பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கணக்கு பதிவேடுகள் பராமரிப்பு

புதுவாழ்வு திட்டத்தின் கணக்கு பதிவேடுகள் பராமரிப்பு பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கணக்கு பதிவேடுகள் பராமரிப்பு

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்

புதுவாழ்வு திட்டத்தின் மிக முக்கிய கோட்பாடு கிராம வறுமை ஒழிப்பு சங்க நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும். நமது நடவடிக்கைகளை பதிவேடுகள் மூலம் பராமரிப்பதால் அனைவரும் அறிய இயலுவதுடன் நமது வருங்கால திட்டங்களை வகுக்கவும் ஏதுவாகும். கிராம வறுமை ஒழிப்பு சங்கம் கீழ்கண்ட ஆவணங்கள் மற்றும் கணக்கு பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

அ. கணக்கு பதிவேடுகள்

1. வரவு ரசீது

2. செலவினச் சீட்டு

3. ரொக்க புத்தகம்

4. பொதுப் பேரேடு

5. சொத்து / இருப்பு பதிவேடு

ஆ. கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் செயல்பாட்டுப் பதிவேடுகள்

6. பயனாளிகள் மற்றும் பங்களிப்பு தொகை பதிவேடு

7. பயிற்சி பதிவேடு

8. தீர்மானப் பதிவேடு

9. இளைஞர்களுக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு பதிவேடு

இ. இதர பதிவேடுகள்

10. இலக்கு மக்கள் பதிவேடு

11. கடன் மற்றும் திரும்ப பெறுதல் பதிவேடு

12. சமூக தணிக்கை குழு பதிவேடு

13 காசோலை வழங்குதல் / பெறுதல் பதிவேடு

14. பார்வையாளர்கள் பதிவேடு

15. அலுவலர் பதிவேடு

அ. கணக்கு பதிவேடுகள்

பராமரிக்க வேண்டிய கணக்கு பதிவேடுகள்

1. வரவு ரசீது புத்தகம்

சங்கத்திற்கு வரும் வரவுகளை, வரவு ரசீது புத்தகத்தில் எழுத வேண்டும்.  சங்கத்திற்கு வரும் தொகைக்கான ஆதாரமே வரவு ரசீது. இந்த ரசீதின் அடிப்படையில்தான் ரொக்கப் புத்தகம் எழுதப்படுகிறது.

. . . . . . . . . . . . . . . . கிராம வறுமை ஒழிப்பு சங்கம்

வரவு ரசீது (மாதிரி வடிவம்)

ரசீது எண் . . . . . . . . . .                                                                தேதி . . . . . . . . . .

திரு / திருமதி / செல்வி . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அவர்களிடமிருந்து ரூ. . . . . . . . . . . . . . (எண்ணில்) ரூ. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . (எழுத்தில்) மட்டும் ரொக்கம் / காசோலை / வங்கி வரையோலை (எண் . . . . . . . . . . . . . . . நாள் . . . . . . . . . . .. வங்கியின் பெயர் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . மூலமாக பெறப்பட்டது.

தொகை பெறப்பட்ட நோக்கம் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

 

கணக்காளர்                                                                                      செயலாளர் / பொருளாளர்

 

2. பற்று/செலவினச் சீட்டு

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மேற்கொள்ளும் செலவினங்களுக்கு செலவு சீட்டு தயார் செய்ய வேண்டும். இச்செலவின சீட்டை ஆதாரமாக வைத்து ரொக்க புத்தகம் எழுதப்பட வேண்டும். செலவுகளுக்கான விவரத்தை இந்த செலவினச் சீட்டு மூலம் அறியலாம். இது தணிக்கை செய்யும் போது தணிக்கையாளருக்கு சமர்பிக்கப்பட வேண்டும்.

.............................................கிராம வறுமை ஒழிப்பு சங்கம்

பற்று / செலவினச் சீட்டு

செலவின சீட்டு எண் . . . . . . . . . . . . .                   தேதி . . . . . . . . . . . .

