற்றி பயிரிடப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டின் வளமான விவசாயத்திற்கு பிரதானமானதும், தவிர்க்க முடியாததுமாகிய நீர்பாசனம், தென்மேற்கு பருவமழை காலம் மற்றும் வடகிழக்கு பருவ மழை காலத்தின் துவக்கம், 15 நீர்த்தேக்கங்களில் தென்மேற்கு பருவமழையின் போது சேமிக்கப்படும் நீரின் அளவு மற்றும் நிலத்தடி நீரையும் நம்பியே உள்ளது. எனினும், உணவு தானிய உற்பத்தியானது, குறிப்பாக நெற்பயிர் சாகுபடி காவிரி டெல்டா பகுதிகளில் பெறப்படும் காவிரி நீரின் அளவை நம்பி உள்ளது.

2017-18ஆம் ஆண்டில், பெறப்பட்ட அதிகமான தென்மேற்கு பருவ மழையினாலும், சராசரி வடகிழக்கு பருவ மழையினாலும் முக்கிய பயிர்களின் சாகுபடி பரப்பானது பின்வருமாறு. நெல் 18.551இலட்சம் எக்டர் (42%), சிறுதானிய பயிர்கள் 9.166 இலட்சம் எக்டர் (21%), பயறு வகைகள் 8.783 இலட்சம் எக்டர் (20%), பருத்தி 1.838 இலட்சம் எக்டர்(4%), கரும்பு 1.880 இலட்சம் எக்டர் (4%) மற்றும் எண்ணெய்வித்துப்பயிர் 3.998 இலட்சம் எக்டர் (9%) சாதனை அடையப்பட்டுள்ளது. இருந்த போதிலும், வேளாண் உற்பத்தியை மாநிலம் முழுவதும் அதிகரிக்க, விதைகள், இரசாயன உரங்கள், உயிர் உரங்கள், பூச்சி கொல்லி போன்ற முக்கிய இடுபொருட்கள் உரிய நேரத்தில் உரிய இடத்தில் விவசாயிகளை சென்றடைய வேளாண்மைத்துறை சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நெல்

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முதன்மைப்பயிரான நெற்பயிர் மாநிலத்திற்கே உரிய பருவங்களான கார்/ குறுவை / சொர்ணவாரி (ஏப்ரல் -ஜூலை), சம்பா, தாளடி/பிசானம் (ஆகஸ்ட் - நவம்பர்) மற்றும் நவரை/ கோடைடிசம்பர் - மார்ச்) ஆகிய மூன்று பருவங்களில் பெருமளவில் பயிரிடப்படுகிறது.

மாநிலத்தின் மொத்த சாகுபடி பரப்பில் 42 சதவீத பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, மொத்த உணவுதானிய உற்பத்தியில் நெல் 65 சதவீதமாக உள்ளது.

2017-18ஆம் ஆண்டில், மேட்டூர் அணையில் போதுமான அளவு நீர் இருப்பு இல்லாததால் தாமதமாக நீர் திறந்துவிட்ட நிலையிலும், நிலத்தடி நீரினை பயன்படுத்தியும், பருவமழையின்போது பெறப்பட்ட இயல்பான மழையினைக் கொண்டும் இயல்பு பரப்பான 17.84 இலட்சம் எக்டருக்கு கூடுதலாக 18.55 இலட்சம் எக்டரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டின் சராசரி அரிசி உற்பத்தித் திறன் எக்டருக்கு 3,806 கிலோகிராம் ஆகும். இந்த உற்பத்தித்திறனை மேலும் அதிகரித்து, பண்ணை அளவில் உற்பத்தியினை உயர்த்தும் நோக்கத்துடன் அரசானது பல்வேறு திட்டங்களின் வாயிலாக தனித்துவமான உத்திகளை செயல்படுத்தி வருகிறது.

