பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம் / மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக உள்ளடக்கம் - பிரச்சனைகளும் தீர்வுகளும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக உள்ளடக்கம் - பிரச்சனைகளும் தீர்வுகளும்

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக உள்ளடக்கம் பிரச்சனைகளும் தீர்வுகளும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

சமூக உள்ளடக்கம் என்பது சமூக விலக்கம் என்பதற்கு நேர் எதிரான கருத்தாகும். சமூக விலக்கத்திற்கு அதாவது சமூகத்தில் இருந்து விலக்கி வைப்பதற்கு சாதகமாக உள்ள சூழ்நிலைகளையும் பழக்க வழக்கங்களையும் மாற்றுகின்ற நேர்மறையான செயல்பாடாக சமூக உள்ளடக்கம் இருக்கின்றது. உலக வங்கி சமூக உள்ளடக்கம் என்பதை "தங்களது அடையாளத்தின் அடிப்படையில் பாதகமான விளைவுகளை எதிர்கொள்ளும் மக்கள், சமுதாயத்தில் மற்றவர்களைப் போன்று பங்கேற்பதற்காக தங்கள் திறமை, வாய்ப்பு மற்றும் சுயமரியாதை ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ளும் செயல்வழிமுறை” என வரையறுக்கிறது.

சர்வதேச ரீதியில் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையிலான சிறுபான்மை குழுவினராக அங்கீகரிக்கப்பட்டு வருகின்றார்கள். புறக்கணிப்பு, இழப்பு, பிரிவினை மற்றும் விலக்கப்படுதல் ஆகியவற்றுக்கு எளிதில் உள்ளாகக்கூடியவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள். 20ஆம் நூற்றாண்டின் பிற்கால ஐம்பதாண்டு காலகட்டத்தில் பெரும்பான்மையான நாடுகள் மாற்றுத்திறன் நபர்களுக்கு (PWD) ஏதோ ஒருவிதமான உதவியை அளித்து வந்தன. அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களின் முயற்சியால் மனித உரிமைகளின் கண்ணோட்டத்தில் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கு அறநிலையம் மற்றும் நிறுவன பராமரிப்பு அளிக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய அரசாங்கம் இத்தகைய குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விளம்புநிலை குழுவினருக்கான பொறுப்பு தனக்குத்தான் உள்ளது என அங்கீகரித்தது. மாற்றுத்திறன் நபர்களின் நல்வாழ்வுக்கும் மறுவாழ்வுக்கும் அரசாங்கம் பலவிதமான திட்டங்களை வகுத்தது.

மாற்றுத்திறன் நபர்கள் பலதரப்பட்ட தடைகளைச் சந்தித்து வருகிறார்கள். சமூக உள்ளடக்கங்களை தடுக்கக்கூடிய மனப்பாங்கு, உடலியங்கல், சமூகவியல் சார்ந்த தடைகளாக இவை உள்ளன. ஊனம் ஒரு சமூகக் கறை என்பது போன்ற பார்வையில் சமுதாயம் மாற்றுத்திறன் நபர்களை எதிர்மறையாக பார்க்கின்றது. இந்த மனப்பாங்கு அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது. ஊனம் உள்ள நபருக்கு அந்த ஊனமானது அவர் கடந்த காலத்தில் செய்த பாவம் அல்லது விதியால் ஏற்பட்டது என சமுதாயம் நம்புகிறது. இந்த ஊனம் கடவுள் அவருக்கு அளித்த தண்டனை என்பதால் இந்த நிலைமையை யாராலும் மாற்ற முடியாது என்றும் சமுதாயம் நம்புகிறது. இத்தகைய தடைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஏற்படுத்தும் தாக்கமானது மாற்றுத் திறன் நபர்களை பெரும்போக்கு சமுதாயத்தில் இருந்தும் பொருளாதார நடவடிக்கையில் இருந்தும் விலக்கி வைப்பதாக முடிகின்றது. இயல்பான நபர்களோடு ஒப்பிடும்போது மாற்றுத்திறன் நபர்கள் அன்றாட வாழ்வில் பல அம்சங்களில் பாதகமான விளைவுகளை அனுபவிக்கின்றனர். மாற்றுத்திறன் நபர்கள் அனுபவிக்கும் இந்தப் பாதகமான விளைவுகள் அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கைத் தரத்தையும் குறைக்கின்றன. பலர் தாங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக, சமுதாயத்திற்கு வேண்டாதவர்களாகவும் நினைக்கின்றார்கள். சமுதாயமும் இவர்களை பாரம் என்றே கருதுகின்றது. இவர்களது குடும்பத்தினர்களும் பெற்றோர், குழந்தைகள், உடன்பிறந்தோரும் எதிர்மறையான மனப்பாங்கு, வறுமை மற்றும் எல்லை வரையறுக்கப்பட்டவர்கள் என்பதன் சமுதாயத்தால் பார்க்கப் படுகின்றார்கள். இந்த எல்லை வரையறைகளை சமுதாயம் ஏற்றுக் கொள்கின்றது. எனவே பார்வை மற்றும் உடல் இயங்கியல் குறைபாடு உள்ள நபர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற தெளிவான அணுகுமுறை சமுதாயத்திற்கு இருக்கின்றது. குடிமைச் சமுதாயம் பலநிலைகளில் ஊனங்கள் உள்ள நபர்களுடன் உறவாட வாய்ப்பு ஏற்படுத்தித் தருவது முக்கியமானதாகும். இதன்மூலம் அத்தகைய மாற்றுத் திறனாளிகளை சமுதாயத்தில் உள்ளடக்கும் வழிமுறையை குடிமைச் சமுதாயம் கண்டறியும்.