தொகை பெறுபவரின் பெயர் . .. . . . . . . . . . . . . . . . . . . . . . .

கணக்கு தலைப்பு

தொகை வழங்குவதற்கான காரணம்

தொகை

(ரூ.)

தொகை

(பை)

 

 

 

 

 

தொகை ரூ. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. (எண்ணில்) ரூபாய் . . . . . . . . . . . . . . . . . . . .. . . .(எழுத்தில்) மட்டும் மேற்குறிப்பிட்ட பொருள் / சேவைக்காக கொடுக்கப்பட்டது. திட்ட விதிகளுக்கு உட்பட்டது என்றும், நியாயமானது என்றும் இதன் மூலம் சான்றளிக்கப்படுகிறது.

தீர்மான எண் :                   தேதி:

காசோலை எண்:               தேதி:

 

 

கணக்காளர்                                                                                                        செயலாளர் பொருளாளர்

ரூ . . . . . . . .. . . . . . . .. /- ரொக்கமாக / காசோலையாக பெற்றுக் கொண்டேன்.

 

 

பணம் பெறுபவர் கையொப்பம்

 

செலவினச் சீட்டு பதிவு செய்யும் முறை

 • செலவினச் சீட்டில் வரிசை எண் எழுதப்பட வேண்டும், பின்னர் கணக்கு சரிபார்க்கும் போது இது உதவியாக இருக்கும்.
 • செலவின குறிப்புகள் கொண்ட ரசீதுகள் வரிசை எண் படி தனி கோப்புகளில் (ஃபைல்களில்) பாதுகாத்து வைக்கப்பட வேண்டும்.
 • செலவின கணக்கு தலைப்பு மற்றும் செலவின் விவரம் இச்செலவினச் சீட்டில் குறிப்பிட வேண்டும்.
 • பொருட்கள் வாங்கிய விலைப்பட்டியல் ரசீது இச்செலவினச் சீட்டுடன் வெள்ளை தாளில் ஒட்டி இணைக்கப்பட வேண்டும்.
 • ஒவ்வொரு செலவிற்கும் தனி செலவு சீட்டு எழுத வேண்டும்.
 • செலவீனச் சீட்டில் வங்கி காசோலை எண் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
 • செலவுத் தொகை ரூ.5000/க்கு மேல் இருப்பின் ரெவண்யூ ஸ்டாம்ப் ஒட்டி பணம் பெறுபவரிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
 • ரசீது முழுமையாக எழுதப்பட்டு அனைவரும் கையெழுத்திட்ட பின்னரே பணம் கொடுக்க வேண்டும்.

3. ரொக்கப் புத்தகம்

 • இப்புத்தகத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் தினசரி நடக்கும் பணம் / காசோலை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் எழுதப்படும்.
 • நடவடிக்கைகள் இருவகைப்படும் - பெறுதல் / செலுத்துதல்.
 • ஓவ்வொரு மாதமும் கணக்கு முடிக்கப்பட்டு வங்கி இருப்பு மற்றும் ரொக்க இருப்புகளை சரிபார்த்து செயலாளர் மற்றும் பொருளாளர் கையொப்பம் இட வேண்டும்.
 • பணம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் ரொக்கக் கட்டத்திலும், காசோலை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் வங்கிக் கட்டத்திலும் எழுதப்படும்.
 • வரவு ரசீது / செலவினச் சீட்டுகளை ஆதாரமாக கொண்டு ரொக்க புத்தகம் எழுதப்படும்.

