பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண்மைத் துறை 2018 - 19

வேளாண்மைத் துறை 2018 - 19 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை"

(திருக்குறள்:1031)

(பொருள்: உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த்தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத்தொழிலே சிறந்தது.)

வேளாண்மை ஒவ்வொரு விவசாயியின் வாழ்வாதாரமாகவும் தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான முதுகெலும்பாகவும் விளங்குகிறது. இதைப்போன்றே நாட்டின் பொருளாதாரம் விவசாயத்தை மையமாக வைத்தே அமைந்துள்ளது. இதனால், விவசாயத்துறையில் ஏற்படும் சிறுபின்னடைவு கூட ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை சார்ந்திருக்கும் பெருவாரியான மக்கள் தொகையும், மாநில வருவாயில் குறிப்பிடத்தக்க அளவிலான விவசாயத்தின் பங்கும் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இதன் தாக்கமானது மாநில முன்னேற்றத்தில் ஏதேனும் சாதகம் அல்லது பாதகம் ஏற்படின், அது விவசாயத்துறையின் செயல்திறனோடு இணைத்து ஒப்பிட்டுப்பார்க்கப்படுகிறது. எனவே துரித வேளாண் வளர்ச்சியானது வறுமை நிலையினை போக்கிடவும் ஒட்டு மொத்த பொருளாதார மேம்பாட்டிற்கான திறவுகோலாகவும் அமைகிறது.

விவசாயிகளின் நலனை பிரதானமாகக் கொண்ட வேளாண் மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தும் கிராமப்புற மக்களுக்கு அவர்களின் வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகளை, உருவாக்கி பெருக்குவதால் சமச்சீரான வளர்ச்சி என்பது நடைமுறையில் சாத்தியமாகியுள்ளது. எனவே, வறுமை நிலையைப் போக்கிடவும் நீடித்த நிலையான முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் கொள்கைகளிலும் வேளாண்மைக்கு முக்கியப்பங்கு உள்ளது. கிராமப்புறங்களில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு குறிப்பாக சந்தைத் தேவையைப் பொறுத்து உற்பத்தியை இருமடங்காக்குவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய உத்திகளை உருவாக்கி செயல்படுத்தி வருவதோடு மேம்பட்ட சாகுபடி முறைகளை ஊக்குவிக்க பயிர் சார்ந்த முன்னோடித் திட்டங்களான சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான கூட்டுப் பண்ணைய அணுகுமுறை; ஒருங்கிணைந்த அணுகுமுறையில் மண்வள மேம்பாடு; நீர்வள பாதுகாப்பு முறைகளைக் கையாளுதல்; பண்ணை இயந்திரமயமாக்குதலை ஊக்குவித்தல்; தகவல் தொழில்நுட்பங்களின் மூலம் விவசாய சம்பந்தமான சேவைகளை அளித்தல், அறுவடைக்குப் பின் விளைபொருட்களை திறம்பட கையாளுதல் மற்றும் வேளாண் சந்தைகளை மின்னணு தேசிய வேளாண் சந்தை (eNAM) மூலமாக இணைத்தல் ஆகிய அணுகுமுறைகளை பயிர் சாகுபடியில் செயல்படுத்தி வருகிறது.

பொருளாதாரத்தில் வேளாண்மை ஒரு சிறப்பான நிலையினை வகித்தாலும், வேளாண் செயல்பாடுகளில் ஏற்படும் பல்வேறு சவால்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கான முயற்சிகளை எடுத்து வருவதோடு நீடித்த நிலையான விவசாயத்திற்கு வழிவகை செய்துவருகிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாகுபடி பரப்பு விரிவாக்கத்தில் உள்ள சிரமங்கள், முக்கிய இடுபொருட்களின் விலையேற்றம், பருவநிலை வேறுபாடுகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், குறுகி வரும் உற்பத்தி வளங்கள், பண்ணை பணியாளர்கள் பற்றாக்குறை, நிலையற்ற சந்தை நிலவரங்கள், ஆகியவற்றால் வரும் காலங்களில் உணவு தானிய உற்பத்தியானது, பெரும் சவாலாகவே இருக்கும். தமிழ்நாடு அரசு இவ்விடர்பாடுகளை எதிர்கொண்டு இலட்சிய இலக்கை அடைவதற்காக பயிர், பருவம், மண், காலநிலை, பண்ணை வாரியாக வேளாண்மையை மையப்படுத்தும் அணுகுமுறைகளை உருவாக்கி, வேளாண்மையை காலநிலைக்கேற்ப மாறுதலுக்கு உட்படுத்தி, உணவு மற்றும் மேம்பட்ட ஊட்டச்சத்து பாதுகாப்பினை அடைய முயற்சிகளை எடுத்து வருகிறது.