திருந்திய நெல் சாகுபடி (System of Rice Intensification)

அதிக மகசூல் பெறும் தொழில் நுட்பங்களுடன் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் விளைச்சல் தரக்கூடிய திருந்திய நெல் சாகுபடி முறை 2017-18ஆம் ஆண்டில் 6.38 இலட்சம் எக்டரில் செயல்படுத்தப் பட்டது. 2018-19ஆம் ஆண்டில் திருந்திய நெல் சாகுபடி முறையானது 10 இலட்சம் எக்டரில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

*நேரடி நெல் விதைப்புமுறை(Direct sowing)

மேட்டூர் அணையிலிருந்து பாசனநீர் திறந்து விட இயலாத நிலை மற்றும் குறைவான வடகிழக்கு பருவமழை காலங்களில் நேரடி நெல் விதைப்பு முறையானது, பாசனநீர் மற்றும் பணியாட்களின் தேவையினை குறைத்து, பயிர் சாகுபடியினை உறுதி செய்யும் சிறப்பம்சங்களை கொண்டது. 2017-18ஆம் ஆண்டில், நேரடி நெல் விதைப்பு முறையானது 4.54 இலட்சம் எக்டரில் மேற்கொள்ளப்பட்டதில் 2.11 இலட்சம் எக்டருக்கு ரூ.26.59 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இப்பயிர் சாகுபடி தொழில்நுட்பம் 2018-19ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

*நெல் இயந்திர நடவு (Mechanical Transplantation)

நடவுப்பணிக்கான பணியாளர்களின் பற்றாக்குறையினை குறைத்து உரிய பருவத்தில் விரைவாக நடவுப்பணியை மேற்கொள்ளும் வகையில் 2014-15ஆம் ஆண்டு முதல் வேளாண்மைத் துறை இயந்திர நடவு முறையினை ஊக்கப்படுத்தி வருகிறது. விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்நடவு முறை, 2017-18ஆம் ஆண்டில் 44,300 எக்டர் பரப்பில் மேற்கொள்ள ரூ.38.15கோடி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்நடவுமுறை 2018-19ஆம் ஆண்டிலும் தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்.

நெற் பயிருக்கான தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம்: நெல் உற்பத்திக்கான முனைப்புத் திட்டம் (Strategic Rice Production Programme-SRPP):

நெல் உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தியினை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பகுதிக்கேற்ற பிரச்சினை சார்ந்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்திட்டமானது. 2017-18ஆம் ஆண்டில் உயர்விளைச்சல் தரக்கூடிய சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை, விதை விநியோக மானியம், இயந்திர நெல் நடவு, நாற்றங்கால் தட்டு, துத்தநாக சல்பேட் மற்றும் களைக்கொல்லி உபயோகத்திற்கான உதவித்தொகை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், உழுவை இயந்திரங்களுக்கான மானியம் மற்றும் நேரடி நெல் விதைப்புக்கான உழவு மானியம் ஆகிய பணிகள் ரூ.28.18 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டன. இத்திட்டம் 2018-19ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

அரிசிக்கான தேசிய உணவுப் பாதுகாப்புத்திட்டம் : (National Food Security Mission-Rice):

தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு மாவட்டங்களான, புதுக்கோட்டை , திருவாரூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் நெல் சாகுபடி பரப்பினை அதிகரிக்கச் செய்தும், உற்பத்தித்திறனை உயர்த்தியும், பண்ணை வருமானத்தை பெருக்கும் நோக்கத்துடனும், தனிப்பட்ட பண்ணை உற்பத்தித்திறன் மற்றும் மண்வளத்தினை நிலைப்படுத்தும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017-18ஆம் ஆண்டில், தொகுப்பு செயல்விளக்கங்கள், பயிர் திட்டம் சார்ந்த செயல் விளக்கங்கள், உயர் விளைச்சல் தரக்கூடிய சான்றுபெற்ற நெல் விதைகள் விநியோகம், உற்பத்தித்திறனை உயர்த்தும் இடுபொருட்கள், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள், பண்ணை இயந்திரங்கள், இயற்கை வளங்களை பாதுகாத்திடும் தொழில் நுட்பங்கள் மற்றும் பயிர்திட்டம் சார்ந்த பயிற்சிகள் ஆகிய இனங்கள் ரூ. 14.84 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டன. இத்திட்டம் 2018-19ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

