பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம் / மாற்றுத் திறனாளிகள் அடையத்தக்க போக்குவரத்து
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாற்றுத் திறனாளிகள் அடையத்தக்க போக்குவரத்து

மாற்றுத் திறனாளிகள் அடையத்தக்க போக்குவரத்து - தற்போதைய நிலவரமும் நம் முன் உள்ள வழியும் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

உலகளாவிய முயற்சிகள் போக்குவரத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அதனை எளிதில் சென்றடையத்தக்க நிலை ஒவ்வொருவருக்கும் சமமான அளவில் இருக்க வேண்டும். இத்தகைய வசதிகள், சேவைகள் போன்றவற்றை மாற்றுத் திறனாளிகளும் அடைய முடிந்தால் தான் அவர்களும் முழுமையான அளவில் உள்ளடக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாக கூற முடியும் (UN2007). மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் பொது இணக்க ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இதன் துணை வாசகம் 9 தகவல் தொடர்பு, போக்குவரத்து, இருப்பிடச்சூழல், அவசர சேவைகள் உட்பட பிற சேவைகளையும் பெறக்கூடிய வாய்ப்பு ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகளும் பெறுவதை அரசுகள் உறுதி செய்திட வேண்டும் என்று குறிப்பிடுகிறது.

மாற்றுத்திறனாளிகள் சமமான உரிமைகளைப் பெறுவதற்கும், சுயசார்புடன் வாழ்வதற்கும், வாழ்வின் எல்லா அம்சங்களிலும் பங்கேற்று சமூகத்துடன் ஒன்றிணைவதற்கும் அனைத்தையும் எளிதில் அணுகக்கூடிய தன்மை என்பது மிக முக்கியமான தேவையாகிறது. மாற்றுத்திறனாளிகள் (சம வாய்ப்புகள், உரிமைப் பாதுகாப்பு, முழுமையான பங்கேற்பு) சட்டம் 1995 பிரிவு 44, 45, 46 ஆகியவை மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்தில் பாரபட்சமின்மை, சாலையில் பாரபட்சமின்மை, சூழலில் பாரபட்சமின்மை ஆகியவற்றை ஐயத்திற்கிடமின்றி வழங்குகிறது.

இந்தியச்சூழல்

இந்திய நகரங்களில் வாழும் மக்களில் பெரும் பகுதியினர் பொதுப் போக்குவரத்தை நம்பியே இருக்கின்றனர். வேலை, படிப்பு, பொழுதுபோக்கு ஆகியவற்றிற்காக தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு தினமும் இதில்தான் இவர்கள் பயணிக்கின்றனர். சொந்த வாகனங்கள் இல்லாமல் இருப்பதாலும், நீண்டதூரப் பயணங்கள், விலை அதிகமாக இருக்கும் எரிபொருள், சாலைகளில் நிலவும் பாதுகாப்மின்மை ஆகியவற்றினாலும் பேருந்து, தொடர்வண்டி போன்றவை அடங்கிய பொதுப்போக்குவரத்து மிகமுக்கியமான பங்கினை வகித்து வருகிறது. உள்ளூர் பொருளாதாரத்திலும் பொதுப்போக்குவரத்திற்கு முக்கியமான பங்கு இருக்கிறது. பொதுப்போக்குவரத்து கட்டமைப்பிற்காக நாடெங்கும் மிக அதிகமான பணம் செலவிடப்படுகிறது. நகரங்களின் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையிலும் பணம் செலவிடப்படுகிறது. ஆயினும், இவற்றில் பெரும்பாலான கட்டமைப்புகளும், சேவைகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு பயன் அளிப்பதில்லை. வயதானோர், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், தற்காலிக உடல் குறைபாடு உடையவர்கள் ஆகியோருக்கும் சாதகமில்லாத போக்குவரத்துச் சூழல் நிலவுகிறது. தெருக்களில் நடப்பதற்கும், நிறுத்தங்களை அடைவதற்கும், படிகளில் ஏறுவதற்கும், அறிவிப்புகளைப் படித்து புரிந்துகொள்வதற்கும், போதுமான சாதனமின்றி வடிவமைக்கப்பட்டுள்ள வாகன இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்வதற்கும் இவர்களால் முடியவில்லை.

இந்திய நகரங்களில் எண்ணற்றவர்கள் தினமும் பயணிக்கின்றனர். ஆனால் பெரும்பாலான உள்கட்டமைப்புகளும், சேவைகளும் சில குறிப்பிட்ட பயனாளிகளுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறு பிரிவினரான மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள் என்ன? வயதானோர், குழுந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், தற்காலிகமாக திறன் குறைவு அடைந்திருப்பவர்கள் ஆகியோரையும் கணக்கில் சேர்த்துப் பார்க்கும் போது இந்த சிறு எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்திருக்கும். விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலமும், சமூக உரையாடல்கள் மூலமும் போக்குவரத்து சேவை வடிவமைப்பு ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பட வேண்டும். தொழில்நுட்ப மேம்பாடு, விழிப்புணர்வு, சமூக சமத்துவ சிந்தனை ஆகியவற்றின் காரணமாக வேகமாக மாறிவரும் உலகில் நம்முடைய போக்குவரத்து வசதிகளும் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைய வேண்டியது அவசியம்.

