பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம் / மாற்றுத்திறன் மற்றும் நலனுக்கு அப்பால் சலுகைகளைப் பெறுதல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாற்றுத்திறன் மற்றும் நலனுக்கு அப்பால் சலுகைகளைப் பெறுதல்

மாற்றுத்திறன் மற்றும் நலனுக்கு அப்பால் சலுகைகளைப் பெறுதல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மாற்றுத்திறனாளி நபர்களை எல்லா விஷயங்களிலும் சேர்த்துக்கொள்வதற்கு, அவர்களுக்கு எல்லாவற்றிலும் எளிதாக அணுகும் நிலையை உருவாக்குவது அவசியம். மாற்றுத் திறனாளர்கள் செளகரியமாகவும், தன்னிச்சையாகவும், பாதுகாப்பாகவும் சமூகத்தில் சேர்ந்து வாழ எளிதாக அணுகும்நிலை அவசியமானது. எளிதாக அணுகும் சூழல் பெருகப் பெருக, மாற்றுத் திறனாளரின் இடர்ப்பாடுகள் குறையும் என்ற எதிர் விகிதத்தில் இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது. பொதுவாகவே எளிதாக அணுகும் நிலை என்பது எல்லாருக்குமே வேண்டிய உள்ளார்ந்த உரிமை எனலாம். மாற்றுத்திறனாளர் அல்லது முதியோர் போன்றவர்களுக்கு மட்டுமே தேவையானது அது என்ற சிந்தனைப் போக்கும் மாறவேண்டும்.

எனினும், எளிதாக அணுகும் நிலை என்பது மாற்றுத்திறனாளர் சுயேட்சையாக இயங்குவதில் தான் தோன்றியது. சுதந்திரமாக அவர்கள் இயங்குவதற்குத் தடைகள் இருக்கக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கும் ஏற்றவாறு எல்லா வடிவமைப்புகளும் மாற வேண்டும் என்ற சிந்தனை தோன்றியது. அனைவருக்குமான வடிவமைப்பு என்பது பாலினம், வயது வித்தியாசம், சமூக, பொருளாதார, பண்பாட்டு மாறுபாடுகளில் உள்ளவர்கள் என மனிதர்களிடையே உள்ள அனைத்து வேறுபாடுகளுக்கும் சமமான வகையில் பயன் தருவதாகவும் அவர்களை உள்ளடக்கிக் கொள்வதாகவும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளர் அல்லது ஒரு விசேஷ பிரிவினருக்கு என்று பிரத்யேகமாக வடிவமைப்பதை உருவாக்குவது என்று அடிப்படையிலேயே மாற்றம் ஏற்படுவதுதான் அனைவருக்குமான வடிவமைப்பு எனலாம். எனவே கட்டிடங்கள் முதற்கொண்டு, தொழில்நுட்ப சாதனங்கள் வரை அனைத்துமே, எவ்விதமான தனியான மாற்றங்களும் இல்லாமல், பாதுகாப்பாகவும் தன்னிச்சையாகவும் பயன்படுத்தத்தக்கதாக இருக்க வேண்டும். இவ்வாறு எல்லாருக்குமானதாக எல்லா வடிவமைப்புகளும் மாறிவிடுவதால், மாற்றுத்திறனாளருக்கு என விசேஷ வடிவமைப்புகளுக்கு ஆகும் அதிகப்படியான செலவுகள் ஏதும் இல்லாமல் போய்விடும்.

உலக அளவில் ஐக்கிய நாடுகள் அமைப்பின், மாற்றுத் திறனாளர்களுக்கான வாய்ப்புகளைச் சமப்படுத்துவதற்கான நிலையான விதிகளின் படி (1983) வழிகாட்டி நெறிகள் உருவாக்கபட்டுள்ளன. அண்மையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர் உரிமைகள் குறித்த மாநாட்டில், எளிதாக அணுகும் நிலை ஒரு பொதுக் கோட்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தனி மனிதர்களின் இயக்கம் அல்லது நடமாட்டம் என்பதில் எளிதாக அணுகும் நிலைக்கான தேவைகள் முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட்டு, ஒவ்வொரு நாடும் தனது குடிமக்களுக்கு எளிதாக அணுகும் வசதிகளை உருவாக்கித் தரவேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளர்களுக்கான ஆசிய பசிபிக் பத்தாண்டு காலத்தில் (2013-2022) புறச்சூழலில் எளிதாக அணுகும் நிலை, பொதுப் போக்குவரத்தில் எளிதாக அணுகும் நிலை, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் எளிதாக அணுகும் நிலை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் இந்தப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டுள்ள இந்தியா, எளிதாக அணுகும் இந்தியா இயக்கத்தைத் (Accessible India Campaign) தொடங்கி உள்ளது.

