பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டம்

பன்னாட்டு வேளாண் வளர்ச்சி நிதியத்தின் உதவியுடன் கூடிய சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

தமிழ்நாட்டின் 13 கடலோர மாவட்டங்களை 26 டிசம்பர் 2004 ஆம் ஆண்டு எதிர்பாராதவிதமாக தாக்கிய ஆழிப்பேரலையால் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள், கால்நடைகள், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், மின் விநியோகம், வீடுகள் மற்றும் குடிநீர் இணைப்புகளும் பெரிதும் சேதமாகி செயலற்றுப் போயின. மக்களின் நல் வாழ்வையே தனது கடமையாகக் கருதும் மாநில அரசால், பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு விரைவான துயர் துடைப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடலோர சமுதாய மக்களின் நிலைத்த வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அரசின் உன்னத மற்றும் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், பன்னாட்டு வேளாண் வளர்ச்சி நிதியத்தின் உதவியுடன் சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டம் துவங்கப்பட்டது.

முக்கிய உட்கூறுகள்

  1. கடலோர வள ஆதார மேலாண்மை,
  2. ஊரக நிதி மற்றும் இடர்பாடு நீக்கும் நடவடிக்கைகள்,
  3. வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் தொழில் திறன் பயிற்சி போன்றவைகள் ஆகும்.

திட்டப் பகுதிகள்

இத்திட்டம், 2007 - 08 ஆண்டில் முதற் கட்டமாக ஆறு கடலோர மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்டு தற்போது, தமிழ்நாட்டில், சென்னை தவிர ஆறு கடலோர மாவட்டங்களுக்கும் 2016-17 லிருந்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

திட்டக் காலம் - 2007-08 முதல் 2018-19 வரை

செயலாக்க அமைப்பு

ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் “மாநில திட்ட வழிகாட்டுக் குழு அமைக்கப்பட்டு திட்ட செயல்பாடுகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. மத்திய திட்ட மேலாண்மை அலகில் முதன்மை செயலாளர் அவர்கள் திட்ட இயக்குநராக தலைமையேற்க, கூடுதல் இயக்குநர், நிதி (ம) நிர்வாக மேலாளர், முதுநிலை ஊரக நிதி மேலாளர், செயற்பொறியாளர், நிறுவன வளர்ச்சி மேலாளர், கண்காணிப்பு (ம) மதிப்பீடு மேலாளர் மற்றும் தகவல் (ம) தொழில் நுட்ப மேலாளர் ஆகியோரைக் கொண்டு திட்ட மேலாண்மை அலகு மாநில அளவில் செயல்பட்டு வருகின்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் “மாவட்ட அளவிலான செயல்பாட்டு ஆலோசனைக் குழு” அமைக்கப்பட்டு, மாவட்ட செயலாக்க அலுவலர், உதவி செயற் பொறியாளர், கணக்கு அலுவலர், சமுதாய வளர்ச்சி அலுவலர், நிறுவன வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பு (ம) மதிப்பீடு அலுவலர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோருடன் மாவட்ட செயலாக்க அலகு மாவட்ட அளவில் செயல்பட்டு வருகின்றது.

நோக்கங்கள்

கடலோர சமுதாய மக்களின் தற்சார்புடைய நீடித்த வாழ்வாதாரத்தை கூட்டு முயற்சியுடன் ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமுதாய மக்களின் ஒத்துழைப்புடனும், பல்வேறு நிறுவனங்களின் உதவியுடனும், நீடித்து செயல்படக்கூடிய நுண் தொழில்களை ஏற்படுத்தி, திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி, கடன் வசதிகளை ஏற்படுத்தி, இடர்பாடுகளை தவிர்க்க காப்பீடு வசதிகள் செய்து தருவதுடன், மீன்வள ஆதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளையும் உருவாக்கி நிலைத்த வாழ்வாதார நடவடிக்கைகளை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

திட்டப் பயனாளிகள்

சுனாமியால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களில் வசிக்கும் கீழ்க்கண்ட பிரிவினர்:-