சமீபகாலமாக தமிழ்நாட்டில் இரண்டாம் பசுமைப் புரட்சியின் நோக்கம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு உதவும் வகையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விரிவான கொள்கைகளை உள்ளடக்கிய, விவசாயிகளுக்கு உகந்த பல உத்திகளை உருவாக்கி பயிர் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்துதல், உபயோகிப்பாளர்களுக்கு தேவையான பயிர்களை கூட்டுமுறையில் சாகுபடி செய்தல், பயிர் உற்பத்தியில் குறிப்பிட்ட தொழில் நுட்பங்களை புகுத்துதல், மண்வளத்திற்கு ஏற்ற உரநிர்வாகம் மற்றும் உரப்பரிந்துரை, தண்ணீரை சேமிக்க நுண்ணீர் பாசனம், திருந்திய நெல் சாகுபடி, பருவகால மாற்றத்திற்கு ஏற்ற பயிர் சாகுபடிமுறை தேர்வு, இடுபொருள் செலவினை குறைத்து வியாபார நோக்கத்துடன் பயிர் உற்பத்தி செய்தல், வேளாண் இயந்திரமயமாக்கல் மூலம் சாகுபடிக்கான நேரம் மற்றும் செலவினை குறைத்தல், தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைக் கொண்டு புதிய சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி, திறன் மேம்படுத்துதல், சிறந்த சந்தைத் தொடரினை உருவாக்குதல், பரந்த அளவில் விரிவாக்க சேவையினை பலப்படுத்தி பெருமளவில் உற்பத்தித் திறனை அதிகரிக்க தொழில்நுட்பங்கள் மற்றும் அதற்கேற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியினை அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் விளைவாக தமிழ்நாடு வேளாண் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை அடைந்தது மட்டுமல்லாமல், 2011-12ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் பசுமைப் புரட்சியின் வாயிலாக உணவுதானிய உற்பத்தியில் இருமடங்கு சாதனை அடைந்துள்ளது. உற்பத்தித்திறன் மற்றும் சாகுபடி பரப்பினை அதிகரிக்க உருவாக்கப்பட்ட புதிய சாகுபடி தொழில்நுட்பங்கள் வேளாண் உற்பத்தியில் உள்ள இடைவெளியினைக் குறைத்து, தமிழ்நாடு 2011- 12, 2013-14, 2014-15 மற்றும் 2015-16 ஆகிய வருடங்களில் 100 இலட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமாக உணவு தானியஉற்பத்தியில் சாதனை செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு வேளாண்மையில் அறிமுகப்படுத்தி முனைந்து செயல்படுத்திய முன்னோடி தொழில்நுட்பங்கள், தரமான விதைகள், உயிர் உரங்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு அணுகுமுறைகளால் 2011-12ஆம் ஆண்டு மொத்த உணவு தானிய உற்பத்தி 101.52 இலட்சம் மெட்ரிக் டன் என்ற அளவினை அடைந்ததற்காக மத்திய அரசால் "கிரிஷி கர்மான் விருது" வழங்கப்பட்டது.

மேலும், உணவு தானிய உற்பத்தியில் 100 இலட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமாக அடைந்த நிலையிலும், பயறு வகை உற்பத்தியில் தனிக்கவனம் செலுத்தி 6,14 இலட்சம் மெட்ரிக் டன் பயறு வகை உற்பத்தி அடைந்ததற்காக 2013-14ஆம் ஆண்டிலும், சிறுதானியங்கள் உற்பத்தியில் 40.79 இலட்சம் மெட்ரிக் டன் அடைந்ததற்காக 2014-15ஆம் ஆண்டிலும் கிரிஷி கர்மான் விருது" மத்திய அரசால் தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டது. உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக தொடர்ந்து தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய திட்டங்களை வகுத்து செயல்படுத்தி விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வந்ததற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், 2015-16ஆம் ஆண்டில் மொத்த உணவு தானிய உற்பத்தி 113.85 இலட்சம் மெட்ரிக் டன் அடைந்ததற்காக தமிழ்நாடு அரசை பாராட்டும் விதமாக மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் "கிரிஷி கர்மான் விருது' 17.03.2018 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசின் "கிரிஷி கர்மான் விருதினை" நான்குமுறை பெற்ற பெருமைக்குரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