எளிதாக அணுகும் இந்தியா இயக்கம்

மாற்றுத் திறனாளர்கள் வாய்ப்புகளை அணுகுவதற்கும், அனைத்துத் தளங்களிலும் முழுமையாக பங்கேற்றுச் சுதந்திரமாக வாழவும் வழிசெய்து, அவர்களையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்காக, எளிதாக அணுகும் இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளிக்கும் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் துறையின் மூலமாக இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின்கீழ், இயக்கத்தைப் பற்றி முக்கியப் பிரமுகர்களின் விளம்பர வாசகம், பொதுமக்களிடையே விழிப்புணர்வு, பயிற்சிப் பட்டறைகள் மூலம் திறன்கள் உருவாக்குதல், புதிய தொழில் நுட்பங்கள், நிதி வளங்கள் மூலமாக எளிதாக அணுகும் வசதிகளை மேம்படுத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படும். மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியோடு, அரசு-தனியார் துறை பங்களிப்புத் திட்டத்தின் படியும் எளிதாக அணுகும் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக இப்போதுதான் எளிதாக அணுகும் நிலைக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இதற்கு முழுமனதான வரவேற்பும் உள்ளது. எதிர்காலத்தில் எளிதாக அணுகும் சூழல் மேலும் பரவலாக இது ஒரு தொடக்கமே. இந்த இயக்கத்தின் உத்திகளில் முக்கியமானது எளிதாக அணுகும் நிலை பற்றி நாட்டு மக்களிடையே பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே. புறச்சூழல் அணுகுநிலை மட்டுமின்றி, எல்லா விஷயங்களிலும் அணுகுநிலை மேம்படுத்துவதாகவும் செயல்திட்டங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சவால்கள்

எனினும், எளிதாக அணுகும் வடிவமைப்பிற்கான குறைந்தபட்ச தர நிர்ணயம் பற்றிய தெளிவான வரையறை எதுவும் தற்போது இல்லை. கட்டுமானங்கள், போக்குவரத்து சாதனங்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் என எவற்றுக்குமே எவ்வித தரநிர்ணயமும் கிடையாது. இவற்றுக்கான தர அளவை உருவாக்கவும், சைகை மொழி விளம்பரங்களை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், போக்குவரத்து சாதனங்களில் இவ்விஷயத்தில் வெற்றிடமே உள்ளது. கட்டுமானங்களுக்கு பல வழிகாட்டி நெறிகள் இருப்பினும், அவற்றில் எதுவுமே கட்டாயமாக்கப்படாததால் குழுப்பங்களே மிஞ்சியுள்ளன.

  • எளிதாக அணுகும் நிலைகளைத் தணிக்கை செய்ய வேண்டும் என இந்த இயக்கத்தில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், அத்தகைய தணிக்கையாளர்கள் எவரும் இல்லாததும், அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வசதிகள் இல்லாததும் பெரும் குறைகளாகும்.
  • எளிதாக அணுகும் இயக்கம் முற்றிலும் நகர்ப் பகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. கிராமப்புறங்களில் எளிதாக அணுகும் வசதிகளை ஏற்படுத்த இலக்குகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
  • எளிதாக அணுகும் இந்தியா இயக்கம், கட்டிடங்கள் ஆனாலும், பொதுப்போக்கு வரத்து ஆனாலும், இணையதளங்கள் ஆனாலும், அரசாங்கத்திற்கு சொந்தமானவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. தனியார் துறையினர் இதன் எல்லைக்குள் கொண்டு வரப்படவில்லை. தனியார் அளிக்கும் சேவைகளை மேம்படுத்த அரசின் நிதியைச் செலவிடவேண்டிய நிர்பந்தம் எதுவும் அரசுக்கு இல்லை என்றாலும், தனியார் மூலமாக வழங்கப்படும் பொதுச் சேவைகளில், எளிதாக அணுகும் வசதியை உறுதிப்படுத்த அரசு தன் கண்காணிப்பினை மேற்கொள்ளலாம்.
  • நகரத்திற்குள்ளேயும், நகரங்களுக்கு இடையேயும் போக்குவரத்திற்கு மக்கள் அதிகமாக பயன்படுத்துவது பேருந்துகளைத்தான். ஆனால், இந்தப் பேருந்துகளை மாற்றுத்திறனாளர் எளிதாக அணுகிப் பயன்படுத்துகிற நிலைமையை மேம்படுத்துவதற்கு எந்தவித கவனமும் செலுத்தப்படவில்லை.
  • அரசுத்துறையின் கீழ்உள்ள கட்டமைப்புகளை ஏற்றவாறு மாற்றி, எளிதாக அணுகக் கூடியவையாக்கும் உத்தியே இப்போது பின் பற்றப்படுகிறது. புதிதாக உருவாகின்ற கட்டடங்கள், போக்குவரத்து வசதிகள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவற்றிலும் எளிதாக அணுகும் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