  • வள்ளம், சிறு படகு போன்றவற்றை பயன்படுத்தி கரையோரங்களில் மீன்பிடிக்கும் மீனவர்கள்
  • சிறிய அளவில் வியாபாரம் செய்யும் பெண் மீன் வியாபாரிகள் மற்றும் பதப்படுத்துவோர்
  • கடலோரப் பகுதிகளில் மீன்பிடி தொழில் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்கள்
  • சிறு மற்றும் குறு விவசாயிகள்
  • பிற சிறு தொழில் செய்வோர் (உ.ம் :- சங்கு, சிப்பி சேகரிப்போர்) சமுதாய பங்கேற்புடன் கண்டறியப்பட்ட மிகவும் ஏழைகள் மற்றும் ஏழைகள்

கடலோர வள ஆதார மேலாண்மை

சமுதாய ஆதரவு

திட்ட செயலாக்கத்திற்கு உறுதுணையாக கள அளவில் 5 முதல் 7 வரையிலான கடலோர ஊராட்சிகளை உள்ளடக்கிய கூட்டு வள மையம் அரசு சாரா நிறுவனங்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது திட்டம் செயல்பட்டு வரும் 6 மாவட்டங்களில் 28 கூட்டு வள மையங்கள் நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூட்டு வள மையத்திலும், திட்ட ஒருங்கிணைப்பாளர், திட்ட செயலாக்குநர், வியாபார ஊக்குநர் மற்றும் கூடுதல் வியாபார ஊக்குநர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கூட்டு வள மையங்களுக்கு அலுவலகக் கட்டிடம், தகவல் தொழில்நுட்ப வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தை கள அளவில் செயல்படுத்தக்கூடிய சமுதாய அமைப்பாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு அலுவலகக் கட்டிடம், தகவல் தொழில்நுட்ப வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சுய உதவிக் குழு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இதர மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டம், புது வாழ்வு திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போன்ற திட்டங்களின் மூலம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நுண்தொழில்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த நிறுவனங்களை திறமையான நிர்வாகம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களுக்கு பட்டறிவுப் பயணங்கள் ஆண்டுதோறும் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதன் மூலம் தகவல் பரிமாற்றம், அறிவு சார் பரவல், சுய உதவிக் குழு மற்றும் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தப்படுகின்றது. 2016- 17ல் ரூ.34.60 இலட்சம் செலவில் நான்கு கூட்டமைப்பு கட்டிடங்களும், ரூ.139.20 இலட்சம் செலவில் 17 வலை பின்னும் கூடங்களும், ரூ.16.75 இலட்சம் செலவில் மூன்று மீன் உலர் களங்களும், ரூ.30.00 இலட்சம் செலவில் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கட்டித் தரப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

சமுதாய வள ஆதாரங்களுக்கான திட்டமிடுதல்

திட்ட செயல்பாடுகள் ஆரம்பிக்குமுன், அடிப்படை வள ஆதாரக் கணக்கெடுப்பு, வாழ்வாதார வரைபடம், தர மதிப்பீடு போன்ற பணிகள் கடலோர சமுதாய பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு கடற்கரையோர கிராம சமுதாய மக்களின் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்த தேவையான உட்கட்டமைப்பு வசதிகளான வலை பின்னும் தளம், மீன் உலர் களம், மீன் கொள்முதல் நிலையம், மீன் ஏலக்கூடம், கூட்டமைப்பு அலுவலகக் கட்டிடம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கலன்கள் போன்ற நுண்திட்டங்கள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றன.

2017 - 18 ல் இரண்டாம் கட்ட மாவட்டங்களில் 129 திட்ட ஊராட்சிகளில் ரூ.38.70 இலட்சம் மதிப்பீட்டில் வாழ்வாதார வரைபடம் தயாரித்தல், ரூ.12.90 இலட்சம் மதிப்பீட்டில் நுண் திட்டம் தயாரித்தல், ரூ.20.64 இலட்சம் மதிப்பீட்டில் அரையாண்டு திட்டமிடல் ஆகிய பணிகள், ரூ.21.60 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

மீன் வள ஆதார மேலாண்மை

மீன் வளத்தைப் பெருக்கும் பொருட்டு, மத்திய கடல்சார் மீன் வள ஆராய்ச்சி நிலையத்தின் தொழில் நுட்ப உதவியுடன் செயற்கை பவளப் பாறைகள் 3 வடிவில் தயார் செய்யப்பட்டு 6 இடங்களில் கடற்கரையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் நிறுவப்பட்டுள்ளன. மேலும், மீன் வள மேலாண்மை தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்திட மாநில மற்றும் மாவட்ட அளவிலான கருத்தரங்குகள் நடத்தப்படுவதுடன், கண்டறியப்படும் பிரச்சினைகளுக்கு தக்க வல்லுநர்களின் உதவியுடன் தீர்வு காணப்படுகின்றன.

