பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம் / சமூக நடுநிலைமையும் அனைவரையும் உள்ளடக்குதலும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சமூக நடுநிலைமையும் அனைவரையும் உள்ளடக்குதலும்

கல்விக்கான சூழலிட வடிவமைப்பின் மூலமாக சமூக நடுநிலைமையும் அனைவரையும் உள்ளடக்குதலும்

அறிமுகம்

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தில் (யு.என்.சி.ஆர்.பி.டி) இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த உடன் படிக்கையின் 24ஆவது ஷரத்து அனைவரையும் உள்ளடக்கிய கல்விக்கான உரிமை குறித்து பேசுகின்றது. அனைவருக்கும் தரப்படும் கல்வி அதன் அனைத்து வகைகளிலும் தேவைப்படுகின்ற உதவிகளோடு கற்க முயலும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தரப்பட வேண்டும் என்பதை இந்த ஷரத்து உறுதிப்படுத்துகிறது. அனைவரையும் உள்ளடக்கும் சமுதாயச் சூழலில் சிறப்பு உதவிகளுடன் கல்வி கற்க விரும்பும் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது குறித்த ஒரு விரிவான செயல் உத்திக்கான தேவை இன்று எழுந்துள்ளது. சிறப்பு உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிகள் அவர்களுக்கு முட்டுச் சுவர்களாகத்தான் இருக்கின்றன. இத்தகைய பள்ளிகள் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் தனிமையை அதிகப்படுத்துகின்றன; அவர்களை அந்நியப் படுத்துகின்றன. சமூக விலக்கம் செய்கின்றன. எனவே இத்தகைய பள்ளிகள் இவ்வாறு இல்லாமல் நடுநிலைமையும் கருணையும் கொண்ட சமுதாயங்களைக் கட்டமைக்கும் இடங்களாக மாற்றப்பட வேண்டும். "கல்வி அளிப்பதில் அனைவரையும் உள்ளடக்குதல்" என்பது நடைமுறை மாற்றங்கள் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். அனைவரையும் உள்ளடக்குதல் என்பது பல்வேறு வகைப்பட்ட பின்னணி; பலதரப்பட்ட திறமைகள் கொண்ட குழந்தைகள் அனைவரும் ஒன்றாக ஒரே வகுப்பறையில் ஒரே பள்ளிகளில் படித்து வெற்றி பெறுவது என்பதே ஆகும். இத்தகைய மாற்றங்கள் சிறப்பு உதவிகள் தேவைப்படும் குழந்தைகளுக்கு மட்டும் பலன் அளிப்பதாக இருந்துவிடக் கூடாது. மாறாக அனைத்து மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், நிர்வாகிகள் மற்றும் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பலன் அளிப்பதாக இந்த மாற்றங்கள் இருக்க வேண்டும்.

அனைத்து குழந்தைகளுக்கும் போதிக்கும் வகையிலான ஆதரவான, எளிதில் கிடைக்கக் கூடிய ஒருங்கிணைந்த உலகளாவிய சூழ்நிலையைத் தரக்கூடிய வகையில் கல்விக்கான சூழலிடத்தை வடிவமைப்பதில் ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படுவதை இந்த ஆய்வுக் கட்டுரை அழுத்தமாக எடுத்துச் சொல்கிறது. குழந்தைகள் நமது சமுதாயத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்கள்; அவர்களின் பங்களிப்பு முக்கியமானது, கண்ணோட்டமும் முக்கியமானதாகும். எனவே சிறந்த நடைமுறைகளுக்கான பரிந்துரைகளை இந்த ஆய்வுக் கட்டுரை முன்வைக்கிறது.

பின்னணி

அனைவரையும் உள்ளடக்கிய கண்ணோட்டத்துடன் செயல்படும் வழக்கமான பள்ளிகள் மிகச் சிறப்பான பள்ளிகள் ஆகும். மாணவர்களிடையே பாரபட்ச மனோபாவத்தை எதிர்த்தல், சமுதாயத்தினரை வரவேற்கும் தன்மையை உருவாக்குதல், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தைக் கட்டமைத்தல், அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை நிறைவு செய்தல் போன்ற செயல்பாடுகளுக்கு இத்தகைய பள்ளிகள் திறன்மிக்க கருவிகளாக இருக்கும். இவ்வாறு செயல்படும் பள்ளிக்கூடங்கள் பெரும்பான்மை குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியை அளிப்பதோடு அவர்களின் திறனையும் மேம்படுத்துகின்றன. இதன்மூலம் ஒட்டுமொத்த கல்வி அமைப்பை பயனுள்ள செலவுதிறன் உடையதாக மாற்ற முடியும் (சிறப்பு உதவி தேவைப்படுவோரின் கல்விக்கான அறிக்கை மற்றும் செயல்பாட்டுக்கான சட்டகம் 2011).