எளிதாக அணுகும் வசதி என்பது தற்போது மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளிக்கும் அமைச்சகத்தின் கீழே இருப்பதால், பொதுவாகவே அது மாற்றுத்திறனாளர்களுக்கான வசதிகள் என்றே பார்க்கப்படுகின்றன. ஆனால், இந்த விஷயத்தின்மூலம் பயன்பெறுபவர்களும் பலராக இருப்பதால் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டியதுறைகளும் பலவாக உள்ளன. எனவே, எளிதாக அணுகும் வசதிகளை ஏற்படுத்துவது மற்றும் கண்காணிப்பதற்கு கீழ்க்கண்டவை தேவைப்படுகின்றன.

சட்டத்திருத்தங்கள்

மாற்றுத்திறனாளர் உரிமைச்சட்டத்தைத் தவிர, எளிதாக அணுகும் உரிமையை ஓர் ஒருங்கிணைந்த உரிமையாக ஆக்குவதற்குப் பல சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம். கட்டுமானச் சட்டங்கள், நகர்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சி பற்றிய கூட்டங்கள், சாலைப்போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, கடற்போக்குவரத்து ஆகிய அனைத்தும் தொடர்பான சட்டங்கள், இணைய ஒழுங்கு முறை, ஒலிபரப்பு மற்றும் தொலைத் தொடர்பு நெறிமுறைகள், பேரிடர் மேலாண்மைச் சட்டங்கள், வீட்டுவசதிச் சட்டங்கள், கல்வி, சுகாதாரம், சுற்றுலா, விளையாட்டு, காவல், நீதித்துறை பண்பாடு உள்ளிட்ட பொதுச் சேவைகள் பற்றிய சட்டங்கள் ஆகியவற்றில், எளிதாக அணுகும் வசதி பற்றிய நிபந்தனைகளைச் சேர்க்க உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அனுகூலமான சூழலை ஏற்படுத்துவது

இந்திய சைகைமொழி நிறுவனம், அனைவருக்குமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வடிவமைப்பிற்கான இந்திய நிறுவனம் ஆகிய இரண்டு பயிற்சி மற்றும் கல்விக்கான நிறுவனங்கள் விரைவிலேயே செயல்பட வேண்டும்.

  • கட்டிடங்கள், போக்குவரத்து வாகனங்கள், போக்குவரத்து வாகன நிறுத்துமிடங்கள், மற்ற பொதுச் சேவை வசதிகள் அனைத்திற்கும் எளிதாக அணுகுவதற்கான வசதி பற்றிய குறைந்தபட்ச தேவைகளை வரையறுத்தி அறிவிக்க வேண்டும்.
  • கட்டிட அலங்காரக் கலை, பெரியியல், வடிவமைப்பு, கொள்முதல் நிர்வாகம் போன்ற படிப்புகளில், எளிதாக அணுகுதல் மற்றும் அனைவருக்குமான வடிவமைப்பு ஆகியவை கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும். இதுதவிர, அனைவருக்குமான வடிவமைப்பு பற்றிய பிரத்யேகப்படிப்புகளும் உருவாக்கப்பட வேண்டும்.
  • அரசாங்கத்தின் வளர்ச்சித்திட்டங்கள் யாவற்றிலும் மாற்றுத்திறனாளர்களுக்கான எளிதாக அணுகும் நிலை சேர்க்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதற்கான வழிகாட்டி நெறிகள் தரப்படுவதோடு தனியாக நிதி ஒதுக்கீடு செய்து, எளிதாக அணுகும் நிலையை ஏற்படுத்தியுள்ள விதத்தை மதிப்பிடவும் வேண்டும்.
  • புதிய கட்டிடங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன் தீத்தடுப்புப் பாதுகாப்பு போன்றவை உறுதி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்குவதுபோல, எளிதாக அணுகும் நிலை உள்ளது என்ற சான்றிதழ் பெறுவதையும் கட்டாயமாக்கலாம்.

அரசாங்கக் கொள்முதல்

மாற்றுத் திறனாளர்களுக்குப் பொதுத் தளங்களில் எளிதாக அணுகும் வசதியை, அரசாங்கத்தின் கொள்முதல் திட்டங்கள் மூலமாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்றவை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. நம் நாட்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20% முதல் 30 சதவீதம் வரை இத்தகைய கொள்முதல்களுக்குச் செலவிடப்படுவதாகத் தெரிகிறது.

