பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் 2018 – 2019

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் 2018 – 2019 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

வேளாண்மையில் நீடித்த, நிலையான வளர்ச்சி அடைந்து, அதன் மூலம் உழவர் சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடவும், வேளாண்மையில் அதிகரித்து வரும் உணவு உற்பத்திக்கான சவால்களை எதிர்கொண்டு செயலாற்றிடவும், அறுவடை பின்செய் மேலாண்மையுடன் கூடிய வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகச் செயல்பாடுகள் மிகமுக்கிய பங்களிக்கின்றன.

வேளாண் விளைபொருட்கள் பருவகாலங்களில் விளைவதால், அதற்கான விலை பருவநிலை, அழுகும் தன்மை, தேவை மற்றும் உற்பத்தியைச் சார்ந்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் விவசாயிகள் பெரும்பாலும் பெரிய மற்றும் ஆதாயம் தரும் சந்தைகளில் விற்பனை உபரியினை சந்தைப்படுத்த இயலாத வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகளாகவே உள்ளனர். போதுமான கடன் வசதி, முதன்மை பதப்படுத்தும் வசதி, சந்தை விலை மற்றும் தர நிர்ணய விவரங்கள் இன்மையால் சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகமாக பண்ணை அளவிலேயே விற்பனை மேற்கொண்டு வருகின்றனர்.

திறன்வாய்ந்த சந்தை அமைப்பு முறையானது, விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தையும், உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையேயான விலை வேறுபாட்டை குறைப்பதாகவும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் தரமான விளைபொருள் கிடைக்கச் செய்வதாகவும் இருக்க வேண்டும். விளைபொருட்களை உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோருக்கு கொண்டு செல்வதுடன் சந்தை தொடரமைப்பின் பல்வேறு நிலைகளில் விலைகளை கண்டறிந்து, தெரிவிப்பதில் சந்தை அமைப்பு முக்கியப் பங்காற்றுகிறது.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை விவசாயிகளுக்கு உரிய ஆதாய விலை கிடைப்பதை உறுதி செய்திட சந்தை மற்றும் அறுவடை பின்செய் மேலாண்மை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை ஏற்படுத்துதல், ஒப்பந்தப் பண்ணையத்தை மேம்படுத்திட சட்டம் மற்றும் விதிகளை உருவாக்குதல், மின்னணு பரிவர்த்தனை வசதி ஏற்படுத்துதல், வேளாண் விற்பனைச் சட்டம் மற்றும் விதிகளை மறுசீரமைத்தல், உணவு பதப்படுத்தும் கொள்கையை முறைப்படுத்துதல் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

துறையின் முக்கியச் செயல்பாடுகள்

1. அறுவடை பின்செய் மேலாண்மைக்கும், விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்.

2. அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பினை குறைத்து, விளைபொருட்களின் சேமிப்பு காலத்தை அதிகப்படுத்திட சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள், பழுக்கவைக்கும் கூடங்கள் மற்றும் உலர்கள் வசதிகள் அமைத்தல்.

3. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் விவசாயிகளின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துதல்.

4.சந்தைகளின் செயல்திறனை மேம்படுத்திடவும், விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திடவும் வேளாண் விற்பனைச் சட்டம் மற்றும் விதிகளை மறுசீரமைப்பு செய்தல்.

5. ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், உழவர் சந்தை, சிறப்பு வணிக வளாகங்கள் மூலமாக விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்பினை உருவாக்குதல்.

6. தனியார் மற்றும் பொதுத்துறை பங்கேற்புடன் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி, பதப்படுத்த தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்தல்.

7. விவசாயிகள் மற்றும் இதர பங்குதாரர்கள் பயன்பெறும் வகையில் சந்தை சார்ந்த விவரங்களை பரவலாக்குதல்.

8. அக்மார்க் ஆய்வகங்கள் மூலம் தரமான, கலப்படமற்ற உணவுப் பொருட்கள் நுகர்வோர்க்கு கிடைக்க உறுதி செய்தல்.

9. விவசாயிகளுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சிகள் மூலம் அறுவடை பின்செய் மேலாண்மை, பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல், தரம்பிரித்தல் போன்ற தொழில்நுட்ப உத்திகளை வழங்குதல்.

விற்பனைக்குழுக்கள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்

தமிழ்நாட்டில் 23 விற்பனைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் கீழ் 281 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனைச் (முறைப்படுத்துதல்) சட்டம் 1987 மற்றும் விதிகள் 1991ன்படி செயல்படுகின்றன. வேளாண் விளைபொருட்களின் விற்பனையினை சிறந்த வகையில் முறைப்படுத்திட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண் விளை பொருட்களின் பரிவர்த்தனை மேற்கொள்ள ஒவ்வொரு விற்பனைக்குழுவும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பரிவர்த்தனை மேற்கொள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஒரு பாலமாக செயல்படுகின்றன. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு விவசாயிகளால் கொண்டுவரப்படும் வேளாண் விளைபொருட்கள் மறைமுக ஏலமுறையில் விற்கப்படுகின்றன. இச்சேவைக்காக விவசாயிகளிடம் எவ்விதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை . இவ்வாறாக விற்கப்படும் வேளாண் விளைபொருட்களின் மதிப்பில் ஒரு சதவீதம் சந்தைக் கட்டணமாக வியாபாரிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இதனுடன் உரிமக்கட்டணம் வியாபாரிகள் மற்றும் எடையாளர்களிடம் வசூலிக்கப்படுகின்றது. 2017-18ஆம் ஆண்டில் சுமார் 27.94 இலட்சம் மெ.டன் வேளாண் விளைபொருட்கள் விவசாயிகளால் விற்கப்பட்டு ரூ.128.86 கோடி வரவினம் வரப்பெற்றுள்ளது.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் சேமிப்புக் கிடங்கு, பரிவர்த்தனைக் கூடம், உலர்களம், விவசாயிகள் ஓய்வறை, வியாபாரிகள் கடை, குளிர்பதன கிடங்கு, குளிர்பதன வசதியுடன் கூடிய வணிக வளாகங்கள் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விவசாயிகளின் உடனடி பணத் தேவைக்காகவும், குறைந்த விலையில் விளைபொருட்களை விற்று பாதிப்படையாமல் விவசாயிகளை பாதுகாத்திடவும், வழங்கப்பட்டு வரும் பொருளீட்டுக்கடன் வசதி அதிக பட்சமாக விவசாயிகளுக்கு ரூ.3 இலட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது. 2017-18ஆம் ஆண்டில் 2,290 விவசாயிகள் பொருளீட்டுக்கடனாக ரூ.37.57 கோடி பெற்றுள்ளனர்.

