பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மூத்த குடிமக்கள் நலம் / மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் மற்றும் வசதிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் மற்றும் வசதிகள்

மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் மற்றும் வசதிகள் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் ஏற்பட்டுவரும் மக்கள்தொகை புரட்சிக்காரணமாக மூத்த குடிமக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள 60 வயதைக் கடந்த மனிதர்களின் எண்ணிக்கை 2025ம் ஆண்டில் 120 கோடியாகவும் 2050ம் ஆண்டில் 200 கோடியாகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி உலகின் ஒட்டுமொத்த மூத்த குடிமக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் வளரும் நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். வரும் 2026ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களின் அளவு உலக மக்கள் தொகையில் 12.4 விழுக்காடாக உயரும் என்று கணிக்கிடப்பட்டிருக்கிறது. முதியோர்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு உயரும் பட்சத்தில், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விரிவான முறையில் களைவதற்கு தேவையான முதியோர் சார்ந்த திட்டங்களை வடிவமைப்பதில் ஏராளமான சவால்கள் ஏற்படும்.

மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கை

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் கடந்த 1999ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கையை மத்திய சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அறிவித்தது. மூத்த குடிமக்களின் நலனை முழுமையான அளவில் உறுதி செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டை இக்கொள்கை மறு உறுதி செய்தது. மூத்த குடி மக்களுக்கான தேசிய கொள்கை என்பது மூத்த குடிமக்களுக்கு நிதி மற்றும் உணவு பாதுகாப்பு சுகாதார கவனிப்பு தங்குவதற்கான இடம் மற்றும் வயதான காலத்தில் அவசியமான பிற தேவைகள், வளர்ச்சியில் அவர்களுக்குரிய சம பங்கை அளித்தல் சுரண்டல் மற்றும் கொடுமைகளிலிருந்து பாதுகாப்பு அளித்தல். வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து சேவைகளும் வழங்கப்படுவதை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு அரசு உதவி செய்வதை அடிப்படையாக கொண்டதாகும்.

இந்த கொள்கை அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஓடிவிட்டன. மாறிவரும் மக்கள் தொகை தன்மை நாட்டின் சமூக பொருளாதார சூழ்நிலை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகயவற்றை கருத்தில் கொண்டு புதிய தேசிய கொள்கை ஒன்றை வெளியிடும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. மூத்த குடிமக்கள் நலனை பாதுகாப்பதற்கான புதிய தேசிய கொள்கையின் வரைவு தயாராகிவிட்டது. இக் கொள்கை மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கான தீர்வுகளை உள்ளடக் கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கை செயல் படுத்தப்படுவதை கண்காணிக்கவும் மூத்த குடிமக்களுக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரின் தலைமையில் செயல்படும் தேசிய மூத்த குடிமக்கள் குழுவின் மூலம் ஆலோசனைகள் வழங்கவும் நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப் பட்டிருக்கிறது.

இதற்கான குழு கடந்த 1999ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது அதன் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 2005ம் ஆண்டில் இந்தக் குழு மீண்டும் உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவின் பதவிக்காலமும் ஐந்து ஆண்டுகள் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் இக் குழுவில் உள்ள உறுப்பினர்களின் தன்மை சரியானதாக இல்லை. பிராந்திய சமநிலையை பராமரிக்கும் நிலையில் போதிய எண்ணிக்கையில் அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை . அதுமட்டுமின்றி மூத்த குடிமக்களின் நலன் சார்ந்த இந்த பிரச்சினைகளை கையாளும் அமைச்சகங்கள் / துறைகளின் பிரதிநிதிகள் போதிய எண்ணிக்கையில் இக்குழுவில் இடம் பெறவில்லை. இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளிக்கும் வகையில் இக்குழு மாற்றியமைக்கப்பட்டு அதன் பெயர் தேசிய மூத்த குடி மக்கள் குழு என்று மாற்றப்பட்டது. இதற்கான தீர்மானம் 22-2-2011 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.

சட்ட விளக்கம்

மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர்களின் நலனை அவர்களது வாரிசுகள்தான் பராமரிக்க வேண்டும் என்றும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு குழந்தைகள் இல்லாதபட்சத்தில் அவர்களது உறவினர்கள்தான் பராமரிக்க வேண்டும் என்றும் இச்சட்டத்தை தெரிவிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தை ஒவ்வொரு மாநில அரசும் தனித்தனியாக நடைமுறைக்கு கொண்டு வந்தன.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகார மளித்தல் துறை மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளின் காரணமாக அனைத்து மாநில அரசுகளும் இந்தச் சட்டத்தை தங்களது மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றன. இந்தச் சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கு வசதியாக விதிகளை உருவாக்குதல், மூத்த குடிமக்களுக்கு வாழ்வாதார உதவி (ஜீவனாம்சம்) செய்வதற்கான அதிகாரிகளை நியமித்தல், வாழ்வாதார உதவி மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை ஏற்படுத்துதல் போன்ற கூடுதல் நடவடிக்கைகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் மேற்கொள்ள வேண்டும். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் உள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மேற்கண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் 14 மாநிலங்களும், 5 யூனியன் பிரதேசங்களும் எடுத்திருக்கின்றன.