தற்போது இந்தியாவில் உள்ள அரசுக் கொள்முதல் சட்டங்களும், கொள்முதல் பழக்கங்களும் எளிதாக அணுகும் விஷயத்தைக் கருத்தில் கொள்வதில்லை. பொதுக் கொள்முதல் திட்டங்களின் மூலம் வாங்கப்படும் பொருட்களின் அளவையும், அவற்றுக்காக அரசு செல்விடும் தொகையையும் கணக்கில் கொண்டு பார்த்தால், அவ்வாறு வாங்கப்படுகிறயாவும் எளிதாக அணுகும் தன்மை கொண்டிருப்பதை அரசு உறுதி செய்வது அவசியமாகிறது. கொள்முதல் கொள்கைகளில், எளிதாக அணுகும் கூறு முன் நிபந்தனை ஆக்கப்பட்டுவிட்டால், அனுகூலமான விளைவுகள் ஏற்படும். கொள்முதலில் மட்டுமின்றி, பொருள்களை உற்பத்தி செய்கின்ற நிறுவனங்களிலும் விளைவின் பயனைக் காணலாம்.

தனியார் துறை சேவைகளில் எளிதாக அணுகும் வசதிகள்

பல்வேறு சேவைகள் வழங்குவதை வேகமாக அரசு தனியார் மயமாக்கி வருகிற சூழ்நிலையில், அவற்றுக்கும் இந்த எளிதாக அணுகும் வசதிகள் பொருந்தும் என அறிவிப்பது முக்கியமானது. தற்போது, தனியார் துறையினரை எளிதாக அணுகும் வசதிகளை ஏற்படுத்தக் கட்டாயப்படுத்தும் சட்டங்கள் ஏதும் நம் நாட்டில் இல்லை. எனினும் சேவை வழங்குகின்ற தனியார் நிறுவனங்கள் இந்தப் பொறுப்பைத் தாமே முன்வந்து ஏற்றுக் கொள்ளலாம். இதனை அரசு எவ்வாறு உறுதி செய்யலாம் என்பதற்கான சில பரிந்துரைகள்:

எளிதாக அணுகும் முறையை உறுதிப்படுத்துவதாக அரசின் கொள்முதல் அமைப்புகள் செயல்பட்டாலேயே, தனியாரும் அதைப் பின்பற்ற வழி ஏற்பட்டுவிடும். எவ்வாறு எனில், அரசாங்கத் துறைகளுக்காக வாங்கப்படும் மின்தூக்கிகள் (லிப்ட்) எளிதாக அணுகும் விதிகளுக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், மின்தூக்கிகளைத் தயாரிக்கும் தனியார் நிறுவங்கள் எளிதாக அணுகும் வசதி கொண்டவற்றை மட்டுமே தயாரிக்கும். எனவே தனியார் கட்டிடங்களிலும் அத்தகைய மின்தூக்கிகளே செயல்பாட்டுக்கு வரும்.

தனியார் துறையினர் வழங்கும் பொதுச் சேவைகளுக்கு அரசிடம் இருந்து உரிமம் பெற வேண்டும். உரிமம் வழங்கும்போதே எளிதாக அணுகும் வசதிகளைக் கட்டாயப்படுத்திவிட முடியும். எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க தனியார் உரிமம் கோரும்போது, அந்தப் பேருந்துகளில் எளிதாக அணுகும் வசதிகள் இருப்பதோடு, பேருந்துப் பணியாளர்களிடம், மாற்றுத் திறனாளர்களின் தேவைகளைப்புரிந்து செயல்படும் பயிற்சிகள் அளிக்க வேண்டியதையும் கட்டாயப்படுத்தலாம்.

எளிதாக அணுகும் வசதியை உறுதிசெய்ய சான்றிதழ் வழங்கும் முறையைப் பின்பற்றலாம். எடுத்துக்காட்டாக, ஒட்டல்களுக்கு நட்சத்திர சான்றிதழ்களை சுற்றுலா அமைச்சகம் வழங்குகிறது. இதேபோல பொதுச் சேவைகள் அல்லது நிறுவனங்களுக்கு எளிதாக அணுகும் வசதி கொண்டவை என்பதைக் குறிக்கும் சான்றிதழ்களை வழங்கும் திட்டத்தைத் தொடங்கலாம். எளிதாக அணுகும் வசதி கொண்டவற்றுக்கு உயர்தரச்சான்று வழங்குவதாக அறிவிக்கலாம்.

ஆதாரம் : ஷிவானி குப்தா, நிறுவனர், அக்ஸஸ் அபிலிடி

2.85294117647
Anonymous Sep 07, 2018 05:46 AM

மாற்றுத்திறனாளிகள் விமானத்தில் கப்பலில் பயணம் செய்ய மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top