வியாபாரிகள் தங்களின் குறுகிய கால தேவைகளுக்காக அதிகபட்சமாக ரூ.2 இலட்சம் வரை பொருளீட்டுக்கடன் பெறலாம். 2017-18ஆம் ஆண்டில் 524 வியாபாரிகள் பொருளீட்டுக்கடனாக ரூ.6.87 கோடி பெற்றுள்ளனர். 2018-19ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.65 கோடியும், வியாபாரிகளுக்கு ரூ.8 கோடியும் பொருளீட்டுக்கடனாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வேளாண் விற்பனை அமைப்பில் சந்தை தொடர்பான விவரங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நிலவும் வேளாண் விளைபொருட்களின் விலை விவரத்தை தினசரி சேகரித்து உரிய நேரத்தில் தெரிவிக்க "சந்தை ஆராய்ச்சி மற்றும் தகவல் இணைப்பு திட்டத்தின் கீழ் 184 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கணினி வழங்கப்பட்டு மத்திய அரசின் http://www.agmarknet.nic.in என்ற வலைதளத்துடன் இணைக்கப்பட்டு விலை மற்றும் சந்தை பற்றிய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

மின்னணு தேசிய வேளாண் சந்தை (e-NAM)

மின்னணு தேசிய வேளாண் சந்தையின் நோக்கம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதும், விலை உயர்வால் கிடைத்திடும் பயனை அடையச் செய்வதேயாகும். தேசிய அளவில் 585 சந்தைகளில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் 2 கட்டங்களாக மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் பயன்கள்

 • விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும்.
 • வியாபாரிகள் தேசிய அளவில் பெரிய சந்தைகளுடன் தொடர்பு கொண்டு பரிவர்த்தனை மேற்கொள்ள வழிவகை கிடைக்கும்.
 • மொத்த வியாபாரிகள், பதப்படுத்துவோர், ஏற்றுமதியாளர்கள் நேரடியாக அருகில் உள்ள சந்தைகளில் பங்கேற்கலாம்.
 • சந்தைகளில் பரிவர்த்தனை அதிகரிப்பதால், சந்தைக் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தினை செயல்படுத்த மின்னணு வர்த்தகம், ஒருமுனை வரிவிதிப்பு, ஒன்றுபட்ட ஒரே உரிமம் ஆகியவற்றை உள்ளடக்கி தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனைச் (முறைப்படுத்துதல்) சட்டம் 1987ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கலவை, அம்மூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, செஞ்சி, அன்னூர், கோபிசெட்டிப்பாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், பரமக்குடி, கம்பம், திண்டுக்கல், திருப்பூர், உடுமலைப்பேட்டை மற்றும் பெதப்பம்பட்டி ஆகிய 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் தேர்வு செய்யப்பட்டு, 2017 அக்டோபர் முதல் தேசிய வேளாண் சந்தை இணையதளத்துடன் இணைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு வேளாண் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ஒரு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு ரூ.30 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.4.50 கோடி வழங்கியுள்ளது.

இத்திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இரண்டாம் கட்டமாக கீழ்பெண்ணாத்தூர், வந்தவாசி, விருத்தாச்சலம், அவலூர்பேட்டை, திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி, ஆனைமலை, பெருந்துறை, லால்குடி, வெள்ளக்கோவில், பரமத்திவேலூர், அரூர் மற்றும் மதுரை ஆகிய 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இதற்கென மத்திய அரசு வேளாண் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ஒரு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு ரூ.30 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.4.50 கோடி நிதி வழங்கியுள்ளது. தேர்வு செய்யப்பட்ட 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இதுவரை 8 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் தேசிய வேளாண் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட 23 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 93,650 விவசாயிகள் மற்றும் 1,598 வியாபாரிகள் கலந்து கொண்டு ரூ.34.51 கோடி மதிப்பிலான 2.35 இலட்சம் குவிண்டால் விளைபொருட்கள் இதுவரை பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கையாளப்படும் விளைபொருட்களின் எண்ணிக்கையை அதிகரித்து 2018-19ஆம் ஆண்டில் 4 இலட்சம் குவிண்டால் விளைபொருட்களை பரிவர்த்தனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் மின்னணு வர்த்தகம்

வேளாண் விற்பனை உட்கட்டமைப்புகளின் தரம் உயர்த்திடவும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்களை ஒருங்கிணைத்திடவும், முதற்கட்டமாக 15 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மற்றும் 8 வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் மின்னணு ஏலமுறை அறிமுகப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

மின்னணு ஏலமுறையை அறிமுகப்படுத்துவதால் ஒளிவு மறைவற்ற வெளிப்படையான வர்த்தகத்திற்கும், விரைவான பரிவர்த்தனைக்கும், வணிகர்கள் எளிதாக சந்தைகளை அணுகிடவும், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்திடவும், விற்பனை செலவு குறைவதற்கும், விற்பனை நடைமுறைகளின் செயல்திறனை அதிகரிக்கவும் வழிவகை ஏற்படும்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மின்னணு வர்த்தக முறையில் இதுவரை 6,528 விவசாயிகள் மற்றும் 3,303 வியாபாரிகள் கலந்து கொண்டு ரூ.72.05 கோடி மதிப்பிலான 10,127 மெ.டன் மஞ்சள் விளைபொருள் வர்த்தகம் மேற்கொண்டுள்ளனர்.

விளைபொருட்களுக்கு தரம் மற்றும் மதிப்பீடு நிர்ணயம் செய்வதால் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கிடையேயும், மாநிலங்களுக்கிடையேயும் வர்த்தகம் செய்திட இயலும். தற்போது பருத்தி, கொப்பரை, மிளகாய், மக்காச்சோளம், மணிலா, நெல் போன்ற விளைபொருட்களுக்கு அன்னூர், ஆனைமலை, அந்தியூர், சத்தியமங்கலம், திருப்பூர், பெதப்பம்பட்டி, உடுமலைப்பேட்டை, பரமக்குடி, திண்டுக்கல், கம்பம் ஆகிய 10 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள அக்மார்க் ஆய்வக வேளாண்மை அலுவலர்களால் தரமதிப்பீட்டு கருவிகளைக் கொண்டு தர நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதற்கென 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு நபார்டு வங்கியின் கிடங்கு உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.62.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தரம் மற்றும் மதிப்பீட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 2018-19ஆம் ஆண்டில் மீதமுள்ள 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கும் நபார்டு வங்கியின் கிடங்கு உட்கட்டமைப்பு நிதியின் கீழ் உபகரணங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒன்றுபட்ட ஒரே உரிமம்

தற்போது ஒரு குறிப்பிட்ட விற்பனைக்குழுவில் உரிமம் பெறும் வியாபாரிகள் மற்ற விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வணிகம் செய்ய இயலாது. இது வியாபாரிகளின் வணிக செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. விவசாயிகள் தங்கள் விளைபொருளுக்கு நல்ல விலை பெறவும், வியாபாரிகள் பரந்த அளவில் சந்தைகளை அணுகவும் ஒன்றுபட்ட ஒரே உரிமம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனைச் (முறைப்படுத்துதல்) சட்டம் 1987ல் செய்யப்பட்ட திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) விதிகள் 1991-ஐ செயல்படுத்த அரசாணை நிலை எண்.68, வேளாண்மைத் (வேவி3) துறை, நாள் 14.3.2018 மற்றும் அரசாணை நிலை எண் 69, வேளாண்மைத்வேவி3) துறை, நாள் 14.3.2018ன்படி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றுபட்ட ஒரே உரிமம் பெற்ற வியாபாரி மாநிலத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட அனைத்து சந்தைப்பகுதிகளிலும் வணிகம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதால் பரந்த அளவில் சந்தைகளை அணுகிட ஏதுவாகிறது. இந்த உரிமமானது மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

தமிழ்நாட்டில் ஒப்பந்தப்பண்ணைய சட்டம்

உழவர் சமுதாயத்தின் வருமானத்தை உயர்த்தும் உன்னத நோக்கத்தின் ஒரு முயற்சியாக தமிழக அரசு பல்வேறு சந்தை சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் சீரமைப்பின் ஒரு பகுதியாக, ஒப்பந்தப்பண்ணையத்தில் ஒப்பந்தத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், ஒப்பந்தம் தொடர்பாக ஒப்பந்ததாரர்களுக்கிடையே ஏற்படும் சிக்கல்களை தீர்க்கவும் ஏதுவாக திறன்வாய்ந்த சட்ட ரீதியான அமைப்பு ஏற்படுத்த வழிவகை செய்யப்படவுள்ளது.

