பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மக்கள் சாசனம் பாகம் 1

ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மக்கள் சாசனம் முதல் பாகம் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.

முன்னுரை

தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 4.05 கோடி பேர் (52%) ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். இவ்வூரகப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்குகள், தரமான சாலைகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், துப்புரவுப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகள் போன்றவற்றை முனைப்புடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும், பள்ளிக்கட்டிடங்கள் கட்டுதல், அவற்றில் குடிநீர்வசதி, கழிப்பறைவசதி போன்ற கட்டமைப்பு வசதிகளை அமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய முக்கிய பணிகளையும் இத்துறை செயல்படுத்தி வருகிறது.

ஊரக சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் அமைத்தல் மற்றும் பராமரித்தல், பொது கழிப்பிடம் தனிநபர் கழிப்பிடங்களை அமைத்தல் மற்றும் சுகாதாரத்தை பேணுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, கிராமப்புற ஏழை எளிய மக்களின் வேலைவாய்ப்பினை உறுதிசெய்து அவர்கள் அரசு நிர்ணயித்த ஊதியத்தினை பெற்றிட வழிவகை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சுயவேலை வாய்ப்பு திட்டங்கள் மூலம் கிராம மக்களின் வறுமை ஒழிப்பு, கிராமப்புற மகளிர் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரங்களை வளப்படுத்துதல் போன்றவற்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயல்படுத்தி வருகின்றது.

மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகள்

73வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், 1993 ல் கொண்டு வரப்பட்ட பிறகு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994ல் இயற்றப்பட்டது. இதன்படி ஊரகப்பகுதிகளில் மூன்றடுக்கு ஊராட்சி முறை அதாவது, அடித்தள அமைப்பாக கிராம ஊராட்சி, இடை நிலையில் வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றடுக்கு ஊராட்சிகள் மூலம் மத்திய, மாநில அரசுகளின் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் நோக்கம்

அடிப்படை வசதிகளான குடிநீர் வழங்கல், தெரு விளக்குகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், ஊரக துப்புரவு பணிகள், சாலைகள், வடிகால் வசதிகள் மேற்கொள்ளுதல் மற்றும் பராமரித்தல் ஆகியவை கிராம ஊராட்சியின் முக்கிய பொறுப்பாகும்.

தனிநபர் பயன் பெறும் அனைத்து திட்டங்களில் கிராம ஊராட்சிகள் மூலமே பயனாளிகள் கண்டறியப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு கிராம சபை ஒப்புதல் அளிக்கிறது. இடைநிலை ஊராட்சியான வட்டார வளர்ச்சி ஊராட்சி வலுவான நிர்வாக அமைப்பும், தொழில் நுட்பபிரிவும் கொண்டுள்ளதால் ஊரக வேலைவாய்ப்பு உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் கிராம ஊராட்சியுடன் இணைந்து பங்காற்றுகிறது.

திட்ட ஒருங்கிணைப்பு, ஆய்வு மேற்கொள்ளுதல் ஆலோசனை வழங்குதல் மற்றும் கண்காணிக்கும் அமைப்பாக மாவட்ட ஊராட்சி திகழ்கிறது. மூன்று அடுக்கு ஊராட்சி அமைப்புகள் தங்களின் சட்டப்படியான விருப்ப கடமைகள், ஆய்வு செய்யும் கடமைகளோடு ஒப்படைக்கப்பட்ட பிற பணிகளையும் செய்து வருகின்றன.

நிர்வாக அமைப்பு

மாநில அளவில்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நிர்வாகத்தை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளர் செயல்படுத்துகிறார்.

மத்திய, மாநில அரசு திட்டங்களை நடைமுறைப் படுத்துதல், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் செயலாக்கத்தை முறைப்படி கண்காணித்தல் ஆகியவனவற்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.

தொழில் நுட்பம் சார்ந்த பணிகள் தலைமை பொறியாளர் அதிகாரம் கொண்ட ஒரு கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் செயல்படும் தொழில் நுட்பபிரிவு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையருக்கு உதவி புரிந்துவருகிறது.

தமிழ்நாடு மகளிர் நலமேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர், மகளிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு பொறுப்பாவார். கிராம்புற ஏழை மக்களை ஆற்றல் படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்திற்கான திட்டங்கள் திட்டஇயக்குநர், புதுவாழ்வு திட்டம் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் வாழ்வாதார திட்டங்களை செயல்படுத்தவும் திட்ட இயக்குநர் தலைமையில் ஒரு அலகு செயல்பட்டு வருகிறது.

மாவட்ட அளவில்

மாவட்ட ஆட்சித்தலைவர் மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளின் ஆய்வாளராக செயல்படுகிறார். மாவட்டத்தில் திட்டப்பணிகளை மேற்கொள்ளும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு மாவட்ட ஆட்சியரே தலைவர் ஆவார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் திட்ட இயக்குநர், திட்ட பணிகளை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியருக்கு உதவிபுரிகிறார். ஒவ்வொரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிலும், நிர்வாக பொறியாளர் தலைமையில் ஒரு பொறியியல் பிரிவு இயங்கி வருகிறது.

உதவி இயக்குநர் நிலையிலான ஒரு செயலாளர், மாவட்ட ஊராட்சியில் பணிபுரிகிறார். அத்துடன், இவர் பதவி வழி மாவட்ட திட்ட குழுவின் செயலாளராகவும் உள்ளார். மேலும், நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மற்றும் உதவி இயக்குநர் (தணிக்கை) ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு நிர்வாகத்தில் உதவி புரிகின்றனர்.

வட்டார அளவில்

வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) என இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆவார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறார். ஒவ்வொரு வட்டார ஊராட்சியிலும் ஒன்றியப் பொறியாளர், உதவி பொறியாளர், பணி மேற்பார்வையாளர் மற்றும் சாலை ஆய்வாளர் ஆகியோர் தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்கின்றனர். இப்பொறியாளர்களின் செயல்பாடுகள் உட்கோட்ட அளவில் உள்ள ஊரக வளர்ச்சி உதவி செயற் பொறியாளர்களால் கண்காணிக்கப்படுகிறது.

