பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம் / பார்வைக்குறைபாட்டில் தகவல் தொடர்பு நுட்பத்தின் பங்கு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பார்வைக்குறைபாட்டில் தகவல் தொடர்பு நுட்பத்தின் பங்கு

பார்வைக்குறைபாட்டில் தகவல் தொடர்பு நுட்பத்தின் பங்கு பற்றி தரப்பட்டுள்ளன.

அறிமுகம்

மாற்றுத்திறன் அல்லது ஊனம் என்பதை "ஒரு நபர் தன்னைச் சுற்றியுள்ள உலகில் பழகுவதையும், (பங்கேற்புத் தடைகள்) சில வேலைகளைச் செய்வதையும் (செயல்பாட்டுத் தடைகள்) மிகவும் சிரமமாக்குகின்ற மன நிலை அல்லது உடல்நிலை" என்று நோய்கள் கட்டுப்பாட்டு மையம் வரையறை செய்கிறது.

ஒரு நபரின் பார்வை, இயக்கம், சிந்தனை, நினைவு, கற்றல், தகவல் பரிமாற்றம், கேட்டல், மனநலம், சமூக உறவுகள் போன்றவற்றைப் பாதிக்கக்கூடிய பலவிதமான ஊனங்கள் உள்ளன. ஊனங்கள் ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு விதமாகப் பாதிக்கின்றன. எனவே ஊனமுற்றோர் (மாற்றுத்திறனாளர்) என்று பொதுப்படையாக அவர்களை ஒரே பிரிவுக்குள் அடக்குவது சரியன்று. மேலும், ஊனம் என்பது வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும், யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம். பிறவியிலேயே ஏற்படுவது ஒரு வகை என்றால், விபத்துக்களால் ஏற்படுவது இன்னொரு வகை

உலக சுகாதார அமைப்பு,

ஊனம் என்பதற்கு மூன்று பரிமாணங்கள் உள்ளது

  1. ஒரு நபரின் உடல் அமைப்பில் அல்லது செயல்பாட்டில் அல்லது மனநிலையில் ஏற்படும் குறை. எடுத்துக்காட்டுகள், உடல் உறுப்புகளை இழத்தல், பார்வை இழத்தல், நினைவுத்திறனை இழத்தல்.
  2. செயல்பாடுகள் வரம்புக்குட்பட்டு விடுவது. (எ.கா.) பார்ப்பது, கேட்பது, நடப்பது போன்றவற்றில் சிரமம்.
  3. தினசரி சாதாரண நடவடிக்கைகளில் பங்கேற்க வரம்பு உருவாவது. (எ.கா.) வேலை செய்வது, சமூகச் செயல்பாடுகள், பொழுதுபோக்குச் செயற்பாடுகள், உடல்நலப்பாதுகாப்பு வசதிகளைப் பெறுதல், முன் தடுப்பு சேவைகள் பெறுதல் போன்றவை.

ஊனம் என்பது பிறவியிலேயே ஏற்பட்டிருக்கலாம். அல்லது வாழ்வில் பின்னாளில் ஏற்பட்டிருக்கலாம். தொடர்புபடுத்திப் பார்த்தல் (நினைவுத்திறன், கற்றல், புரிதல்) இயக்கம் (தான் இருக்கும் இடத்தில் நடமாடுதல்) பார்வை, கேட்டல், நடத்தை போன்றவற்றில் இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம்.

நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை காரணமாக பார்வை இழப்பு நரம்புகள் பாதிப்பு, உறுப்புகள் இழப்பு போன்றவை ஏற்படலாம். ஊனம் என்பது படிப்படியாக அதிகரிக்கக் கூடியதாக இருக்கலாம். (எ.கா.) அல்சைமர் நோய். ஒருமுறை ஏற்பட்டது அப்படியே இருக்கலாம். (எ.கா.) கை, கால் இழப்புகள். அல்லது அவ்வப்போது ஏற்பட்டு மறையலாம். எ.கா. மல்டிபிள் ஸ்க்லெரோசி என்ற நரம்புகளின் பாதுகாப்பான மேற்பூச்சுகள் பாதிக்கப்படுதல்.