1947ல் நம்நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து, இந்திய அரசு சிறப்புக் கல்வி குறித்த எண்ணற்ற கொள்கைகளை உருவாக்கி வந்துள்ளது. ஊனமுற்ற குழந்தைகளைச் சேர்த்துக் கொள்வதற்காக இந்திய அரசு கொள்கைகளை உருவாக்க முயற்சித்து வந்த போதிலும் அவற்றை நடைமுறைபடுத்துவதில் பின்னடைவே ஏற்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய கல்வி அமைப்பு ஏற்படவில்லை. நாடு முழுவதும் அனைவருக்குமான கல்வி என்ற இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை. ஊனமுற்றவர்களுக்கான சட்டம் மற்றும் நவம்பர் 28, 2001ல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்ட திருத்தம் ஆகியன 6 முதல் 14 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அரசு அளிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது. அதன் முடிவரையில் "அனைத்து" என்பது மாற்றுத்திறனாளிக் குழந்தைகளையும் உள்ளடக்கும் என தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் அனைத்திற்கும் இது சட்டபூர்வ பொறுப்பாக மாறி உள்ளது. இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய கல்வியைக் கொண்ட ஒரு வலுவான அமைப்பை கட்டமைக்கும் வகையில் தற்போதுள்ள கல்வி அமைப்பின் இடைவெளியை இட்டு நிரப்ப வேண்டிய தேவை இந்திய அரசுக்கு எழுந்துள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் எந்த ஒரு வழக்கமான பள்ளியிலும் பயிலும் மொத்த மாணவர்களில் சுமார் 10% மாணவர்கள் கற்றலில் குறைபாடு உள்ளவர்களாகவும் சிறப்புக் கவனம் தேவைப்படுபவர்களாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது. சரியான வயதில் மேற்கொள்ளப்படும் இடையீட்டு செயல்கள் அனைத்து குழந்தைகளின் கற்றல் முறைகளிலும் குறிப்பிடத்தக்க மேம்பாட்டைச் செய்யும். மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் தொடங்கும் செயல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் பலவகையான கல்விப்புலச் சூழல்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இதில் மிகச் சிறந்த தேர்வாக பரிந்துரைக்கப்படுவது அனைவரையும் உள்ளடக்கிய கல்வியே ஆகும். நாட்டில் உள்ள 4 கோடி மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க இதைவிட்டால் வேறு வழியே இல்லை என்பதுதான் உண்மையாகும். நமது நாட்டின் மக்கள் தொகையில் 78 சதவிகிதம் பேர் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். அங்கெல்லாம் சிறப்புப் பள்ளிகளை அமைப்பதற்குத் தேவையான நிதி இல்லை. அனைவரையும் உள்ளடக்கிய கல்வி என்பதில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. அவை:

  • மாற்றுத்திறனாளிக் குழந்தைகளிடம் சமுதாயம் சார்ந்த தகுதி நிலையை வளர்த்தெடுக்கிறது.
  • சமுதாயத்தினரோடு ஒருங்கிணைந்து வாழ்வதற்கான சிறப்பு ஒதுக்கீடுகளைக் குறைக்கிறது.
  • சிக்கனமானது; பயனுள்ள செலவு. அனைவரையும் சென்றடைகிறது அதிலும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் அது அனைவரையும் சென்றடைகிறது.

பல்வேறு வகைப்பட்ட தேவைகளை அடையாளம் காணுதல்

பள்ளிச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற பல்வேறு வகைப்பட்ட மக்கள் பிரிவினரின் பன்முகப்பட்ட தேவைகளையும் நடைமுறையில் ஏற்படும் கட்டுப்பாடுகளையும் நாம் அறிந்து அங்கீகரிப்பதுவே எல்லோரையும் உள்ளடக்கும் சூழ்நிலையாகும். இந்தக் கட்டுப்பாடுகள் பிறப்பில் வந்ததாக இருக்கலாம். விபத்து அல்லது நோயால் ஏற்பட்டதாக இருக்கலாம். குறிப்பிட்ட காரணங்கள் பலவகையினதாக இருந்தபோதிலும் ஊனங்கள் ஒன்றுக்கு மேற்பட்டதாக இருந்தபோதிலும் அவற்றின் தீவிரத்தன்மை மாறுபட்டு இருந்தபோதிலும் இந்த ஊனங்களின் பாதிப்பை நாம் நான்கு முதன்மைப் பிரிவுகளாக பிரித்துப் பார்க்க முடியும். அவை: பார்வைக் குறைபாடுகள், கேட்டல் திறனில் குறைபாடுகள், உடல் ரீதியான குறைபாடுகள் மற்றும் அறிதல் முறையில் குறைபாடுகள் ஆகும்.