மேலும் "அக்ரிகல்சர் டுடே" என்னும் முன்னணி பத்திரிக்கையின் 2013ஆம் ஆண்டிற்கான "மாநில வேளாண்மை தலைமை விருது', 2015ஆம் ஆண்டிற்கான "உணவு உற்பத்தித் திட்ட தலைமை விருது", 2016ஆம் ஆண்டிற்கான "உலக அளவிலான வேளாண்மை தலைமை விருதையும் தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. "இந்தியா டுடே" என்னும் புகழ் பெற்ற பத்திரிக்கை 'வேளாண்மையில் சிறந்த பெரிய மாநிலத்திற்கான விருதை" 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசிற்கு வழங்கியது.

வேளாண்மையில் சிறந்த மின் ஆளுமைக்கான தேசிய தங்க விருதையும்" 2014-15ஆம் ஆண்டில் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. திட்டங்களை திறம்பட செயல்படுத்தியதற்கும், வேளாண் சேவைகளை சிறப்பான முறையில் வழங்கியதற்கும் வேளாண்மையில் மின்-ஆளுமை பிரிவின் கீழ், “விரிவான இடுபொருள் விநியோக மேலாண்மைத் திட்டத்திற்காக', 2016ஆம் ஆண்டில் தேசிய அளவிலான "ஸ்காட்ச் பிளாட்டினம் விருதும் தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டது.

மேலும், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை 2016-17ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக, 71வது சுதந்திர தினத்தன்று (15.08.2017) வேளாண்மைத் துறைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறந்த செயல்பாட்டிற்கான (Best Practices Award) விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.

துறையின் தோற்றம்

கடந்த 1880ஆம் ஆண்டு, இந்தியாவில் பஞ்சம் நிலவியபோது அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி, 1882ஆம் ஆண்டு வேளாண்மைக்கென ஒரு தனி துறை உருவாக்கப்பட்டது. வேளாண்மை இயக்குநரைத் தலைவராகக் கொண்டு தேவையான பணியாளர்களுடன் வேளாண்துறை தனித்து இயங்கும் வகையில், 1904ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. 1905ஆம் ஆண்டு பொதுக்கல்வித் துறையில் இருந்த வேளாண்மைக் கல்லூரியானது, வேளாண்மைத் துறையில் சேர்க்கப்பட்டு இன்று பல்கலைக்கழகமாகத் திகழ்கின்றது. மாநிலம், மாவட்டங்கள், வட்டங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

தமிழ் நாட்டில் வேளாண்மை

புவியியல் கோட்பாட்டின்படி, தமிழ்நாடு 8°5' மற்றும் 13°35 வட அட்சரேகை, 76°15 மற்றும் 80°20' கிழக்கு தீரக்கரேகைக்கு இடைப்பட்ட நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இத்தகைய பூலோக அமைப்பால் மித வறட்சி முதல் உலர் ஈரப்பதமான காலநிலையைப் பெற்று, நீர்ப்பாசனத்தின் மூலம் பயிரிடப்படும் வேளாண் பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க ஏதுவாக அமைகிறது.

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும், 1,076 கிமீ நீளமுள்ள கடற்கரையையும் கொண்டுள்ள தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பளவு 130.33 இலட்சம் எக்டர் ஆகும். இது நிலப்பரப்பு அடிப்படையில் பதினோராவது பெரிய மாநிலம் ஆகும். தமிழ்நாடு, தேசிய அளவில், மக்கள் தொகையில் சுமார் 6 சதவீதத்தைக் கொண்டு 7வது அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலமாக விளங்குகிறது. எனினும், நாட்டின் நீர்வள ஆதாரங்களில் 3 சதவீதத்தை மட்டுமே கொண்டு நீர்ப்பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு பாசனத்திற்கான நீர் கிடைக்கப் பெறுவதில் அதிக இடர்பாடுகள் ஏற்படுவதுடன் பல்வேறு பருவ மாறுதல்களால் பாதிக்கப்படுவதாலும், வேளாண்மையில் ஒரு நிச்சயமற்ற நிலை உருவாகிறது.