ஊரக நிதி மற்றும் இடர்பாடு நீக்கும் நடவடிக்கைகள்

சுய உதவிக் குழுக்களுக்கு நுண் கடனுதவி

சுய உதவிக் குழுக்களின் நிலைத்த வாழ்வாதாரத்திற்கு எவ்வித தடையின்றி குறித்த காலத்தில் கடன் வழங்குவதே முக்கிய காரணியாக அமைகிறது. மாவட்ட அளவிலான கருத்தரங்குகள் மூலம் திட்டப் பகுதியிலுள்ள திறன்மிகு சுய உதவிக் குழுக்களை வங்கியாளர்களுக்கு அறிமுகப்படுத்தி தர மதிப்பீடு செய்து எளிதில் கடன் இணைப்பு பெற்று தரப்படுகின்றன. ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் சீரிய நுண்தொழில்களை நேரடியாக அறிந்து கொள்ளும் பொருட்டு வங்கியாளர்களுக்கு பட்டறிவுப் பயணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கி, தேசிய வேளாண் வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனமான நாபின்ஸ், பல்லவன் கிராம வங்கி போன்ற வங்கிகளின் வியாபார மேம்பாட்டு முகவர்களாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் நியமனம் செய்யப்பட்டு சமுதாய கண்காணிப்புடன் கூடிய கடன் வழங்குதல் மற்றும் திரும்ப செலுத்துதல் செயல்பாட்டில் உள்ளது. 2016 - 17 ல் 1,204 சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகளின் மூலம் ரூ. 4,094.77 இலட்சம் கடன் வழங்கப்பட்ட வகையில் 16,756 உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், 656 கூட்டுப் பொறுப்பு குழுக்களுக்கு ரூ.1,561 இலட்சம் மதிப்பில் வாழ்வாதாரக் கடன் உதவி மூலம் 3,280 உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர்.

இடர்பாடு மேலாண்மை

துயர் குறைப்பு நிதி

ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் துயர் குறைப்பு நிதி நிர்வகிக்கப்பட்டு, எதிர்பாராமல் ஏற்படும் இடர்பாடுகளால் வாழ்வாதாரப் பாதிப்பு, சுகாதார பாதிப்பு, விபத்து மற்றும் குடியிருப்பு சேதம் ஆகிய இழப்புகளுக்கு இந்நிதி பயன்படுத்தப்படுகிறது. இதற்கான வட்டி விகிதம் 6 சதவீதமாகவும், திருப்பி செலுத்தும் காலம் 12 முதல் 18 மாத தவணைகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் 5ல் 4 பகுதி (4/5) திட்ட நிதியாகவும், 1/5 பங்கு பயனாளிகளின் தொகையாகவும் வரையறுக்கப்படுகிறது. இக்கடன் தொகை ரூ. 1000/- முதல் ரூ.7500/- வரை வழங்கப்படுகிறது.

நுண் தொழில் மேம்பாடு மற்றும் புதிய உத்திகளுக்கான நிதி

புதிய உத்தியை கையாளும் விதமாக சமையலறைக் கழிவுகளிலிருந்து 564 எரிவாயு உற்பத்தி செய்யும் கலன்கள் கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. பயனாளிகள் ஒரு கலன் அமைப்பதற்கான மதிப்பீடு தொகை ரூ.20,900/-ல், 30 சதவீதம் திட்ட மானியமாகவும், 24 சதவீதம் குறைந்த வட்டிக்கும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக் கடனாக 36 விழுக்காடாகவும் மற்றும் பயனாளிகளின் பங்குத் தொகை 10 சதவீதமாகவும் உள்ளது.

சமையலறைக் கழிவுகளை மறுசுழற்சி செய்யப்பட்டு உபயோகப்படுத்துவதால், சுற்றுச் சூழல் தூய்மையாக பராமரிக்கப்படுகின்றது. 2016 - 17 ஆம் ஆண்டில் ரூ.40.96 இலட்சம் மதிப்பீட்டில் சமையலறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரிக்கும் 196 கலன்கள் நிறுவப்பட்டு உபயோகத்தில் உள்ளன.