சிறுதானியங்கள்

ஏழைகளின் தானியம் என்று அழைக்கப்படும் சிறு தானியங்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முக்கிய தானியங்களாக கருதப்படுகிறது, இதன் காரணமாக சிறுதானியங்களின் பாரம்பரிய உணவு முறை பிரபலமடைந்து வணிக உணவாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. சிறுதானியங்களில் குளுட்டன் என்னும் புரதம் காணப்படுவதில்லை . மேலும் உணவு, கால்நடைத் தீவனம், உடல்நலம், ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரம் போன்ற பல்வகை பாதுகாப்பை சிறுதானியங்கள் தருகின்றன. சிறுதானியங்களான சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் மற்றும் பிற குறுதானியங்களான தினை, வரகு, சாமை, மற்றும் குதிரைவாலி போன்ற பயிர்கள் 8.013 இலட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் உற்பத்தி அளவானது 28.88 இலட்சம் மெட்ரிக்டன் ஆகும்.

சிறுதானியங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் வேளையில் சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டதின் அடிப்படையில் 2017-18ஆம் ஆண்டில் 9.17 இலட்சம் எக்டர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டது. இது இயல்பு சாகுபடி பரப்பை விட சுமார் 1.157 இலட்சம் எக்டர் அதிகமாகும். சிறுதானியங்கள் விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகப்பரப்பில் பயிரிடப்படுகிறது.

நடைமுறையில் உள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் வாயிலாக உள்ளூர் மற்றும் உள்நாட்டு வேளாண் உத்திகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், முக்கிய இடுபொருட்கள் விநியோகம், சிறுதானியம் மற்றும் அதன் பயன்களை மக்களிடையே அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற உத்திகளை மேற்கொண்டு பெரிய அளவில் மக்களின் பயன்பாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறன.

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் - சிறுதானியங்கள் (National Food Security Mission - Coarse Cereals)

2017-18ஆம் ஆண்டில் சிறுதானிய பயிர்களில் மேம்படுத்தப்பட்ட சாகுபடி முறைகளுக்கான தொகுப்பு செயல் விளக்கங்கள், பயறுவகை பயிர்களில் ஊடுபயிர், உயர்விளைச்சல் இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் விதை விநியோகம் ஆகியவை சேலம், கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் ரூ.5.77 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு, 26,741 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

மேலும், சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 2018-19ஆம் ஆண்டில் சிறுதானியங்களை இரு பகுதிகளாக பிரித்து அதில் மக்காசோளம் ஒரு பகுதியாகவும், சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் குறு தானியங்களான வரகு, சாமை, தினை, குதிரைவாலி ஆகியவைகள் ஊட்டச்சத்து நிறைந்த தானியங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொகுப்பு மாதிரி விளக்க திடல்களை அமைத்தல், சான்று விதைகள் மற்றும் வீரிய ஒட்டு ரக விதைகள் விநியோகம், ஊடு பயிருடன் செயல் விளக்க திடல்கள் அமைத்தல், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம், கைத்தெளிப்பான்கள் விநியோகம் மற்றும் விளம்பரம் போன்ற திட்ட இனங்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் சிறுதானியங்கள் (National Agriculture Development Programme-Millets)

சிறுதானியங்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், இத்திட்டத்தில் 2017-18ஆம் ஆண்டில், சான்று விதைகள் உற்பத்தி மற்றும் விநியோகம், நுண்ணூட்ட உரக்கலவைவிநியோகம், உயிர் உரங்கள் விநியோகம் ஆகியவை ரூ4.09 கோடியில் செயல்படுத்தப்பட்டு 1,42,192 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டம் 2018-19ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