பதிவு செய்யும் முறை

 • கிராம சங்கத்திற்கு வரும் ரொக்கம் வரவு பக்கத்தில் ரொக்கக் கட்டத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
 • கிராம சங்கத்திற்கு காசோலை மூலம் தொகை வரப்பட்டிருந்தால் வரவு பக்கத்தில் வங்கிக் கட்டத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
 • கிராம சங்கத்தின் செலவுகள், ரொக்கமாக கொடுக்கப்பட்டிருந்தால் செலவு விவர பக்கத்தில் ரொக்க கட்டத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
 • செலவினங்களுக்கு காசோலை கொடுக்கப்பட்டிருந்தால் செலவு விவர பக்கத்தில் வங்கி கட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
 • வங்கியிலிருந்து பணம் எடுக்கும் பொழுது வரவு பக்கத்தில், ரொக்க கட்டத்திலும் செலவு பக்கத்தில் வங்கி கட்டத்திலும் தொகை பதிவு செய்யப்பட வேண்டும்.
 • வங்கியில் பணம் செலுத்தும் பொழுது வரவு பக்கத்தில் வங்கி கட்டத்திலும், செலவு பக்கத்தில் ரொக்க கட்டத்திலும் தொகை பதிவு செய்யப்பட வேண்டும். இது எதிர்பதிவு எனப்படும்.
 • தினசரி வங்கி இருப்பு மற்றும் ரொக்க இருப்புகளை ரொக்க புத்தகம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

4. பொது பேரேடு

 • பேரேட்டில் ஒவ்வொரு கணக்கும் தலைப்பு வாரியாக தனித்தனியாக பராமரிக்கப்படும்.
 • பொதுப் பேரேட்டின் அடிப்படையில்தான் ஐந்தொகை, பெறுதல், செலுத்துதல் கணக்கு வருவாய் செலவின கணக்கு மற்றும் இறுதி நிலை குறிப்பு ஆகியன தயார் செய்யப்படுகிறது.

பதிவு செய்யும் முறை

 • ஒவ்வொரு கணக்குத் தலைப்பிற்கும் 2 அல்லது 4 பக்கம் ஒதுக்கப்பட வேண்டும்.
 • பேரேட்டின் துவக்கத்தில் உள்ள பக்க அட்டவணையில் கணக்கு தலைப்பு மற்றும் பக்க எண் வரிசையாக எழுத வேண்டும்.
 • ரொக்கப் புத்தகத்தில் உள்ள பதிவுகளை மட்டுமே பொதுப் பேரேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
 • ரொக்க புத்தகத்தில் ‘வரவு பக்கம்’ உள்ள பதிவுகளை பொது பேரேட்டின் ‘வரவு’ கட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். (விவரம் கட்டத்தில் ரொக்க நடவடிக்கையாக இருந்தால் ரொக்கம் எனவும், வங்கி நடவடிக்கையாக இருந்தால் வங்கி எனவும் குறிப்பிட வேண்டும்).
 • ரொக்க புத்தகத்தில் ‘செலவு விபரம் பக்கம்’ உள்ள பதிவுகளை பொதுப் பேரேட்டின் ‘பற்று’ கட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.
 • பேரேட்டில் உள்ள பற்று மற்றும் வரவு இனங்களுக்கு உள்ள வேறுபாடே இருப்பாகும் இதனை இருப்பு காலத்தில் குறிப்பிட வேண்டும்.
 • வரவு கூடுதலாக இருந்தால் கடைசி கட்டத்தில் வரவு என்றும் பற்று கூடுதலாக இருந்தால் பற்று என்றும் குறிப்பிட வேண்டும்.
 • ஒவ்வொரு கணக்குத் தலைப்பும் தனித்தனியாக எழுதப்பட வேண்டும். பேரேட்டின் வாயிலாக ஒவ்வொரு செலவு மற்றும் வரவுகளை தனித்தனி தலைப்பு வாரியாக காணலாம்.