கிராம ஊராட்சி அளவில்

கிராம ஊராட்சித் தலைவரே கிராம ஊராட்சியின் செயல் அலுவலரும் ஆவார். தலைவர் மற்றும் துணைத்தலைவர் அல்லது ஊராட்சிகளின் ஆய்வாளரால் (மாவட்ட ஆட்சித் தலைவர்) நியமிக்கப்படும் கிராம ஊராட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு கிராம ஊராட்சி கணக்குகளில் இருந்து மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கான காசோலைகளின் ஒப்பம் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி தலைவருக்கு கிராம ஊராட்சி செயலாளர் நிர்வாகத்தில் உதவிபுரிகிறார்.

ஊராட்சி நிர்வாகம்

கிராம ஊராட்சியின் கடமைகள்

மூன்றடுக்கு ஊராட்சிகளில், அடிப்படை வசதிகளை உருவாக்கி, அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்து செயல்படும் அமைப்பாக கிராம ஊராட்சி முக்கிய பங்காற்றுகிறது. இந்த அமைப்பு மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக செயல்படுகிறது.

1. கிராம ஊராட்சிகளின் சட்டரீதியான கடமைகள்

1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 110-ன் படி கீழே குறிப்பிட்டுள்ள பணிகளை மேற்கொள்ளுதல் கிராம ஊராட்சிகளின் முக்கியக் கடமையாகும்.

1) அனைத்து கிராமச் சாலைகள், பாலங்கள், சிறுபாலங்கள், தடுப்புச்சுவர்கள் மற்றும் தரைப்பாலங்களை அமைத்தல், பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் (நெடுஞ்சாலைகள் மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் தவிர)

ii) பொது இடங்களில், குடியிருப்பு பகுதிகளில் மற்றும் சாலைகளில் தெரு விளக்குகள் அமைத்தல்.

iii) கழிவுநீர்க் கால்வாய் அமைத்துக் கழிவுநீரை வெளியேற்றுதல்.

iv) தெருக்களை சுத்தம் செய்தல் மற்றும் சுகாதாரத்தை திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டின் மூலமாக மேம்படுத்துதல்.

v) பொதுக் கழிப்பிட வசதி ஏற்படுத்துதல்

Vi) இடுகாடுகள் மற்றும் சுடுகாடுகளை ஏற்படுத்திப் பராமரித்தல்.

vi) குடிநீர் வழங்குதல்.

viii) சமுதாய சொத்துக்களை பராமரித்தல்

ix) கிணறுகளை பராமரித்தல் மற்றும் குளம் தோண்டுதல், பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல்

x) அவ்வப்போது அரசு அறிவிக்கை வாயிலாகப் பணிக்கக்கூடிய பிறகடமைகள்

2. விருப்புரிமைப் பணிகள்

1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 111-ன் படி ஊராட்சியின் தேவைக்கேற்பவும் நிதி ஆதாரங்களைக் கணக்கில் கொண்டும் பின்வரும் கடமைகளை நிறைவேற்றிட வேண்டும்.

i) மரங்களை நட்டு பாதுகாத்தல்.

ii) குடியிருப்பு இல்லாத பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் தெருவிளக்குகள் அமைத்தல்

iii) சந்தைகள் ஏற்படுத்தி பராமரித்தல்

iv) விழாக்கள் மற்றும் பொருட்காட்சிகளை கட்டுப்படுத்துதல்

v) வண்டிகள் நிறுத்துமிடங்கள், கால்நடைத் தொழுவங்கள், இறைச்சிக் கூடங்கள் மற்றும் படிப்பகங்களை ஏற்படுத்தி பராமரித்தல்.

vi) விளையாட்டுத் திடல்கள், பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஏற்படுத்தி பராமரித்தல்.

கிராம ஊராட்சிக் குழுக்கள்

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் கீழ்க்கண்ட குழுக்கள் அமைத்து செயல்பட வேண்டும்.

*நியமனக் குழு

*வளர்ச்சிக் குழு

*வேளாண்மைக் குழு

*பணிகள் குழு

*கல்விக் குழு

நியமனக் குழு

*கிராம ஊராட்சியில் ஊராட்சி நிதியில் ஊதியம் பெற அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை தேர்வு செய்வது இக்குழுவின் முக்கிய பணி ஆகும்.

இக் குழுவில் கிராமஊராட்சித் தலைவரும், தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களும் இடம் பெறுவர்.

வளர்ச்சிக் குழு

*இக் குழுவின் தலைவராக கிராம ஊராட்சியில் உள்ள பெண் உறுப்பினர்களில் ஒருவர் இருப்பார். மேலும் இரண்டு உறுப்பினர்களும் இடம் பெறுவர்.

*மக்கள் நலம், சுகாதாரம், குடிநீர், சமுதாய சொத்துக்கள் ஆகியவற்றினை பராமரித்தல், தரம் உயர்த்துதல், தொற்று நோய் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு முகாம் அமைத்தல், தடுப்பூசி முகாம்கள் அமைத்தல் ஆகியவை இக்குழுவின் முக்கிய பணிகளாகும்.

வேளாண்மைக் குழு

* இக்குழுவின் தலைவர், கிராம ஊராட்சியின் உறுப்பினர்களுள் ஒருவராவார். நீர் பாசன ஆதாரங்களில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த விவசாய குழுக்களை ஏற்படுத்துதல், வேளாண்மை, தோட்டக்கலை, பட்டுவளர்ப்பு, பால்பண்ணை, தரிசு நிலமேம்பாடு, வறட்சிப் பணிமேம்பாடு, சமூக காடுகள், நிலமேலாண்மை மற்றும் மண் அரிப்பு தடுப்பு போன்ற நடவடிக்கைகளில் கிராம ஊராட்சிக்கு உதவுதல் போன்ற முக்கிய பணிகளை இக்குழு மேற்கொள்ளும்.

பணிகள் குழு

* மத்திய, மாநில அரசுத் திட்டங்களை தரத்துடன் உரிய காலத்தில் நிறைவேற்றவும், கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள உள்ளூர் வள ஆதாரங்களைப் பயன்படுத்தி வளர்ச்சித் திட்டங்களை தயாரிக்கவும், இக்குழு கிராம ஊராட்சிக்கு உதவியாக இருக்கும்.

கல்விக் குழு

* கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணித்தல், பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மக்களின் பங்கேற்பினைப் பெறுதல், மக்களிடையே முதியோர் கல்வி, நூலகப் பராமரிப்பு, எழுத்தறிவு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகாம்களை அமைத்தல் ஆகியவை இக்குழுவின் முக்கிய பணிகளாகும்.

