பருவநிலை மாற்றத்தால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து வளி மண்டலத்தில் மாசு நிறையும். இதனால் மழைக் காலத்திலும் குளிர்காலத்திலும் நெற் பயிரைத் தாக்கும் நோய்கள் இப்போது கோடைக்காலத்திலும் தாக்குகின்றன. பயிர்களைத் தாக்கும் நோய்களை தடுக்கும் முறைகள் மார்கழி, தை மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும்போது நோய் அதிகம் வரும். கண்ணுக்குப் புலப்படாத நுண் கிருமியான ஒருவிதமான பாக்டீரியாவால் இப்போது நோய்கள் உருவாகி வருகின்றன. பொதுவாக இந்த பாக்டீரியா கிருமிகள் உஷ்ணம் அதிகமாக இருக்கும்போது அழிந்து விடும். குலை நோய் பொதுவாக இந்த நோய் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஐ.ஆர். 50 நெல் ரகங்களில் அதிகமாக வரும். குலை நோய் வருவதற்கான காரணம் காற்றில் அதிகமான ஈரப்பதம் மற்றும் மண்ணில் உள்ள பயிர்களின் வேர்களால் சரியாக சுவாகிக்க முடியாமல் இருப்பதால் இந்த நோய் வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வயல், வரப்புகளில் உள்ள களைகளை அப்புறப்படுத்த வேண்டும். தழைச்சத்து உரம் அதிகமாக இடக்கூடாது. அப்படி தழைச்சத்து உரம் அதிகமாகப் போடுவதாக இருந்தால் அதை 3 பிரிவாகப் பிரித்து இட வேண்டும். அதாவது 50 சதவீதம் பயிர் நடவு செய்யும் போதும் 25 சதவீதம் தூர் கட்டும் போதும், மற்றொரு 25 சதவீதம் தண்டு உருளும்போதும் இட வேண்டும். தாக்குதல் அதிகமாகத் தென்பட்டால் 0.2 சதவீதம் சூடோமோனாஸ் புளோரன்ஸ் என்ற உயிரி ரக மருந்தை 1 கிலோ எடுத்து 500 லிட்டர் நீரில் கரைத்து நடவு நட்ட 45-வது நாளில் இருந்து 10 நாள் இடைவெளியில் 3 முறை பயிரின் மீது தெளிக்க வேண்டும். தாக்குதல் மிகவும் அதிகமாக இருந்தால் கார்பன்டசீல் 1 ஹெக்டேருக்கு 250 கிராம் அல்லது டிரைசெக்லோஸைல் 250 கிராம் தெளிக்க வேண்டும். பாக்டீரியல் இலை கருகல் நோய் இந்த நோய் இப்போது ஆடுதுறை 37 நெல் ரகத்தில் அதிகம் தென்படுகிறது. இது முக்கியமாக கோடைப்பருவத்தில் பய்டோபிளாஸ்மா, ஆர்என்ஏ வைரஸ் மூலம் வருகிறது. நிர்வகிக்கும் முறைகள்: ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சக் கூடாது. 20 கிலோ பசும் சாணத்தை 100 லிட்டர் நீரில் 12 மணி நேரம் ஊற வைத்து அதன் நீரை இலைகள் மீது தெளிப்பதால் இதைக் கட்டுப்படுத்தலாம். பிளிச்சிங் பவுடர் 100 மைக்ரோ கிராம் 1 மி.லி. தண்ணீரில் கரைத்து பயிரில் தெளிக்க வேண்டும். தாக்குதல் அதிகமாகத் தென்பட்டால் காப்பர் ஹைட்ராக்ஸைடு 2000 ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 கிராம் என்ற அளவில் கரைத்துத் தெளிக்க வேண்டும். இலைக் கருகல் நோய் நெல்லில் தண்ணீர் அதிகமாகக் கட்டும்போது இலை கருகிவிடுகிறது. இதைச் சரி செய்ய தழைச் சத்து அதிகம் இடுவதைத் தவிர்த்து சாம்பல் சத்து அதிகம் இட வேண்டும். 