குழந்தைகளிடம் காணப்படும் பார்வைக் குறைபாடுகளின் இரண்டு பிரிவு

குறைந்த பார்வைத்திறன் கொண்ட மாணவர்கள், பார்வை இல்லாதவர்கள். குறைந்த பார்வைத்திறன் என்ற பிரிவில் பார்வை மங்குதல், தெளிவின்மை, புகை மூட்டமான பார்வை, அதிக அளவு தூரப்பார்வை அல்லது அதிக அளவு கிட்டப்பார்வை, பார்வைத் திருகல், கண்களுக்கு முன் புள்ளிகள் தோன்றுதல், நிறத்தைப் பார்ப்பதில் ஏற்படும் நிறக் குறைபாடு, பார்வைக் களத்தில் குறைபாடுகள், ஒளி அல்லது வெளிச்சத்துக்கு அசாதாரணமான முறையில் கண் கூசுதல், மாலைக்கண் போன்ற குறைபாடுகள் அடங்கும். ஒரளவு பார்வைத்திறன் குன்றியவர்களுக்கு ஒளி, வடிவம், தோற்றமுரண் ஆகியவற்றை ஓரளவு உணரமுடியும்.

பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்கள் காட்சிரீதியான விளக்கம், காட்சிரீதியாக வைக்கப்படும் பொருட்கள் மற்றும் இதர காட்சிரீதியான வெளியீடுகளை எதிர்கொள்வதில் சிரமப்படுவார்கள். இதனோடு கண்-கை ஒருங்கிணைப்புக்கு தேவைப்படுகின்ற கட்டுப்பாடுகளை பயன்படுத்துவதிலும் அவர்களுக்கு சிரமம் ஏற்படும். பார்வைக் குறைபாடு உடைய பல குழந்தைகளுக்கு ஓரளவு பார்வைத் திறன் இருக்கும். இவர்கள் உருப்பெருக்கி உதவியுடன் பார்க்கலாம். அல்லது பிரகாசமான ஒளியைக் கொண்டும் கண் உறுத்தலைக் குறைக்கும் உபகரணங்களைப் பயன்படுத்தியும் படிக்கலாம். குறைந்த பார்வைத் திறன் உடைய இத்தகைய சிறுவர்கள் பெரிய எழுத்துக்களைக் கொண்டும் வண்ண முரண் அதிக அளவில் கொண்டும் படிக்கிறார்கள். வண்ணக்குருடு குறை உள்ளவர்கள் நிற சமிக்ஞை மூலமான தகவல்களைப் பயன்படுத்துவதில் சிரமப்படுவார்கள்.

கேட்டல் திறனில் குறைபாடுகள்

கேட்டலில் குறைபாடு உடைய குழந்தைகள் என்றால் கேட்புத் திறனில் ஏதோ ஒரு வகையான கோளாறு உடையவர்கள் என்றும் இந்தக் கோளாறு எந்த அளவுடையதாகவும் இருக்கலாம் என்பதும் பொருளாகும். செவிடு என்பதற்கு கேட்டல் திறன் அதிகபட்ச அளவு செயல்படவில்லை என்பது அர்த்தமாகும். இத்தகைய குறைபாட்டுக்கு பரம்பரை, நோய்த் தொற்று, கட்டி மற்றும் விபத்துகள் காரணங்களாக இருக்கலாம். கேட்டல் குறைபாடு உள்ள தனிநபர்களுக்கு ஏற்படும் முதன்மையான கஷ்டம் என்னவென்றால் ஒலி வடிவிலான தகவலைப் பெறுவதே ஆகும். ஒலி வடிவிலான தகவலை காட்சி மற்றும் வடிவ ரீதியிலான தகவலாகத் தருவதன் மூலம் இந்தப் பிரச்சனையைச் சமாளித்து விடலாம். இந்தப் பிரச்சனைக்கு மற்றொரு தீர்வும் உள்ளது. பயனாளர் மாற்று வெளியீட்டு உபகரணங்களை இணைத்துப் பயன்படுத்தும் வகையில் ஒரு இயந்திர செயல்திறமையை நாம் வழங்கலாம். இது ஒரளவே கேட்டல் குறைபாடு உடையவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பிறப்பில் இருந்தே செவிடாக இருப்பவர்களுக்கும் அல்லது குழந்தைப் பருவத்தில் இருந்தே செவிடாக இருப்பவர்களுக்கும் பேச முடியாமல் இருக்கலாம். அல்லது அவர்களது பேச்சு புரியும்படியாக இல்லாமல் இருக்கலாம். அந்தச் சூழலில், இத்தகைய தனிநபர்களுக்கு உதவ வாய்மொழித் தொடர்பியலுக்கு மாற்றுமுறைகள் தரப்பட வேண்டும்.