முன்னரே ஒப்புக்கொண்ட எதிர்கால விலையில் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை வணிகர்களோ அல்லது பதப்படுத்தும் நிறுவனங்களோ கொள்முதல் செய்வதன் மூலம் விவசாயிகளை பயனடையச் செய்வதே ஒப்பந்தப் பண்ணையத்தின் முதன்மையான நோக்கமாகும். ஒப்பந்தப் பண்ணையத்தில் வணிகர்கள் அல்லது விளைபொருட்களை பதப்படுத்தும் நிறுவனங்கள் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விலையில் விளைபொருட்களை வாங்குவது உறுதி செய்யப்படும்.

புதிய சந்தைகளை உருவாக்கிடவும், திறன் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கும், தர நிலைகளை உறுதிபடுத்தவும், நவீன தொழில்நுட்பங்களை பரவலாக்கவும், போக்குவரத்து செலவினங்களை குறைக்கவும், தகவல் சமச்சீரற்ற தன்மையை சரிசெய்யவும், விலை நிலையின்மையை எதிர்கொள்ளவும் ஒப்பந்தப் பண்ணையம் உதவுகிறது.

மத்திய அரசின் மாதிரி ஒப்பந்தப்பண்ணைய சட்டத்தின் அடிப்படையில் 2018-2019 ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு வேளாண் விளைபொருள் ஒப்பந்தப் பண்ணையம் (மேம்பாடு மற்றும் வசதி) சட்டம் 2018, இயற்றப்பட்டு, விவசாயிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நலனுக்காக இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

கிடங்கு உட்கட்டமைப்பு நிதியில் (WIF) ஏற்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள்

பொது மற்றும் தனியார் துறை மூலம் அமைக்கப்படும் சேமிப்புக் கிடங்குகள், சேமிப்புக் கலன், குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் இதர குளிர்பதன கட்டுமான வசதிகளுக்கு கிடங்கு உட்கட்டமைப்பு நிதியின் மூலம் கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது. 2014-15 ஆம் ஆண்டு கிடங்கு உட்கட்டமைப்பு நிதியின் மூலம் (WIF) ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 49 பரிவர்த்தனைக் கூடங்கள், 35 சேமிப்புக் கிடங்குகள், தேங்காய்க்கென ஒரு வணிக வளாகம், இரண்டு குளிர்பதனக் கிடங்குகள், மூன்று அலுவலகக் கட்டடங்கள், நான்கு எடைமேடைகள், ஐந்து ரப்பர் உருளைகள் மற்றும் ஒரு பதப்படுத்தும் மையம் என மொத்தம் 100 சந்தை உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.83.35 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன.

2017-18ஆம் ஆண்டில் 44 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.99.51 கோடி மதிப்பீட்டில் (நபார்டு வங்கியின் கிடங்கு உட்கட்டமைப்பு நிதி ரூ.94.126 கோடி மற்றும் விற்பனைக்குழு | தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய நிதி பங்களிப்பு ரூ.5.384 கோடி) 79,000 மெ.டன் மொத்த கொள்ளளவு கொண்ட 46 கிடங்குகள் அமைக்க அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

வேளாண் வணிக செயல்பாடுகள்

விளைபொருட்களை மதிப்புக் கூட்டுதல், சிப்பமிடல், சில்லரை வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்தல் போன்ற பல்வேறு வேளாண் வணிக செயல்பாடுகளுக்கான வாய்ப்புகள் பெருகியுள்ளது. விளைபொருள் உற்பத்தி, பதப்படுத்துதல், விற்பனை, வர்த்தகம் மற்றும் விநியோகம் தொடர்பான முன்னிணைப்பு மற்றும் பின்னிணைப்பு செயல்பாடுகளை மேற்கொள்ளவும், மாவட்ட அளவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் 29 வேளாண்மை துணை இயக்குநர்கள் (வேளாண் வணிகம்) செயல்பட்டு வருகின்றனர்.

பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற அழுகும் பொருட்களுக்கான விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம்

பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற அழுகும் பொருட்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி அதனை பங்குதாரர்களுடன் ஒருங்கிணைத்து உற்பத்தி பொருட்களை பயனுள்ளதாகவும், திறமையாகவும் கையாள ஏதுவாக விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் அச்சு மற்றும் ஆரம் அமைப்பில், விற்பனை முனையத்தை அச்சாகவும், முதன்மை பதப்படுத்தும் நிலையங்களை ஆரமாகவும் கொண்டு செயல்படவுள்ளது. இத்திட்டமானது தமிழ் நாட்டிலேயே முதலாவதும், தனித்துவமானதும் ஆகும்.

இத்திட்டமானது கிருஷ்ணகிரி, தருமபுரி, கோயம்புத்தூர், நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் ரூ.398.7542 கோடி மதிப்பீட்டில் (ரூ.378.8165 கோடி நபார்டு வங்கியின் கிடங்கு உட்கட்டமைப்பு நிதியின் மூலமும் ரூ.19.9377 கோடி மாநில அரசு நிதியின் மூலமும்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தினை செயல்படுத்து வதற்கான நிர்வாக ஒப்புதல் 21.06.2016 அன்று வழங்கப்பட்டது.

