சணல் உற்பத்தியில் இந்தியாவின் சாதனை உலகின் மிகப்பெரிய கச்சா சணல் உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், நிலையான தொழில்துறை வளர்ச்சிக்கும் உதவுகிறது. 2025-26 நிதியாண்டில் இந்தியா 76 லட்சம் பொதிகள் கச்சா சணலை உற்பத்தி செய்துள்ளது. இதே காலகட்டத்தில் 12.80 லட்சம் மெட்ரிக் டன் சணல் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ரூ.225.11 கோடி மதிப்பிலான 22,700 மெட்ரிக் டன் கச்சா சணலும், ரூ.3,155.27 கோடி மதிப்பிலான 1,71,300 மெட்ரிக் டன் சணல் பொருட்களும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல், மதிப்புச் சங்கிலியை நவீனப்படுத்துதல், சணல் பொருட்களைப் பல்வகைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான அரசின் நடவடிக்கைகள் இத்துறையை வலுப்படுத்தியுள்ளன. சணலின் பல்வேறு பயன்பாடுகளும் உற்பத்தி மையங்களும் சணல் இயற்கையாக மட்கக்கூடியது. பேக்கேஜிங், கட்டுமானம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இதன் பயன்பாடு விரிவடைந்து வருகிறது. சணல் வலிமையானதுடன், நீடித்த தன்மை, ஈரப்பதத்தை உறிஞ்சும் திறன் கொண்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த, இயற்கையான மாற்றுப் பொருளாக இது முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்தியாவில் சணல் உற்பத்தியின் முக்கிய மையமாக மேற்கு வங்கம் விளங்குகிறது. இதனைத் தொடர்ந்து பீகார், அசாம், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சணல் சாகுபடி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் விவசாயக் குடும்பங்கள் சணல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளன. 2025 டிசம்பர் நிலவரப்படி இந்தியாவில் 120 ஒருங்கிணைந்த சணல் ஆலைகள் உள்ளன. இதில் 89 ஆலைகள் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளன. மண் அரிப்பைக் கட்டுப்படுத்துதல், மலைச் சரிவுகளைப் பாதுகாத்தல், சாலை அமைத்தல், ஆற்றங்கரைகளைப் பாதுகாத்தல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட பணிகளில் சணல் பயன்படுத்தப்படுகிறது. மண்ணின் கட்டமைப்பு, வளத்தை மேம்படுத்துவதுடன், தாவரங்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. சணல் துறைக்கு வலுசேர்க்கும் புதிய நடவடிக்கைகள் இத்துறையை வலுப்படுத்த, சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2026-27 நிதியாண்டில் கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.5,925 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சணல் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க, சந்தையில் சணலுக்கான விலை குறைந்தபோது, இந்திய சணல் கழகம் குறைந்தபட்ச ஆதரவு விலையில் நேரடியாக கொள்முதல் செய்கிறது. தேசிய சணல் மேம்பாட்டுத் திட்டம் மூலம் உற்பத்தித்திறன், விவசாயிகளின் வருமானம், பொருட்கள் பல்வகைப்படுத்தல் ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சணல் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் சணல் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன. சணல் கொள்முதல், விநியோகம் தொடர்பான நடவடிக்கைகளை எளிதாக்க ஜூட்-ஸ்மார்ட் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. சணல் சாகுபடியைக் கண்காணிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) சணல் பயிர் தகவல் அமைப்பை உருவாக்கியுள்ளது. உள்நாட்டு சந்தை, ஏற்றுமதி விரிவாக்கம், ஆராய்ச்சி, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு, கைவினைக்கலைஞர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் தங்க இழையான சணல், நிலையான வளர்ச்சிக்கான முக்கிய இயற்கை வளமாக தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2307586®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்