உடல் ரீதியான குறைபாடுகள்

உடல் ரீதியான குறைபாடுகளுக்கு போலியோ, பக்கவாதம், பலஹினம், தண்டு வடம் மற்றும் மூளை பாதிப்பை ஏற்படுத்தும் விபத்துகள், பெருமூளை முடக்குவாதம், கீல்வாதம், எலும்புகள் உறுதியற்று இருத்தல், தசைநார் தேய்வு முதலானவை காரணங்களாக இருக்கலாம். உடல்ரீதியான குறைபாடுகள் உள்ள குழந்தைகள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தசை கட்டுப்பாடு மோசமான நிலையில் இருத்தல், சோர்வு, நடத்தல், பேசுதல், பார்த்தல், உணர்தல், கிரகித்தல் ஆகிய செயல்பாடுகளில் சிரமம், தேவைப்படும் பொருட்கள் இருக்கும் இடத்திற்கு நகர்ந்து சென்று சேர்வதில் சிரமம், நகர்ந்து செல்லும் போது திசை திரும்புவதில் தடுமாற்றம், சிக்கலான செயல்களைச் செய்வதில் சிரமம் போன்றவை ஆகும். இத்தகைய தனிநபர்கள் உதவி உப கரணங்களைச் சார்ந்தே இருக்கிறார்கள். நடப்பதற்கான உதவி உபகரணங்கள் (எ.டு. சக்கர நாற்காலி, ஊன்றுகோல் முதலானவை) கையாள்வதற்கான உபகரணங்கள் (எ.டு. செயற்கை உறுப்பு பொருத்துதல், பல்இறுக்கி மற்றும் எலும்பு முறிவில் வைத்துக் கட்டப் பயன்படும் சிம்பு போன்ற செயற்கை சாதனங்கள்) தொடர்பியல் உபகரணங்கள் (எ.டு. தொடர்பியலுக்கான பலகைகள்) ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் உதவி உபகரணங்கள் ஆகும்.

அறிதல் முறையில் குறைபாடுகள்

குழந்தைகளிடம் அறிதல் ஊனம் பலவகையில் இருக்கின்றன. அதிதீவிர குறைபாடு முதல் குறிப்பிட்ட அறிதல் செயல்பாட்டில் உள்ள குறைபாடு வரை குறிப்பாக மொழிசார் செயல்பாட்டில் குறைபாடு வரை பலவகை குறைபாடுகள் உள்ளன. இந்த அறிதல் குறைபாடுகளின் வகைகளையும் குறைபாடுகளையும் கீழ்வருமாறு தொகுத்துக் கூறலாம்: குறைவான, மிதமான, தீவிரமான வளர்ச்சிக் குறைபாடுகள், டவுன் சின்ட்ரோம், ஆட்டிசம், பெருமூளை முடக்குவாதம், குறைப்பிரசவம், பிரசவத்தில் ஏற்படும் காயம், பேச்சு மற்றும் கற்றல் திறன் இன்மை, வலிப்பு, மனநோய் போன்றவை ஆகும். செயல்பாட்டு குறைபாடுகளை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்

ஞாபகத்திறன், புலன் உணர்தல், சிக்கல் தீர்த்தல், கருத்தாக்கத் திறன் குறைபாடுகள், குறுகிய கால நினைவுச் சேமிப்பில் இருந்து தகவலைப் பெறுவதில் சிரமம், நீண்டகால மற்றும் பழைய நினைவுகளை மீண்டும் ஞாபகப்படுத்துவதில் சிரமம் ஆகியன ஞாபகத்திறன் பிரச்சனைகளில் அடங்கும். புலன்வழியாக பெறப்படும் தகவலை எடுத்துக் கொள்வது, கவனத்தில் கொள்வது, பிரித்தறிவது ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்கள் புலன் உணர்தல் குறைபாட்டில் அடங்கும். சிக்கலை அங்கீகரித்தல், அடையாளம் காணுதல், தேர்ந்தெடுத்தல் போன்றவற்றில் ஏற்படும் சிரமங்கள், தீர்வுகளைச் செயல்படுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் ஆகியன சிக்கல் தீர்த்தல் குறைபாட்டில் அடங்கும். தொடர்வரிசை, பொதுமைப் படுத்துதல், பொருள்புரிதல், காரணகாரிய உறவைப் புரிந்து கொள்ளுதல், புலனாகாத கருத்தாக்கங்கள், திறன் மேம்பாடு ஆகியன கருத்தாக்கத் திறன் குறைபாட்டில் அடங்கும். மொழிக் குறைபாடுகள் பேச்சு மொழி அல்லது எழுத்து மொழியில் பொருளைப் புரிந்து கொள்வதிலும் எடுத்துரைப்பதிலும் சிரமத்தை உருவாக்கும்.