இதிலுள்ள சவால்கள்

இந்திய நகரங்களில் பொதுப்போக்குவரத்தை அணுகுவது என்பது ஒரு பெரிய சவாலாகத்தான் இருக்கிறது. பொதுவெளிகளும், போக்குவரத்து வாகனங்களும், வசதிகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படவில்லை. ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் (JnNURM) நகரப் போக்குவரத்திற்கு ஒரு உந்துசக்தியாக இருந்து வருகிறது. பயணிகளை துரிதகதியில் அழைத்துச் செல்லும் பேருந்து போக்குவரத்து திறம்பட செயல்படுவதற்கு இது உதவியிருக்கிறது. பேருந்துப் போக்குவரத்து தொடர்பான கருத்துருக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது பற்றிய அக்கறையை வெளிப்படுத்துகின்றன. ஆனால் போதுமான விழிப்புணர்வும், கூர்ந்தறியும் திறனும் இல்லாத காரணத்தினால் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகளை வழங்குவதில் தரத்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை. தற்போதிருக்கும் கட்டமைப்பை நிர்வகிப்பதிலும் மோசமான நிலையே நீடிக்கிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள தற்போதுள்ள சில வசதிகள் பயன்படுத்தப்படாமலோ, சுற்றிலும் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியோ இருப்பதால் அவை எளிதில் சென்றடையக்கூடிய நிலையில் இல்லை. பாதைகள், சாலை ஓர நடைபாதைகள் போன்றவை தெருக்களின் வழியாகவும் கூட ஒருவர் பயணித்து தனது இருப்பிடத்தை அடையக்கூடிய வகையில் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கும் பலகைகள் தரம் குன்றி இருப்பது அவைகளின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் சாதகமில்லாத பொதுப்போக்குவரத்துக் கட்டமைப்பு வசதிகளில் மக்கள் பெருக்கத்தின் காரணமாக அதிகமான அழுத்தம் நிலவுகிறது. மாற்றுத்திறனாளிகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். தற்போது சிற்சில வசதிகள் செய்யப்பட்டுள்ள போதிலும் மாற்றுத்திறனாளிகள் அவற்றை நம்பிக்கையுடன் பயன்படுத்திக்கொள்ள இயலாத அளவிற்கு மோசமான அனுபவங்களைப் பெற்று வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் தனிவகையானவை. பொது வசதிகளைப் பெறுவதிலும், பயன்படுத்திக் கொள்வதிலும் மற்றவர்களைக் காட்டிலும் இவர்களுக்கென்று பிரத்யேகமான பிரச்னைகள் உள்ளன.

இந்திய அரசாங்கம் தேசிய அளவில் ஒரு பெரிய விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. 'சுகம்ய பாரத் அபியான்' என்பது அதன் பெயர். மாற்றுத்திறனாளிகள் உட்பட குடிமக்கள் அனைவரும் தடையில்லாத வகையில் எங்கெங்கும் சென்றுவரக் கூடிய சூழல் உருவாகும்படி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இந்த நோக்கத்தை அடைவது இத்திட்டத்தின் இலக்காகும்.

வடிவமைப்பு வழிகாட்டி நெறிகளும் தரமும்

உலகின் பலநாடுகளில் வடிவமைப்பு பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளும், தர நிர்ணயமும் இருக்கின்றன. நம் நாட்டில் தேசிய அளவில் ஒரு தர நிர்ணயம் இல்லாத நிலையில் வேறு ஒரு நாட்டில் இருக்கும் தர அளவுகள் இங்கு பரிந்துரைக்கப்படுகின்றன. மத்திய பொதுப்பணித்துறை வகுத்துள்ள மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான தடையில்லா சூழல் பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றி அமைக்கவேண்டிய தேவை இருக்கிறது. இதற்கான முயற்சிகள் அனைத்து மட்டங்களிலும் எடுக்கப்பட்டாக வேண்டும். பல நிறுவனங்கள் (அரசு அரசுக்கட்டுப்பாட்டு, அரசுசாரா நிறுவனங்கள்) இந்த வகையில் பணியாற்றி வருகின்றன. பொது மக்களிடமும், நகர மேம்பாட்டிற்கான பொறுப்பு வகிக்கும் அரசுத்துறை ஊழியர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் ஆகியவற்றை இவை நடத்தி வருகின்றன. மாணவர்களிடம் கூர்ந்தறியும் திறனை ஏற்படுத்துவதற்கு கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள் உதவும். தற்போதுள்ள நிலவரம் பற்றிய பதிவுகளை உருவாக்கி தேவைப்படக்கூடிய முக்கியமான தரவுகளைத் திரட்டி ஆராய்ந்து பிரச்னைகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து தேவைப்படக்கூடிய மாற்றங்கள், தீர்வுகள் பற்றி இவை பரிந்துரைக்கும்.