5. சொத்து / இருப்பு பதிவேடு

இப்பதிவேட்டில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் கொள்முதல் செய்த நிலையான சொத்துக்கள் / இருப்புகள் விவரம் பதியப்படும். ஆறு மாத்திற்கு ஒரு முறை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் சமூகத் தணிக்கை குழு சரிபார்த்து, பதிவேட்டில் கையெழுத்து இட வேண்டும். ஒவ்வொரு சொத்துக்களையும் தனித்தனி பக்கத்தில் எழுத வேண்டும்.

வங்கி ஒத்திசைவு அறிக்கை

 • கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் பண நடவடிக்கைகள் வங்கி மூலமாகவே செய்யப்படுகின்றன.
 • மாத முடிவில், ரொக்கப் புத்தகத்தின் படி வங்கி இருப்பும் வங்கிக் கணக்கில் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் இருப்பும் சரியாக உள்ளதா என்பதை ஒத்திசைவு அறிக்கையின் மூலம் சரி பார்த்துக் கொள்ளலாம்.
 • ஒத்திசைவு அறிக்கை ரொக்கப் புத்தகம் மற்றும் வங்கி அறிக்கையின் அடிப்படையில் மாதிரி படிவத்தை தயாரிக்க வேண்டும்.

செயல்பாட்டுப் பதிவேடுகள்

6. பயனாளிகள் பதிவேடு

பயனாளிகள் பதிவேட்டின் மூலம் பயனடைந்த இலக்கு மக்களின் பெயர்கள் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உதவித் தொகை ஆகியவைகளை அறியலாம். இந்த பதிவேட்டு விவரம் அறிவிப்பு பலகையிலும் தெரிவிக்கப்படும்.

பதிவு செய்யும் முறை

1. நிதி பெறப்பட்ட விவரம் குறியீடு மூலம் அந்தந்த நிதிக்கு கீழ் குறிக்கப்பட வேண்டும்.

2. நிதியினை பயன்படுத்திய விவரம் குறிப்பு கட்டத்தில் விளக்கப்பட வேண்டும்.

3. இப்பதிவேட்டின் விவரங்கள் தீர்மானப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட வேண்டும்.

7. பயிற்சி பதிவேடு

பதிவேட்டில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் சமூக தணிக்கை குழுவால் வழங்கப்பட்ட பயிற்சி விபரங்கள் பதியப்பட வேண்டும். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கான வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும். மேலும் இந்த பதிவேட்டில் தொழில் பயிற்சி பெற்ற இளைஞர்களின் விவரம், பயிற்சி நிறுவனங்களை பற்றிய விவரம் ஆகியவை பதியப்பட வேண்டும்.

பதிவு செய்யும் முறை

 • இப்பதிவேட்டிற்கான விவரங்களைத் தீர்மானப் புத்தகத்திலிருந்து பெற வேண்டும்.
 • பயிற்சி நடைபெற்ற நாள், இடம், விபரம், கலந்து கொண்டவர்கள், செலவினத் தொகை, பயிற்சி நடத்திய துறை விபரம் ஆகியவற்றை பதிய வேண்டும்.
 • பயிற்சி பெற்ற இளைஞரின் பெயர், பயிற்சியின் பெயர், பயிற்சிக்காலம், பயிற்சி பெற்றவரின் நிலை மற்றும் தோராய வருமானம் குறித்த விவரங்களை பதிய வேண்டும்.

8. தீர்மானப் பதிவேடு

தீர்மானப் புத்தகத்தில், கூட்ட நாளன்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் முந்தைய கூட்ட தீர்மான நடவடிக்கைகள் எழுதப்படும். கிராம வறுமை ஒழிப்பு சங்க செயலாளர் இந்த பதிவேட்டினை பராமரிக்க வேண்டும். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களிடமும் தீர்மானம் எழுதிய பிறகு கையெழுத்து பெற வேண்டும்.

9. இளைஞர்களுக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு பதிவேடு

இளைஞர்கள் பயிற்சி பெற்ற விபரம், தற்போதைய பயிற்சி விபரம், வேலை வாய்ப்பு பெற்ற விபரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுநிதி பயன்பாட்டு விபரம் இந்த பதிவேட்டில் இடம் பெறும்.