கல்வியில் சமூக நடுநிலைமை மற்றும் அனைவரையும் உள்ளடக்குதலை வடிவமைத்தல்

அனைவரையும்  உள்ளடக்கும்  கல்விச் சூழலிடம் என்பது விசேஷமானதோ அல்லது வழக்கமாக இருக்கும் ஒன்றை மாற்றி அமைத்ததோ இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இது வித்தியாசமானது; ஊனமுள்ள குழந்தைகள், ஊனம் இல்லாத குழந்தைகள் என அனைத்துக் குழந்தைகளுக்கும் பலன் அளிக்கக் கூடியது. இது ஒரு சூழலிடத்தில் ஒரு குழந்தையை பெட்டிக்குள் அடைப்பது போல அடைக்கும் முறையல்ல. மாறாக இது ஒவ்வொரு குழந்தையையும் தனிப்பட்ட முறையில் கவனத்தில் எடுத்துக் கொண்டு அக்குழந்தையின் சாதக, பாதக அம்சங்களை அலசி ஆராய்ந்து கவனத்தில் கொள்ளும் தனிநபருக்கேற்ற கல்வி அணுகுமுறையில் அமைந்துள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவருக்கேற்ற மாதிரியான இலக்குகளை ஆசிரியர் நிர்ணயிக்கிறார். அவர்கள் அனைவரையும் ஒரு சூழலிடத்தில் இருத்தி ஆசிரியர் கற்பிக்கிறார்.

இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கும் கல்விச்சூழலிட கட்டமைப்புக்கான சில வடிவமைப்பு பரிந்துரைகளை இக்கட்டுரை முன் வைக்கிறது. இந்தப் பரிந்துரைகள் எளிமையானவை; பொருளாதார ரீதியில் ஏற்புடையவை மற்றும் பல கலாச்சார பரிவர்த்தனை சூழலுக்கு ஏற்றவை. இந்தப் பரிந்துரைகளானது இது தொடர்பான கட்டுரைகள், ஆய்வுகளைப் படித்தும் அமெரிக்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பதினேழு அனைவரையும் உள்ளடக்கும் கல்வி அமைப்புகளைக் கள ஆய்வு மேற்கொண்டும் முன் வைக்கப்படுகின்றன. வடிவமைப்புகளை ஆய்ந்தறிந்து வடிவமைப்பாளர்கள் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உள்ளடக்கிய கல்விச் சூழலிடத்தை உருவாக்கித் தரலாம். அவர்களது படைப்பாற்றலை கண்டிப்பான விதிகள் மூலம் கட்டுப்படுத்தாமல் இவற்றை உருவாக்கலாம்

தனிப்பட்ட குழந்தையின் தேவைகளுக்கு ஏற்ப, பொருத்தமான நிலையான ஆதரவு மற்றும் உதவியை அக்குழந்தைக்கு கற்பிக்கும் போது வழங்க வேண்டும். இந்த முறை அந்தக் குழந்தையானது வெற்றி பெற உதவும். அந்தக் குழந்தை கூடுதலான வெற்றியை அடையும்போது கற்றுக் கொள்வதற்கான முனைப்பும் அதற்கு அதிகமாகிறது.

காட்சி, கேட்டல், தொடுதல் மற்றும் அசைவு என மாணவர்களின் அனைத்துப் புலன் உணர்வுகளையும் பயன்படுத்தும் வகையிலான செறிவான சூழலிடத்தை வடிவமைப்பாளர்களும் ஆசிரியர்களும் உருவாக்க வேண்டும். இத்தகைய சூழலிடங்கள் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பலதரப்பட்ட அனுபவங்களைத் தரும். பார்வை, ஒலி, மணம், தொடுதல் உள்ளிட்ட புலன் சார்ந்த அனுபவங்கள் இத்தகைய மாணவர்களுக்கு முக்கியமானவை ஆகும். அனுபவித்தல், தொட்டு உணர்தல், வாசம் நுகர்தல், சுவை அறிதல், உருளுதல், குதித்தல், சுற்றுதல், அதிர்தல், இசை மற்றும் பலவகையான காட்சி அனுபவங்கள் மூலமான பல்புலன் சூழலிடங்கள் மாணவர்களின் புலன் உணர்வு மற்றும் புலன் அறிதல் திறன்களை மேம்படுத்துகின்றன. இத்தகைய புலன் உணர்வுகளை ஒருங்கிணைத்து புரிதலை மேம்படுத்த குழந்தைகளுக்கு இந்த முறையானது உதவுகிறது.

பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு உதவக்கூடிய சூழலிட அம்சங்கள் எவையென்றால் வழிகாட்டும் அடுக்குகள், எச்சரிக்கை அடுக்குகள், பலவகைப்பட்ட மேற்பரப்புகள், பெரிய மற்றும் புடைப்பான எழுத்துக்கள், பிரைய்ல் பயன்பாடு, முரண்பட்ட வண்ணங்கள், புத்தறிவுப் பயிற்சி, அதிகப்படியான வெளிச்சம், தடையில்லாத நடைபாதை, ஒலிசார்ந்த தகவல் ஆகியன ஆகும். மேலும் தடை ஏற்படுத்தும் பொருட்களை அகற்றும் சூழலாகவும் இது இருக்கும்.