சமீபத்திய புள்ளியியல் அறிக்கையின்படி (2016-17), தமிழ்நாட்டின் நிலப்பயன்பட்டு விவரம் பின்வருமாறு:

அட்டவணை 1: நிலப்பயன்பாடு

வ. எண்

விவரம்

பரப்பு (இலட்சம் எக்டர்)

மொத்த நிலப்பரப்பிற்கு

1

காடுகள்

21.57

16.55

2

நிகர சாகுபடி பரப்பு

43.47

33.35

3

இதர மரப்பயிர்கள் சாகுபடி நிலங்கள்

2.32

1.78

4

நிரந்தர மேய்ச்சல் நிலங்கள்

1.08

0.83

5

நடப்பு தரிசு நிலங்கள்

13.61

10.44

6

இதர தரிசு நிலங்கள்

18.47

14.17

7

பயிரிடுவதற்கேற்ற தரிசு நிலங்கள்

3.23

2.48

8

வேளாண்மை தவிர இதர உபயோகத்திலுள்ள நிலங்கள்

22.01

16.89

9

சாகுபடிக்கு இலாயக்கற்ற நிலங்கள்

4.58

3.51

 

மொத்த நிலப்பரப்பு

130.33

100.00

 

பயிரிடுதிறன்(%)

118

 

மொத்த பயிரிடும் பரப்பு (51.29 இலட்சம் எக்டர்) மற்றும் ஒருமுறைக்கு மேல் சாகுபடி செய்யப்பட்ட பரப்பு 7.82 இலட்சம் எக்டரி-க்குள்ள வேறுபாடு

2010-11ஆம் ஆண்டு வேளாண்மை கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டில், 64.88 இலட்சம் எக்டர் நிலங்களை 81.18 இலட்சம் நில உடைமைதாரர்கள் உபயோகிக்கின்றனர். மொத்த நிலவுடைமைதாரர்களில் 92 சதவீதமுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளால் மொத்த சாகுபடி பரப்பளவில் 61 சதவீதப்பரப்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சராசரி நில உடைமையான 0.80 எக்டர் என்பது, நாட்டின் சராசரி நில உடைமையை (1.15 எக்டர்) விட குறைவாகும்.

தமிழ் நாட்டின் ஆண்டு சராசரி மழையளவான 921 மில்லி மீட்டர் நாட்டின் சராசரி மழையளவான 1,200 மில்லி மீட்டரை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. குளிர்காலம் (ஜனவரி-பிப்ரவரி), கோடை காலம் (மார்ச்-மே), தென்மேற்கு பருவகாலம் (ஜூன்-செப்டம்பர்) மற்றும் வடகிழக்கு (அக்டோபர்-டிசம்பர்) பருவகாலங்களில் பெறப்படும் மழையளவானது முறையே 3%, 14%, 35%, மற்றும் 48% ஆகும். மாநிலத்தில் தனிநபருக்கு கிடைக்கும் ஆண்டு சராசரி நீர் அளவு 750 கன மீட்டர். இது அகில இந்திய அளவான 2,200 கன மீட்டருடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.

தமிழ் நாட்டின் பல்வேறு பாசன நீர் ஆதாரங்கள் மூலம் பயன்பெறும் நிகர பாசனப்பரப்பளவு விபரம் (2016-17) பின்வருமாறு.