நலிவுற்ற தொழில் முனைவோர் மூலதன நிதி

நலிவுற்ற தொழில் முனைவோர் மூலதன நிதி மூலம் கடன் வழங்க ரூ.7.00 கோடி சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டத்திலிருந்து நாபின்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு, இதிலிருந்து ஒவ்வொரு தொழில் கடன் மொத்த தொகையில் 25 சதவீதத் தொகைக்கு 4 சதவீத வட்டி விகிதமும், 70 சதவீதத் தொகைக்கு பாரத ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட வட்டி விகிதமும், நிர்ணயிக்கப்பட்டுள்ள இத்தொகையில் 5 விழுக்காடு பயனாளிகளின் பங்குத் தொகையாகும். இதன் மூலம் அதிகமான குறுந்தொழில்கள் கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் மூலமாக திட்டப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 1296 வருவாய் ஆதார நுண் தொழில்கள் ரூ.3092.50 இலட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டு, 6204 மகளிர் பயனடைந்துள்ளனர்

வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் தொழில் திறன் பயிற்சி

சுய உதவிக் குழுக்களுக்கு ஆதரவு

திட்ட இலக்கு குழுக்களின் வாழ்வாதாரத்தை திறன் வளர்ப்பின் மூலம் நிலைப்படுத்தும் வகையில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு நிதி மேலாண்மை, நிர்வாகம், கணினி பயிற்சி, மகளிருக்கு அதிகாரம் ஒரு கூட்டமைப்பு விழுப்புரம் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

படகு பழுது பார்த்தலை எளிதாக்கிட வெளி பொருத்து மோட்டார் என்ஜின் பழுது நீக்கும் நிலையங்கள் மூன்றும் மற்றும் மூன்று படகு கட்டும் தளங்களும் கட்டித் தரப்பட்டுள்ளன. மேலும், மீன்களை சுகாதார முறையில் பயன்படுத்திட நான்கு மீன் ஏலக் கூடங்கள் மற்றும் நான்கு மீன் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வருமானத்தை பெருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி

நுண்தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் குறிப்பாக சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வருமானத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளுக்காக 17,092 சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

நுண் தொழில் மேம்பாடு உற்பத்திக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், மீன் விற்பனை சங்க உறுப்பினர்கள் மற்றும் ஏழ்மை நிலையிலுள்ளோர் நுண் தொழில்களை துவங்க ஊக்கம் அளிக்கப்படுகிறது. தகுதியான பயனாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு வெற்றிகரமாக நுண்தொழில்களை உருவாக்குவதற்கு வழிகாட்ட ஆலோசகர்கள் / இளம் வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டம் சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளிலிருந்து, மரபு சார்ந்த மற்றும் புதுமையான உத்திகளின் அடிப்படையிலான நுண்தொழில்களை பயனாளிகள் மேற்கொள்ளச் செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும். மா விவசாயம், காய்கறி மற்றும் மூலிகைச் செடிகள், மலர்த் தோட்டம், மீன் மற்றும் கருவாடு விற்பனை, கோழி வளர்ப்பு, தென்னை விவசாயம், கயிறு தயாரித்தல், தென்னை ஓலை முடைதல், பொம்மை செய்தல், கடற்சிப்பி பொருட்கள் தயாரித்தல், முந்திரி பருப்பு பதனிடுதல், புடவை வண்ணம் தீட்டுதல், மளிகை வியாபாரம், சிற்றுண்டியகம், அழகுக் கலை நிலையம், மின்னணு சேவை மையத்துடன் இணைந்த நகல் மையம் போன்ற தொழில்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி

திட்டப் பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தகுந்த தொழில் பிரிவுகளில் மூன்று மாதம் முதல் ஒரு வருடம் வரையிலான காலத்திற்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. இதுவரை 6,821 ஊரக இளைஞர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் கட்ட மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் ரூ.195 இலட்சம் மதிப்பீட்டில் 1500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு – ஊராக வளர்ச்சி துறை

2.9696969697
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top