கேட்டல் குறைபாடு உள்ள மாணவர்கள் காது கேட்கும் உபகரணங்களை பயன்படுத்துவதற்கு உதவியாக இருத்தல், சைகை மொழி, உதடு வாசிப்பு, செவி குறைபாடு உள்ளவர்களுக்கு தொலைதொடர்பியல் கருவிகள், ஒளியூட்டப்பட்ட அறிவிப்பு பலகைகள், லே அவுட் சித்திரங்கள், ஒலிசார்ந்த தகவலை காட்சி வடிவத்தில் தருதல் போன்ற சூழலிட அம்சங்களால் அவர்கள் பயன் பெறுவார்கள்.

உடல் குறைபாடு உடைய மாணவர்கள் சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோல்கள் பயன்படுத்த அனுமதி வாங்க வேண்டும். அணுகுவதற்கு எளிமையான இடப்பரப்பு, சக்கர நாற்காலியில் இருந்து மாறுவதற்கான இடம், சரிவுப்பாதை, கைப்பிடிகள், உதவிக்கான இடம், வழுக்காத தரை, எளிதாக பிடிப்பதற்கான பிடிமானம் இவற்றுடன் கருவிகளையும், தொடர்பியல் சாதனங்களையும் பயன்படுத்தும் வாய்ப்புகள் இருத்தல்.

எளிமையான காட்சிப் பொருட்கள், மொழியை குறைந்த அளவில் பயன்படுத்துதல், வடிவமைப்புகளைப் பயன்படுத்துதல், எளிமையான, வெளிப்படையான வரிசைமுறை, மற்றும் வழிகாட்டும் வரிசைமுறை போன்றவை அறிதல் குறைபாடு உடைய மாணவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடிய சூழலிட அம்சங்கள் ஆகும்.

இணையான கல்வி வகுப்புகள், பலவகைப்பட்ட திறன்களைக் கற்றுத் தருதல், பல்புலன் சார்ந்த தொடர்பியலைப் பயன்படுத்துதல், புதிய கருத்துகளை உள்சேர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றை வழங்கும் வகையில் வடிவமைப்பில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும். மேலும் பேச்சுப் பயிற்சியாளர், தொழில்சார் இடர்களை நீக்கும் பயிற்சியாளர் போன்ற பலவகைப்பட்ட பயிற்சியாளர்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து பணியாற்றும் சூழலும் இருக்க வேண்டும்.

கட்டிடங்கள் எளிய மற்றும் தெளிவான முறையில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டால், அவற்றைப் புரிந்துகொள்ள, பயன்படுத்த மற்றும் மகிழ்ச்சி அடைய பெரிய முயற்சி ஏதும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்குத் தேவைப்படாது. தெளிவான லே அவுட், இடங்களின் ஒழுங்கமைவு, சரியான முறையில் பயன்பாட்டு இடங்களை வகைப்பிரித்தல், எளிய வடிவங்கள், காட்சிக் குழப்பம் இன்மை ஆகிய மாற்றுத்திறன் குழந்தைகள் கட்டிடம் கட்டப்பட்டுள்ள சூழலை உள்வாங்கிக் கொள்ள உதவியாக இருக்கும். இயற்கையான ஒளி நன்றாக இருத்தல், பலவகையான அறிவிப்புப் பலகைகள், அடையாளங்கள், இடப்பகுதிகளை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையிலான வித்தியாசங்கள், (அதாவது தோற்றம், வண்ணம், அளவு, வாசம் முதலான வித்தியாசங்கள்) ஆகியன ஒரு இடத்தை காட்சிரீதியாகப் புரிந்து கொள்ள உதவும்.

மாற்றுத்திறன் குழந்தைகள் கல்விசார் சூழலிடத்தில் வழக்கமான திறனுடைய சக குழந்தைகளுடன் பழகுவதற்கான வாய்ப்புகள் தரப்பட வேண்டும். பாதுகாப்பான, எளிதில் அணுகக் கூடிய கட்டமைப்புடன் கூடிய விளையாட்டு இடங்களும் கண்காணிப்பின் கீழ் உள்ள பொது இடங்களும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஏனைய சக குழந்தைகளுடன் உறவாட உதவியாக இருக்கும். தீவிரமான வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்குக்கூட திறனுடைய சக குழந்தைகளுடன் பழகுவதற்கான வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.