தொழில்நுட்பம், மற்றவர்களைப்போல ஊனமுற்றவர்களும் செயல்படுவதற்கு சமதளத்தை அளிக்கிறது. ஊனமுற்றோரின் ஒவ்வொருவரின் நிலைமைக்கும் ஏற்றவாறு தொழில்நுட்ப சாதனங்களை மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம் அனைவருக்கும் உதவியாக முடியும்.

தொழில்நுட்பத்தினைப் பற்றிப் பொதுவாகவும், தகவல் மற்றும் தொடர்பு நுட்பத்தினைப் (ICT) பற்றிக் குறிப்பாகவும் புரிந்து கொள்வதற்காக, பார்வை ஊனம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தகவல் மற்றும் தொடர்புநுட்பம் என்பது பல தொழில் நுட்பங்களைக் குறிக்கும் விரிவான பொருளுடைய சொல். தொலைத்தொடர்பு மூலம் தகவல் வழங்கும் நுட்பங்களை அது குறிப்பிடுகிறது. இதில் கணினி, இணையம், கம்பியில்லாத் தொடர்புகள், செல்பேசி மற்றும் தகவல் தொடர்புக்கான ஏனைய சாதனங்களும் அடங்கும். தகவல் மற்றும் தொடர்பு நுட்பம் என்பது தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதாகும்.

2001ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில், ஊனமுற்ற மக்களில், முதலிடத்தில் இருப்பவர்கள் நடமாட முடியாத ஊனமுற்றோர். இரண்டாவது இடத்தில் இருப்பது பார்வை ஊனம். நடமாட முடியாத ஊனம் என்பது ஒர் உறுப்பில் ஏற்பட்ட பாதிப்பால் உண்டாவது.

பார்வை ஊனம்

பார்வை ஊனம் கண்ணாடிகள் மூலமாகவோ, லென்சுகள் மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சையாலும் கூட சரிப்படுத்த முடியாத சேதாரத்தைக் குறிக்கும். ஒரு நபர் தனது அன்றாடப் பணிகளைச் சுயமாகச் செய்யப் பெருந்தடையாகி விடுகிறது இது கண்களோடு சம்பத்தப்பட்டது என்றாலும் இந்தக் குறைபாடு, நரம்பு மண்டலம் மற்றும் மூளையின் பார்வைத் திறன்பகுதியையும் பாதிக்கிறது.

பார்வை ஊனம் என்பது ஓரளவுக்கு மட்டுமோ, முழுமையாகவோ இருக்கக்கூடும். அது பிறவியிலும் இருக்கலாம், பின்னரும் வரலாம். பார்வையிழப்புகளில் பாதியளவு, தடுக்கக் கூடியவையே. பொதுவாகவே பார்வையை முற்றாகப் பறிக்கிற பெரிய நோய்கள் ஆரம்பத்தில் எந்த அறிகுறையையும் காட்டுவதில்லை. ஆனால் ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் ஊனத்தைக்கட்டுப்படுத்துவது சாத்தியமானது தான். பார்வை இழப்புக்குக் காரணமான முக்கியமான நோய்களைக் கண்டறிவதும், சிகிச்சை அளிப்பதும் மிகவும் எளிதானது, செலவு குறைவானது. முற்றாகப் பார்வை பறிபோவது தவிர, ஒரளவுக்குப் பார்வைத்திறன் கொண்டிருப்பது, குறைவான பார்வைத்திறன், சட்டப்படியான பார்வையற்றவர் என்று பலவாறாகவும் இந்தக் குறையைப் பிரித்துக் காட்டுகின்றனர்.

ஒரு மாணவரின் பங்களிப்பை மேம்படுத்துகிற அல்லது சாதனைக்கு வழி கோலுகிற, சுதந்திரமான செயல்பாட்டுக்குத் துணைபோகிற சாதனம் அல்லது சேவையை உதவும் நுட்பம் (Assistive Technology) என்பர்.  பார்வைத்திறன் அற்ற மாணவர்களுக்கு (கூடுதலாக ஊனங்கள் இருந்தாலும் இல்லா விட்டாலும்) பொதுவான பாடத்திட்டத்தை அணுகவும், படிப்பினில் மேம்பட்டு விளங்கவும் உதவுநுட்பங்கள் துணையாகின்றன.