கிராமசபை

* கிராமசபை என்பது ஒவ்வொரு கிராம ஊராட்சியில் உள்ள ஜனநாயகத்தின் ஆணிவேராகும்.

* கிராம ஊராட்சிகள் செவ்வனே செயல்படத் தேவையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்தினை ஊக்குவிக்கவும், திட்டமிடுதல், திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் பயனாளிகளை தேர்வு செய்தல் ஆகியவற்றில் பொதுமக்களின் பங்கேற்பினை அதிகரித்தல் மற்றும் சமூகத் தணிக்கைக்கு வழிவகுத்திட செயல் திறன் மிக்க ஒரு கிராமசபை அவசியமாகிறது.

* சட்டப்படி, இரண்டு கிராமசபைக் கூட்டங்களுக்கு இடையே உள்ள காலம் ஆறுமாதங்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில் கிராமசபைக் கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும்.

* ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஆண்டில் குறைந்தது நான்கு முறை, அதாவது ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15, அக்டோபர் 2 ஆகிய நாட்களில் கிராமசபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

* கிராம ஊராட்சியில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் அரசு கீழ்க்கண்டவாறு குறை வெண்வரம்பு நிர்ணயம் செய்துள்ளது.

கிராமசபை கூட்டத்திற்கான குறை வெண்வரம்பு

மக்கட்தொகை

குறைவெண்வரம்பு

500 வரை

50

501 முதல் 3000 வரை

100

3001 முதல் 10000 வரை

200

10001க்குமேல்

300

கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் மற்றும் கூட்ட நடவடிக்கைகளை முறையான பதிவேடுகள் மற்றும் புகைப்படம் மூலம் பதிவு செய்யவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கிராமசபை பின் வரும் முக்கியமான பணிகளை நிறைவேற்றுகின்றது.

1. கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குதல்.

2. கிராம ஊராட்சியின் வரவு-செலவு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குதல்.

3. அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து தகவல் தெரிவித்து வளர்ச்சிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

4. பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளின் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்குதல்.

5. திட்டப்பணிகள் செயல் பாட்டின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தல்.

6. தணிக்கை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல்.

7. கிராமத்தில் உள்ள பல்வேறு இனமக்களிடையே சமுதாய மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவித்தல்.

நிதி ஆதாரங்கள்

மூன்றடுக்கு கிராம ஊராட்சி அமைப்புகளில் வரிவிதிப்பு செய்ய அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பு கிராம ஊராட்சியாகும். கிராம ஊராட்சிகள், கீழ்க்கண்ட வரி, வரியில்லா வருவாய் மற்றும் மான்யம் நிதி ஆதாரங்களைப் பெற அதிகாரம் பெற்றுள்ளன.

1. வரிவருவாய்

கிராம ஊராட்சிகள் கீழ்க்கண்ட வரி இனங்களிலிருந்து வருவாயாகப் பெற அதிகாரம் பெற்றுள்ளன.

i) வீட்டு வரி/ சொத்துவரி

i) தொழில் வரி

i) விளம்பர வரி

2. வரியல்லாத வருவாய்

கீழ்க்கண்ட இனங்களிலிருந்து வரியல்லாத வருவாய் பெற கிராம ஊராட்சிகள் அதிகாரம் பெற்றுள்ளன.

i) மனைப்பிரிவுகள் மற்றும் கட்டடவரைபட அனுமதிக்கான உரிமக் கட்டணம்

ii) அபாயகரமான, அருவருக்கத்தக்க தொழில்களுக்கான கட்டணங்கள்

iii) சந்தைக் கட்டணம்

iv) குடிநீர் கட்டணம்

v) வண்டி நிலையங்களுக்கான கட்டணம்

vi) சமூகக் காடுகள் ஏலம்

vi) மீன் பாசிகுத்தகை

vi) 2சிபட்டா கட்டணம்

ix) சந்தை மற்றும் பொருட்காட்சிகளிலிருந்து பெறப்படும் வருமானங்கள்

x) படகுக்குழாம் மூலம் பெறப்படும் கட்டணங்கள்

xi) அபராதங்கள் மற்றும் தண்டத்தீர்வை.

xi) கனிமம் மற்றும் சுரங்க உரிம தொகை

மனைப் பிரிவுகள் மற்றும் கட்டடவரைபட அனுமதிக்கான உரிமக் கட்டணம்

* ஊரகப்பகுதிகளில் உள்ளமனைப் பிரிவுகள் மற்றும் கட்டிட வரைபடங்களுக்கு அனுமதி அளித்தல் தொடர்பாக தமிழ்நாடு ஊராட்சிகள் கட்டட விதிகள் 1997ல் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊராட்சிகள் கட்டட விதிகள், 1997 விதி 3-ன் படி கிராம ஊராட்சித் தலைவரால், நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குநர் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட இணை இயக்குநர் அல்லது துணை இயக்குநர் முன் அனுமதியுடன் மனைப்பிரிவு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

* மனைப்பிரிவு அனுமதிக்கான விண்ணப்பத்தினை கிராம ஊராட்சித் தலைவரிடம் விண்ணப்பதாரரால் அளிக்கப்பட வேண்டும். கிராம ஊராட்சித் தலைவர், அவ்விண்ணப்பத்தை நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குநருக்கு தொழில்நுட்ப அனுமதிக்காக பரிந்துரைக்கவேண்டும்.

* விண்ணப்பதாரரால் கிராம ஊராட்சிகளுக்கு ஒப்பளிப்பு செய்திட வேண்டிய பொது உபயோகத்திற்கான திறந்த வெளி இடம் மற்றும் வளர்ச்சிக் கட்டணம் உள்ளிட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குநரால் மனைப்பிரிவுகளுக்கு தொழில்நுட்ப அனுமதி வழங்கப்படும். அதனடிப்படையில் கிராம ஊராட்சித் தலைவரால் மனைப்பிரிவுகளுக்கான இறுதி ஒப்புதல் வழங்கப்படும்.

* தமிழ்நாடு ஊராட்சிகள் கட்டடவிதிகள், 1997 விதி 4-ன் படி குறிப்பிட்ட வரையறைகளுக்குட்பட்டு கட்டட வரைபட அனுமதி கிராம ஊராட்சித் தலைவரால் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* 4,000 சதுர அடி பரப்பளவுக்கு மிகாத குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் 2,000 சதுரஅடி பரப்பளவுக்கு மிகாத வணிக கட்டடங்களுக்கு வரைபட அனுமதியினை கிராம ஊராட்சித் தலைவர் வழங்கலாம்.