பயறுவகை பயிர்கள்

பயறுவகை பயிர்கள் மனிதர்களுக்கு தேவையான புரதச்சத்தை வழங்குவதோடு, மண்வளத்தை பெருக்குவதிலும் பெரும்பங்காற்றுகின்றன. துவரை, உளுந்து, பாசிப்பயறு மற்றும் கொள்ளு ஆகியவை தமிழ் நாட்டில் சாகுபடி செய்யப்படும் முக்கிய பயறுவகை பயிர்களாகும். தமிழ் நாட்டில் சாகுபடி செய்யப்படும் பயறு வகை பயிர்களின் இயல்பான பரப்பளவு 7.53 இலட்சம் எக்டராக உள்ளது. பயறுவகைப் பயிர்கள் குறுகிய காலத்தில் பலன் தருவதாகவும், குறைந்த அளவே பாசன நீர்த்தேவை கொண்ட பயிராகவும் விளங்குவதால், ஆண்டு முழுவதும் சாகுபடி செய்ய ஏற்றவை. பயறு வகை பயிர்களின் தேவை மற்றும் உற்பத்திக்கு இடையே உள்ள இடைவெளியை குறைத்து, பயறு உற்பத்தியில் தன்னிறைவு அடையவும், பயிரிடு திறனை அதிகரித்து விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற வழிவகை செய்யவும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை ஓர் இயக்கமாக மேற்கொண்டுவருகிறது.

இதன் காரணமாக 2010-11 ஆம் ஆண்டு பயறுவகை பயிர்களின் பரப்பளவு மற்றும் உற்பத்தி முறையே 6.37 இலட்சம் எக்டர், 2.45 இலட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 2014-15ஆம் ஆண்டு 8.84 இலட்சம் எக்டர் மற்றும் 7.67 இலட்சம் மெட்ரிக் டன்களாக அதிகரித்து, பயறுவகை உற்பத்தியில் ஒரு புதிய சாதனை எய்தப்பட்டது. 2010-11ஆம் ஆண்டு , எக்டருக்கு 385 கிலோவாக இருந்த பயறுவகைகளின் உற்பத்தித்திறன் 2014-15ஆம் ஆண்டில் எக்டருக்கு 868 கிலோவாக உயர்ந்துள்ளது. பயறுவகை உற்பத்தியை பெருக்க அனைத்து நடவடிக்கைகளும் 2015-16 மற்றும் 2016-17ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து நடைமுறை படுத்தப்பட்டது. இதன் காரணமாக, 2015-16ஆம் ஆண்டு மழை, வெள்ளத்தாலும், 2016-17ஆம் ஆண்டு கடும் வறட்சியாலும் தமிழ்நாடு பாதிக்கப்பட்ட போதிலும், பயறுவகைகளின் சாகுபடிப்பரப்பானது தொடர்ந்து8     இலட்சம் எக்டராக இருந்துவந்தது.

2017-18ஆம் ஆண்டில் பயறுவகை சாகுபடியில், சாகுபடி பரப்பு, பயறு உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் முறையே 9.4 இலட்சம் எக்டர், 6 இலட்சம் மெட்ரிக் டன் மற்றும் எக்டருக்கு 632 கிலோ என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 8.78 இலட்சம் எக்டரில் பயறுவகை பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. மேலும், கூட்டுப்பண்ணைய விவசாயம் மற்றும் நீடித்த மானாவாரி இயக்கம் வாயிலாக, பயறுவகை உற்பத்தி செய்யும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களுக்கு, தரமான இடுபொருள் குறைந்த விலையில் கிடைக்கவும், மதிப்புக்கூட்டுதல் மூலமாக கூடுதல் வருமானம் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுவருகிறது.

