பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம் / மாற்றுத் திறனாளிகளுக்கான நிதி உள்ளடக்கம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாற்றுத் திறனாளிகளுக்கான நிதி உள்ளடக்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கான நிதி உள்ளடக்கம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

உடல் ஊனமுற்றவர் என்பவர் தகுந்த மருத்துவ அமைப்பிலிருந்து ஏதாவது ஒரு உடல் ஊனத்திலாவது 40 சதவிகிதம் வரை பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று சான்று பெற்றிருக்க வேண்டும். உடல் ஊனம் உள்ள நபருக்கு சமூக பொருளாதார பங்களிப்பு பெறும் வண்ணம் சம வாய்ப்பு அளிப்பதற்காக மத்திய அரசு மூன்று சட்டங்களை இயற்றியுள்ளது. அவையாவன: இந்திய மறுவாழ்வு கவுன்சில் சட்டம் 1992, உடல் ஊனமுற்றவர்கள் சட்டம் 1995 மற்றும் ஆட்டிசம், மனவளர்ச்சிக் குறைபாடு, மனநலம் பாதிப்பு மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுள்ளவர்கள் நலனுக்கான தேசிய அறக்கட்டளை சட்டம் 1995. இது அல்லாமல் இந்தியா, 2008ல் ஏற்றுக்கொண்டுள்ள உடல் ஊனமுற்றவர்களின் உரிமைகளுக்கான, ஐக்கிய நாடுகள் மாநாடு 2006ன் படி உடல் ஊனமுற்றவர்கள் சமுதாயத்தில் மற்றவர்களோடு இணைந்து சம அளவில் முழுமையாகவும், சிறப்பாகவும் பங்கு கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. அதுபோலவே, உடல் ஊனமுற்றவர்களுக்கான தேசிய கொள்கை 2006ன்படி உடல் ஊனமுற்றவர்கள் விலைமதிப்பற்ற மனித வளம் என்று அங்கீகரிக்கப்பட்டு சமுதாயத்தில் கண்ணியமான வாழ்வு பெற அவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறுகிறது. அதன்படி சமுதாயத்தில் அனைவரும் பங்கேற்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 2,6800,000 மக்கள் உடல் ஊனமுற்றவர்களாக அறியப்பட்டிருக்கிறது. இதில் ஆண்கள் 149,90,000 மற்றும் பெண்கள் 1820,000 பேர். இதில் 18630,000 பேர் கிராமப் பகுதிகளிலும் 81,80,000 பேர் நகர்ப்புறங்களிலும் வசிக்கின்றனர். இந்தத் தகவல்களின்படி சுமார் 13400,000 பேர் (கிராமப்புறங்களில் 88,00,000 பேர் மற்றும் நகர்ப்புறங்களில் 46,00,000 பேர்) பணியமர்த்தப் படக்கூடிய வயதில் உள்ளனர். இந்த 1,34,00,000 உடல் ஊனமுற்று பணியில் அமர்த்தப்படக்கூடிய வயதில் இருப்பவர்களில் 78,00,000 பேர் ஆண்கள், 5600,000 பேர் பெண்கள். இது அல்லாமல் உடல் ஊனமுற்றவர்களின் மொத்த மக்கள் தொகையில் 1,4600,000 பேர் கல்வியறிவு இல்லாதவர்கள். இதனால் உடல் ஊனமுற்றவர்கள் நமது பொருளாதாரத்திற்கு அளிக்கக்கூடிய பங்கினை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

நிதிசார் பங்களிப்பு

நிதிசார் பங்களிப்பு என்பது சமுதாயத்தில் உள்ள நலிந்த மக்களுக்கு அவர்களுக்கு கட்டுபடியான விலையில் அளிக்கப்படும் பலவிதமான நிதிசார் சேவைகளும், பொருட்களும் ஆகும். இதில் வங்கிப் பொருட்கள் மற்றும் காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் பலதரப்பட்ட கடன்கள் போன்ற நிதிச்சேவைகள் அடங்கும். சமுதாயத்தின் நலிந்த வர்க்கத்தினருக்கு உறுதிசெய்யப்பட்ட நிதி மற்றம் சமுதாய பாதுகாப்பு அளிப்பதற்கு தேவையான அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான திட்டங்களில் நிதிசார் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். ஆகவே, இந்திய அரசு, நிதிசார் பங்களிப்பின் அவசியத்தை உணர்ந்து எல்லோருக்கும் நிதிசார் பங்களிப்பு வழங்க வலியுறுத்தி வருகிறது. இதில், தேசிய அளவிலான முதன்மை திட்டங்களாக ஜன்தன் திட்டம், ஏழைகளுக்கு மருத்துவ காப்பீடு, முத்ரா கடன்கள் ஆகியவற்றை குறிப்பிடலாம். நிதிசார் பங்களிப்பு அரசின் சமுதாய நல திட்டங்களுக்கும் ஏதுவாக உள்ளது.