* இவ்வரம்பிற்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குநரின் தொழில்நுட்ப அனுமதியுடன் கட்டட வரைபட அனுமதியினை கிராம ஊராட்சித் தலைவர் வழங்கலாம்.

ஊராட்சி ஒன்றியம்

* தமிழ்நாட்டில் இடைநிலை அளவில் 385 ஊராட்சி ஒன்றியங்கள் (வட்டாரஊராட்சிகள்) உள்ளன.

* ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும், ஊராட்சி ஒன்றிய வார்டுகளை உள்ளடக்கிய வளர்ச்சி வட்டாரங்களாகும்.

* ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தொடர்புடைய வார்டில் உள்ள மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

* தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களால், மறைமுகத் தேர்தலின் மூலம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் தேர்வு செய்யப்படுவார்.

* வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டாரஊராட்சி), ஊராட்சி ஒன்றியத்தின் செயல் அலுவலர் ஆவார். அவருக்கு உதவியாக நிர்வாகப் பிரிவு மற்றும் பொறியியல் பிரிவில் உள்ள பணியாளர்கள் இருப்பார்கள்.

1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 112-ன் படி ஊராட்சி ஒன்றியக் குழு மேற்கொள்ளும் பணிகளில் முக்கியமானவை பின்வருமாறு :

1. ஊராட்சி ஒன்றிய சாலைகள், சிறுபாலங்கள், பாலங்கள், தடுப்புச் சுவர்கள், தரைப்பாலங்கள் அமைத்தல், பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல்.

2. ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான கட்டடங்கள் கட்டுதல் மற்றும் பராமரித்தல்.

3. ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளான சிறுபாசனக் குளங்கள், குட்டைகள், ஊரணிகள் ஆகியவற்றை பராமரித்தல் மற்றும் புதிதாக அமைத்தல்

4. தொற்று நோய் பரவாத வண்ணம் இருக்கத் தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

5. ஊராட்சி ஒன்றியக் குழுக்களால் வரையறுக்கப்பட்ட கண்காட்சி மற்றும் விழாக்கள் நடத்துதல்.

6. ஊராட்சி ஒன்றியச் சந்தைகளாக வகைப்படுத்தப்பட்டவற்றை பராமரித்தல்.

1994- ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 114 ன் படி பொருளாதார வளர்ச்சி குறித்த திட்டங்கள் மற்றும் இதர செயல்பாடுகளை ஊராட்சி ஒன்றியக் குழுக்கள் செயல்படுத்தும்படி அரசு பணிக்கலாம்.

ஊராட்சி ஒன்றியங்களின் நிதி ஆதாரம்

1. ஊராட்சி ஒன்றிய குழுவிடம் வரி நிர்ணயம் செய்யும் அதிகாரம் இல்லை.

2. வரியில்லா வருவாய், ஒப்படைக்கப்பட்ட / பகிர்ந்தளிக்கப்பட்ட வருவாயில் ஒரு பகுதி, கட்டணங்கள், வாடகை, அபராதம் மற்றும் தண்டதீர்வை.

3. மாநில நிதி ஆணையத்தால் விடுவிக்கப்படும் மானியங்களான மக்கள் தொகை அடிப்படையிலான மானியம் மற்றும் குறைந்த பட்சமானியம், ஆகியன ஊராட்சி ஒன்றியத்திற்கு மானியங்களாக வழங்கப்படுகிறது. ஐந்தாவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் குறைந்த பட்சமான மானியம் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத் திற்கும் ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாநில நிதிக்குழு மானியம்

73 வது அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 198 ன் படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ச் சியாக மாநில நிதிக்குழு ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மாநில நிதிக் குழு அமைத்த முதன்மை மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்றாகும். ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிபகிர்வு செய்திட இதுவரை ஐந்து மாநில நிதிகுழு அமைக்கப்பட்டுள்ளது.

1. அரசால் விதிக்கப்படும்வரி, தீர்வை, சுங்கம் மற்றும் கட்டணங்கள் மூலம் பெறப்படும் மொத்த வருவாயில் மாநிலத் திற்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிரித்து வழங்கும் முறை.

2. ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டியவரிகள், தீர்வை, சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றை நிர்ணயித்தல்.

3. மாநிலத்தின் மொத்தத் தொகுப்பு நிதியிலிருந்து ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மானியங்கள்.

4. ஊராட்சிகளின் நிதி ஆதாரத்தைப் பெருக்கு வதற்கான வழிமுறைகள்.

ஐந்தாவது மாநில நிதி ஆணையம்

மாநில அரசால் நியமிக்கப்பட்டிருந்த ஐந்தாவது மாநில நிதி ஆணையம், 2017 முதல் 2022 வரையிலான காலத்திற்கு தனது பரிந்துரையை டிசம்பர் 2016 ல் அளித்துள்ளது. ஐந்தாவது மாநில நிதிக்குழு பரிந்துரைகளை அரசு ஏற்று அதன் படிசட்டமன்ற பேரவையில் 24.03.2017 அன்று வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. கீழ்க்காணும் முக்கிய பரிந்துரைகளின் மீது அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

a) மாநிலத்தின் சொந்த வரிவருவாயில் 10 சதவீத விழுக்காடு ஊரக மற்றும் நகர் புறஉள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.

b) ஊரக மற்றும் நகர் புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையே 56:44 என்கிற விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படும்.

c) ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையிலேயான நிலையான பகிர்வு முறையே மாவட்ட ஊராட்சி, வட்டார ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு 8:37:55 ஆகும்.

D) கிராம ஊராட்சிகளுக்கான குறைந்த பட்சமான்யம் ரூ.5 இலட்சத்திலிருந்து ரூ.7 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

e) ஊராட்சி ஒன்றியங்களுக்கான குறைந்தபட்ச மானியம் ஆண்டுக்கு ரூ.40 இலட்சம் என உயர்த்தப்பட்டுள்ளது.

f) ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுக்குகளுக்கு கிடையேயான மாநில நிதிக் குழுமானிய தொகை பகிர்வு கீழ் காணும் வழி முறைகளை கொண்டிருக்கும்.

