கொம்பு சாண உரம், பூமியில் உள்ள ஆற்றலை அதிகப்படுத்தி வெளியில் கொண்டு வருவதற்கு உதவும் சாவியாக இருக்கிறது. இந்த உரத்தைத் தயாரிக்க செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்கள் ஏற்றவை.

தயாரிக்கும் முறை

இயற்கையாக இறந்த பசுமாட்டுக் கொம்பை எடுத்து, அதில் பசுஞ்சாணத்தை நிரப்ப வேண்டும்.

தண்ணீர் தேங்காத மேடான இடத்தில் ஒரு அடி ஆழம் குழிதோண்டி, அதற்குள் இந்தக் கொம்பை புதைத்துவிட வேண்டும்.

சுமார் 6 மாத காலம் கழித்து எடுத்துப் பார்த்தால், கொம்புக்குள் வைக்கப்பட்ட சாணமானது, காப்பித் தூள் போல இருக்கும். ஒரு வித வாசனையும் அடிக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால், கொம்பு சாண உரம் நன்றாகத் தயாராகி விட்டது என்று பொருள்.

சேமிப்புக் காலம்

இதை மண் பாத்திரத்தில் ஓர் ஆண்டு காலம் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

ஓர் அடி அளவுள்ள கொம்பில் 180 கிராம் வரை உரம் கிடைக்கும். ஒரு கொம்பை இரண்டு முறைகூட பயன்படுத்தலாம்.

பயன்பாடு

ஒரு ஏக்கர் நிலத்துக்கு 30 கிராம் கொம்பு சாண உரத்தை 15 லிட்டர் சுத்தமான நீரில் கலந்து, ஒரு மணி நேரம் இடது மற்றும் வலது புறமாக சுற்றவேண்டும்.

கீழ்நோக்கு நாளில் மாலைவேளைகளில் பயிர் செய்வதற்கு முன்பாக நிலத்தில் இதைத் தெளிக்க வேண்டும். இப்படித் தெளிக்கும்போது அந்த நிலத்தில் ஈரப்பதமும், கம்போஸ்ட்டும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இந்த உரத்தைப் பயன்படுத்துவதால் செடிகளின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.

மண்புழுக்கள் மற்றும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. மூடாக்கை மட்க வைப்பதோடு, கம்போஸ்டை வேகமாகச் செயல்பட வைக்கவும் இந்த உரம் உதவுகிறது.

சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், இயற்கை வேளாண்மை என்பது ஹோமியோபதி மருத்துவ முறை போன்றது. குறைந்த அளவிலான இடுபொருட்கள் என்றாலும் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

ஆதாரம்: vivasayam.org

நன்றி: பசுமை விகடன்