சுயஉதவித் திறன்கள், வீட்டு வேலைக்கான திறன்கள், தொழில்திறன் பயிற்சி, மாற்றுத்திறன் குழந்தைகள் சுயமாக தனித்து இயங்குவதற்கு உதவி, எதிர்காலத்தில் தன்மானத்துடன் வாழ்வதற்கு உதவுதல் ஆகிய செயல்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் கல்விக்கான சூழலிடம் அமைய வேண்டும். மலம் கழிப்பதற்கான பயிற்சி, சாப்பிடுதல், குடித்தல், ஆடை உடுத்துதல், பல் விளக்குதல், குளித்தல், ஷேவ் செய்தல் முதலான செயல்பாடுகள் சுயஉதவித் திறன்களின் கீழ் அடங்கும். பொருட்களை வகை பிரித்தல், பேக் செய்தல், நெசவுத்தொழில், தச்சுத்தொழில், அசெம்ளிங் மற்றும் இதுபோன்ற எதிர்கால வேலைவாய்ப்புக்கான பயிற்சிகள் தொழில் திறன் என்பதில் அடங்கும். தங்களது குடும்பத்தினருக்கு உதவுவதற்காகவும் எதிர் காலத்தில் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்ளும் வகையிலும் சமையல், துணி துவைத்தல், படுக்கையை போடுதல், சுத்தம் செய்தல், ஒட்டடை அடித்தல் என வீட்டு வேலைக்கான பயிற்சிகள் இத்தகைய குழந்தைகளுக்குத் தரப்பட வேண்டும்.

மாற்றுத்திறன் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் செயலில் பெற்றோர்கள் தொடர்ச்சியாகப் பங்கேற்பது நீண்டகால வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாகும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் தரப்படும் கல்வித் திட்டத்தில் இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோர்களின் பங்கேற்பு மிகவும் அவசியம். அதேபோன்று ஆசிரியர்-பெற்றோர் சந்திப்புக் கூட்டங்களிலும் பெற்றோர் பங்கேற்பது மிகவும் அவசியமாகும். தங்களது குழந்தைகளின் தனிப்பட்ட விசேஷமான பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுடன் இணைந்தும் பணி புரியலாம். சமூக இணைப்புக்கான நோக்கங்களுக்கு, சிறிய சந்திப்புக் கூட்டங்களுக்கு, மாணவர் - பெற்றோர் - ஆசிரியர் - சிறப்பு நிபுணர் ஆகியோர் ஒருங்கிணைந்து பணி புரிவதற்கு இடம் தரப்பட வேண்டும். மேலும் இவ்வாறான செயல்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பாடத்திட்டத்திலேயே அன்றாட வேலைகளும் சேர்க்கப் பட்டுள்ளன. கடைக்குச் செல்லுதல், சாலையைக் கடத்தல், பொது வாகனத்தைப் பயன்படுத்துதல் ஆகியன பாடதிட்டமாகவே உள்ளன. சமுதாய நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்கு அருகிலேயே கல்விக்கூடம் கட்டப்பட வேண்டும். இத்தகைய திறன்களைக் கற்பிப்பதற்கு ஆதரவான சூழலிடங்களை பள்ளிகளும் மேம்படுத்த வேண்டும். சமுதாயத்துடன் தானாகவே மாணவர்கள் ஒருங்கிணைய இது வழிவகுக்கும். மேலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பையும் பயிற்சியையும் இது ஏற்படுத்தித் தரும். உதாரணமாக மாற்றுத்திறன் குழந்தைகள் சூழலிடத்தில் உள்ள அபாயங்களுக்கு எளிதில் ஆட்படுகின்றனர். தொடர்ச்சியான கண்காணிப்பு என்பது கடினமான விஷயம்தான். ஆபத்துக் காரணிகளைக் கண்டறிய சூழலிடமும் கவனமாக ஆராயப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். கல்விசார் சூழலிடங்களில் பாதுகாப்பு அம்சம் சிறப்பாக இருக்க ஆபத்துக் காலங்களில் வெளியேறும் இடங்கள், படிக்கட்டுகள், உச்சிகள், கூர்மையான ஓரங்கள், வழுக்காத மேற்பரப்புகள், மின்சார அவுட்லெட், உடையக்கூடிய பொருட்கள், நச்சில்லாத பொருட்கள் முதலானவற்றின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கல்விக்கான சிறப்பு தேவைகளோடு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு அவர்களின் கற்றலை பாதிக்கக்கூடிய நடத்தைசார் பிரச்சனைகள் பலவும் உள்ளன. பாதுகாப்பான சூழலிடம், அமைதியான அறைகள், கண்காணிப்புக்கான இடங்கள், நீடித்து உழைக்கும் வலுவான ஃபிட்டிங்குகள் ஆகியன மேலே கூறிய நடத்தைசார் பிரச்சனைகளை ஆசிரியர்கள் எதிர்கொள்ள உதவியாக இருக்கும். மாற்றுத்திறன் குழந்தைகள் அவரவர்களின் தனிப்பட்ட கல்வித் திட்டங்களுக்கு ஏற்ப மதிப்பீடு செய்யப்பட வேண்டும். கற்பித்தலின் பலனைத் தெரிந்து கொள்ள மாணவர்களின் எதிர்வினைகளை முறையாக பதிவு செய்து ஆசிரியர்கள் அவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். பல்வேறுபட்ட உபகரணங்களையும் கல்விசார் செயல்திறனை ஆவணப்படுத்த தேவையான தகவல் பேப்பர்களையும் ஆசிரியர் பயன்படுத்துவதற்கு ஏற்ற இடங்கள் அளிக்கப்பட வேண்டும்.