I) 2011 ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படிமக்கள் தொகை: 60%

II) பரப்பளவு: 15%

III) ஆதிதிராவிடர்/ மலைவாழ் மக்கள்தொகை : 15%

IV) தனிநபர் செலவு நுகர்வு இடைவெளி: 10%

g) ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரியபங்குத் தொகையில் 20 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டு உட்கட்டமைப்பு இடைநிரவல் நிதிக்கு பதிலாக மூல தனமானிய நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

h) ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மொத்த தொகையில் 10 விழுக்காடு பற்றாக்குறை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொகுப்பு நிதியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மூலதன மானியநிதி

* ஏற்கனவே நடை முறையில் இருந்த உட்கட்ட மைப்பு இடைநிரவல் நிதிக்கு பதிலாக ஐந்தாவது மாநில நிதிஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மூலதனமான்ய நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கப்படும் பகிர்மான நிதி தொகுப்பில் 20 விழுக்காடு மூலதன மான்யநிதிக்கு வழங்கப்படும். மாநில அளவில் முக்கியமானதாக கருதத்தக்க திட்டங்களை செயல்படுத்த இதில் 20 விழுக்காடு தனியே ஒதுக்கீடு செய்யப்பட்டு ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைசெயலர், ஊரகவளர்ச்சி இயக்குநர், நிதித்துறை பிரதிநிதி ஒருவர் மற்றும் மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலர் அடங்கிய குழுவால் இப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும்.

* எஞ்சியுள்ள 80 விழுக்காடு நிதிமாவட்ட ஊராட்சிகளுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்பிற்கு இடையேயான பகிர் மானவிகிதத்தின் அடிப்படையில் மாவட்ட வாரியாக பகிர்ந்து அளிக்கப்படும். நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் ஆலோசனையின் படி ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையினால் வெளியிடும் அரசாணையின் அடிப்படையில் மாவட்டதிட்டக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்படும்.

பற்றாக்குறை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் ஒட்டு மொத்த பகிர்மான நிதியில் 10 விழுக்காட்டினை பற்றாக்குறை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தொகுப்பு நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

• இதில் 40 விழுக்காடு தொகை அதாவது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒட்டுமொத்த பகிர்மான நிதியில் 4 விழுக்காடு, கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது மூன்று ஆண்டுகளில் நிதி பற்றாக்குறை உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு இடையே ஐந்தாவது நிதி ஆணைய காலத்தின் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஊரகவளர்ச்சி இயக்குநரால் பகிர்ந்து அளிக்கப்படும்.

மத்தியநிதி ஆணைய மானியம்

பதினான்காவது நிதி ஆணைய குழு கிராம ஊராட்சிக்கு அடிப்படை மான்யம் மற்றும் செயலாக்க மான்யம் ஆகிய இருமானியங்களை பரிந்துரை செய்துள்ளது. மொத்தமான்ய தொகையில் 90 விழுக்காடு அடிப்படை மான்யமாகும். 10 விழுக்காடு செயலாக்க மான்யமாகும்.

1. 14th மத்தியநிதி ஆணைய அடிப்படை மானியம்

பதினான்காவது மத்திய நிதி ஆணைய அடிப்படை மானியத் தொகை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தொகை முழுவதும் மக்கள் தொகை அடிப்படையில் கிராம ஊராட்சிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் அடிப்படை பணிகளான குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் பராமரிப்பு, சுகாதாரம், மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவற்றிற்காக இம்மானியம் பயன் படுத்தப்படுகிறது. இத்தொகை மாநில அரசின் மானியத்தோடு இணைக்கப்பட்டு கிராம் ஊராட்சியின் விருப்புரிமை பணிகளான பூங்கா, உடற்பயிற்சி கூடம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

II. 14th மத்தியநிதி ஆணைய செயலாக்க மானியம்

கிராம ஊராட்சிகள் பதினான்காவது நிதிஆணையக்குழு மானியம் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசு ஆணை எண். 55 ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி (ப.ரா.1) துறைநாள் 05.05.2016-ல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசிதழ் எண்.117 நாள். 20.05.2016-ல் இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பதினான்காவது மத்திய நிதிஆணையம், கிராம ஊராட்சிகளுக்கு செயலாக்க மானியம் வழங்கிட விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் பரிந்துரை செய்துள்ளது. கீழ்குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு கிராம ஊராட்சிகளுக்கு செயலாக்க மானியம் வழங்கப்படுவதை மாநில அரசே தீர்மானித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

1.கிராம ஊராட்சிகள், செயலாக்க மானியம் கோரும் ஆண்டுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளுக்குரிய ஊராட்சி கணக்கு தணிக்கை அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும்.

2. கிராம ஊராட்சிகளின் முந்தைய ஆண்டைவிட சொந்தவருவாய் அதிகரித்திருப்பது, அத்தணிக்கை அறிக்கையில் பிரதிபலிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய்

(Pooled Assigned Revenue)

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் முத்திரைத்தாள் வரி, கேளிக்கை வரி ஆகியவற்றிலிருந்து பெறப்படும் வருவாயினை மாநில அளவில் ஒருங்கிணைத்து ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டக் கூறுநிதி

ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலரைத் தலைவராகக் கொண்ட குழுவிற்கு ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்ட கூறுநிதியிலிருந்து பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள், பெரியபாலங்கள், தரைப்பாலங்கள், இணைப்புச் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற பெரிய அளவிலான பணிகள் இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளன.

மாநில அரசுத் திட்டங்கள்

தாய்திட்டம்

(தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம்)

திட்டத் துவக்கம்

தமிழ் நாட்டில் ஊரகபகுதிகளிலுள்ள குக்கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் பெரும்பாலான அளவில் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், “தாய் II திட்டம்” (தமிழ்நாடுகுக் கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்) 2016-17 ம் ஆண்டில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திட்டநோக்கம்

சிறுபாசன ஏரிகள் மற்றும் சாலைகள் ஆகிய அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதே தாய்திட்டத்தின் நோக்கமாகும்.

நிதிஒதுக்கீடுவிவரம்:

2016-2017ம் ஆண்டில்தாய் II திட்டம் ரூ. 750 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப் பட்டுள்ளது.

திட்டக் கூறுகள் மற்றும் எடுத்துச் செய்யப்படும் பணிகள்

“தாய்” II திட்டத்தில் அனுமதிக்கப்படும் பணிகள் பின் வருமாறுவகைப் படுத்தப்பட்டுள்ளன.

