வேளாண் உற்பத்திக்கு பல்வேறு வழிகளில் விவசாயிகளுக்கு உதவுவது போன்று, விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு இலாபகரமாக விலை கிடைப்பதற்கும், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அறுவடைக் காலங்களில் விளைபொருட்களின் வரத்து அதிகமிருப்பதால், அப்போது ஏற்படும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இத்தருணங்களில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல், உளுந்து, பாசிப்பயறு மற்றும் கொப்பரை போன்ற விளைபொருட்களை அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து, விவசாயிகளின் நலனை பாதுகாத்து வருகிறது. தமிழ்நாட்டில் 4.577 இலட்சம் எக்டர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகின்றது. தேங்காய்களை மதிப்புக்கூட்டி கொப்பரைகளாக விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். சமீப காலமாக, கொப்பரைத் தேங்காய்களின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட மிக குறைவாக இருந்து வருகின்றது.தமிழகத்திலுள்ள கோயம்புத்தூர், திருப்பூர். தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி. தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம். தென்காசி புதுக்கோட்டை, திருப்பத்தூர். மதுரை. விருதுநகர். நாமக்கல், சிவகங்கை. வேலூர், இராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, தருமபுரி. திருவாரூர். திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், மற்றும் மயிலாடுதுறை ஆகிய 26 மாவட்டங்களில் உள்ள 75 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் கடந்த ஆண்டில் 48,364 விவசாயிகளிடமிருந்து 79,021.80 மெ.டன் அரவை கொப்பரை ரூ.858:176 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு 2024ல் பந்துக் கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.120.00ம் மற்றும் அரவைக் கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.111.60ம் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட உள்ளது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 90,300 மெ.டன் என்ற அளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு கொப்பரை கொள்முதலுக்கான அனுமதி ஒன்றிய அரசிடமிருந்து வரப்பெற்றுள்ளது. இத்திட்டம் 2024ல் 14.03.2024 முதல் 10.06.2024 வரை நடைமுறைப் படுத்தப்படும். தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் இத்திட்டத்திற்கு மாநில முகமையாக செயல்படுகின்றது. சேமிப்புக் கிடங்குகளில் கொப்பரைக் குவியல்கள் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள், விவசாயிகள் வழங்கிய கொப்பரைக்கான தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். வேளாண் உற்பத்தி ஆணையர் (ம) அரசுச் செயலர் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9