அடிப்படையில் மொழியின் அர்த்தப் பயன்பாடு மாற்றுத் திறன் நபர்களை தங்கள் நிலைமைக்கு தாங்களே காரணம் என்று ஏற்றுக் கொள்ள வைக்கின்றது. கல்வி மற்றும் வேலைக்கான வாய்ப்புகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. மற்றவர்களுடன் அர்த்தபூர்வமான உறவுகளும் அவர்களுக்கு ஏற்படுவதில்லை. எதற்கும் உபயோகம் இல்லாதவர்கள் என அவர்கள் முத்திரை குத்தப்படுகின்றனர். எனவே அவர்கள் சமூகத்திற்கு சுமையானவர்களாக  ஆகின்றனர்.

மாற்றுத்திறன் நபர்களில் பலரும் தாங்கள் வசிக்கும் சமூகத்துக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் எந்தப் பங்களிப்பும் செய்ய முடியாதவர்களாக உள்ளனர். ஆனால் சரியான உதவி கிடைத்தால் அவர்களால் ஏதாவது தொழில் செய்ய முடியும்; ஊக்கமாக சமூகச் செயல்பாடுகளில் பங்கேற்க முடியும். இவர்களில் பெரும்பான்மையினர் வேலையில் இல்லை. உள்ளுறை திறன்களும் திறமைகளும் கொண்ட மக்கள் திரளினராக இவர்கள் உள்ளனர். இந்த உள்ளுறை திறன்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப் பட்டால்தான் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். பணி செய்வதற்கும் பொருள் ஈட்டவும் அவர்களுக்கு அதிகாரம் ஏற்படுத்தித் தருவதற்குப் பதில் மாற்றுத்திறன் நபர்கள், அரசு மற்றும் குடும்பத்தினரின் உதவியுடன் வாழ வைக்கப்படுகின்றார்கள். தாங்கள் வேலை செய்யும் போது கிடைக்கும் சொற்ப சம்பளத்தால் அவர்களது பிற்கால முதுமை வாழ்வுக்கு ஏதும் சேமிக்க முடிவதில்லை. எனவே பணி ஒய்வுக்குப் பிறகும் அவர்கள் பாதகமான விளைவுகளையே சந்திக்க வேண்டி உள்ளது.