உடல் ஊனமுற்றவர்கள் நிதிசார் பங்களிப்பில் விலக்கப்பட்டவர்கள்

உடல் ஊனத்திற்கும், ஏழ்மைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பெரும்பான்மையான ஊனமுற்றவர்கள் ஏழைகளாகவும் இருக்க வாய்ப்புண்டு. அதைப்போலவே ஏழைகளில் பலர் ஊனமுற்றவர்களாக இருக்கக்கூடும்.

உடல் ஊனமுற்ற பெண்களின் நிலைமை இதைவிட மோசமானதாகும். உடல் ஊனமுற்றவர்களுக்குள்ள பல குறைகளான அங்கு மிங்கும் நடமாடும் வசதி, இயற்கையான தடைகள், நிதிசார்ந்த பொருட்கள் பற்றிய மிகக்குறைந்த அறிவு மற்றும் இங்கொன்றும், அங்கொன்றுமாக இருப்பவர்கள் இணைந்து தனக்குத்தானே உதவிக் குழுக்களை அமைக்க முடியாமை ஆகிய காரணங்களால் இவர்களுக்கு நிதிசார் பங்களிப்பை அளிப்பது மற்ற நலிவடைந்த மக்களை விட கடினமான செயலாகும்.

உடல் ஊனமுற்றவர்கள் நிதி உதவி, கல்வி மற்றும் சுய வேலைக்கு கடன்கள் பெறுவது ஆகியவை மிகவும் கடினமாக உள்ளதால் இந்திய அரசு தேசிய உடல் ஊனமுற்றோர்க்கான நிதி மற்றும் மேம்பாட்டு வாரியம் ஒன்றை ரூ.400 கோடி அனுமதிக்கப்பட்ட முதலீட்டுடன் ஜனவரி 24, 1997ஆம் ஆண்டில் துவக்கியது. இது, கம்பெனிகள் சட்டம் 1956ன் பிரிவு 25ன் கீழ் (கம்பெனிகள் சட்டம் 2013ன் 8ஆம் பிரிவின் அடிப்படையில்) லாபம் ஈட்டு அல்லாத நிறுவனம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாரியம் 18 வயதிற்கு மேற்பட்ட, 40 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட உடல் ஊனமுள்ள இந்திய குடிமக்களின் சலுகை கடன்களை வழங்குகிறது. இந்த வாரியத்திலிருந்து சகாயக் கடன் பெற உடல் ஊனமுற்றவர்களுக்கு அதிக பட்ச வயது வரம்பு கிடையாது. இந்த வாரியத்தின் முக்கியமான திட்டங்கள் என்பன (1) உடல் ஊனமுற்றவர்களுக்கு தகுதி சார்ந்த செயல்களுக்கு சலுகைக் கடன்கள் (i) தகுதி சாரா செயல்களுக்கு மானியம் வழங்குதல்.

தகுதி சார்ந்த கடன்கள்

சுயதொழில் கடன்கள் : இந்தத்திட்டத்தின் கீழ் உடல் ஊனமுற்றவர்கள் சொந்த தொழில் துவக்குவதற்கு 5-8 சதவிகித வட்டியில் ரூபாய் 25,00,000 வரை கடன் வழங்கப்படும். இந்தக் கடனை அதிகபட்சமாக பத்து வருடத்திற்குள் திருப்பிக் கொடுக்கலாம்.

கல்விக் கடன் : உடல் ஊனமுற்றவர்கள் உயர் கல்வி பெறுவதற்கு 4 சதவிகித வட்டி என்ற சலுகை அளவில் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. இதன் கீழ் உடல் ஊனமுற்றவர்கள் இந்தியாவில் கல்வி பெற ரூ.10,00,000 வரையிலும், வெளிநாடுகளில் கல்வி பெற ரூ.20,00,000 வரையிலும் கடன் பெறலாம். இந்தக் கடனை அதிகபட்சமாக 7 ஆண்டுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். கடனை திருப்பிக் கொடுப்பது, படித்து முடித்த பின் ஒராண்டிற்குப்பிறகு அல்லது வேலை கிடைத்த 6 மாதத்திற்குப்பின் துவங்க வேண்டும்.