பார்வைக்குறைபாடு உள்ள பலரும், பார்வை மறுவாழ்வு, சுற்றுப்புற மாற்றியமைப்பு, உதவு சாதனங்கள் போன்றவற்றினால், சுதந்திரமாகவும், பயனுள்ள வகையிலும் வாழ்க்கையை நடத்த முடியும். தகவல் தொடர்பு நுட்பங்கள் எல்லாவிதமான பாதிப்புகளுக்கும் ஆட்பட்டவர்களுக்கு உறுதுணையாகின்றன.

பார்வையை முற்றாக இழந்தவர்கள் அல்லது பெருமளவுக்குப் பார்வை தெரியாதவர்கள், இயக்கத்தின் போது தடைகளை உணர்ந்து கொள்ள தகவல் தொடர்பு நுட்பம் சேர்ந்த குச்சிகள் / கம்புகள் பயன்படுகின்றன. கேளா ஒலி நுட்பத்தைப் பயன்படுத்தி எக்கோ லொகேஷன் சிக்னல் என்ற எதிரொலியால் இடமறியும் சமிக்ஞைகள் மூலம் உண்டாகும் அதிர்வுகள் அல்லது தொடு உணர்வு அல்லது ஒலி மூலமாக எந்தவிதமான நிலப்பரப்பிலும் தடைகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

பார்வை இழந்த நபர் நீண்ட பயணம் மேற்கொள்ளும்போது, வழி நடத்தும் சாதனங்கள் உதவுகின்றன. இருப்பிடம் மற்றும் விருப்பத்தேர்வுகளுக்கு கணினியில் நிகழ்ச்சியாக்கப்பட்ட விவரங்கள் உதவும். உலக இருப்பிட முறை (GPS)ம் இதோடு சேரும்போது, வழி நடத்தும் நுட்பம் பெரிய முன்னேற்றமாகி விடும்.

கம்பியில்லாத் தொடர்புகளான வை-பை, அருகமை களத்தொடர்பு, அகச்சிவப்பு நுட்பம், புளுடூத் போன்றவை, பார்வைத்திறன் அற்றவர்களுக்கு பெரும் துணையாக மாறும். இந்த நுட்பங்களைத் தனி சாதனங்களாகவும் செல்லிடப்பேசிகளில் இணைத்தும் பயன்படுத்த முடியும்.

வாசிப்பது என்பது மிகவும் அத்திவாசியமான தினசரி வேலையாகும். செய்தித்தாள் அல்லது பாடப்புத்தகம் மட்டுமின்றி, விலைப்பட்டியல், போன்றவற்றைப் படிப்பதும் இதில் அடங்கும். இந்த வேலையைச் செய்ய பார்வை அற்றவர்களுக்குத் துணையாக உதவுநுட்பம் பயன்படுகிறது. ஆப்டிகல் கேரக்டர் ரீடர் என்ற நுட்பம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பேசும் மின்னணு புத்தகத்திற்கான சர்வதேசத் தர அளவான டெய்ஸி (DAIST) தரமே இதற்கு அளவு கோலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அல்பினிஸம் (Albinism)

குறைபாடு உள்ள நபர்களுக்குப் பள்ளியிலும், வேலைபார்க்கும் இடத்திலும், ஏனைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் உதவ வீடியோ மேக்னிபையர் என்ற காணொளிப் பெருக்கி நுட்பம் உதவுகிறது. காணொளிப்பெருக்கிகளில் உள்ள முரண் தகவுகளை மாற்றியமைத்து, அசெளகரியமோ, கோர்வோ ஏற்படாமல் காட்சிகளை பெருக்கிப் பார்த்துக் கொள்ளமுடியும்.

பெரும்பாலான கண் புரை நோய்கள் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யக் கூடியவையே. கண் புரை அறுவை செய்யமுடியாத பட்சத்தில், இந்த காணொளிப் பெருக்க நுட்பம் உற்ற துணையாக இருக்கும். டயாபடிக் ரெட்டினோபதி என்ற நீரிழிவு நோயினால் ஏற்படும் பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கு, விரல்களில் உணர்தன்மை குறைந்து விடுவதால் அவர்களால் பிரெய்லி முறையைச் சரியாகப் பயன்படுத்தி வாசிக்க இயலாது. எனவே ஆப்டிகல் கேரக்டர் ரீடர் உடன் திரை வாசிப்பு மென்பொருளையும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

