தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1261 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் திட்டமான 'நமோ ட்ரோன் சகோதரி'க்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திட்ட காலம் மற்றும் நோக்கம் 2024-25 முதல் 2025-2026 வரையிலான காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 14500 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விவசாய நோக்கத்திற்காக (தற்போதைக்கு திரவ உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல்) விவசாயிகளுக்கு வாடகை அடிப்படையில் சேவைகள் வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை இந்தத் திட்டத்திற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. செயல்பாட்டு வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்கள்: இத்திட்டம் மத்திய அளவில் வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, உரத் துறை, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் செயலாளர்களைக்கொண்ட அதிகாரமளிக்கப்பட்ட குழுவால் நிர்வகிக்கப்படும். ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் செயலாளரைத் தலைவராகக் கொண்டு, அனைத்து பங்களிப்பாளர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட செயலாக்கம் மற்றும் கண்காணிப்புக் குழு, இத்திட்டத்தை திறம்பட திட்டமிடுதல், செயல்படுத்துதல், கண்காணித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதுடன், இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அனைத்து தொழில் நுட்ப இனங்களில் ஒட்டுமொத்த ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் வழங்கும். இத்திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்களை ஒரு தொகுப்பாக வாங்குவதற்கு ட்ரோன்/ துணைக்கருவிகள் / துணை கட்டணங்களின் செலவில் 80% , அதிகபட்சம் ரூ. 8 லட்சம் வரை மத்திய நிதி உதவி வழங்கப்படும். சுய உதவிக் குழுக்கள் / சுய உதவிக் குழுக்களின் தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள் மீதமுள்ள தொகையை (மொத்த கொள்முதல் செலவு மானியத்தை கழித்து) தேசிய வேளாண் உள்கட்டமைப்பு நிதி வசதியின் கீழ் கடனாகப் பெறலாம். இதற்கு 3% வட்டி மானியம் வழங்கப்படும். மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் பிற ஆதாரங்கள்/திட்டங்களில் இருந்து கடனுதவி பெறவும் தனிநபர் கூட்டமைப்புகள்/சுய உதவிக் குழுக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ், ட்ரோன்கள் மட்டுமின்றி திரவ உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பான், ட்ரோன் கொண்டுசெல்லும் பெட்டி, தரமான மின்கலம், கீழ்நோக்கிய கேமரா, இருமுனை கொண்ட விரைவான மின்கல மின்னேற்றி , மின்னேற்றிக் கருவி, அனிமோமீட்டர், பிஎச் மீட்டர் மற்றும் அனைத்து பொருட்களுக்கும் ஓராண்டு உத்தரவாதம் ஆகியவை இருக்கும். கட்டாய ட்ரோன் ஓட்டும் பயிற்சி, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு ஆகிய வேளாண் நோக்கங்களுக்கான கூடுதல் பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய 15 நாள் பயிற்சிக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவார். சுய உதவிக் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர் / குடும்ப உறுப்பினர்களுக்கு மின் சாதனங்கள், பொருத்துதல் மற்றும் இயந்திர வேலைகள், பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ள ட்ரோன் உதவியாளராக பயிற்சி அளிக்கப்படும். செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சி அட்டவணையின்படி ட்ரோன்களின் விநியோகத்துடன் ட்ரோன் உற்பத்தியாளர்கள் இந்த பயிற்சிகளை ஒரு தொகுப்பாக வழங்குவார்கள். நமோ ட்ரோன் சகோதரி திட்டத்தின் முக்கிய அம்சங்கள் நமோ ட்ரோன் சகோதரி திட்டம், பெண்கள் சுய உதவிக் குழுக்களை ஆதரிப்பதற்கும் அவர்களது வளர்ச்சிக்கு உதவுவதற்கும் உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் சில முக்கிய அம்சங்கள் வருமாறு: நிதி உதவி மற்றும் அணுகல் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கணிசமான நிதி உதவியைப் பெறுகின்றன, இது ட்ரோன் மற்றும் துணை செலவுகளில் 80%- ஐ உள்ளடக்கியது, ரூ. 