அட்டவணை 2: நீர் ஆதாரங்கள் வாரியான நிகர பாசனப் பரப்பு

ஆதாரம்

எண்ணிக்கை (எண்கள்)

நிகரபாசன பரப்பு (இலட்சம் எக்டர்)

நிகர பாசன பரப்பில் சதவீதம்

வாய்க்கால்

2,239

5.27

22.10

ஏரிகள்

41,127

3.02

12.66

கிணறுகள்

18,72,088

15.54

65.16

இதர பாசன ஆதாரங்கள்

0.02

0.08

மொத்தம்

23.85

100.00

தமிழ் நாட்டின் நிகர பாசனப் பரப்பில் 65 சதவீதம் கிணறுகள் மூலமாகவும், 22 சதவீதம் வாய்க்கால்கள் மூலமாகவும், 13 சதவீதம் ஏரிகள் மூலமாகவும் நீர்ப்பாசனம் கிடைக்கிறது. மொத்த இறவை சாகுபடிப்பரப்பான 28.45 இலட்சம் எக்டரில் 77 சதவீத பரப்பளவில் உணவுப் பயிர்களும், 23 சதவீத பரப்பளவில் உணவல்லாத இதர பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த முக்கிய பயிர்களில் சாகுபடி பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கோடு 2017:18ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட சிறந்த மற்றும் புதிய வேளாண் தொழில்நுட்ப உத்திகள் சிறந்த மற்றும் புதிய வேளாண் தொழில் நுட்ப உத்திகள் வாயிலாக அனைத்து பயிர்களின் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை உயர்த்துவதில் தமிழ்நாடு மாநிலமானது, மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. மேலும், நீர் உபயோகிப்புத்திறனை உயர்த்துதல், சமச்சீர் உரமிடல் முறையை கையாளுதல், இரசாயன பூச்சிக் கொல்லிகள் உபயோகத்தை குறைத்து, சுற்றுச் சூழலுக்கு உகந்த, உயிரி பூச்சிக்கொல்லிகள் மற்றும் உயிரி கட்டுப்பாட்டு காரணிகளின் உபயோகத்தை அதிகப்படுத்துதல், வேளாண் விளை பொருட்களில் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டும் தொழில் நுட்பங்களை ஊக்கப்படுத்துதல் மற்றும் உற்பத்தி செலவை குறைத்தல் ஆகியவற்றின் மூலமாக விவசாயிகள் இலாபகரமான விலை பெறவும் சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் தமிழ்நாடு அரசானது உறுதியுடன் செயல்பட்டுவருகிறது.

இதனை நடைமுறைப்படுத்தும் விதமாக, இடுபொருட்களின் விலையை குறைக்கவும், உகந்த தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து உற்பத்தியை அதிகரிக்கவும், அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை உறுதி செய்யவும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய சந்தைகள் வாயிலாக இலாபகரமான விலையை உறுதி செய்யவும், பின்வரும் தொழில்நுட்ப உத்திகள் 2017-18ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டன.

* டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கத்துடன், நிலத்தடி நீரினை பயன்படுத்தி குறுவை சாகுபடியினை மேற்கொள்வதை ஊக்குவிக்க, குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் 2017, ரூ.56.92 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஆறு டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தினால் டெல்டா மாவட்டங்களில், நெல் மற்றும் பயறுவகை பயிர்கள் 3.43 இலட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு 1,64,215விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

* சம்பா தொகுப்புத்திட்டம் 2017, ரூ41:15 கோடி நிதி ஒதுக்கீட்டில் எட்டு டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் பாசனநீர் மற்றும் பணியாட்களின் தேவையினை குறைத்து, பயிர் சாகுபடியினை உறுதி செய்யும் சிறப்பம்சங்களை கொண்ட நேரடி நெல் விதைப்பு முறை விவசாயிகளிடையே பிரபலப்படுத்தப்பட்டது. இதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவத்தில் 10,707 இலட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது, இது இயல்பு பரப்பை விட 15 சதவீதம் அதிகமாகும். இத்திட்டத்தின் கீழ் 2,52,407 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

* வேளாண் பெருமக்களின் நலனுக்காக ஒன்பது முக்கிய வேளாண் சேவைகளை உள்ளடக்கிய "உழவன்" என்ற கைபேசி செயலி இருமொழிகளில் தமிழ், ஆங்கிலம்) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 05.04.2018 அன்று துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