உடல் இயங்கியல் தடைகளைப் பொறுத்த அளவில், மாற்றுத்திறன் நபர்களில் பெரும்பான்மையினருக்கு அவர்கள் செயல்படுவதற்கு ஏற்ற சூழ்நிலையைக் கண்டறிவதே சிரமமாக இருக்கின்றது. உதாரணமாக போக்குவரத்து வாகனங்கள், கட்டிடங்கள் முதலானவற்றைக் கூறலாம். இவை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் இருப்பதில்லை. அதேபோன்று ரெயில்களின் உள்கட்டமைப்பிலும் ரெயில் நிலையங்களின் கட்டிட அமைப்புகளிலும் மாற்றுத்திறன் பயணிகள் பல சிரமங்களை அனுபவிக்கின்றார்கள். அவர்களால் ரெயில் நிலையத்துக்கு வருவதற்கோ ரெயிலில் ஏறுவதற்கோ எளிதில் முடிவதில்லை. இயல்பான மனிதர்கள் போலவே ரெயிலில் பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கு மாற்றுத்திறன் நபர்களுக்கும் உரிமை உள்ளது என்பதை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமாகும். பலவகை ஊனங்களின் தன்மைகளைக் கருத்தில் கொண்டு ரெயில் பயணத்துக்கான வசதிகளை ஏற்படுத்தித் தாருங்கள் என ரெயில்வே வாரியத்தைக் கேட்பதற்கான உரிமை மாற்றுத்திறன் நபர்களுக்கு உள்ளது.

பல்வேறு வகையான ஊனங்கள் கொண்ட நபர்களின் பல்வேறுபட்ட தேவைகளை எதிர்கொள்வதற்கான அரசாங்க கொள்கை எந்த வகையிலும் மாற்றுத்திறனாளிகளைக் கலந்தாலோசித்து உருவாக்கப்படுவதில்லை. அவர்களிடம் ஆலோசனைகளும் பெறப்படுவதில்லை. கொள்கை உருவாக்கத்தில் செயல்பாட்டில் அவர்களும் உறுப்பினர்களாக ஈடுபடுத்தப்படுவதில்லை. மாற்றுத்திறன் நபர்கள் பெரும்பாலும் தாங்கள் சிதறுண்ட, சிக்கலான, அதிகாரம் நிறைந்த ஒரு அமைப்பை எதிர்த்துப்  போராடுவதாகவே உணர்கின்றனர். இந்த அமைப்பானது மாற்றுத்திறன் நபர்களின் தேவைகள் முக்கியமானவை என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இவர்களின் வாழ்க்கையை உயர்த்துவது, சமூகத்தில் ஒருங்கிணைப்பது ஆகிய நோக்கங்கள் கவனம் பெறுவதில்லை. இத்தகைய அரசியல் மற்றும் சட்டரீதியான செயல்பாடுகள் மாற்றுத் திறனாளிகளைத் தனிமைப்படுத்துகின்றன; அவர்களை விளிம்புநிலைக்குத் தள்ளுகின்றன. இதன் விளைவு சமூக விலக்கம் என்றாகின்றது.

செயல் உத்திகள்

சமூக உள்ளடக்கலுக்கான கோரிக்கைகள் என்பது சமூகம் செயல்படுத்தி வரும் அடக்கு முறைக்கான ஒரு எதிர்ப்பு என்பதே உண்மையாகும். மாற்றுத் திறனாளிகள் பாதிப்புக்கு உள்ளாவதையும் சுரண்டலுக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலே கூறிய பலவகையான தடைகளை நீக்குவது என்பதே மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வழிமுறையாகும். வீட்டில், சமுதாயத்தில், பணியிடத்தில் அவர்கள் பொறுப்புமிகுந்த குடிமக்களாக செயல்படுவதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும். பிறரைச் சார்ந்து வாழும் கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட வேண்டிய காலம் இதுவே ஆகும். அவர்களிடம் இருந்து நாம் எதையும் இப்போது எதிர்பார்ப்பதில்லை. இதுவும் மாற வேண்டும். மாற்றுத்திறன் நபர்களுக்கு அதிகாரம் அளிக்கும், அவர்களின் பங்கேற்புக்கு வழி செய்யும், அவர்களை உள்ளடக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கி நாம் செயல்பட வேண்டும்.

இத்தகைய தடைகளை எதிர்கொண்டு செயல்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமை மட்டுமன்று. மாற்றுத் திறனாளிகள், வேலை அளிப்போர், சுகாதார அலுவலர்கள், கல்வியாளர்கள், உள்ளூர் சமுதாயத்தினர், பொருட்கள்/சேவைகளை வழங்குபவர்கள் என அனைவருமே மாற்றுத்திறன் நபர்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கும் அவர்களின் சமூக உள்ளடக்கலை உறுதி செய்வதற்கும் பங்காற்ற முடியும்.