விவசாயிகள்/ உற்பத்தியாளர்களை பெருஞ்சந்தைகள், பதப்படுத்துவோர் மற்றும் நுகர்வோர்களுடன் ஒருங்கிணைத்து, முழுமையான விநியோகத் தொடர் மேலாண்மை உட்கட்டமைப்பை ஏற்படுத்துதல், காய்கறி மற்றும் பழங்களில் அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பினை குறைக்கும் உறுதுணையான சேவைகளை வழங்குதல், தரமான பழங்கள் மற்றும் காய்கறிகளை நுகர்வோருக்கு தடையின்றி ஆண்டு முழுவதும் நியாயமான விலையில் வழங்க வகை செய்தல், உற்பத்தியை பெருக்கவும், விற்பனை உபரியினை உயர்த்தவும் சிறந்த பண்ணை மேலாண்மை வழிமுறைகளை விவசாயிகள் அறிய செய்தல், விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் உற்பத்தி உபரியினை மதிப்புக் கூட்டிய பொருளாக மாற்றுதல் ஆகியவையே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பண்ணையிலிருந்து நுகர்வோருக்கு சென்றடையும் வரை குறிப்பிட்ட பயிர்களுக்கான விநியோகத் தொடர் உட்கட்டமைப்பு வசதிகள் ஒருங்கிணைந்த முறையில் ஏற்படுத்தப்படும். உற்பத்தி திறனை மேம்படுத்த விவசாயிகளுக்கு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், விதைகள் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்குதல், சந்தை மேம்பாட்டிற்கு சேகரிப்பு மையங்களை கண்டறிதல், முதன்மை பதப்படுத்தும் மையங்கள் அமைத்து பிரதான சந்தைகளோடு இணைத்தல், குளிர்பதன உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்குதல் ஆகிய செயல்கள் இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் மூலம் 58 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள்/பிரதான சந்தைகள், சந்தைகளுக்கு எடுத்துச்செல்லத் தேவையான போக்குவரத்து வசதிகள், சேமிப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. சிப்பம் கட்டும் அறை, குளிர்பதனக் கிடங்கு, கதிரியக்கக் கூடம், Individual Quick Freezing (IQF), தரம் பிரித்தல் மற்றும் சிப்பம் கட்டும் வசதிகள், சேமிப்புக் கிடங்குகள், மின்னணு ஏலமையம், கடைகள், பதப்படுத்தும் இயந்திரங்கள், வெந்நீர் / நீராவி சுத்திகரிப்பு வசதி (Hot water/Vapour Heat Treatment Plant), விவசாயிகள் பயிற்சி நிலையம், மற்றும் பல உட்கட்டமைப்பு வசதிகள் முதன்மை பதப்படுத்தும் நிலையம்/பிரதான சந்தைகளில் ஏற்படுத்தப்படும். முதன்மை பதப்படுத்தும் நிலையங்களுக்கு தோட்டக்கலை உற்பத்தி பொருட்களை தடையின்றி வழங்கவும், நீண்ட கால வருவாய்க்கும், இத்திட்டம் நீடித்து நிலைப்பதற்கும் உறுதி செய்ய தேவையான முன் மற்றும் பின் இணைப்புகள் வசதிகள் உருவாக்கப்படவுள்ளது.

2018-19ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தபடி இத்திட்டத்தின்கீழ் தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க, விவசாயக்குழுக்கள் மூலம் பண்ணை மேம்பாட்டு செயல்பாடுகளை ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தோட்டக்கலைத் துறையில் நடப்பில் உள்ள திட்டங்களின் நிதி மூலமாக மேற்காணும் பணிகள் செயல்படுத்தப்படும்.

பிரதான சந்தைகள் / முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வரும் 58 இடங்களில் 55 இடங்களுக்கு அறுவடைக்குப்பின் மேலாண்மை உட்கட்டமைப்பு வசதிகள் அமைப்பதற்கான பணி ஆணை வழங்கப்பட்டு 10 மாவட்டங்களிலும் கட்டுமானப்பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன.

விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தினை சிறந்த முறையில் கண்காணித்திட கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதி) தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்புக்குழுவும், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப்பணிகள் முடிவடைந்தவுடன் முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில் இயந்திரங்கள் / தளவாடங்கள் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இத்திட்டத்தினை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவும், மாநிலத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஆதரவான சேவையினைப் பெறவும் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு மற்றும் தமிழக அரசுக்கிடையே 04.11.2017 அன்று புதுடில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் கூடுதல் முதலீட்டினை ஈர்க்கவும், வேலைவாய்ப்பினை உருவாக்கவும், அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பினை தவிர்க்கவும் வழிவகை ஏற்படும்.

அக்மார்க் தரம்பிரிப்பு

அக்மார்க் என்பது இந்திய அரசால் வகுக்கப்பட்ட தரக் குறியீடுகளுக்கு உட்பட்ட வேளாண் பொருட்களுக்கு வழங்கப்படும் தரச்சான்றாகும். வேளாண் விளைபொருட்கள் (தரம் பிரித்தலும் குறியிடுதலும்) சட்டம் 1937-ஐ (1986-ல் திருத்தியமைக்கப்பட்டது) அடிப்படையாகக் கொண்டு இந்திய அரசு விற்பனை மற்றும் ஆய்வு இயக்குநரகத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தில் 222 பொருட்களுக்கு தரநிலைக் குறியீடுகள் வகுக்கப்பட்டுள்ளன. இது ஒரு தன்னார்வ திட்டமாகவே இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 30 மாநில அக்மார்க் ஆய்வகங்களும் ஒரு முதன்மை ஆய்வகமும் அரிசி, பருப்பு வகைகள், நெய், தேன், மசாலாப் பொடி வகைகள், முழு மசாலா வகைகள், ஜவ்வரிசி, உணவு எண்ணெய் வகைகள், கடலை மாவு, கூட்டுப்பெருங்காயம் உள்ளிட்ட உணவு பொருட்களை தரம் பிரிப்பு செய்ய செயல்பட்டு வருகின்றன. 2017-18ஆம் நிதியாண்டில் 19.68 இலட்சம் குவிண்டால் உணவுபொருட்கள் தரம்பிரிப்பு செய்யப்பட்டுள்ளன.

உழவர் சந்தைகள்

தமிழகத்தில், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு இடைத்தரகர்கள் குறுக்கீடின்றி நியாயமான விலை பெறவும், நுகர்வோருக்கு பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைவான விலையில் கிடைத்திடவும், 179 உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த உழவர் சந்தைகள் மூலம் விவசாயிகளுக்கு கடை வசதி, மின்னணு எடைத்தராசு, குடிநீர், சுகாதார வசதிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 27 உழவர் சந்தைகளில் தலா 2 மெ.டன் கொள்ளளவில் குளிர்பதன அறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உழவர் சந்தைகளில் தினசரி விலை நிலவரம் AMRS எனும் அலைபேசி செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. 2017-18ஆம் ஆண்டில் சராசரியாக நாளொன்றுக்கு ரூ.6.36 கோடி மதிப்பிலான 2016 மெ.டன் காய்கறி மற்றும் பழங்கள் 7,818 விவசாயிகளால் உழவர்சந்தைகளில் விற்கப்பட்டு 4.05 இலட்சம் நுகர்வோர் பயனடைந்துள்ளனர்.

சிறப்பு வணிக வளாகங்கள்

வேளாண் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க, மதிப்புக் கூட்டி விற்கத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளான உலர்களம், கிடங்கு, குளிர்பதன கிடங்குகள், தரம் பிரிக்கும் கூடங்கள் ஆகியன வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் ஆண்டுதோறும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர குளிர்பதனக் கிடங்கு, கிடங்கு, தரம்பிரித்து வகைப்படுத்தும் கூடம், உலர்கள் வசதியுடன் சிறப்பு வணிக வளாகங்கள் நெல், மஞ்சள், வெங்காயம், எலுமிச்சை, தேங்காய், இளநீர், மலைக்காய்கறிகள், தக்காளி, மலர்கள், மிளகாய், மா, திராட்சை, வாழை மற்றும் நறுமணப் பொருட்களுக்கு ரூ.83.50 கோடி மதிப்பில் பல்வேறு மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மின்னணு கற்றல் மையம் (e-Learning Centres)