10. இலக்கு மக்கள் பதிவேடு

மக்கள் நிலை ஆய்வு மூலம் கண்டறியப்பட்டு கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்ட இலக்கு மக்கள் பட்டியலிலுள்ள விபரங்களை இந்த பதிவேட்டில் எழுத வேண்டும்.

பதிவு செய்யும் முறை

1. இலக்கு மக்கள் பட்டியலை பார்த்து பெயர் மற்றும் விவரத்தினை இந்த பதிவேட்டில் எழுத வேண்டும்

2. கலம் எண் நான்கு முதல் எட்டு வரை குறியீடு இட வேண்டும்.

11. கடன் மற்றும் திரும்பப் பெறுதல் பதிவேடு

கடன் மற்றும் திரும்பப் பெறுதல் பதிவேட்டில் கடன் வழங்கப்பட்ட அனைத்து விவரங்களும் பதியப்பட வேண்டும். திரும்பச் செலுத்தும் காலம் வட்டி வீதம் மேலும் திரும்பச் செலுத்திய விவரங்கள் முறையாக பதியப்பட வேண்டும்.

12. சமூக தணிக்கை குழு தீர்மான பதிவேடு

சமூக தணிக்கை குழு உறுப்பினர்கள் நடத்தும் மாதாந்திர கூட்டத்திற்கான நடவடிக்கைகளை தனியாக பராமரிக்கவும் மற்றும் அவர்கள் எடுத்த தீர்மானங்களை பதிவு செய்யவும் எழுதும் பதிவேடு - சமூக தணிக்கை குழு தீர்மான பதிவேடாகும்.

13. காசோலை வழங்குதல் / பெறுதல் பதிவேடு

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் பெற்ற காசோலைகளையும், முறைப்படி கிராம வறுமை ஒழிப்பு சங்கம் கூட்டம் நடத்தி தீர்மானம் இயற்றிய பிறகு வழங்கிய காசோலைகளையும் பதியும் பதிவேடு காசோலை வழங்குதல் / பெறுதல் பதிவேடு ஆகும்.

காசோலை பெற்ற விபரங்களை சிவப்பு நிற மையினாலும், வழங்கிய விபரங்களை நீல நிற மையினாலும் பதிவேட்டில் எழுதி எளிதில் தகவல்களை பெற முடியும். வங்கியிலிருந்து காசோலை புத்தகம் பெற்ற விபரங்களை முதல் பகுதியிலும் (பகுதி – 1), காசோலை பெற்ற மற்றும் வழங்கிய விபரங்களை இரண்டாம் பகுதியிலும் (பகுதி– 2) பதிய வேண்டும்.

காசோலை பெறுதல் (உதாரணம்)

கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க நிதி

கிராம வறுமை ஒழிப்பு சங்க முதல் தவணை நிதி

காசோலை வழங்குதல் (உதாரணம்)

சுய உதவிக்குழு ஆதார நிதி

மாற்றுத் திறனாளி / நலிவுற்றோருக்கு வழங்கப்படும் தனிநபர் கடன்.

அலுவலக நிர்வாக செலவுக்கு பணம் எடுப்பது.

14. பார்வையாளர்கள் பதிவேடு

கிராம வறுமை ஒழிப்பு சங்க நடவடிக்கைகள் பார்வையிட வரும் பிற நிறுவன வல்லுநர்கள், அலுவலர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோரின் கருத்துகள் இடம் பெற இப்பதிவேடு உதவும்.

பார்வையாளர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் நடவடிக்கைகளை நன்கு வழி நடத்தி செல்ல உதவும்.

15. அலுவலர் பதிவேடு

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு சென்று வழிநடத்தும் பணியாளர்கள் அங்கு பார்வையிட்ட நடவடிக்கைகளில் முன்னேற்றம் காண வேண்டிய செயல்பாடுகள் குறித்து தங்களது ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய பதிவேடு ஆகும்.

16. கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் நிதியறிக்கைகள்

புதுவாழ்வு திட்டத்தின் மிக முக்கிய கொள்கை வெளிப்படையான செயல்பாடுகள் ஆகும். ஆதலால் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஜந்தொகை கணக்கின் அடிப்படையில் ஒட்டுமொத்த நிதி அறிக்கைகள் தயார் செய்து மாவட்ட அலுவலகத்திற்கும், திட்ட ஒருங்கிணைப்பு அணி அலுவலகத்திற்கும் குறித்த நேரத்தில் சமர்பிக்க வேண்டியது கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் கடமையாகும்.

நிதி அறிக்கைகளை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அறிக்கைகள் என கூறுவர்.

மாதாந்திர நிதி அறிக்கைகள் விபரம்

1. மாதாந்திர பெறுதல் / செலுத்துதல் அல்லது வரவு செலவு அறிக்கை.

2. மாதாந்திர வங்கி சரிகட்டும் பட்டியல் / வங்கி ஒத்திசைவு பட்டியல் அறிக்கை

ஆண்டு அறிக்கைகள் விபரம்

1. காலாண்டு இருப்பாய்வு / ஐந்தொகை அறிக்கை.

2. அரையாண்டு இருப்பாய்வு / ஐந்தொகை அறிக்கை.

3. ஆண்டு இருப்பாய்வு / ஐந்தொகை அறிக்கை.

17. ஆண்டு அறிக்கைகள்

காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு முடிவில் தயாரிக்கப்படும் நிதி அறிக்கைகளை ஆண்டு அறிக்கை என்கிறோம்.

1) காலாண்டு இருப்பாய்வு / ஐந்தொகை அறிக்கை.

2) அரையாண்டு இருப்பாய்வு / ஐந்தொகை அறிக்கை.

3) ஆண்டு இருப்பாய்வு / ஐந்தொகை அறிக்கை.

இருப்பாய்வு / ஐந்தொகை அறிக்கை

பொதுப்பேரேட்டை அடிப்படையாக வைத்து இருப்பாய்வு அறிக்கை தயாரிக்க வேண்டும். காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு முடிவில் தயாரிக்க வேண்டும். ஐந்தொகையில் ஒவ்வொரு கணக்கு தலைப்பின் கீழுள்ள இருப்புகளை அறிய இயலும்.

 • ஒவ்வொரு மாதம் முடியும் போதும் ஒவ்வொரு கணக்கு தலைப்பின் இறுதி இருப்பு தொகையை நாம் கூட்டி/கழித்து கண்டு பிடிக்க வேண்டும்.
 • சில தலைப்பின் கீழ்வரும் கணக்குகள் பற்று இருப்பு அதிகம் உடையதாகவும் சில தலைப்பின் கீழ் வரும் கணக்குகள் வரவு நிலை உடையதாக இருக்கும்.
 • பொதுப்பேரேட்டின் ஒவ்வொரு கணக்கு தலைப்புகளின் மாத /காலாண்டு அரையாண்டு/ஆண்டு இறுதியில் உள்ள தொகையினை பற்று இருப்பு உடையதாய் இருந்தால் பற்று காலத்திலும், வரவு இருப்பு உடையதாய் இருந்தால் வரவு காலத்திலும் இருப்பாய்வு அறிக்கையில் எழுதப்படவேண்டும்.
 • இருப்பாய்வு அறிக்கையில் பற்றும் வரவும் சமமாக இருக்க வேண்டும்.
 • சமமாக இல்லாத பட்சத்தில், பொதுப்பேரேட்டை முழுமையாக சரிபார்த்து சீர் செய்யப்பட வேண்டும்.