1. சிறுபாசன ஏரிகள் புனரமைத்தல் / மேம்படுத்துதல்

2. அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சாலைகள்

1. சிறுபாசன ஏரிகள் புனரமைத்தல் / மேம் படுத்துதல்

கடந்த 40 ஆண்டு காலமாக சிறுபாசன ஏரிகளில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு காளன நீர்வழிந் தோடிகள் மற்றும் மதகுகள் சீரமைக்கப்படாமல் பழுதடைந்த நிலையில் உள்ளன. இந்நிலையினை மாற்றிடவும், சிறுபாசன ஏரிகளில் உள்ள முட்புதற்களை அகற்றி இயந்திரங்களின் மூலம் ஏரிகளை தூர்வாரவும், மதகு மற்றும் கலங்கல்களை புதிதாககட்டவும், பழுது பார்த்திடவும், கரைகளை பலப்படுத்திடவும் விரிவான முறையில் சிறுபாசன ஏரிகள் புனரமைப்பு செய்திட திட்டமிப்பட்டுள்ளது. இதன் மூலம் குக்கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டினை களையவும், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும், சிறுபாசன ஏரிகளின் முழுகொள்ளவினை மீட்கவும், நீர்நிலைகளில் அதிகபடியாக வழிந்தோடும் நீரினை தடுத்திடவும், குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நீரினை சேமித்து முறைப்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் கிராமப்புற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

2. அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சாலைகள்

தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளிலுள்ள குக்கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் பெரும்பாலான அளவில் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குடியிருப்புகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்கடியினர் குடியிருப்புகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் குடியிருப்புகளில் தேவைப்படும் அடிப்படை உட்கட்டமைப்பினை நிறைவு செய்வதில் உள்ள இடைவெளிகளை நிரப்பிடும் நோக்கத்துடன் அடிப்படை உட்கட்டமைப்பு பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் தார்ச்சாலைகளை வலுப்படுத்துதல் மற்றும் தார்ச்சாலைகளை பராமரித்தல் போன்ற சாலை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பணிகள் தேர்வு செய்தல்

ஒவ்வொருகிராம ஊராட்சியிலும் தெரிவு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து கீழ்க்கண்ட உறுப்பினர்கள் அடங்கிய ஊராட்சி ஒன்றிய அளவிலானகுழு முடிவு செய்யும்.

1. வட்டார வளர்ச்சி அலுவலர் ( வட்டார ஊராட்சிகள்)

2. உதவி பொறியாளர் (ஊவ) / வட்டார பொறியாளர்

3. உதவி செயற் பொறியாளர் (ஊவ) / உதவி செயற்பொறியாளர் (சாலைகள் மற்றும் பாலங்கள்)

இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட பணிகளுக்கான கருத்துருக்கள் நிர்வாக அனுமதி வேண்டி மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநருக்கு அனுப்பப்படும். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவரால் நிர்வாக அனுமதி வழங்கப்படும்.

பணிகள் மேற்கொள்ளுதல்

நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000-த்தின் படி மேற்கொள்ளப்படுகின்றன. பணிதேர்வு, பணி நடைபெறுதல், பணி முடித்தல் ஆகியவை புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

நிதி ஒதுக்கீட்டில் 5 சதவிகிதம் மாநில / மாவட்ட தகவல் கல்வி மற்றும் தொடர்பு (IEC) ஆகியவற்றிற்காக பயன் படுத்திக்கொள்ளலாம்.

திட்ட செயலாக்கம்

2016-17 ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 1,200 சிறு பாசன ஏரிகள், ரூ.150 கோடி மதிப்பீட்டில் 7,282 அடிப்படை கட்டமைப்பு பணிகள் மற்றும் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 1,369 சாலைப்பணிகள் எடுக்கப்பட்டுள்ளன.

திட்ட செயலாக்க அலகு

* இத்திட்டத்திற்கான நிதி மாநில அரசிடமிருந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளுக்கு வழங்கப்படுகிறது.

* கண்டறியப்பட்ட தேவைகளை நிறைவேற்றும் பணிகளுக்கான நிர்வாக அனுமதி மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படுகிறது.

* செயற் பொறியாளர், உதவி செயற்பொறியாளர், மற்றும் உதவி பொறியாளர் ஆகியோர் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் அனுமதி வழங்குவார்கள்.

* திட்டஇயக்குநர், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை அவர்கள் ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் பணிகளை நிறைவேற்றுவர்.

திட்டத்தில் பயன் பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்

மாநில அளவில் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர், சென்னை-15.

மாவட்டஅளவில் : மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

வட்டார அளவில் : வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), ஒன்றியப் பொறியாளர்

அம்மா பூங்கா

முன்னுரை

2016 - 17 ஆம் ஆண்டு முதல் அம்மா பூங்காக்கள் அமைக்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது.

நோக்கம்

நகரப்பகுதிகளுக்கு இணையாக ஊரக பகுதிகளில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியோர்களுக்கு பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய வசதிகள் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்காமாகும்.

நிதிஒதுக்கீடு

2016-17 ல் இத்திட்டத்திற்காக ரூ. 100 கோடி நிதி, மாநில நிதிக்குழு மானியம் மற்றும் 14 வது நிதிக்குழு மானியம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திட்டசெயலாக்கம்

மாவட்ட அளவில் இத்திட்டத்தினை செயல்படுத்தும் செயல் அதிகாரம் மாவட்ட ஆட்சியருடையதாகும்.

அம்மா பூங்காக்கள் கிராம ஊராட்சிகளில் அதிக அளவு மக்கள் வாழும் குடியிருப்புகளில், சுமார் 15,000 முதல் 20,000 சதுர அடி பரப்பளவில், ஒப்படைக்கப்பட்ட திறந்தவெளி பாதுகாக்கப்பட்ட இடம் இருப்பின் (OSR land) அமைக்கப்படும். அம்மா பூங்காக்கள் கிராம ஊராட்சி மூலம் பராமரிக்கப்படும்.

அம்மா பூங்காக்களில் குழந்தைகளின் விளையாட்டு சாதனங்கள் அடங்கிய விளையாட்டு பகுதி மற்றும் போதுமான இடம் இருப்பின் கூடுதல் வசதிகளுடன் அமைக்கப்படும்.

திட்டத்தில் பயன் பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்

மாநில அளவில் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர், சென்னை15.