அறுவடை பின்செய் மேலாண்மை மற்றும் சந்தை தொடர்பான தகவல்களை கண்காட்சி, ஒலிஒளி அமைப்பு, தொடுதிரை மூலம் விவசாயிகளுக்கு தெரியப்படுத்திடவும், நவீன வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக தொழில் நுட்பங்கள் பற்றிய குறும்படங்கள் அறியச் செய்திடவும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2016-17ஆம் ஆண்டில் முதற்கட்டமாக 10 மின்னணு கற்றல் மையங்கள் ரூ.7 கோடி மதிப்பில் 10 மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2017-18ஆம் ஆண்டில் ரூ. 7.34 கோடி மதிப்பில் 10 மின்னணு கற்றல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் / தளவாடங்கள்

இத்துறையின் மூலமாக தரம்பிரித்து, பதப்படுத்தி மற்றும் மதிப்பு கூட்டும் வசதிகளான மஞ்சள் விளைபொருளை மெருகேற்றும் இயந்திரம் மற்றும் கொதிகலன், மிளகாய் தரமதிப்பீடு சாதனம், முந்திரி உடைத்து பதப்படுத்தும் இயந்திரங்கள், பருத்தி தரசோதனை இயந்திரங்கள், நவீன தானிய சேமிப்பு குதிர்கள் முதலியன ரூ.8.62 கோடி மதிப்பில் 2016-17ஆம் ஆண்டில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

2017-18ஆம் ஆண்டில் தக்காளியில் அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பினைக் குறைத்து மதிப்புக் கூட்டுவதற்காக 5 நடமாடும் தக்காளி மதிப்புக்கூட்டும் இயந்திரம் ரூ.2 கோடி மதிப்பில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், தருமபுரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குளிர்பதன கிடங்குகள் (Cold Storage Units)

காய்கனிகளின் தரம் குறையாமல் சேமிப்புக் காலத்தை நீட்டித்து அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பினைக் குறைத்திட 111 குளிர்பதன கிடங்குகள் 13,555 மெ.டன் கொள்ளளவில் ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி குளிர்பதன கிடங்குகளை முழுமையாக பயன்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தவிர 27 உழவர் சந்தைகளில் 2 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விற்பனை முனையங்கள் (Terminal Market Complexes)

விற்பனை முனையங்கள் அச்சு மற்றும் ஆரம் அமைப்பில் செயல்படும். ஆரம் என்பது விவசாயிகள் உற்பத்தி செய்யும் இடங்களில் சேகரிப்பு மையங்களாக செயல்படும். அச்சு என்பது விற்பனை மற்றும் சேமிப்பிற்கு தேவையான தரம் பிரித்தல், சிப்பம் கட்டுதல், குளிர்பதன அறை, பழம் பழுக்கவைக்கும் அறை, தரக்கட்டுப்பாடு ஆய்வக வசதி, மின்னணு ஏல மையம் போன்ற அனைத்து நவீன உட்கட்டமைப்பு வசதிகள் கொண்டதாக ஏற்படுத்தப்படும்.

தனியார் முதலீட்டினை ஊக்குவித்து, தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டு சொந்தமாக இயக்கப்படும் வகையில் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் காய்கறி, பழங்கள் மற்றும் இதர விளைபொருட்களுக்காக தனியார் மற்றும் பொதுத்துறை பங்கேற்புடன் விற்பனை முனைய வளாகங்கள் அமைத்திட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை பகுதிகளில் விற்பனை முனையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

சென்னை பகுதிக்கான விற்பனை முனையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் தாலுக்கா, நாவலூர் கிராமத்தில் 35 ஏக்கர் பரப்பளவில் திருவாளர் யூ.ஆர்.சி. கன்ஸ்ட்ர க்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய கூட்டமைப்பு பங்கேற்பாளர்களால் அமைக்கப்பட்ட திருவாளர் உழவர் களஞ்சியம் லிமிடெட் என்ற சிறப்பு நோக்க அமைப்பின் மூலம் ரூ.135 கோடி திட்ட மதிப்பில் விற்பனை முனையம் உருவாக்கப்படவுள்ளது.

மதுரை பகுதிக்கான விற்பனை முனையம் ரூ.120.06 கோடி திட்ட மதிப்பில் அமைக்க மதுரை மாவட்டம், மேலூர் தாலுக்கா, முக்கம்பட்டி மற்றும் திருவாதவூர் கிராமங்களில் 50 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட திருவாளர் ஆர்.ஆர்.இண்டஸ்டிரீஸ் லிமிடெட் மற்றும் அதன் தொடர்புடைய கூட்டமைப்பு பங்கேற்பாளர்களால் திருவாளர் பூமி அக்ரி மார்க்கெட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற சிறப்பு நோக்க அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இயக்குதல், மேலாண்மை மற்றும் வளர்ச்சி ஒப்பந்தம் (Operation Management and Deveopment Agreement) கையெழுத்திடப்பட்ட பின்பு இவ்விற்பனை முனையங்களில் அறுவடை பின்செய் மேலாண்மை உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

உணவு பதப்படுத்துதல் தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை (Tamil Nadu Food Processing Policy)

தமிழகத்தில் 24,000 சிறு மற்றும் மிகச்சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1,300 நிறுவனங்கள் நடுத்தர மற்றும் பெரிய அளவிலான உணவு பதப்படுத்தும் நிறுவனங்களாகும். இது மொத்தமுள்ள உணவு பதப்படுத்தும் நிறுவனங்களில் 6 சதவீதம் ஆகும். மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைச்சகத்தின் மாதிரி உணவு பதப்படுத்தும் கொள்கைக்கு ஏற்ப தமிழகத்திற்கென தனியே உணவு பதப்படுத்தும் கொள்கையை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மிகப் பெரிய (Ultra) மற்றும் பெரிய அளவிலான (Mega) உணவுப் பூங்காக்கள்

தமிழக அரசு பின்வரும் 10 மாவட்டங்களில், விழுப்புரம் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவிலான உணவுப் பூங்காவினையும் (Ultra), சேலம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவிலான (Mega) மெகா உணவுப் பூங்காக்களும் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மிகப்பெரிய அளவிலான அல்ட்ரா உணவுப் பூங்கா மற்றும் பெரிய அளவிலான மெகா உணவுப் பூங்காக்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரித்திடும் பொறுப்பு நாப்கான்ஸ் (NABCONS) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின் அடிப்படையில், தொழில் முனைவோர் பொது மற்றும் தனியார் பங்களிப்பில் உணவுப் பூங்கா அமைப்பதற்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நீரா பானம்

தென்னையிலிருந்து பெறப்படும் நீரா எனும் பானம் அதிக ஊட்டச்சத்து, அதிக சுவை மற்றும் நறுமணத்துடன் இருப்பதால் தற்பொழுது மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. குளிரூட்டப்பட்ட நிலையில் 6 மாதங்கள் வரை பல்லடுக்கு கொள்கலன்களில் (Tetra pack) நீராபானத்தை பாதுகாக்கலாம்.

தென்னை விவசாயிகள் மதிப்புக் கூட்டுதலின் மூலம் தங்களின் விளைபொருளுக்கு உரிய ஆதாய விலை பெற்றிட ஏதுவாக தற்போதைய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டம் தளர்த்தப்பட்டு நீரா உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுதலுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் தகுதிவாய்ந்த விண்ணப்பங்களை மாவட்ட அளவில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் சம்மந்தப்பட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்து நீரா உரிமம் பெற அனுமதிக்கப்படுகிறது.