குறு கடன்கள் : இந்தக் கடன் வழங்கப்படுவதன் நோக்கம் உடல் ஊனமுற்ற மக்கள் தங்களுடைய வருவாயை பெருக்கிக் கொள்வதற்கான செயல் திட்டங்களை துவக்குவதாகும். இந்தத் திட்டம் பெரும்பாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. உடல் ஊனமுற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க ஒரு தனியார் தொண்டு நிறுவனம் ரூ.10 இலட்சம் வரை கடன் பெறலாம். உடல் ஊன முற்றவர் ஒருவர் குறு கடனாக ரூ.50,000 வரை பெறலாம். இதன்படி ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் உடல் ஊனமுற்ற 20 பேருக்கு உதவி செய்யலாம். இதற்குண்டான வட்டி ஐந்து சதவிகிதம் மட்டுமே. இந்தக் கடனை அதிகபட்சமாக மூன்று வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.

தகுதி சாராத  கடன்கள்

உடல் ஊனமுற்றவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி: இந்த திட்டத்தின்கீழ் உடல் ஊனமுற்றவர்களுக்கான நிதி மற்றும் மேம்பாட்டு வாரியம் உடல் ஊனமுற்றவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக மானியங்களை வழங்குகிறது. இது அல்லாமல், பயிற்சி காலத்தில், உடல் ஊனமுற்ற பயிற்சியாளர்களுக்கு ரூ.2.000 ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

கல்விக் கட்டண உதவி : அமைச்சகம், இந்த வாரியத்தின் மூலம் உடல் ஊனமுற்றவர்களுக்கு கல்வித்தொகை உதவி வழங்கும் திட்டத்தை அளித்துள்ளது. தற்போது, இந்த வாரியம் செயல்படுத்தும் கல்வி, உதவித் தொகை அறக்கட்டளை நிதியம் மூலம் 2500 மாற்றுத்திறனாளிகள் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் கல்வித்தொகை பெற உதவி வழங்கி வருகிறது.

இந்த வாரியம் 36 மாநிலங்களில் மாநில அரசின் அமைப்புகள் மூலம் உதவிகளை வழங்குகிறது. உடல் ஊனமுற்றவர்களுக்கு சலுகைக் கடன்களை வழங்க இந்த வாரியம் ஐந்து பொதுத்துறை வங்கிகளுடனும், 18 வட்டார ஊரக வங்கிகளுடனும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வாரியம், மிகச்சிறப்பாக செயல்படும் அங்கீகாரத்தை பெற்றிருப்பதும் 2015-16ஆம் ஆண்டிற்கும் இதே அங்கீகாரத்தை பெற இருப்பதும், இது செயல்படும் திறமையை விளக்குகிறது.

 1. கடன்வழங்குதல் : இந்த வாரியம் துவங்கி 1,26000 உடல் ஊனமுற்றவர்களுக்கு கடன்கள் வழங்கு திட்டத்தின்கீழ் ரூ.69429 கோடி வழங்கி உள்ளது.
 2. திறன் வளர்ப்பு பயிற்சி : உடல் ஊனமுற்ற 36,616 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக வாரியம் இது வரை ரூ.46.21 கோடி ரூபாய் மானியம் அளித்துள்ளது. 2015-16ஆம் ஆண்டிற்கு, திறன் வளர்ப்பு திட்டத்திற்கு சுமார் 17000-20000 உடல் ஊனமுற்றவர்களுக்கு வசதி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 3. கல்வி உதவித்தொகை : 2011-12 தொடங்கி, இதுவரை இந்த வாரியம், கல்வி உதவித்தொகை, அறக்கட்டளை நிதியின் மூலம் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் உயர் கல்விகளை பெற ரூ.4794 கோடி வழங்கி உள்ளது. இதில், 7,17 பேருக்கு முதல் முறையாகவும், 1097 பேருக்கு அடுத்த கட்ட உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

ஊனமுற்றவர்களுக்கான நிதி மற்றும் மேம்பாட்டு வாரியம், கல்வி உதவித் தொகையின் கீழ் 2009-10லிருந்து இது நாள் வரை தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் கல்விக்கு ரூ.3.51 கோடி அளித்துள்ளது. இதில் புதியவர்கள் 2827 பேருக்கும் தொடர்ந்து கல்வி பெறுபவர்களுக்கு 101 பேருக்கும் உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தை விரிவாக்கவும் இன்னும் பல மாற்றுத்திறனாளிகளுக்கு நிதிசார் பங்களிப்பை வழங்கவும் கீழ்வரும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன

 1. ஏற்கனவே பெற்ற கடனுக்கு மானிய வசதி. : இந்த வாரியம் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் துறையுடன் இணைந்து ஏற்கனவே கடன் உதவி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் பெற்ற தொகையில் 35 சதவிகிதம் மானியம் வழங்க திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுடன் இது செயல்படுத்தப்படும்.
 2. மற்ற வங்கிகளோடு இணைந்து செயல்பாடு: உடல் ஊனமுற்றவர்களுக்கான நிதி மற்றும் மேம்பாட்டு வாரியம், தங்களுடைய செயல்பாடுகளை அதிகரிக்க பல வங்கிகளோடு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு மாற்றுத் திறனாளிகள் அவர்களுடைய கிளைகளின் மூலம் சலுகைக் கடன்களை பெற வழிவகை செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆந்திரா வங்கி, ஐடிபிஐ வங்கி, பரோடா வங்கி, ஐதரபாத் ஸ்டேட் வங்கி ஆகிய ஐந்து பொதுத்துறை வங்கிகளோடு இந்த வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த பொதுத் துறை வங்கிகள் மட்டுமல்லாமல் 18 வட்டார கிராமப்புற வங்கிகளோடும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அவை, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், குஜராத், ஹரியானா, மஹாராஷ்டிரம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் உள்ளன.
 3. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் குறுகடன் வழங்கு நிறுவனங்கள்: தொலைதூர கிராமப்பகுதிகள் அனைத்திலும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பயனளிக்க அந்த பகுதிகளில் செயல்படும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் குறுகடன் வழங்கு நிறுவனங்கள் மிகவும் பயனுள்ளவைகளாக அமையும். இந்த அமைப்புகளோடு ஒப்பந்தங்கள் செய்துகொள்ள விதிகளை தளர்த்துமாறு மத்திய ரிசர்வ் வங்கியிடம் கோரப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகைக் கடன் வழங்கப்பட உள்ளன.
 4. மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு வலைதளம்: மத்திய அரசின், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையுடன் இணைந்து உடல் ஊனமுற்றவர்களுக்கான நிதி மற்றும் மேம்பாட்டு வாரியம், ஒரு நவீன வேலைவாய்ப்பு வலைதளத்தை உருவாக்கியுள்ளது. இதில் வேலை வாய்ப்புகள், சுய வேலை வாய்ப்புக்கான கடன் வசதிகள், இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகள் ஆகியவைகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். இந்த வலைதளம், 27.1.2016 அன்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரால் துவக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைக்கக்கூடிய பலதரப்பட்ட நிதிசார் பொருட்களை அளிப்பதன் மூலம் அவர்களுக்கு நிதிசார் தேவைகளை வேகமாக அளிக்க இது ஒரு பெரிய முயற்சியாகும்.

மத்திய அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் மூலம் அவர்களுக்கு நிதிசார்ந்த பங்களிப்பை வழங்கவும், ஒட்டுமொத்த நலனுக்காகவும், பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

 • பத்து சதவிகித நலிந்த வர்க்கத்தினருக்கான குறிக்கோளின்படி வங்கிகள் வழங்கக்கூடிய முதன்மைத் துறை கடன்களில் மாற்றுத் திறனாளிகளை இணைப்பது.
 • ஆண்டிற்கு ரூ.350ல் கிடைக்கும் ஸ்வாலம்பன் சுகாதார திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளை இணைப்பது.
 • மாற்றுத் திறனாளிகளுக்கு மெட்ரிக் படிப்பிற்கு முன்பும் அதற்கு பிறகுமான கல்விக்கு உதவித்தொகை வழங்குதல்.
 • உடல் ஊனமுற்றவர்கள் உயர் கல்வி பெற கல்வி உதவித்தொகை.
 • மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகக் கூடிய இந்திய திட்டம் துவக்கம்.
 • மாற்றுத் திறனாளிகளுக்கு திறன்சார் பயிற்சி வழங்கும் தேசிய செயல்திட்டம் துவக்கம்

ஆதாரம் : பி.சி.தாஸ், ICAS, தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தேசிய மாற்றுத்திறனாளிசார் நிதி மற்றும் மேம்பாட்டு வாரியம்.

3.18181818182
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top