இது மிகக் கவனமாகத் திட்டமிடப்பட வேண்டும். போதுமான நிதி ஆதாரங்கள் தரப்படவேண்டும்; தொலைநோக்குப்பார்வையுடன் செயல்படுத்தப்பட வேண்டும்

  1. பலவகையான ஊனங்கள், அத்தகைய ஊனங்களால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள், அவர்களின் திறமைகள் குறித்து அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
  2. மருத்துவப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், வேலையளிப்போர், வேலைவாய்ப்பு அதிகாரிகள், உள்ளுர் சமுதாய தலைவர்கள் என பல தரப்பினருக்கும் பணியிடைப் பயிற்சி அளிக்க வேண்டும். ஊனம் பற்றிய அறிவை மேம்படுத்திக் கொள்ளுதல், மாற்றுத் திறனாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் அவர்களுக்காக பணியாற்றுவதற்கும் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல், ஊனம் மற்றும் ஊனத்தால் பாதிக்கப்பட்டவர் குறித்த தங்களது மனப்பான்மையை மாற்றிக்கொள்ளுதல் ஆகியன இந்த பணியிடைப் பயிற்சியின் நோக்கங்கள் ஆகும்.
  3. மாற்றுத் திறன் நபர்களின் கருத்து மற்றும் திறன்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். தங்களுக்குத் தாங்களே அதிகாரம் அளித்துக் கொள்ள அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.
  4. மாற்றுத் திறனாளிகள் குறித்த கட்டாய பாடம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்டத்தில் பலவகைப்பட்ட ஊனங்கள் கொண்ட குழந்தைகளுக்குக் கற்பிக்கும் முறைமை சேர்க்கப்பட வேண்டும்.
  5. மாற்றுத்திறன் நபர்கள் சமுதாயத்திற்குப் பங்களிக்கும் வகையிலான வாய்ப்புகளை அணுகி பயன்படுத்த வேண்டிய உதவி சிறப்பு மற்றும் பெரும்போக்கு கொள்கை மூலம் தரப்பட வேண்டும். சமூகம் இவர்களது திறமைகள் மீது நம்பிக்கை கொள்ளும் வகையில் இவர்களும் சமுதாயத்தின் அங்கத்தினர்களாக மாற இந்தக் கொள்கைகள் உதவும்.
  6. மற்ற சாதாரண குடிமக்களுக்கான தேவைகளைக் கருத்தில் கொள்வது போலவே மாற்றுத்திறன் நபர்களின் தேவைகளும் கொள்கை வடிவமைப்பில், செயலாக்கத்தில் ஆரம்பக் கட்டத்திலேயே அக்கறையுடன் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
  7. அரசாங்க ஆதரவு மற்றும் சேவைகள குறித்த மாற்றுத் திறனாளிகளின் அணுபவங்கள் மாற்றப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் போதுமான கருத்துப் பகிர்வு ஏற்பட வேண்டும்.
  8. தடைகள் ஏதும் இல்லாத அனைவரையும் உள்ளடக்கிய சூழ்நிலையை ஏற்படுத்தும் அனைவருக்குமான வடிவமைப்பை செயல்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

ஆதாரம் : டாக்டர் சந்தியா, உதவிப்பேராசிரியர், மாற்றுத்திறன் ஆய்வு மற்றும் நடவடிக்கை மையம், டாடா சமூக அறிவியல் நிறுவனம், மும்பை – திட்டம் மாத இதழ்

2.94444444444
சிவா Jun 06, 2017 12:52 PM

நான் மாற்றுத்திறனாளி நான் பொது விநியோக திட்டத்தின் கீழ் விற்பனையாளராக 3 வருடகாலமாக நான் வசிக்கும் இடத்தில் இருந்து சென்று வர 50கி.மீட்டர் ஆகிறது நான் அருகில் வேலையை மாற்றிக்கொள்ள வசதிகள் ஏதும் உள்ளனவா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top