* தமிழ்நாட்டில், மானாவாரி விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம்" என்ற திட்டம் 25 இலட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில், 1,000 தொகுப்புகள் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக ஐந்து லட்சம் ஏக்கர் உள்ளடக்கிய 200 மானாவாரித் தொகுப்புகள் உருவாக்கப்பட்டு, அவற்றில் 876 மானாவாரி விவசாயிகள் மேம்பாட்டுக் குழுக்களும், 311 மழைநீர் சேகரிப்பு அமைப்புகளும், 50 மதிப்புக்கூட்டு இயந்திரங்களும், 200 வேளாண் இயந்திர வாடகை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதோடு 2.11 இலட்சம் மானாவாரி விவசாயிகளுக்கு உழவு மானியம், விதை மற்றும் இதர இடுபொருட்களுக்கான மானியங்களும், கால்நடை நல மேம்பாட்டுப்பணிகள் மற்றும் இரண்டாம் கட்ட 400 தொகுப்புகள் உருவாக்கப்பட்டு அவற்றில் 1,541 மானாவாரி விவசாய மேம்பாட்டுக் குழுக்களும், 1,55 இலட்சம் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.153.67 கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் தமிழ்நாட்டில், கடந்த 2016-17ஆம் ஆண்டை விட 2017-18ஆம் ஆண்டில் சிறுதானியங்களில் சாகுபடி பரப்பளவு 22 சதவீதமும், பயறுவகைகளில் 18 சதவீதமும் எண்ணெய் வித்துக்களில் 16.2சதவீதமும் அதிகரித்துள்ளது.

* சிறு மற்றும் குறு விவசாயிகளை குழுக்களாக ஒருங்கிணைத்து, குழுவாக விவசாயம் செய்து அதன்மூலம் வருமானத்தை அதிகரிப்பதற்காக “கூட்டுப்பண்ணையம்" என்ற புரட்சிகர திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய தொழில்நுட்பங்களை கடைபிடித்து செயல் படுவதற்காகவும், பயனுள்ள வகையில் சந்தை இணைப்புகளை ஏற்படுத்தவும், கடன் பெறவும் இத்திட்டம் உதவுகிறது. 2017-18ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ. 100 கோடி நிதியினை பயன்படுத்தி 1,988 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் 8,721 பண்ணை இயந்திரங்களை ரூ.99.40 கோடி செலவில் வாங்கி உள்ளனர். இதன்மூலம் 1,98,800 சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனடைந்தனர்.

* தமிழ்நாடு அரசு, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் "ஒகி புயலால்" 6,624 எக்டரில் பாதிக்கப்பட்ட 32,959 விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, இடுபொருள் மானியமாக ரூ.10.99 கோடி ஒப்பளிப்பு செய்து வழங்கப்பட்டது. மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு வாழ்வாதாரத் தொகுப்பு திட்டம் ரூ42.06 கோடியில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

* தமிழ்நாடு அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக 2016-17ஆம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மிக அதிக அளவில் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கி அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இதுவரை, 10.78 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.3,274 கோடி இழப்பீட்டுத் தொகை ஒப்பளிப்பு செய்யப்பட்டு ரூ. 3,137 கோடி 10.29 இலட்சம் விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

* பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், துளி நீரில் அதிக பயிர் என்ற உட்பிரிவில் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் மட்டுமே, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. 2017-18ஆம் ஆண்டில், நுண்ணீ ர் பாசனத்திட்டம் 3,01,661 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட ரூ692.26 கோடி நிதி ஒப்பளிக்கப்பட்டது. விவசாயிகளின் நலன் கருதி நுண்ணீர் பாசன கருவிகளின் மீதான 12 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியினை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொண்டு விவசாயிகளின் நிதிச்சுமையை குறைத்துள்ளது.

* கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.4 கோடி நிதியில் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் ரூ.8,80 கோடி நிதியில் கொய்மலர்களுக்கான மகத்துவமையம் நிறுவப்பட்டுள்ளது. மேலும், வெங்காய பயிரில் பரப்பு விரிவாக்கம் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைக்க ரூ.5 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

* பயிர்களில் மகரந்தச் சேர்க்கையை மேம்படுத்துவதற்காக, விவசாயிகளுக்கு 1.18 இலட்சம் எண்கள் தேனீ வளர்ப்புக்கான உபகரணங்களும் 3.165 இலட்சம் சதுர மீட்டர் பசுமை குடில் நிறுவுவதற்கு மானியமும் வழங்கப்பட்டுள்ளது.