தற்போதைய தேவைகளும் புதிய வளர்ச்சித் தேவைகளும்

சமூகத்தின் அனைத்து பிரிவினரின் தேவைகளையும் ஈடுகட்டுவதற்கு பலவிதமான போக்குவரத்து தொகுப்புகள் தேவைப்படுகின்றன. போக்குவரத்துத் திட்டங்களில் அரசின் முன்முயற்சிகளுக்கு தேவைப்படும் நிதியை JnNURM திட்டத்தின் கீழ் மத்திய அரசு தருகிறது. பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், BRTS போக்குவரத்து போன்றவை அணுகத்தக்கவையாக, தரமான வடிவமைப்பு கொண்டவையாக இருக்கும் விதத்தில் அமைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைவருக்கும் ஏற்றதாக போக்குவரத்துப் பயணங்கள் அமைவதில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது. உதாரணமாக, பார்வையற்றோரும், சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோரும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பைப்பெற்று சுதந்திரமாக உலவ வேண்டும். இதற்கு ஏற்ற விதத்தில் நடைபாதைகளும், மெட்ரோ ரயில் போக்குவரத்தும் அமைய வேண்டும். போக்குவரத்து வசதிகள் பற்றிய போதுமான தகவல்கள் கிடைக்கப்பெற வேண்டும். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் பயணத்தைத் தொடங்கும் முன்பும், பயணத்தின் நிறைவிலும் பாதசாரிகளாகவே இருக்கின்றனர். எனவே, பாதசாரிகள் எளிதில் அணுகக்கூடிய கட்டமைப்பை ஏற்படுத்தித் தரவேண்டியது முக்கியமானது. தெருக்கள், கைப்பிடியுடன் சாய்தளங்கள், குழந்தைகளுக்கும் மூத்தோருக்குமென அமைக்கப்பட வேண்டும். தொட்டுணரக்கூடிய தளம் அமைக்கப்பட்ட நடைபாதைகளும் அவசியமானவை. கட்டமைப்புகளை அணுக இயலாமல் போவது சமூகத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளின் முழுமையான பங்கேற்பிற்கு ஒரு பெரிய தடையாக இருக்கின்றன.

பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கும் கட்டமைப்பு, கழிப்பறை வசதிகள், பாதசாரிகள் சாலையைக் கடக்கும் வசதி, சாய்தள வசதிகள், கைப்பிடிகள், தளமிடப்பட்ட நடைபாதை போன்றவை பராமரிக்கப்படுவது முக்கியம். இதற்கென, பழுதுபார்பு - பராமரிப்புக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

சுகம்ய பாரத் அபியான் (விழிப்புணர்வும் பயிற்சியும்)

  • போக்குவரத்து வசதிகளை எளிதில் சென்றடைவதற்கான வசதிகளின் தேவை பற்றிய பரப்புரை மூலம் சமூகத்தின் அனைத்துப் பிரிவினர், பள்ளிகள், கல்லூரிகள், தொழில்முறை சார்ந்தோர், வளர்ச்சிக்கான அமைப்பினர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றோருக்கு விழிப்புணர்வை வழங்கவேண்டும். போக்குவரத்தை அனைவரும் எளிதாக அணுகுவதற்கு வசதிகள் அமைய வேண்டும். விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். எளிதில் சென்றடைய முடியும் என்பதுதான் நீடித்து நிலவக்கூடிய, உயர்தரமான போக்குவரத்து அமைப்பின் முக்கியமான கூறாகும்.
  • பயிற்சிகளின் மூலம் திறன்மிகு ஒட்டுநர்கள், நடத்துநர்கள், ஊழியர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், போக்குவரத்து சேவைகளை நடத்துவோர் ஆகியோரை பயனாளிகளுக்கு உதவும்படியும், மாற்றுத்திறனாளிகளிடம் கூடுதல் அக்கறை செலுத்தும்படியும் செய்ய முடியும். பயிற்சிகள் ஏதுமில்லாமல் இத்தகைய வசதிகள், வாகனங்களின் முக்கியத்துவம் பற்றி அவர்களால் உணர முடியாது.
  • நம்முடைய நகரங்கள் சீர்மிகு நகரங்களாக வேண்டும் என்று நாம் உண்மையிலேயே விரும்பினால் நகரங்கள் அணுகத் தக்கவையாக, பாதுகாப்பானதாக, வயது பாலினம் உடலமைப்பு பொருளாதார நிலை போன்றவற்றைக் கருதாமல் அனைவரையும் உள்ளடக்கியதாக உருவாக்கி அமைக்க வேண்டும்.

ஆதாரம் : டாக்டர். தேவர்ஷி சௌராசியா, உதவிப்பேராசிரியர் கட்டக்கலைப்பள்ளி, போபால் (ம.பி)

2.95833333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top