விவாதம்

பரந்துபட்ட நோக்கில் பார்த்தோமானால் கல்வி என்பது மாணவர்கள் அறிவையும் திறன்களையும் வளர்த்துக் கொள்வதற்கான சூழலையும் வாய்ப்புகளையும் தரும் ஒரு அமைப்பே ஆகும். மாணவர்கள் கற்றுக் கொண்ட இத்தகைய திறன்களை சமுதாயத்தில் தங்களின் சொந்தக் காலில் வாழ்க்கையை நடத்துவதற்காகப் பயன்படுத்துவார்கள். இந்த ஒரே விதமான இலக்குகள் மாற்றுத்திறன் நபர்களுக்கும் இயல்பான நபர்களுக்கும் பொருந்தும். மாற்றுத்திறன் குழந்தைகளைத் தனிமைப்படுத்தும் சூழலிடம் அவர்களுக்கு பிரிவினையைக் கற்றுத் தருகிறது. அதேசமயம் அனைவரையும் உள்ளடக்கும் கல்விச்சூழலிடம் அவர்களுக்கு அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறையைக் கற்றுத்தருகிறது. அனைத்து குழந்தைகளும் முதலில் கற்பவர்கள்தான். பிறகுதான் அவர்களது மாற்றுத்திறனானது வெளிவருகிறது. அனைவரையும் உள்ளடக்கும் சூழலிடத்தில் அவர்களது கல்வியானது அவர்களால் என்ன செய்ய முடியுமோ அவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும். அவர்களால் முடியாததை அவர்கள் மீது திணிக்கக் கூடாது. அப்போதுதான் அவர்கள் வெற்றிகரமான அனுபவத்தை அடைவார்கள். ஒவ்வொரு குழந்தையின் அனுபவத்தையும் அதிகபட்ச செறிவுள்ளதாக மாற்ற, ஒட்டுமொத்த கட்டிடத்தின் உட்புறமும் வெளிப்புறமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்த அக, புற கட்டிடமே மாபெரும் கற்றல் உபகரணமாகும். அதற்குள் தான் பிற உபகரணங்களும் ஆசிரியர்களும் கற்பித்தலில் ஈடுபடுகின்றனர். இச்சூழலில் தான் ஆசிரியர்கள் அனுபவங்களை உருவாக்குகின்றனர். இவை குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டி கற்பதற்கு வழிநடத்தி அவர்களை பிறர் உதவியின்றி தனித்து செயல்பட வைக்கிறது. இங்கு தரைகள், சுவர்கள், மேற்கூரைகள், கற்றல் இடங்கள், தாழ்வாரங்கள், கழிவறைகள் என அனைத்தும் முக்கியமானவை. இவை கற்பிக்கும் உபகரணத்தின் பயனுள்ள பாகங்கள் என்றால் மிகையன்று.

அனைவரையும் வளர்த்தெடுக்க சூழலிடங்களே மிகப் பொருத்தமானவை ஆகும். மாற்றுத்திறன் நபர்களையும் உள்ளடக்கிய அமைப்பை உருவாக்குவதற்கு கல்வியாளர்கள்தான் முன்வர வேண்டும். பெளதீகரீதியிலான இடங்களில் மட்டுமே உள்ளடக்கிய அணுகுமுறையை பயன்படுத்துவதோடு பாடத்திட்டம் மற்றும் பயிற்றுவித்தலிலும் இந்த அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டும்.

இந்தியாவில் அனை வரையும் உள்ளடக்கும் கல்வி முறையை முன்னெடுத்துச் செல்லும்போது, தனி நபர்களின் வித்தியாசங்களை மதிக்கின்ற, கொண்டாடுகின்ற ஒரு சமுதாயம் குறித்த பார்வையை கல்விப்புல சூழலிடங்கள் தொடர்ந்து தருவதை நாம் உறுதி செய்தாக வேண்டும்.

ஆதாரம் : ரச்னா காரெ, தலைவர் மற்றும் பேராசிரியர், திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை கல்வி நிறுவனத்தின் கட்டிடக் கலைத்துறை போபால்.

2.86111111111
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top