பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறன் வகைகள், இந்தியாவில் அவர்களின் நிலை குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஊனம் என்பது, மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இயலாமை இருப்பதைக் குறிக்கும். இது உடற் குறைபாடு, புலன் குறைபாடு, அறிதிறன் அல்லது அறிவுத்திறன் குறைபாடு, உளவியல் குறைபாடு, பிற நோய்கள் தொடர்பான குறைபாடு என்பவை தொடர்புடையதாக இருக்கலாம். ஊனம் ஒருவருடைய வாழ்க்கைக் காலத்தில் ஏற்படலாம் அல்லது பிறப்பிலேயே இருக்கலாம்.

ஊனம் என்பது தனிப்பட்டவரோடு மட்டுமே தொடர்புடையதாகக் கருதக்கூடும். இதனால், அத்தனிப்பட்டவரை எவ்வாறு சிறப்பாகச் செயல்படவைக்க முடியும் என்பது குறித்துக் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த நோக்கு ஊனத்துக்கான மருத்துவ மாதிரி என்பதுடன் தொடர்புபட்டது. மாறாக, ஊனம் தொடர்பில் மக்களுக்கும், அவர்களுடைய சூழல், சமூகம் என்பவற்றுக்குமான தொடர்புகளுக்கு முதன்மை அளிக்கக்கூடும்.

இது மனப்பாங்கினாலும் தேவைகளை அடைவதற்கு வேண்டிய தர அளவுகளை ஊனமற்ற பெரும்பான்மையினருக்குச் சார்பாக வைத்திருப்பதனாலும் ஊனமுற்றோருக்கு இயலாமையை ஏற்படுத்திக்கொண்டு அல்லது அதனைப் பேணிக்கொண்டு அவர்களை இயலாதவர்கள் என்று முத்திரை குத்தும் சமூகத்தின் பங்கு குறித்துக் கவனம் செலுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. இந்த நோக்கு, மனித உரிமைகள் அல்லது ஊனத்துக்கான சமூக மாதிரி என்பதோடு தொடர்புடையது. மாற்றுத் திறனாளிகளை உலகின் மிகப் பெரிய சிறுபான்மையினர் என்று குறிப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம்.

தொன்றுதொட்டு உலகில் பல நூறு ஆண்டுகளாக உடல் குறைபாட்டோடு சில குழந்தைகள் பிறந்து இறந்துபோவதுண்டு, சில குழந்தைகள் அந்த குறைபாட்டோடு வாழ்க்கை என்கின்ற சக்கரத்தில் சேர்ந்து சுழலுவதும் உண்டு. அப்பேர்ப்பட்ட குறைபாட்டோடு வாழும் இவர்களை ஒருகாலத்தில் ஊனமுற்றோர் என்ற பெயரோடு இவர்கள் மனதில் ஊனத்தையும் பிறவியிலேயே விதைத்து இவர்களை கூனிக்குறுக செய்து இந்த மாற்றுத்திறனாளிகளை உண்மையிலேயே ஒரு மூலையில் அமர வைத்த காலம்போய், இன்று அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் என்ற பெயர் சொல்லியழைப்பது எவ்வலவு நாகரீகமான முன்னேற்றம். வெலிநாடுகள் பலவும் அங்கு வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு பெறிதும் ஊக்கம் ஊட்டியது, அதோடு பிறநாடுகளில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவுகின்றது.

ஹெலன் கெல்லர் ஒரு அயல் நாட்டவர் இவர் எப்படி படித்தார்? எப்படி அந்த சாதனையை அவரால் எட்டமுடிந்தது?

பீத்தோவன் எப்படி இசையை கற்றார், அவரால் அந்த சாதனையை எப்படி அடையமுடிந்தது?

லூயி பிரெயில் எப்படி தனது சாதனையை எட்டினார்? இதற்கெல்லாம் ஒரே பதில் ஊக்கம்.

இரவும், பகலும், இருளும் ஒளியும் மாறி மாறி வருவது இயற்கையின் நியதி. துருவ பிரதேசங்களில் ஆறு மாதங்கள் இருளுக்குப்பின் ஆறு மாதம் ஒளி பிறக்கும். ஆனால் எப்பொழுதுமே இருளை உங்களால் கற்ப்பனை செய்து பார்க்கமுடியுமா?

நம் கற்பனைக்குகூட எட்டாத ஓர் இருள் சூழ்ந்த உலகம் இருக்கிறது. அதுதான் பார்வை மாற்றுத்திறனாளிகளின் உலகம். ஐம்புலன்களில் விலை மதிக்கமுடியாதது நமது கண்கள். அந்த கண்களை இழந்த இவர்கள் எப்படி எதிர் நீச்சல் அடித்து கரை தொட முயல்கிறார்கள்.