மாவட்ட அளவில் : மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

வட்டார அளவில் : வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)

அம்மா உடற்பயிற்சி கூடம்

முன்னுரை

2016-17 ஆம் ஆண்டு முதல் அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நோக்கம்

ஊரகபகுதி இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தையும் மனவளத்தையும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நிதி ஒதுக்கீடு

2016-17 ல் இத்திட்டத்திற்காக ரூ. 50 கோடி நிதி, மாநில நிதிக்குழு மானியம் மற்றும் இடை நிரவல் நிதி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திட்ட செயலாக்கம்

மாவட்ட அளவில் இத்திட்டத்தினை செயல்படுத்தும் செயல் அதிகாரம்மாவட்ட ஆட்சியருடையதாகும்.

அம்மா உடற்பயிற்சி கூடம் அம்மா பூங்காவிற்குள் 1,161 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்படும். அம்மா உடற்பயிற்சி கூடம் கிராம ஊராட்சி மூலம் பராமரிக்கப்படும்.

திட்டத்தில் பயன் பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்

மாநில அளவில் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர், சென்னை15.

மாவட்ட அளவில் : மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் திட்டஇயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

வட்டார அளவில் : வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமஊராட்சி)

முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்

நோக்கம் : கிராமப்புற ஏழைமக்களின் வீட்டுவசதி தேவைகளை பூர்த்தி செய்வதோடு பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிதி ஆதாரம் இத்திட்டத்திற்கு தேவையான முழுநிதியையும் மாநில அரசே வழங்குகிறது.

அலகுத் தொகை - ரூ.2,10,000/ -

ஒரு வீட்டிற்கான கட்டு மானத் தொகைரூ. 1,80,000/-

சூரிய சக்தி விளக்கிற்கான தொகைரூ. 30,000/-

மொத்தம் ரூ. 2,10,000/ -

சிறப்பு அம்சங்கள் :

1. ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவு கொண்டதாக இருக்கும்.

2. ஒவ்வொரு வீடும், வசிக்கும் அறை, படுக்கை அறை, சமையல் அறை, தாழ் வாரம் மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படும்.

3. ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும்.

4. ஒவ்வொரு வீட்டிலும் சூரியசக்தியில் எரியும் 5 ஒளி உமிழும்டையோடு விளக்குகள் (டுநுனு) பொருத்தப்படும்.

5.கூடுதல் வசதியாக பயனாளியின் விருப்பத்தின் படி தமிழ்நாடு மின்சார வாரியத்திலிருந்து மீட்டர் மற்றும் மின்மாற்றிப் பொருத்தப்பட்டமின் இணைப்பும் பெறலாம்.

6. வீடுகள் கட்டும் பணி நேரடியாக பயனாளிகளால் மேற்கொள்ளப்படும். 7. சூரிய சக்தி விளக்குகள் அமைக்கும் பணிகளை செயல்படுத்துவதற்கு திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பொறுப்பாவார்.

8. இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்படுவதற்கான நிலஎடுப்பு ஏதும் செய்யப்படமாட்டாது. வீட்டுமனைப் பட்டா உள்ளவர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.

9.அமைக்கப்படும் சூரியசக்தி விளக்குகள் மற்றும் அத்துடன் கூடிய இதர உபகரணங்களை பயனாளிகள் முறையாக பயன்படுத்தும் விவரங்களைத் தெரிவிக்கும் சிற்றேடுகள் விநியோகம் செய்யப்படும்.

10. ஒவ்வொரு பசுமை வீடும் அனுமதிக்கப்பட்ட பரப்பளவான 300 சதுர அடிக்கு மிகாமல் இதற்கென தனியாக வடிவமைக்கப்பட்ட வாறு கட்டப்பட வேண்டும். இதன் வடிவமைப்பில் மாறுதல்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

11.இருப்பினும் அனுமதிக்கப்பட்ட வீட்டின் பரப்பளவான 300 சதுர அடியில் வீட்டின் வடிவமைப்பில் மாறுதல் செய்யாமல், சமையலறை மற்றும் படுக்கை அறை ஆகியவற்றை இட அமைவிற்கேற்ப மாற்றி அமைக்க அனுமதிக்கப்படும்.

12. பயனாளிகள் கதவுகள் மற்றும் ஜன்னல் களைத்தாங்களே ஏற்பாடு செய்து கொள்ளலாம். பயனாளிகளால் கதவுகள் மற்றும் ஜன்னல்களை ஏற்பாடு செய்ய இயலாத நிலையில், திட்டஇயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கதவுகள் மற்றும் ஜன்னல்களை ஏற்பாடு செய்து வழங்கிவிட்டு அதற்கான தொகையினை திட்ட நிதியிலிருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம்.

13. இத்திட்டத்திற்கான சின்னம் செராமிக் ஓடுகளில் வடிவமைக்கப்பட்டு அனைத்து வீடுகளிலும் அனைவரும் பார்க்கும் வகையில் பதிக்கப்பட வேண்டும்.

14. இத்திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட அனைத்து வீடுகளிலும் திட்டத்தின் பெயர், பயனாளியின் பெயர் மற்றும் வீடுகட்டப்பட்ட ஆண்டு ஆகிய விபரங்கள் தெளிவாகத் தெரியும் வகையில் வண்ணத்தினால் எழுதப்படும்.

15. ரூ.2.10 இலட்சம் அலகுத்தொகையுடன் கூடுதலாகமற்ற திட்டங்களுடன் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு பயனாளிக்கும் மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதித்திட்டத்துடன் ஒருங்கிணைந்து தினக் கூலி அடிப்படையில் 90 மனித நாட்களுக்கான ஊதியம் அளிக்கப்படவேண்டும்.

16. மேலும் பயனாளிக்கு தனிநபர் இல்லக் கழிப்பறைகட்ட ரூ.12,000 மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை வாய்ப்பு உறுதித்திட்டத்துடன் ஒருங்கிணைந்து வழங்கப்படவேண்டும்.

தகுதி வாய்ந்த பயனாளிகள் :

கிராமப்பகுதிகளில் வீடு இல்லாத வீட்டு மனைபட்டா உடைய ஏழைமக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ்தகுதி வாய்ந்த பயனாளிகள் ஆவர்.

பயனாளிகளின் தகுதி

பயனாளிகள் கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

1. சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியில் வசிப்பவராக இருக்கவேண்டும்.

2. 300 சதுர அடிக்கு குறையாத வீட்டுமனை சொந்தமாக இருக்கவேண்டும்.