நீரா பானம் இறக்குவதற்கான தொழில்நுட்பத்தை இறுதி செய்ய ஆராய்ச்சி நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் அரசுத்துறையின் முக்கிய உறுப்பினர்களுடன் வழிகாட்டும் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு நீரா பானம் இறக்குவதில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும், ஒரு நிலையான முறையில் நீரா உற்பத்தியை முன்னெடுக்கவும் உதவும். உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகளுக்கு நீரா இறக்கிடவும், பதப்படுத்தி மதிப்புக் கூட்டிடவும் தகுந்த நிறுவனங்கள் மூலமாக திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீரா மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கு வரும் ஆண்டுகளில் சிறந்த சந்தை வாய்ப்புகள் உருவாகும். நீரா மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு, கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தென்னை விவசாயிகளுக்கு உரிய வருமானம் கிடைக்க உதவும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 01.06.2018 அன்று 3 தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நீரா பானம் உற்பத்தி செய்யவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யவும் உரிமங்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு

தமிழகத்தில் சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேவையான முன் பின் இணைப்புகளை ஏற்படுத்தி, சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தை முறைகளை கடைபிடிக்கச் செய்து சரியான தொடர்புகளை ஏற்படுத்தி செயல்படுவதே, தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பின் நோக்கமாகும். இவ்வமைப்பானது அரசு, தனியார், கூட்டுறவு சங்கங்கள், இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் / நிதி நிறுவனங்கள் ஆகியவற்றோடு இணைந்து செயல்படுகிறது. தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

உழவர் உற்பத்தியாளர் அமைப்பு

இத்திட்டத்தை செயல்படுத்திட, தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பே முகமை நிறுவனமாகும். இத்திட்டம் 3 ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்படும்.

திட்டக்குறிக்கோள்கள்:

 • கிராம் அளவில் விவசாயிகளை குழுக்களாக திரட்டி, சங்கங்களாக உருவாக்கி, பின்னர் அவர்களை பொது நோக்குடன் ஒன்றிணைத்து, குறிப்பிட்ட விளைபொருளுக்கான குழுக்களாக உருவாக்கி, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளாக்கி, வணிக ரீதியான பயிர் சுழற்சிகளை கடைபிடித்தல்.
 • உயரிய வேளாண் தொழில்நுட்பங்களை கடைபிடிக்கச் செய்வதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரித்து விவசாயிகளின் திறனை மேம்படுத்துதல்.
 • குழுக்களுக்கு இடையிலான போட்டியினை அதிகரித்து, தரமான இடுபொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்று, அதன் மூலம் உற்பத்தியை பெருக்கி பயனடைய வகை செய்தல்.
 • சரியான மற்றும் லாபகரமான சந்தைகளில் விற்பனை செய்ய உரிய வழி வகை செய்து, உற்பத்தியாளர் குழுக்களுக்கு சிறந்த விற்பனைக்கான வாய்ப்புகளை சந்தை ஒருங்கிணைப்பாளர் மூலம் ஏற்படுத்துதல்.

தமிழக அரசு 2017-18ஆம் ஆண்டில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் கூட்டுப்பண்ணையம் என்னும் புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகள் உழவர் ஆர்வலர் குழுக்களாகவும் (ஒரு உழவர் ஆர்வலர் குழுவிற்கு 20 விவசாயிகள்) பின்னர் அதனை இணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்களாகவும் (5 உழவர் ஆர்வலர் குழுக்கள் அல்லது 100 விவசாயிகளைக் கொண்டது ஒரு உழவர் உற்பத்தியாளர் குழு) வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையினரால் ஒருங்கிணைக்கப் படுகின்றனர். வேளாண்மை பொறியியல் துறை மூலமாக கூட்டுப்பண்ணையத்திற்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் கொள்முதல் செய்து வழங்கப்படுகிறது. பின்னர் இந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் விற்பனை செயல்பாடுகளை ஊக்குவித்திடும் பொருட்டு உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளாக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலமாக ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்

தமிழகத்தில் 66 உபவடிநிலப்பகுதிகளில் ரூ.125 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் 2017-18ஆம் ஆண்டு முதல் 2022-23ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட உள்ளது. 2018-19ஆம் ஆண்டில் வேளாண் வணிகத்தை ஊக்குவிக்க தனியாக அமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி கீழ்க்கண்ட திட்டங்கள் 18 உபவடிநிலப்பகுதிகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

1. 26 புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குதல்.

2. ஏற்கனவே உள்ள 10 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை தொழில் விரிவாக்கம் செய்ய உதவுதல்.

3. மூன்று ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை நவீனப்படுத்தி மின்னணுமயமாக்குதல்.

4. தேர்வு செய்யப்பட்ட 4 சேமிப்புக் கிடங்குகளில் கடன்பெற மின்னணு இரசீது வழங்கும் வசதி அறிமுகப்படுத்துதல்.

5. விளைபொருட்களில் மதிப்புக்கூட்டும் தொடரமைப்புக்கான பகுப்பாய்வு மற்றும் நேரடி வர்த்தகம் குறித்து ஆய்வு மேற்கொள்ளுதல்.

6. பொது மற்றும் தனியார் பங்களிப்பிற்கு உதவிடுதல்

7. விவசாயிகளுக்கு உதவிடும் வேளாண் தொழில் முனைவோரை ஊக்குவித்தல்.

மனிதவள மேலாண்மை

வேளாண் விற்பனை மற்றும் வணிகச் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும், வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சந்தை தகவல்களை விவசாயிகளிடம் களப்பணியாளர்கள் மூலம் கொண்டு சேர்த்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்திட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அரசாணை நிலை எண்.30, வேளாண்மைத் (வேநி1) துறை, நாள் 6.2.2018 மற்றும் அரசாணை நிலை எண். 96 வேளாளாண்மைத் (வேநி1) துறை, நாள் 02.04.2018ன்படி மறுசீரமைக்கப்பட்டது. தற்போது இத்துறை 1,307 துறை பணியாளர்கள் மற்றும் 1,637 விற்பனைக்குழு பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம்

அரசாணை எண்.2852, வேளாண்மைத் துறை, நாள்.24.10.1970ன்படி மாநில வேளாண்மை விற்பனை வாரியம் 1970ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனைச் (முறைப்படுத்துதல்) சட்டம் 1987-ன் படியும், அரசாணை எண். 299, வேளாண்மைத் (வே.வி.1) துறை, நாள் 13.06.1995ன்படியும் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம், சட்டப்படி அமைந்த வாரியமாக திருத்தி அமைக்கப்பட்டது. இவ்வாரியமானது அரசால் நியமிக்கப்பட்ட தலைவரின் கீழ் 29 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

நிதி ஆதாரம்

தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்திற்கு விற்பனைக் குழுக்களிலிருந்து பெறப்படும் மொத்த வருவாயில், 15 விழுக்காடு பங்குத் தொகையாக செலுத்தப்படுகிறது. இவ்வாறாகப் பெறப்படும் மொத்தத் தொகையில் 50 விழுக்காடு, வாரிய சந்தை மேம்பாட்டு நிதிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, சந்தை மேம்பாட்டு வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றது. மீதமுள்ள 50 விழுக்காடு தொகை நிர்வாக செலவினங்களுக்காக செலவிடப்படுகின்றது.

தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய செயல்பாடுகள்

விவசாயிகளுக்கான அறுவடை பின்செய் நேர்த்தி மற்றும் விஞ்ஞான சேமிப்பு தொழில்நுட்ப பயிற்சி

சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் விளம்பரம் மற்றும் பிரச்சாரப் பிரிவுகளின் மூலம் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியின் வாயிலாக அறுவடை பின்செய் நேர்த்தி, விஞ்ஞான முறைப்படி சேமிப்பு, மதிப்புக் கூட்டுதலின் முக்கியத்துவம், சந்தை நுண்ணறிவு மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பணியாளர்களுக்கான அறிவுத்திறன் பயிற்சி

சேலத்தில் உள்ள பயிற்சி மையம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை பணியாளர்கள் மற்றும் விவசாயிகளின் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிகளை அளித்து வருகிறது.

கட்டுமானப்பணிகள்

தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் பொறியியல் பிரிவின் மூலமாக வேளாண்மை விற்பனை உட்கட்டமைப்பு வசதிகளான சேமிப்புக் கிடங்குகள், பரிவர்த்தனை கூடங்கள், வணிக வளாகங்கள், குளிர்பதன வசதி மற்றும் உலர் களங்கள் போன்ற கட்டுமானப் பணிகள் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கிடங்கு உட்கட்டமைப்பு நிதி மற்றும் விற்பனைக்குழு நிதியின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை

நீர் ஆதாரங்களை பாதுகாத்து, நீர் பயன்பாட்டுத் திறனை ஊக்குவித்து, விவசாய பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கத்தோடு, தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை கடந்த 2002ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

கீழ்க்கண்ட இரண்டு நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் இம்முகமையின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

1. பிரதம மந்திரியின் விவசாய பாசனத் திட்டம் - நீர்வடிப்பகுதி மேம்பாடு - மற்றும் இதர உள்ளீடுகள்(துளிநீர் அதிக பயிர்).

2. நீர்வடிப்பகுதி மேம்பாட்டு நிதி (நபார்டு நிதி உதவியுடன்)

மேலும், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் கீழ்க்கண்ட திட்டங்களுக்கான நிதியை வழிப்படுத்தி கொண்டு செல்வதற்கான இணைப்பு முகமையாக (Nodal Agency) செயல்படுகிறது.

1. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் (NADP)

2. நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கம் (NMSA)

3. பிரதம மந்திரியின் விவசாய பாசனத் திட்டம் (PMKSY)

பிரதம மந்திரியின் விவசாய பாசனத் திட்டம் (PMKSY)

மத்திய அரசு 2015-16ஆம் ஆண்டில் பிரதம மந்திரி விவசாய பாசனத்திட்டம் என்ற புதிய ஒருங்கிணைந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

பிரதம மந்திரி விவசாய பாசன திட்டத்தின் நோக்கங்கள்:

 • புதிய நீராதார அமைப்பு, தூர்ந்த நீர்நிலைகள் பழுது பார்த்தல், புனரமைத்தல் மற்றும் புதுப்பித்தல், நீர் சேகரிப்பு கட்டுமானங்கள் அமைத்தல், துணை மற்றும் சிறிய நிலத்தடி நீர் அமைப்புகள் ஏற்படுத்துதல், கிராமங்களில் உள்ள நீர் நிலைகளின் தன்மையை மேம்படுத்துதல்.
 • நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில் உறுதியான மற்றும் பாதுகாப்பான பாசன கட்டுமான அமைப்பு ஏற்படுத்துதல்
 • மழை நீர் சேகரிப்பு மற்றும் வடிகால் தடுப்பு அமைப்புகள் அமைத்து விவசாயிகள் கிணறு மற்றும் குழாய்க்கிணறு மூலம் செறிவூட்டப்பட்ட நிலத்தடி நீரை உபயோகிக்க வழிவகை செய்தல்.

பிரதம மந்திரியின் விவசாய பாசனத் திட்டம் - நீர்வடிப்பகுதி மேம்பாடு (முந்தைய ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டம்)

ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டம், பிரதம மந்திரி விவசாய பாசனத்திட்டம் - நீர்வடிப்பகுதி மேம்பாடு என பெயர் மாற்றப்பட்டு ஏற்கனவே உள்ள பாசன மேம்பாட்டு திட்டங்களோடு ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் 24 மாவட்ட நீர்வடிப்பகுதி முகமைகள் மூலம் 26 மாவட்டங்களில் உள்ள 2,770 நீர்வடிப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான செலவினம் மத்திய மற்றும் மாநில அரசுகளால் முறையே 90:10 என்ற விகித அளவில் 2014-15ஆம் ஆண்டு வரை பகிர்ந்து கொள்ளப்பட்டது. இத்திட்டமானது 2015-16ஆம் ஆண்டு முதல், மத்திய மற்றும் மாநில அரசுகளால் முறையே 60:40 என்ற விகித அளவில் பகிர்ந்துகொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பின்வரும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரதம மந்திரியின் விவசாய பாசனத் திட்டம் - இதர உள்ளீடுகள் (துளி நீர் அதிக பயிர்)

இத்திட்டத்தின் நோக்கமானது, புதிய நீர்ப்பாசன யுக்திகள் மற்றும் நீர் சேமிப்பு தொடர்பான தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் மற்றும் நிலத்தடி நீர் படிவங்கள் செறிவூட்டுதலை ஊக்குவித்து, நீடித்த நீர் சேகரிப்பு அமைப்புக்கள் உருவாக்கி கூடுதல் நீர் ஆதாரங்கள் பெருக்கி சாகுபடி பரப்புகளை அதிகப்படுத்துவதே ஆகும். மேற்கண்ட திட்ட நோக்கங்கள் மூலம் நுண்ணீர்பாசனம் அமைத்தல் உறுதிப்படுத்தப்படும்.

நபார்டு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு நிதி திட்டம்

நீர்வடிப்பகுதி மேம்பாட்டு நிதி திட்டம் 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டமானது மாநில அரசு (50% கடன்) மற்றும் நபார்டு வங்கி (50% மானியம்) நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. பிரதம மந்திரியின் விவசாய பாசன திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஒத்த பணிகளே இத்திட்டத்தில் செயல்படுத்தப்படுகின்றன.

இதன் கீழ் மொத்தம், 168 திட்டங்கள் மாநில வழிகாட்டுக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டு அவற்றில் 63 நீர்வடிப்பகுதிகளில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு நபார்டு வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 105 நீர்வடிப்பகுதிகளில், 64 நீர்வடிப்பகுதிகள் நபார்டு வங்கி மூலமும், 41 நீர்வடிப்பகுதிகள் தமிழ் நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வடிகால் அமைப்பு பணிகள்

கல்தடுப்பு அமைப்புகள், நீர்சேகரிப்பு அமைப்புகள் சீரமைத்தல், பண்ணைக் குட்டைகள், குளங்கள் தூர்வாருதல், வாய்க்கால்கள் சரிசெய்தல் ஆகிய பணிகள், சுய உதவிக் குழுக்கள், நிலமற்றவர்கள் மற்றும் மகளிர்க்கு வருமானத்தை ஏற்படுத்தி தரும் பணிகள்.

தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை - இணைப்பு முகமை

தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் (NADP), நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கம் (NMSA), பிரதம மந்திரியின் விவசாய பாசனத் திட்டம் (PMKSY) போன்ற திட்டங்களுக்கான நிதியை வழிமுறைப்படுத்தி கொண்டு செல்வதற்கான இணைப்பு முகமையாக செயல்படுகிறது.

பணியமைப்பு

தமிழ் நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு பணிகளை செயல் படுத்த தொடங்கப்பட்டது. இம்முகமை, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலர் அவர்களை தலைவராகவும், வேளாண்மை இயக்குநர் அவர்களை துணைத் தலைவர் / மேலாண்மை இயக்குநராகவும் கொண்டு செயல்படுகிறது. மேலும், அன்றாட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை பணிகளை மேற்கொள்ள இந்திய ஆட்சிப்பணி நிலையில், செயல் இயக்குநர் அவர்களின் தலைமையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இம்முகமையில் பணிபுரியும் கீழ்கண்ட பணியாளர்கள் பல்வேறு துறைகளிலிருந்து அயற்பணி அடிப்படையிலும் / தனியார் நிறுவனம் / ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

வ. எண்

பதவி

பதவிகளின் எண்ணிக்கை

1

நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர்

1

2

இணை இயக்குநர் (சமூகவியலாளர்)

1

3

வேளாண்மை துணை இயக்குநர்

1

4

வேளாண்மை உதவி இயக்குநர்

1

5

உதவி செயற் பொறியாளர்

1

6

மேலாளர் (நிர்வாகம்)

1

7

வேளாண்மை அலுவலர்

2

8

கணக்கு அலுவலர்

1

9

உதவியாளர்கள்

9

10

மற்றவர்கள்

28

 

மொத்தம்

46

மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை

மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, 23 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரை பெருந்தலைவராகவும் மற்றும் வேளாண்மை இணை இயக்குநரை திட்ட அலுவலராகவும் நியமித்து செயல்பட்டு வருகிறது.

இம்முகமையில் பணிபுரியும் கீழ்கண்ட பணியாளர்கள் பல்வேறு துறைகளிலிருந்து அயற்பணி அடிப்படையிலும் / தனியார் நிறுவனம் / ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

வ. எண்

பதவி

பதவிகளின்

எண்ணிக்கை

1

வேளாண்மை துணை இயக்குநர் / நடவு வல்லுநர்

23

2

மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு பொறியாளர் (உ.பொ ./ உ.செ.பொ .)

23

3

வேளாண்மை உதவி இயக்குநர் / விரிவாக்க அலுவலர்

23

4

கணக்கு அலுவலர்

23

5

உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்

46

6

நீர்வடிப்பகுதி வளர்ச்சி உறுப்பினர்கள்

368

 

மொத்தம்

506

முடிவுரை

தமிழ்நாடு அரசு, வேளாண்மையை பிரதான இலாபகரமான தொழிலாக மாற்றியமைப்பதை இலக்காகக்கொண்டு பயிர்களின் உற்பத்தியினை அதிகரிக்கச் செய்யும் பல்வேறு உகந்த தொழில்நுட்ப உத்திகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

வேளாண்மையின் வெற்றியானது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் குறிப்பிட்ட அளவில் அளிக்கப்படும் நீர்ப்பாசனம் மற்றும் நீர் உபயோகிக்கும் திறன் ஆகியவற்றை பொறுத்தே அமைகிறது. எனவே தமிழ்நாடு அரசு, நுண்ணீர் பாசன திட்டத்தினை தீவிரமாக செயல்படுத்தி ஒவ்வொரு துளி நீரிலும் அதிக பயிர் சாகுபடி செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், அரசானது "கூட்டுப்பண்ணையம்" திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் விவசாயிகளுக்கு வேளாண்மையின் மீதான ஆர்வத்தை நிலைநிறுத்தச் செய்ததோடு, கூட்டாக நிலம் மற்றும் நீர் போன்ற இயற்கை வளங்களை உபயோகித்தல், இடுபொருள் செலவினத்தைக் குறைத்தல் மற்றும் விளைபொருட்களுக்கு ஏற்ற சிறந்த விலையினை நிர்ணயிக்க கூட்டு அணுகுமுறை முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தேசிய அளவில் முன்மாதிரி திட்டமாக தொகுப்பு அணுகுமுறை மூலம் மானாவாரி நிலங்களில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி போன்ற மானாவாரி பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்க "நீடித்த நிலையான மானாவாரி சாகுபடி திட்டம்" தமிழ் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் பாதிக்கப்படும் போது விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சிறப்பு தொகுப்பு திட்டங்களான குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம், சம்பா சாகுபடி தொகுப்பு திட்டம் மற்றும் பயறு வகைகளுக்கான தொகுப்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. மேலும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தென்னை மரங்களில் இருந்து நீரா உற்பத்தி செய்ய அனுமதியும் வழங்கியுள்ளது.

பருத்திக்கான இயக்க அணுகுமுறை மற்றும் மண்வள அட்டைப்படி உர பரிந்துரைகள், நீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டம், எதிர்பாராத பயிர் பாதிப்பு மற்றும் இழப்பினால் ஏற்படும் தாக்கத்திலிருந்து விவசாயிகளை பாதுகாத்திட இழப்பீட்டுத் தொகை வழங்கும் பயிர் காப்பீட்டுத் திட்டம், சீரான விதை விநியோகத் தொடருக்கான தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை; சுற்றுச் சூழலுக்கேற்ற நிலையான சாகுபடி முறைகள் பரிந்துரை, வெளிப்படையான உர விநியோகத்திற்கென விற்பனை முனையக் கருவி மூலம் உரவிநியோக முறை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களை விவசாயிகள் வெளிப்படையான முறையில் உடனுக்குடன் தெரிந்து கொண்டு பயன்பெற "உழவன் கைபேசி செயலி", வேளாண் விற்பனையில் விநியோகம் தொடர் மேலாண்மைத் திட்டம் மற்றும் மின்னணு பரிவர்த்தனை முறை, பன்முகத்தன்மை கொண்ட வேளாண் வளர்ச்சிக்கான விவசாயிகள் குழு சார்ந்த ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கத் திட்டம் போன்ற தமிழ்நாடு அரசின் பல்வேறு சீரிய முயற்சிகளால் வேளாண்மையில் ஒரு புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளின் எதிர்கால முன்னேற்றத்தினை கருத்தில் கொண்டு செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசின் சிறப்பான வேளாண் மேம்பாட்டுத்திட்டங்கள், தமிழக விவசாயிகளின் வாழ்வில் வளம் அடையச் செய்யும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை

2.93333333333
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
பூபதி Aug 03, 2020 11:07 AM

ஐயா ,எங்கள் பகுதியில் விளைச்சளுக்கு தகுந்த பணம் இல்லை இங்க உள்ள இடைத்தகர்கள் அவர்களை விலை நிர்ணயித்து கொள்கின்றன விவசாய்களுக்கு லபம் தரும்பாடி இல்லை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top