மாற்றுத்திறன் வகைகள்

“மாற்றுத்திறனாளி” என்பவர் உடலிலோ அல்லது மனதிலோ ஏற்ப்பட்ட மாற்றத்தின் காரணமாக அவரால் சில செயல்களை செய்யமுடியாமல் போய்விடுகிற காரணத்தினால் அவர்களை நாம் அவ்வாறு அழைக்கிறோம். அது பின்வரும் வழிகளில் வகைப்படுத்தபடுகிறது:

 • மரபணுவினால் பிறப்பிலேயே ஏற்படும் மாற்றங்கள்
 • தாயின் கருவில் இருக்கும் பொழுதோ அல்லது பிறந்த உடனே ஏற்படும் நோய்கள் மூலம் ஏற்படும் மாற்றங்கள்
 • நோயினாலோ அல்லது விபத்திலோ ஏற்படுத்திக்கொண்டது
 • தெரியாத காரணங்களால்

உடல் ஊனம்

மூட்டுகள், நுண்ணிய எலும்புகள் அல்லது மொத்த மோட்டார் திறன் வலுக்குறை கொண்டு பாதிக்கப்படும்போது அது உடல் ஊனம் எனப்படுகிறது.

புலன் குறைபாடு

ஏதேனும் ஒரு புலனின் வலுக்குறை புலன் குறைபாடு ஆகிறது. இது பொதுவாக பார்வை மற்றும் காது கேளாமை குறைபாடுகளை கொண்டிருக்கிறது, ஆனால் வேறு சில புலன்களும் குறைபடலாம்.

பார்வை குறைபாடு

வழக்கமான வழிமுறைகளை கொண்டு சரி செய்ய இயலாத பார்வை வலுக்குறைகளாய் ஒரு நபருக்கு இருக்கும் பார்வை செயளிலப்புக்களை நாம் பார்வை குறைபாடு எனக் கூறலாம்.

கேள்விக் குறைபாடு

கேள்விக் குறைபாடு என்பது பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஒலியை உணரும் அல்லது புரிந்து கொள்ளும் வல்லமையை இழத்தல் ஆகும். பல வகையான உயிரியல் காரணங்களினாலும் சூழல் காரணங்களினாலும் ஏற்படக்கூடிய இக் குறைபாடு ஒலியை உணரும் தன்மை கொண்ட எல்லா உயிரினங்களிலும் ஏற்படலாம்.

நுகர்ச்சி மற்றும் சுவைசார் புலன் குறைபாடு

நுகர்ச்சி மற்றும் சுவைசார் புலன் குறைபாடுகள் பொதுவாக வயது முதிர்ச்சியின் காரணமாக வருவதுண்டு. ஆனால் இளைய வயதினருக்கும் இது போன்று வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மனவளர்ச்சிக் குறைபாடு

மனவளர்ச்சிக் குறைபாடு என்றால் அறிவு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு. 1838-ஆம் ஆண்டு எஸ்கிரால் என்பவர் மனவளர்ச்சிக் குறையைப் பற்றி விளக்கும்போது ”மனவளர்ச்சிக் குறை என்பது ஒரு நோயல்ல; வளர்ச்சி நின்றுவிடும் நிலை”என்று விளக்கினார். டிரட்கோல்ட் என்பவர் ”முழுமையான அல்லது சாதாரண வளர்ச்சி அடையத்தவறிய மனதின் நிலையே மனவளர்ச்சிக் குறை”என்று கூறினார். மனவளர்ச்சிக் குறைவை பலரும் மன நோய் எனத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் மனவளர்ச்சிக் குறைவு வேறு; மன நோய் வேறு.

உளப் பிறழ்ச்சி

உளப் பிறழ்ச்சி (Mental disorder) அல்லது உள நோய் அல்லது மன நோய் என்பது தனிப்பட்ட மனிதரில் உண்டாவதும், வழமையான பண்பாட்டு வளர்ச்சியில் எதிர்பார்க்கப்படாத துன்பத்தை அல்லது இயலாமையை உண்டாக்கும் உளவியல் அல்லது நடத்தைக் கோலம் ஆகும். உளப் பிறழ்ச்சியை அடையாளம் காணலும், அது தொடர்பான புரிதலும் காலத்துக்குக் காலமும், பண்பாட்டுக்குப் பண்பாடும் மாற்றமடைந்து வந்திருக்கிறது. உளப் பிறழ்ச்சி என்பதன் வரைவிலக்கணம், மதிப்பீடு, வகைப்பாடு என்பன மாறுபட்டாலும் நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு, உளப்பிறழ்ச்சி தொடர்பான நோயறிதல் மற்றும் புள்ளியியல் கையேடு போன்றவற்றிலும் இவை போன்ற பிற கையேடுகளிலும் தரப்படும் வழிகாட்டல்கள் உளநல வல்லுனர்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் நிலை