3. குடும்ப தலைவரின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் பெயரிலோ வில்லங்க மற்ற வீட்டுமனைப்பட்டா இருக்க வேண்டும்.

4. தொடர்புடைய கிராமத்தில் அல்லது வேறு எங்கும் கான்கிரீட்கூரை போடப்பட்ட சொந்த வீடு எதுவும் இருக்கக்கூடாது.

5. அரசின் இதரவீடு கட்டும் திட்டங்களில் பயன் பெற்றவராக இருக்கக் கூடாது.

பயனாளிகள் தேர்வு

1. பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்படும் போது, கீழ்க்கண்ட நபர்களுக்கு அதாவது மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்றமற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் துணை இராணுவ படையினர், ஊரகப்பகுதிகளில் வாழும் ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறையால் (ICDS) அடையாளம் காணப்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பங்கள், திருநங்கைகள், துணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) அவர்களால் சான்றிதழ் வழங்கப்பட்ட ஹெச்ஐவி/எய்ட்ஸ்/ காசநோய் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீவிபத்து, வெள்ளம் போன்ற இதர பிற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மேலும், மனநலம் குன்றியோர் உள்ள குடும்பங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

2. ஒவ்வொரு கிராம ஊராட்சியில் வாழும் ஏழை மக்களிலிருந்து பயனாளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவை கிராம சபையில் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு பயனாளிகள் தெரிவு செய்யப்படும் போது தமிழ்நாடு வாழ்வாதார திட்டம் மற்றும் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் நலிவுற்றவர்கள் என்று தெரிவு செய்யப்பட்ட பட்டியலில் (PIP) இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

வீடுகள் ஒதுக்கீடு செய்தல்

1. மாநில அளவில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வோர் ஆண்டும் கட்டப்படவுள்ள வீடுகளின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்வார்.

2. மாவட்ட ஆட்சியர் மேலே கூறியவாறு பயனாளிகளை தெரிவு செய்யும் முறையை கடைபிடித்து அதன் அடிப்படையில் மாவட்ட அளவில் ஊராட்சிகளுக்கான வீடுகளை ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்க வேண்டும்.

3. தகுதியான பயனாளிகள் பட்டியல் தெரிவு செய்யப்படுவதற்கு கிராம அளவிலான குழு அமைக்கப்பட வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம்ஊராட்சி), மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு, கிராம ஊராட்சியில் வசிக்கும் ஏழை மக்களிலிருந்து வழிகாட்டி நெறிமுறைகளின் படி தெரிவுசெய்து, அவ்வாறு குழுவால் இறுதி செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியலை கிராமசபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிராம அளவிலான குழுவில் சிறப்பு அழைப்பாளராக இருப்பார்.

4. கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முன்னுரிமைப் பிரிவின் அடிப்படையில் வட்டாரவளர்ச்சி அலுவலர் (வட்டாரஊராட்சி), வீடுகள் ஒதுக்கீடு செய்வார்.

கிராம வாரியான வீடுகள் ஒதுக்கீடு செய்தல்

உள்ஒதுக்கீடு : இத்திட்டத்திற்கென தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு கீழ்க்கண்ட விகிதாச்சாரத்தில் பசுமை வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

1. ஆதிதிராவிடர் - 29%

2. பழங்குடியினர் - 1 %

3. இதரபிரிவினர் - 70%

மாவட்ட வாரியான ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

பணிகளுக்கான உத்தரவு வழங்குதல்

ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களால் நில உரிமை, இடம் ஆகியவை சரிபார்க்கப்பட்டதை உறுதி செய்த பிறகு தகுதியுள்ள பயனாளிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டாரஊராட்சி) வேலை உத்திரவினை வழங்குவார்.

திட்ட செயலாக்கம்

1. ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்திற்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் திட்டத்திற்கான நிர்வாக அனுமதி மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட வேண்டும்.

2. திட்ட செயலாக்கம், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (வட்டார ஊராட்சி) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

3. இடத்தை குறியீடு செய்தல் : சம்மந்தப்பட்ட கிராமஊராட்சியின் ஒன்றிய மேற் பார்வையாளர்/ ஒன்றிய / வட்டார பொறியாளர் அரசினால் ஒப்புதலளிக்கப்பட்ட வடிவமைப்புக் கேற்றவாறு வேலையைத் துவக்குவதற்காக நிலத்தில் குறியீடு செய்வார். வீடுகளைக் கட்டுவதற்கும் மற்றும் இதர தொழில்நுட்ப வேலைகளுக்கும் அரசாணை (நிலை) எண்.54, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி (PR.1) துறைநாள். 22.05.2014-ன் படி வட்டார பொறியாளர்கள் / ஒன்றிய பொறியாளர்கள் பொறுப்பாவார்கள்.

4. ஒன்றிய மேற்பார்வையாளர்கள் நிலத்தை குறியீடு செய்வதற்கும், மாதிரி வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்ப குறியீடுகளின் படி வீடுகள் கட்டும் பணிகளை மேற்பார்வையிடவும் உதவியாக இருப்பார்கள்.

5. உதவி செயற்பொறியாளர்களால் (ஊ.வ) மேல் அளவீடு செய்யப்பட வேண்டும்.

6. மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்கள், செயற் பொறியாளர்கள் (ஊ.வ) மற்றும் உதவி செயற் பொறியாளர்கள் (ஊ.வ) வீடுகளின் பணி முன்னேற்றத்தை அடிக்கடி ஆய்வு செய்து வீடுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாதிரி வடிவமைப்பிலும் அல்லது இத்திட்டத்திற்கான செயல்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் / அறிவுரைகளிலிருந்து மாறுபாடாக இல்லை என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

7. பசுமை வீடு களின் கட்டு மானத்தை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உதவியுடன் பயனாளிகளே மேற்கொள்வர்.

8. மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையால் சூரியசக்தி விளக்கு அமைக்கும் பணியை மேற்கொள்ளப்படும்.

திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்

மாநில அளவில் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர், சென்னை-15.

மாவட்ட அளவில்: 1. மாவட்ட ஆட்சித் தலைவர், 2. திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை.

வட்டார அளவில் : 1. வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), 2. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி).

கிராம ஊராட்சி அளவில் : கிராம ஊராட்சித் தலைவர்.

ஆதாரம் : தமிழ்நாடுஅரசு

2.94871794872
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top