முதுமை, நோய், சேதம், நிலைமை, குறைபாடுகள் போன்றவற்றால் நலிவுற்ற அல்லது சேதமுற்ற கண்ணின் தசைப்பகுதிகளுக்கு உதவும் விதமாக, பல்வேறு வடிவங்களில், வெவ்வேறு திறன்களுடன் கூடிய உட் பொருத்திகளை (implants) வடிவமைக்கவும் தகவல் தொடர்பு நுட்பம் உதவுகிறது. குறை பார்வையை இயல்பாகவே சாதாரண நிலைக்குக் கொண்டுவரும்படி அவற்றை வடிவமைக்க முடியும். பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அல்லது அவை உருக்குலைந்து இருந்தாலும், நரம்புகள் மூலமாகவோ அல்லது மூளைக்கு நேரடியாகவோ சமிக்ஞைகளை அனுப்ப எக்ட்ரோடுகளையும் உட்பொருத்திகளையும் பயன்படுத்தலாம்.

தகவல் தொடர்பு நுட்பம்

பார்வைக்குறைபாடு உடையவர்கள் பயன்படுத்தும் சாதனங்களான கணினி போன்றவற்றில் திரை, கிபோர்டு, மெளஸ் போன்றவற்றை அவரவரின் பயன்பாட்டுத் தேவைக்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ளும்படியும் கணினியில் நிரல்படுத்தமுடியும்.

தகவல் தொடர்பு நுட்பம் சார்ந்த சாதனங்கள், வேறு சாதனங்களோடு சேர்த்துப் பிணைக்கத்தக்கவை. அதனால் வழக்கத்திற்கு மாறான புதிய வேலையையும் செய்ய முடியும். மேலும் சுயமாகக் கற்றலுக்கும், சுயமாக வேலைகளைச் செய்வதற்கும், செயற்கை நுண்ணறிவைக் (Artificial Intelligence) கணினி நிரல் உருவாக்க முடியும். இதற்கு உதாரணம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தயாரித்துள்ள திறக்கப்பட்ட நகரங்கள் (Cities Unlocked) என்ற திட்டமாகும். முன்னேறிய உலக நிலையறி குறி முறையைப் (GPS) பயன்படுத்தி ஸ்மார்ட் போன்களின் உதவியோடு, பார்வைத் திறன் அற்றவர்கள் எவருடைய உதவியும் இன்றி நகரங்களில் சுதந்திரமாகச் சுற்றிவரமுடியும். இது ஹெட்போன், கண்ணாடி, அக்ஸலரோமீட்டர், கைரோ மீட்டர், பல்வேறு திசைகளில் இருந்துவரும் ஒலிகளை உணர்த்துவதற்காக ஹெட்போனின் பல பகுதிகளிலும் ஸ்பீக்கர்கள் என்று பல அங்கங்களோடு உள்ளது. இதைப் பயன்படுத்துபவர் தன்னுடைய புளுடூத் ரிமோட்டில், 'தொடங்கு என்ற பொத்தானை அமுக்கியதும், தான் எங்கே இருக்கிறோம் என்ற சரியான விவரத்தோடு தன்னைச் சுற்றிலும் என்னென்ன உள்ளன என்றும் புரிந்து கொள்ளமுடியும். இதில் இருக்கும் கேமரா, சுற்றியுள்ள மக்களையும் பொருள்களையும் படம்பிடித்து, என்ன நடக்கிறது என்றும் அதைப் பயன்படுத்துபவருக்குத் தெரிவித்துவிடும்.

தகவல் தொடர்பு நுட்பம் என்பது வளர்ந்துவரும் நுட்பமாகும். பொதுவாக ஊனமுற்றோர் அனைவருக்கும் இத்துறையின் புதிய கண்டுபிடிப்புகள் வாழ்க்கையை எளிதாக மாற்றி வந்தாலும், பார்வைத்திறன் அற்றவர்களின் வாழ்வில் இவை புதிய ஒளியைப் பாய்ச்சுகின்றன. ஒவ்வொரு நபருக்கும் பார்வைக் குறைபாடு என்பது பிரத்யேகமானது என்பதால், சாதனங்களும் தனித்தனியாக பிரத்யேகமாக உருவாக்கப்படவேண்டும். அனைவருக்கும் ஒரே சாதனம் பயன்படாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆதாரம் : அமித்சிங், ஆய்வறிஞர், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழிற்நுட்பத்துறை, தில்லி பல்கலைக்கழகம் – திட்டம் மாத இதழ்

3.07692307692
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top