இந்தியாவில் மட்டும் 7 கோடிக்கும் அதிகமானோர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். வளர்ந்த நாடுகளைவிட இந்தியா போன்ற ஏழை மற்றும் வளரும் நாடுகளில் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் எண்ணிக்கையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனமும் உலக வங்கியும் இணைந்து தயாரித்த 2011 ஆண்டின் மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய முதல் உலக அறிக்கை குறிப்பிடுகிறது. 2006 ஆம் ஆண்டு ஊனமுற்றோருக்கான ஐ.நா. சாசனம் விதிகளை இந்தியாவும் கையொப்ப மிட்டு ஏற்றுள்ளதோடு, தற்போது அது அமலிலும் உள்ளது. “மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை கருணை அடிப்படையில் பார்க்ககூடாது என்பதும் உரிமைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்பதும், அவர்களுக்கு எதிரான பாரபட்சங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்”என்பதும் ஐ.நா. சாசன விதிகளாகும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டம்

ஊனமுற்றோர் (சம வாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம் 1955-ல் நிறைவேற்றப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1996-இல் தான் நடைமுறைக்கு வந்தது.

தேசிய நிறுவனம்

ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் சென்னை கோவளம் முட்டுக்காடு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, சேவையாற்றி வருகிறது.

இங்கு,

 • மறுவாழ்வு மருத்துவம்
 • மறுவாழ்வு உளவியல்
 • ஊனமுற்றோருக்கான தொழில் பயிற்சி
 • பேச்சு, கேட்டல் மற்றும் தொடர்புப் பயிற்சி
 • சிறப்புக் கல்வி
 • கண் பார்வையின்மையோடு இணைந்த காது கேளாமை
 • இயன்முறை மருத்துவம் மற்றும் செயல்முறை மருத்துவம்
 • 0-3 வயதில் தொடக்கக் கால பயிற்சி
 • செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கு சாதனங்கள் பொருத்துதல்
 • உணர்வு உறுப்புகள் குறைபாட்டுக்கான ஒருங்கிணைப்புப் பயிற்சி
 • சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு பணிகள் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

கல்வி

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 64.8 சதவீதம் பேர் கல்வி கற்றவர்களாக உள்ள நிலையில், வெறும் 49 சதம் மாற்றுத்திறனாளிகளே கற்றவர்களாக உள்ளனர். 44 சதவீத பள்ளிகள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாதவைகளாக உள்ளதாக அரசு தகவல்கள் உள்ளன. பார்வையற்றோருக்கான பிரெயில் வடிவிலான ஆவணங்களும் காதுகேளாத வாய் பேசாதோருக்கான சைகை மொழிபெயர்ப்பாளர்களும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு பள்ளிகள் மற்றும் சிறப்பாசிரியர்கள் போதிய அளவில் இல்லாததும் இவர்களின் கல்விக்குத் தடைகளாக உள்ளன.

வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பில்லாமல் அவதியுறும் ஊனமுற்றோரின் எண்ணிக்கை 66 சதவீதமாக உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு இன்னின்ன வேலைகள் ஒதுக்கப்படலாம் என்று இனம் காணும்படி சட்டம் வழிகாட்டுகிறது. அரசுத் துறைகளில் உள்ள C மற்றும் D பிரிவு ஊழியர் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறை 1977 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு 1996 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த சமவாய்ப்புச் சட்டத்திலும் வழிவகை செய்யப்பட்டது. தேசிய ஊனமுற்றோர் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மையத்தின் புள்ளிவிவரப்படி, அரசு வேலைவாய்ப்பில் 0.5 விழுக்காடும், தேசிய அளவில் எடுத்துக்கொண்டால் 0.4 விழுக்காடும்தான் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

சர்வதேச ஊனமுற்றோர் நாள்

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (பன்னாட்டு ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3 அனுசரிக்கப்படுகிறது.

1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.

உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. பல நாடுகள் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஊனமுற்றோர் மறுவாழ்வு முயற்சிகள்

1957 -ம் ஆண்டு ஊனமுற்றோருக்கான முதல் வேலைவாய்ப்பு மையம் பம்பாயில் ஏற்படுத்தப்பட்டு, தொடர்ந்து 22 நிலையங்கள் மத்திய அரசால் பெரும் நகரங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 55 உப அலுவலகங்கள் பல்வேறு கிராமப்பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளது.

1968 -ம் ஆண்டு மத்திய அரசால் ஊனமுற்றோர் மறுவாழ்வு இல்லங்கள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது 17 இல்லங்கள் இந்தியாவின் பெரும் நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றது.