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் - பயறு வகை 2017-18

குறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் ஈட்டிட வழிசெய்யும் வகையில் அனைத்து விவசாயிகளும் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்திட ஏதுவாக, தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை செயல்படுத்திட தேவையான உதவிகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன. இத்திட்டமானது, சென்னை மற்றும் நீலகிரி நீங்கலாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

2017-18ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் தொழில் நுட்ப செயல்விளக்கங்கள் அமைத்தல், பயிர் சாகுபடி முறை சார்ந்த செயல்விளக்கங்கள் அமைத்தல், நிலக்கடலை பயிருடன் பயறுவகை பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவது குறித்த செயல்விளக்கங்கள் அமைத்தல், உயர் விளைச்சல் தரும் சான்று விதை உற்பத்தி மற்றும் விநியோகம், உயிர் உரங்கள், நுண்ணூட்டக்கலவைகள் பயிர் பாதுகாப்பு மருந்துகள், களைக்கொல்லிகள், இயந்திரங்கள் மற்றும் நீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் வழங்குதல், அரசு சாரா அமைப்புகளின் வாயிலாக தொகுப்பு செயல்விளக்கங்கள் போன்ற இனங்கள் ரூ.33.42 கோடி நிதி செலவினத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, ராபி பருவத்தில் பயறுவகை பயிர்களைஅதிக பரப்பில் சாகுபடி செய்வதற்கான திட்டம் ரூ. 21.82 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டது.

2018-19ஆம் ஆண்டில், தேசிய உணவு பாதுகாப்பு - பயறு வகைத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் - பயறுவகை

இத்திட்டத்தின் கீழ் பயறுவகை பயிர்களில் வரிசை விதைப்பு, டிஏபி 2 சதக்கரைசல் இலைவழிதெளிப்பு, சான்று விதை உற்பத்திக்கான மானியம், நடவு முறை துவரை சாகுபடி, விதை நேர்த்திக்கான மானியம் போன்ற இனங்கள் 2017-18ஆம் ஆண்டில் ரூ.13.08 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டன.

எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய்ப்பனை

எண்ணெய்வித்துப்பயிர்கள் பெரும்பாலும் மானாவாரி பயிர்களாக பயிரிடப்படுகிறது. சமையல் எண்ணெய்யின் உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதில் எண்ணெய்வித்துக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டில் எண்ணெய்வித்துப் பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி மற்றும் ஆமணக்கு ஆகியவை பயிரிடப்படுகின்றன. தமிழ்நாட்டில் பயிரிடப்படும் எண்ணெய்வித்துப் பயிர்களின் பரப்பில் 88 சதவீதம் பரப்பில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. அதில் 60 சதவீதம் பரப்பில் மானாவாரி பயிராக பயிரிடப்படுகின்றன. தமிழ்நாட்டில் எண்ணெய்வித்துக்கள் சராசரியாக 4 இலட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு 9 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகின்றது. அரசால் மேற்கொள்ளப்படும் சீரிய முயற்சியால் தொடர்ந்து 2011-12ஆம் ஆண்டு முதல் 2015-16ஆம் ஆண்டு வரை தேசிய அளவில் எண்ணெய்வித்துக்கள் உற்பத்தித்திறனில் முதலிடத்தை தமிழ்நாடு தக்க வைத்துள்ளது.

எண்ணெய்வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக எண்ணெய்வித்துக்களின் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் - ஒருங்கிணைந்த எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி மேம்பாட்டு திட்டம்

2017-18ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், உரிய காலத்தில் சான்று விதைகளின் விநியோகம், உயிர் உரங்கள் விநியோகம் மற்றும் வரப்பு பயிராக ஆமணக்கு பயிரிடுதல் போன்ற நடவடிக்கைகள் இத்திட்டத்தின் கீழ், ரூ.4.24 கோடி நிதி செலவினத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டமானது 2018-19ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை

3.16666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top