2 சதவீதம் கால்சியம் சல்பேட் அல்லது 0.2 சதவீதம் சூடோமோனாஸ் புளோரஸல் என்ற உயிரி ரக மருந்தை இலையின் மீது தெளிக்க வேண்டும். அதிமாகத் தென்பட்டால் கார்பன்டஸீம் 1 லிட்டர் நீருக்கு 1 கிராம் அல்லது கான்டாப் 1 லிட்டர் 2 மி.மீ. அல்லது டெனோமைல் 1 லிட்டர் நீருக்கு 2 மி.லி. பாலிஆக்ஸின் 1 லிட்டர் நீருக்கு 2 கிராம் அல்லது காப்பர் ஹைட்ரைக்சைடு101 ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் எதாவது ஒன்றை கரைத்துத் தெளிக்க வேண்டும். இலை உறை அழுகல்நோய் டிகேஎம் 9, என்ற நெல் ரகத்தில் பரவலாகத் தென்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த வடிகால் வசதி அவசியம். நெல் பயிரில் தேங்கியுள்ள நீரை வடிகட்ட வேண்டும். தாக்குதல் அதிகமாகத் தென்பட்டால் காப்பர்ஹைராக்சைடு 101 ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம், அல்லது பென்டின் ஹைட்ராக்சைடு 1 லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கரைத்து இலை உறை மீது தெளிக்க வேண்டும். தாக்குதல் மிகவும் தென்பட்டால் புராபிகோனாஸைல் 1 லிட்டர் நீருக்கு 1 கிராம் என்ற அளவில் எடுத்து தண்டுப் பகுதியில் சுற்றியுள்ள இலை உறை மீது தெளித்து நோயின் தாக்குதலைக் குறைக்கலாம். இது போன்ற ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளால் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம். நன்றி: தினமணி ஆதாரம் : பசுமை தமிழகம் கேள்வி பதில்கள் 1. வானிலையால் நெல் மகசூல் பாதிக்கப்படுமா? வெப்பநிலை, சூரிய ஒளிக்கதிர் மற்றும் மழைப்பொழிவு ஆகியவை பயிர் வினையியல் செயல்களான தானிய உற்பத்தியை நேரடியாக தாக்கியும், நோய்கள் மற்றும் பூச்சிகளின் மூலமாக மறைமுகமாக தாக்கியும் நெல் மகசூலில் செயல் விளைவை ஏற்படுத்துகின்றது. 2. வானிலை மாற்றத்தால் நெல் உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகள் யாவை? வெப்பத்தால் நெல் மலட்டுத்தன்மை ஏற்படுவதுடன் அதன் மகசூல் 25 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக குறைதல். மேலும், குறைந்த வெப்பநிலை காரணமாக, நெல் வளர்ச்சிக்கால அளவு அதிகமாகிறது.. 3. நெற்பயிரின் முதிர்ச்சிப் பருவத்தில் குறைந்த வெப்ப நிலையால் உண்டாகும் விளைவுகள் என்ன? பூங்கொத்திலிருந்து தானியமணிகள் எளிதாக உதிர்ந்துவிடும். பயிரின் முதிர்ச்சி நிலையில் வெப்ப நிலை மிகவும் குறைவாக இருந்தால் தானிய உறக்க நிலை குறைவாக இருக்கும். நெற்பயிர், தானியங்களைவிட வைக்கோலையே அதிகம் உற்பத்தி செய்யும். 4. நெற்பயிரின் முதிர்ச்சிப்பருவத்தில், அதிக வெப்பநிலை ஏற்படுவதால் உண்டாகும் விளைவுகள் என்ன? அதிக வெப்பநிலையால், விரைவான தானிய முதிர்ச்சி ஏற்படுகிறது. இதனால், தானியம் முதிரா நிலை (பிஞ்சு நிலை) ஏற்படுகிறது. இந்நிலையில் பகுதி நெல் சுண்ணாம்பு போன்று பால் வெள்ளை நிற மேலோடுகளுடன் தவிடு நன்கு தடித்தும் கெட்டியாகக் காணப்படும். ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்