உர உதவி மையம் தமிழ்நாட்டில் நெற்பயிர் 18.5 இலட்சம் எக்டர் பரப்பிலும், சிறுதானியம், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு மற்றும் பருத்தி பயிர்கள் சேர்த்து 46.2 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான உரங்கள், மாநிலத்தில் உள்ள 8100 தனியார் விற்பனை நிலையங்கள் மற்றும் 4354 கூட்டுறவு விற்பனை மையங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மாதந்தோறும் மாநில அரசுக்கு தேவையான மானிய உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் காம்பளக்ஸ் உரங்கள் ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒதுக்கீடு செய்யப்பட்ட உரங்கள் சுமார் 15 உர நிறுவனங்கள் வாயிலாக மாநிலத்திற்கு வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் உரம் வழங்குதல், உர நகர்வு, உர கண்காணிப்பு மற்றும் தரப் பரிசோதனை முதலான பணிகள் மாவட்ட அளவிலான வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) அவர்களால் கண்காணிக்கப்படுகிறது. இது தவிர விவசாயிகளுக்கு உரம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கவும் அதனை நிவர்த்தி செய்யவும், மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உரக் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுபடி மாநில அளவில் உரம் தொடர்பான தகவல்களைப் பெறவும் புகார்களை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்வதற்காகவும் உர உதவி மையம், சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் புகார்களை வாட்ஸ்அப் செயலி மூலமாகவும் பதிவு செய்திடலாம். விவசாயிகள் தெரிவிக்கும் புகார்களை பதிவு செய்து உடனுக்குடன் தீர்வு வழங்குவதற்காக அலுவலர் ஒருவரும் தனியாக நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண் பெருங்குடி மக்கள் உரம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை 91 93634 40360 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு வாய்மொழியாகவும் மற்றும் வாட்ஸ்அப் செயலி மூலமாகவும் தெரிவித்து பயன் பெறலாம். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9