பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்

அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் பற்றிய குறிப்புகள்

உடல் பரிசோதனைத் திட்டம்

மிகக் குறைந்த கட்டணத்தில் "அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்' முன்னோடித் திட்டமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் செயல்படுத்தப்படும்  இந்தத் திட்டத்தின் கீழ் மகளிருக்கென சிறப்புப் பரிசோதனைகள் செய்யப்படும்

பொதுமக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தைக் கண்டறிய முழு உடல் பரிசோதனையை மேற்கொள்கின்றனர். இதற்கு தனியார் மருத்துவமனைகள் ரூ. 12,000 வரை கட்டணம் வசூலிக்கின்றன. அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த முழு உடல் பரிசோதனை வசதிகள் இப்போது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ளன.

எனவே, முன்னோடித் திட்டமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் "அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்' தொடங்கப்படும். இதேபோன்று, மகளிருக்கென தனியாக அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டமும் தொடங்கப்படும். இந்தப் பரிசோதனைக்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும்.

மாநிலத்திலுள்ள அனைத்து 385 வட்டார அளவிலான மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரத்தில் இரு நாள்கள், ரத்தம், சிறுநீர்ப் பரிசோதனைகள், சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு, கண் பரிசோதனை போன்ற அனைத்து அடிப்படைப் பரிசோதனைகளும் கட்டணம் ஏதுமின்றி செய்துகொள்ள "அம்மா ஆரோக்கியத் திட்டம்" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

அம்மா மகப்பேறு சஞ்சீவி

மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தைக் காக்க, சித்த மருத்துவத்தில் 11 வகை மூலிகை மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மகப்பேற்றின் முதல் மூன்று மாதங்களில் மாதுளை மணப்பாகு, கறிவேப்பிலைப் பொடி, அடுத்த மூன்று மாதங்களுக்கு இரும்புச்சத்து, வைட்டமின் சத்துக் குறைபாட்டைப் போக்க அன்னபேதி மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், ஏலாதி சூரண மாத்திரை, கடைசி மூன்று மாதங்களுக்கு உளுந்து தைலம், சுக மகப்பேறுக்கு குந்திரிக தைலம், பாவன பஞ்சங்குல தைலம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

குழந்தை பிறப்புக்குப் பிறகு, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க சதாவரி லேகியம், குழந்தையின் ஆரம்பக் கால நோய்களைச் சமாளிக்க உரை மாத்திரை என 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட "அம்மா மகப்பேறு சஞ்சீவி' என்ற முழுமை பெற்ற மருத்துவப் பொக்கிஷம் தாய்மை அடைந்த பெண்களுக்கு வழங்கப்படும்.

அவசர ஊர்திகள்

விபத்துகளில் பயன்படுத்தப்படும் 108 அவசர கால ஊர்திகளின் எண்ணிக்கை 751-ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் முதல் கட்டமாக 50 பழைய ஊர்திகளுக்குப் பதிலாக புதிய ஊர்திகள் வழங்கப்படும். 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 8 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் இளம்சிசு பராமரிப்பு மையங்களுக்கு புதிய கருவிகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற 281 ரத்த வங்கிகளும், 415 ரத்த சேமிப்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 12 புதிய ரத்த வங்கிகள், 10 ரத்த சேமிப்பு மையங்கள், 10 ரத்த சேமிப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.

பச்சிளம் குழந்தைகள் மையம்

தாம்பரம், குடியாத்தம், திருத்தணி, ராஜபாளையம், விருத்தாசலம் மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையமும், ராஜபாளையத்தில் 20 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவும் குழந்தைகள் பராமரிக்கும் "ஸ்டெப் டவுன்' வார்டும் அமைக்கப்படும். மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல 20 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வாகனங்கள் வாங்கப்படும்.

சர்க்கரை நோயாளிகள் மூன்று மாத சர்க்கரை சராசரி அளவைக் கண்டறிய நவீனக் கருவிகள், அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்பட 302 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். தமிழகத்தில் 39 புதிய வட்டங்களில் மருத்துவமனைகள் அல்லது மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தாலுகா மருத்துவமனைகளாக மேம்படுத்தப்படும்.

முடநீக்கியல் மையத்துக்கு நிதி

சென்னை அரசு பொது மருத்துவமனையில் செயல்படும் முடநீக்கியல் சிகிச்சை மையத்துக்கு, சிறப்பு மருந்துகளுக்காக ரூ. 5 கோடி நிதி வழங்கப்படும்

பரிசோதனைகள்

 • முழு ரத்தப் பரிசோதனை
 • சிறுநீரகப் பரிசோதனை
 • ரத்த சர்க்கரை
 • ரத்தக் கொழுப்பு பரிசோதனை
 • கல்லீரல் செயல்பாடு பரிசோதனை
 • ஹெபடைடிஸ்- பி ரத்தப் பரிசோதனை
 • ரத்த வகை-ஆர்.எச். பரிசோதனை
 • நெஞ்சுச் சுருள் படம்
 • நெஞ்சு ஊடுகதிர் படம்
 • மிகையொலி பரிசோதனை
 • இதய மீள்ஒலி பரிசோதனை (எக்கோ)
 • தைராய்டு ரத்தப் பரிசோதனை
 • சிறப்பு சர்க்கரை நோய் பரிசோதனை (மூன்று மாத அளவு- எச்பிஏ1சி) ஆகியன செய்யப்படும்.
 • அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை
 • முழு உடல் பரிசோதனையில் கூடுதலாக...
 • கர்ப்பப் பை வாய்ப் பரிசோதனை (பேப் ஸ்மியர்),
 • மார்பக எண்ணியல் ஊடு கதிர்ப்படப் பரிசோதனை,
 • எலும்புத் திறனாய்வுப் பரிசோதனை,
 • ரத்த வைட்டமின்-டி, கால்சியம், பாஸ்பரஸ்,
 • பாரா தைராய்டு ஹார்மோன்

ஆதாரம் : தமிழ்நாடு அரசு

2.97368421053
harankumar k Mar 10, 2019 09:55 PM

வாரத்தில் எந்த நாட்களில் பார்க்க முடியும்
ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளதா

சக்தி Dec 04, 2018 10:49 AM

சூப்பர். இது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உண்டா?

காமாட்சி Sep 05, 2018 03:27 PM

குறைந்த கட்டணம் என்றால் எவ்வளவு?
வாரத்தில் இரு நாட்கள் என்றால் எந்த எந்த கிழமைகளில் பார்க்கமுடியும்.

கெளதம் Jul 25, 2017 08:55 PM

சூப்பர்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top