ஒருங்கிணைந்த முதியோர் திட்டம்

மூத்த குடிமக்களுக்கு இருப்பிடம் உணவு, மருத்துவ கவனிப்பு, பொழுதுபோக்கு வாய்ப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஒருங்கிணைந்த முதியோர் திட்டம் என்ற திட்டத்தை கடந்த 1992ம் ஆண்டு முதல் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி முதியோர் இல்லங்கள், பகல் நேர கவனிப்பு மையங்கள், நடமாடும் மருத்துவ நிலையங்கள், நினைவிழத்தல் நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பகல் நேர கவனிப்பு மையங்கள், முதியோருக்கான பிசியோதெரபி நிலையங்கள் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு திட்டங்கள், குறிப்பாக பள்ளிகள், மற்றும் கல்லூரிகளில் செயல்படுத்தப்படும் குழந்தை விழிப்புணர்வு திட்டங்கள், மண்டல வள மற்றும் பயிற்சி மையங்கள் ஆகியவற்றை நடத்துவதற்குத் தேவையான செலவில் 50 விழுக்காட்டை மாநில அரசுகள் / தொண்டு நிறுவனங்கள் / உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வழங்கி வருகிறது. இதுபோன்ற 550 திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் 350 தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

முதியோர் கவனிப்பு தொடர்பான பயிற்சிகள்

முதியோருக்கான சேவை வழங்குவோரின் தேவை அதிகரித்து வரும் நிலையில், இதை சமாளிப்பதற்காக முதியோர் கவனிப்பு தொடர்பான ஒரு மாத பயிற்சி, ஆறு மாத பயிற்சி, ஒராண்டு பயிற்சி ஆகியவற்றை மத்திய நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் என்ற தன்னாட்சி அமைப்பு நடத்தி வருகிறது. இது தவிர முதியோர் கவனிப்புக்கான குறுகியகால பயிற்சித் திட்டங்களை புகழ்பெற்ற அமைப்புகளுடன் சேர்ந்து இந்த நிறுவனம் செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் வசதியாக மூன்று மண்டல வள மையங்களுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆதரவு அளித்து வருகிறது.

மண்டல வள மையங்கள்

1) அனுக்கிரஹா, புதுதில்லி

2) நைட்டிங்கேள் மருத்துவ அறக்கட்டளை, பெங்களூரு.

3) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் கல்வி அமைப்பு

ஆகியவை ஆகும். இவற்றில் புதுதில்லியில் உள்ள அனுக்கிரஹா மையம் வட மாநிலங்களில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்கிறது. பெங்களூரில் உள்ள நைட்டிங்கேல் மருத்துவ அறக்கட்டளை என்ற அமைப்பு தென் மாநிலங்களின் தேவைகளை நிறைவேற்றுகிறது. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் கல்வி அமைப்பு வடகிழக்கு மாநிலங்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. இந்த மண்டல வள மையங்கள் மேற்கொள்ளும் பணிகளின் விவரம் வருமாறு:

1) ஒருங்கிணைந்த முதியோர் திட்டத்தின்படி மானியம் பெறும் அமைப்புகளின் செயல்பாட்டாளர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் அவர்களின் பணிகளை கண்காணித்தல்.

2) ஆலோசனை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

3) முதியோர் கவனிப்பு, பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் வாழ்வாதார உதவி சட்டம் 2007, மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கை மற்றும் மூத்த குடிமக்களுக்கான பிற திட்டங்களை செயல்படுத்துதல் தொடர்பாக மாநில அரசுகளுடன் தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்தல்.

4) முதியோர் கவனிப்பு தொடர்பான சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களைப் பற்றிய தகவல் களஞ்சியங்களை பராமரித்தல்.

5) முதியோர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் அவ்வப்போது அளிக்கப்படும் பணிகளை மேற்கொள்ளுதல்.

இன்றைய தேவை

இந்தியா பொருளாதார அடிப்படையில் வேகமாக வளர்ச்சி அடைந்துவருகிறது. மக்களின் சமூகப் பொருளாதார நிலைகளும் உயர்ந்து வருகின்றன. எனினும் புதிய பொருளாதார சூழலில் காலவரையறைக்குட்பட்டு பணி செய்யும் நிலைமை மாறி, கால நேரம் இல்லாமல் பணி செய்ய வேண்டிய நிலைமை பல துறைகளில் ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி பெரும்பாலான குடும்பங்களில் கணவன், மனைவி இருவருமே பணிக்குச் செல்ல வேண்டியிருப்பதால் அவர்களால் பெற்றோரை கவனிக்க முடியாத சூழல் நிலவுகிறது. வேறு சில குடும்பங்களில் வறுமைக் காரணமாக பெற்றோரை கவனிக்க முடிவதில்லை. இவர்களைத் தவிர ஆதரவற்ற நிலையில் பல பெற்றோரும் முதியோரும் உள்ளனர்.

இத்தகைய சூழலில் இன்றைய உடனடித் தேவை என்பது அனைவர் மீதும் அக்கறை செலுத்தும் சமுதாயத்தை ஏற்படுத்துவதுதான். அதிலும் குறிப்பாக மத்திய அமைச்சகங்கள், மத்திய அரசுத் துறைகள் மாநில அரசுகள், கல்வியாளர்கள், வல்லுனர்கள் உள்ளிட்டோரின் உதவியுடன் முதியோரை அரவணைக்கும் சமுதாயத்தை ஏற்படுத்துவதுதான் இன்றைய அவசிய, அவசர தேவையாகும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

2.86274509804
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top