* தென்னையிலிருந்து நீரா பானத்தை இறக்குவதற்கும், மதிப்புக்கூட்டிடவும் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் திருத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் நீரா இறக்குவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து உரிமம் பெற்றுக்கொள்ளலாம்

* மின்னணு பரிவர்த்தனை முறையினை மேற்கொள்வதற்கு வசதியாக 23 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் (eNAM) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மின்னணு பரிவர்த்தனையில் 65,228 விவசாயிகளும் 1,333 வியாபாரிகளும் கலந்துகொண்டு ரூ.24.38 கோடி மதிப்பிலான 1,77 இலட்சம் குவிண்டால் வேளாண் விளைபொருட்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளன.

* விரைவில் அழுகும் தன்மை கொண்ட விளைபொருட்களை பாதுகாத்து விவசாயிகள் நல்ல விலை பெற்றிட தமிழ்நாடு அரசு, 10 மாவட்டங்களில் காய்கறி, பழங்கள் மற்றும் விரைவில் அழுகும் பொருட்களுக்கான விநியோக தொடர் மேலாண்மைத் திட்டத்தினை ரூ.398.75 கோடி மதிப்பில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் விளைபொருட்களை சேகரித்திட 487 சேகரிப்பு மையங்கள், பதப்படுத்திட 58 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் / முதன்மைச் சந்தைகள், விற்பனை முனையங்களுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து மற்றும் சேமிப்பு வசதியுடன் 34 ஒருங்கிணைந்த குளிர்பதனத் தொடரமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

* பண்ணைப்பணிகளை குறித்த காலத்தில் மேற்கொண்டு, வேளாண் பணிகளில் உள்ள வேலைப்பளுவினை குறைத்து, ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தில் வேளாண் உற்பத்தியை அதிகரித்திடுவதற்கு வேளாண்மை இயந்திரமயமாக்குதல் உதவுகிறது. தமிழ்நாடு அரசு வேளாண்மையில் இயந்திர மயமாக்குதலை ஊக்கப்படுத்தும் விதமாக, ரூ.41.59 கோடி மானிய உதவியில் விவசாயிகளுக்கு 6,641 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கியுள்ளது. மேலும், ரூ.69,18 கோடி மானியத்தில் 738 வேளாண் இயந்திரவாடகை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண்மையில் சூரிய சக்தியின் பயன்பாட்டினை விவசாயிகளிடையே ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு அரசு 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தியில் இயங்கும் 10 குதிரைத்திறன் வரை உள்ள 1,000 பம்புசெட்டுகள் ரூ.49.90 கோடி மானியத்தில் வழங்கியுள்ளது. மேலும், ரூ.73.80 இலட்சம் மானியத்தில், வேளாண் விளைபொருட்களை பதப்படுத்தி, மதிப்புக்கூட்டும் பணிக்கென 49 பசுமைக்குடில் வகையிலான சூரிய கூடார உலர்த்திகள் நிறுவப்பட்டுள்ளன.

* வளம் குன்றிய நிலங்களை சீர்படுத்துதல் திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டத்தில், மண்ணின் வளம் மற்றும் விளைச்சலை அதிகரிக்கும் நோக்கத்தில் பகுதி சார்ந்த நிலச்சீர்படுத்தும் பணிகள் ரூ.5.09 கோடி செலவில் 892 எக்டரில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* நீர்ப்பாசன வசதிக்காக, மழைநீர் சேகரிப்பு கட்டுமானங்களை மேம்படுத்துவதற்காக, ரூ21.41 கோடி செலவில் 629 நீர் சேகரிப்பு கட்டுமானங்களும், ரூ4.19 கோடி செலவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 840 பண்ணைக் குட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில், சித்தாறு உபவடி நிலப்பகுதிகளில், நீர்பாசன கட்டமைப்பு புனரமைத்தல் திட்டத்தின் கீழ் 1,118 எக்டர் நிலப்பரப்பில் பண்ணை மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் நோக்கோடு, நிலத்தடி நீர் ஆதாரங்களை பெருக்கி நீர்சேமிப்பு முறைகளைக் கடைபிடித்து கூடுதல் பாசன வசதி ஏற்படுத்த அனைத்து மாவட்ட நீர்வடிப்பகுதி முகமைகளுக்கும் தமிழ்நாடு அரசு ரூ.220 கோடி விடுவித்துள்ளது.

ஆதாரம் - வேளாண்மைத் துறை - தமிழ்நாடு அரசு

2.16666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top