8 லட்சம் வரை. இந்த ஆதரவு ட்ரோன் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய அதிக முன்கூட்டிய செலவுகளைத் தணிக்க உதவுகிறது. மீதமுள்ள 20% செலவில், சுய உதவிக் குழுக்கள் தேசிய வேளாண் உள்கட்டமைப்பு நிதி வசதியிலிருந்து (AIF) 3% வட்டி மானியத்துடன் கடன் பெறலாம் கூட்டு முயற்சி இந்தத் திட்டம் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, உரத் துறை, முன்னணி உர நிறுவனங்கள் (LFC) மற்றும் பிற துணை நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியாகும். இந்தத் துறைகளின் வளங்களின் ஒருங்கிணைப்பு, பயனுள்ள வள ஒதுக்கீடு, தேவை அடிப்படையிலான பணியமர்த்தல் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு நீடித்த ஆதரவு ஆகியவற்றை உறுதி செய்கிறது. தொகுப்பு அடிப்படையில் செயல்படுத்தல் வேளாண் சேவைகளை வழங்க ட்ரோன் தேவை உள்ள கிராமப்புறங்களில் DAY-NRLM-ன் கீழ் பகுதி தொகுப்பு மற்றும் சுய உதவிக் குழுக்களை சரியான முறையில் தேர்ந்தெடுப்பதை இத்திட்டத்தின் செயலாக்கம் சார்ந்துள்ளது. எனவே, ட்ரோன் சேவைகளுக்கான விவசாயிகளின் பங்கில் உள்ள சில உறுதிப்பாட்டின் அடிப்படையில், அவர்களின் தேவை மதிப்பீடு செய்யப்பட்டு, பகுதி தொகுப்பு தேர்வு செய்யப்படும். இது சுய உதவிக் குழுக்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தொகுப்புகளின் அடிப்படையாக மாறும். ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான பொருளாதார ரீதியாக சாத்தியமான பொருத்தமான தொகுப்புகள் கண்டறியப்படும். மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சிறப்புப் பயிற்சி தகுதி வாய்ந்த மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களில் ஒருவர், 5 நாள் கட்டாய ட்ரோன் பைலட் பயிற்சி, ஊட்டச்சத்து மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டிற்காக, விவசாய நோக்கத்திற்காக கூடுதலாக 10 நாட்கள் பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய 15 நாள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார். தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், இயங்கும் சுய உதவிக் குழுவில் உள்ள மற்றொரு உறுப்பினரின் குடும்ப உறுப்பினர், எலக்ட்ரிக்கல் பொருட்கள், பிட்டிங் மற்றும் மெக்கானிக்கல் பணிகளை மேற்கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கு, ஆளில்லா விமான உதவியாளராக பயிற்சி அளிக்கப்படும். எல்எஃப்சி-களின் உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவு சுய உதவிக் குழுக்கள் மற்றும் ட்ரோன் உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் எல்எஃப்சி-கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன, எஸ்எச்ஜி- களுக்கு ட்ரோன்களின் கொள்முதல், பழுது மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் உதவுகின்றன. கூடுதலாக, அவை ட்ரோன்களுடன் நானோ உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கின்றன, விவசாய நடைமுறைகளில் செயல்திறனை அதிகரிக்கின்றன. நமோ ட்ரோன் சகோதரி திட்டத்தின் நன்மைகள் இதன் மூலம் ஒவ்வொரு சுய உதவிக் குழுவும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1 இலட்சம் கூடுதல் வருவாய் ஈட்டி, பொருளாதார மேம்பாடு மற்றும் நிலையான வாழ்வாதார உருவாக்கத்திற்கு பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் - இந்த திட்டம் ட்ரோன் தொழில்நுட்பத்தில் சிறப்புப் பயிற்சியை வழங்குகிறது, நவீன விவசாயத்தில், மதிப்புமிக்க மேம்பட்ட திறன்களுடன் பெண்களை தயார்படுத்துகிறது. இந்த அறிவு, பயிர் கண்காணிப்பு, மண் பகுப்பாய்வு மற்றும் துல்லிய விவசாயம் போன்ற பணிகளை மிகவும் திறமையாக செய்ய அவர்களுக்கு உதவுகிறது. விவசாய செயல்திறனை மேம்படுத்துதல் - ட்ரோன் தொழில்நுட்பம் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் துல்லியமான பயன்பாட்டை கணிசமாக மேம்படுத்துகிறது, பாரம்பரிய விவசாய நடைமுறைகளை மாற்றுகிறது. மேம்பட்ட ஜி.பி.எஸ் மற்றும் சென்சார் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்ட, ட்ரோன்கள், வயல்களில் துல்லியமான விமான பாதைகளைப் பின்பற்ற திட்டமிடப்படலாம். இது சமமான மற்றும் இலக்கு பயன்பாட்டை உறுதி செய்கிறது. இந்த துல்லியம் ரசாயனங்களின் அதிகப்படியான பயன்பாட்டைக் குறைப்பதுடன், சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதோடு விவசாயிகளுக்கான செலவுகளைக் குறைக்கிறது. PIB