1981 -ம் ஆண்டு சர்வதேச ஊனமுற்றோர் ஆண்டாக அனுசரிக்கப்பட்டது.

1969 -ம் ஆண்டு முதல் வேலை பார்க்கும் ஊனமுற்றோர்களுக்கு வகைக்கு இரண்டு பேராக 10 நபர்களுக்கும், அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் 5 நபர்களுக்கும் தேசிய விருதுகள் சர்வதேச ஊனமுற்றோர் தினம் அன்று, குடியரசு தலைவரால் வழங்கப்படுகிறது.

1995 -ம் ஆண்டின் ஊனமுற்றோர் (சம வாய்ப்புகள், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்ப்பு) சட்டமும், 1992 -ம் ஆண்டின் மறுவாழ்வு குழுமச் சட்டமும், 1999 -ம் ஆண்டின் ஊனமுற்றோர் நலனுக்கான தேசிய அறக்கட்டளைச் சட்டமும் அவர்கள் நலனுக்காக இந்திய அரசால் இயற்றப்பட்டவை ஆகும்.

இந்தியாவில் மத்திய அரசால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 183 ஊனமுற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது.

இவை போக அனைத்து மாநில அரசுகளும் ஊனமுற்றோர் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பயணச் சலுகை

உடல்ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் ஆகிய மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு, இரையில்வே போக்குவரத்தில் இலவச இரயில் பயண அட்டை ‘4/1’ என்ற கட்டண அடிப்படையிலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இலவசப் பயண அட்டைகளை வழங்கி வருகிறது. மாவட்டத்திற்குள் பயனித்தால் இலவசமாகவும், தொலைதூர பயணமாக இருந்தால் 4/1 என்ற கட்டன முறையிலும் சலுகைகளை அளித்துவருகிறது.

மருத்துவ அலுவலரின் சான்றிதழின்படி ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை வழங்கும் அடையாள அட்டை மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்கள் வழங்கும் பரிந்துரையின்படி இலவசப் பயணச் சலுகை வழங்கப்படுகிறது.

பார்வையற்றவர்களுக்கு அனைத்துத் தடங்களிலும் ஆண்டு முழுவதும் பயணம் செய்யக் கூடிய வகையில் இலவசப் பயணச் சலுகை வழங்கப்படுகிறது.

பார்வையற்றவர்களுக்கு வருமான உச்சவரம்பு இன்றி இலவசப் பயணச் சலுகை ஆண்டிற்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.

பார்வையற்றவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு மாற்றுப் பயண அட்டைகாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

விண்ணப்பப் படிவம்

இந்த இலவசப் பயணச் சலுகைக்கான விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். இதனை முழுமையாக நிரப்பி அந்தந்த பகுதியிலிருக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு இலவசப் பயணச் சலுகை அளிக்கப்படும். அந்த விண்ணப்பப் படிவத்துடன் கீழ்காணும் சான்றிதழ்கள் அவசியம் இணைக்கப்பட வேண்டும்.

இலவச பயணச் சலுகை பெறும் ஊனமுற்றவர்கள் மருத்துவமனை/கல்லூரி/பயிற்சிக் கூடம்/பணியிடம்/ சுயமாக வேலை செய்யும் இடம் இவற்றில் ஏதேனும் ஒருஇடத்திற்கு மட்டும் சென்று வர இலவச பயணச் சலுகைக்கு உரிய சான்றிதழை சமர்பிக்க வேண்டும். மாவட்ட மறுவாழ்வு அலுவலரின் பரிந்துரை பெற்று வரவேண்டும்.

விண்ணப்பதாரர் இலவசப் பயணச்சலுகை கோரும் விண்ணப்பத்துடன் தனது இரண்டு புகைப்பட நகல்களை (தபால்தலை அளவு) சமர்ப்பிக்கவேண்டும். வருமானச் சான்றிதழ் வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்பிக்கவேண்டும். மேற்படி இலவச பயணச்சலுகை ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

2.88333333333
ச.வினோத்குமார் May 03, 2020 07:04 PM

ஊனமுற்றோர் பணவுதவி கொடுத்தால் நன்று

ச.வினோத் குமார் May 03, 2020 07:00 PM

நான் ஏற்கனவே மாவட்ட மறுவாழ்வு அலுவலர் மூலமாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை நல உதவிகள் பெற்று வருகிறேன். தற்போது கோரோனவால் எந்த பணம் வருமானம் இல்லாத நிலையில் ஏதேனும் பண உதவிகள் கொடுத்து உதவுமாறு வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்...

Anonymous Jun 15, 2017 10:41 AM

என் மகன் ஒரு மாற்றுதிறனாளி.அவன் CP/MR .அவனுக்கு எந்த மாதிரியான பயிற்சி அளிக்கலாம். அவனுக்கு வயது 17

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top