மண்டல மதிப்பீடு கண்காணிப்பு குழு (கிராம அளவில் நிதி விடுவிப்பதற்கான மதிப்பீடு):

1. மதிப்பீட்டு அணி :

புதுவாழ்வு திட்ட விதிகளின் படி மக்கள் அமைப்புகள் செயல்படுவதை உறுதி செய்யவும், நிதி பெறுவதற்கு மக்கள் அமைப்புகளின் ஒவ்வொரு நிலையையும் கணக்கிடவும், செயலாக்கத்தில் உள்ள இடைவெளியை கண்டறிந்து சரிசெய்யவும், நிதியை வெளியிடுவதற்கு முன் தன்னிச்சையான நியாயமான மதிப்பீட்டினை தருவதற்கும் மதிப்பீட்டு அணியின் நோக்கமாகும்.

இந்த மதிப்பீட்டு அணி மண்டல அளவில் மாவட்டங்களில் மாநில அலுவலகத்தின் அனுமதியுடன் காலத்திற்கேற்ப கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் மக்கள் கற்றல் மையத்தின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து அறிக்கையினை மாநில திட்ட இயக்குநனறின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கும்.

2. மதிப்பீட்டு அணி விவரம் :

மாவட்ட திட்ட மேலாளர் - 1

உதவி திட்ட மேலாளர்கள் - 2

சமூக வல்லுநர்கள் - 3 பேரும் மதிப்பீட்டு அணியில் இடம் பெறுவர்.

3. மதிப்பீட்டில் கவனிக்க வேண்டியவை :

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதி பெறுவதற்கான விண்ணப்பங்களை கீழ்க்கண்டவற்றை ஆய்வு செய்து பின் மாநில அலுவகத்திற்கு அனுப்ப வேண்டும்.

 • கிராம வறுமை ஒழிப்பு சங்க அமைப்பின் தயார் நிலையை உறுதி செய்யும் கிராம சபையிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல்
 • மாவட்ட அணியின் உள் மதிப்பீடு
 • மாநில அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முன்மொழிவுகள் (ஞசடியீடிளயட)
 • மாவட்ட அணியிடமிருந்து முன்மொழிவுகளை பெற்ற பின் கூடுதல் திட்ட இயக்குநர் (தர கட்டுப்பாடு மற்றும் பொறுப்புணர்வு) மண்டல மதிப்பீட்டு அணியினர் இணைந்து மதிப்பீட்டு கால அட்டவணையை தயார் செய்யும்.
 • மதிப்பீட்டில் அனுபவமுள்ள தகுதியான சமுதாய வல்லுநர்களை மதிப்பீட்டு பணிக்காக மகமை நியமிக்கும்.
 • மதிப்பீடு செய்யும் நாள், நேரம் இவற்றை முன் கூட்டியே மாவட்ட அலுவலகம் மக்கள் அமைப்புகளுக்கு தெரிவிக்கும்.
 • மதிப்பீட்டில் கண்டறியப்பட்ட தகவல்களை சமூக அமைப்புகளுக்கு தெரிவித்தல்.
 • கண்டறியப்பட்ட தகவல்களை மற்ற அணிக்கு தெரிவித்தல்.
 • மண்டல மதிப்பீட்டு அணி கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினை மதிப்பீடு செய்து மாவட்ட அணிக்கு பரிந்துரை செய்யும்.
 • உயர்நிலை அமைப்புகள் / மகமை ஆகியவற்றை மதிப்பீடு செய்து மாநில அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யும்.

4. மண்டல மதிப்பீட்டு அணியின் பொறுப்புகள் :

 • கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை நிதி
 • அமுத சுரபி முதல் மற்றும் இரண்டாவது தவணை நிதி
 • உயர்நிலை அமைப்பு / மகமையின் முதல் மற்றும் இரண்டாவது தவணை நிதி பெற மண்டல மதிப்பீட்டு அணி மதிப்பீடு செய்து பரிந்துரை செய்யும்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

2.72
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top