கொம்பு நீக்கம் செய்தல் அல்லது கொம்பினைத் தீய்த்தல்

கன்றுகளின் கொம்புகளின் வளர்ச்சியினை இளம் வயதிலேயே நிறுத்துவதற்கு கொம்பின் குருத்துப்பகுதி அழிக்கப்பட்டு விடுகிறது. இதற்கு கொம்பு நீக்கம் செய்தல் என்று பெயர்.

கறவை மாடுகளில் கொம்புகள் இருப்பதால் மாடுகளுக்கிடையே சண்டை ஏற்படும்போது அவை முட்டிக்கொண்டு காயம் ஏற்படுவதால் பண்ணையாளருக்கு அதிகப்படியான நஷ்டம் ஏற்படுகிறது.

மேலும் கொம்புடன் இருக்கின்ற மாடுகள், அவைகளை பராமரிப்பவர்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும். மாறாக கொம்பற்ற மாடுகளைக் கையாளுவது எளிது.

கொம்புகளை நீக்குவதால் கொம்புப் பகுதியில் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பும் குறைவு.

கொம்பு நீக்குவதற்கான சரியான வயது – கன்றின் முதல் 15-20 நாட்கள்.

கொம்பு நீக்கம் செய்யும் முறைகள்

சூடான இரும்பு மூலம் கொம்பு நீக்கம் செய்தல்

மின்சாரம் மூலம் இயங்கும் கொம்பு தீய்ப்பதற்கென வடிவமைக்கப்பட்ட இரும்பு கம்பியின் உதவியால் எல்லாக் காலநிலைகளிலும் இரத்தம் வராமல் கொம்புகளைத் தீய்க்க முடியும்.

மின்சாரம் மூலம் இரும்புக்கம்பி சூடாக்கப்பட்டு அதன் வெப்பநிலை 1000 டிகிரி பாரன்ஹீட் இருக்குமாறு கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த வெப்பநிலைக்கு, சூடான இரும்பு தகடினை கொம்பு முளைக்கும் இடத்தில் 10 நொடிகள் வைக்கும்போது கொம்புக் குருத்தின் திசுக்கள் அழிந்துவிடுகின்றன.

எலாஸ்டேட்டர் முறை

இம்முறையில் தடிமனான ஒரு ரப்பர் வளையம் கொம்பின் அடிப்பகுதியில் பொருத்தப்படுகிறது.

இதனால் கொம்புக்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மெதுவாக கொம்பு விழ ஆரம்பிக்கும். சிறிய கொம்பு மொட்டுகள் 3-6 வாரம் கழித்தும், பெரிய கொம்புகள் 2 வாரம் கழித்தும் கீழே விழுந்து விடும்.

இது ஒரு வலி ஏற்படுத்தக்கூடிய முறையாகும். எனவே கொம்பின் நீளம் 5-10 சென்டிமீட்டருக்கும் மேல் உள்ள மாடுகளில் கொம்பு நீக்கம் செய்ய இம்முறை பயன்படுகிறது.

இரசாயன முறை

காஸ்டிக் சோடா அல்லது காஸ்டிக் பொட்டாஷ் போன்ற ரசாயனங்கள் கொம்பினைத் தீய்க்கப் பயன்படும் பொதுவான ரசாயனங்களாகும்.

மேற்கூறிய இந்த ரசாயனங்கள் பசை போன்றோ அல்லது கரைசலாகவோ கிடைக்கின்றன.

முதலில் கொம்புக்குருத்துப் பகுதியைச் சுற்றி இருக்கும் முடிகளை வெட்டி விட வேண்டும். பிறகு வேசலினை தடவ வேண்டும். வேசலின் தடவுவதால் கண்கள் ரசாயனங்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்.

தற்போது இந்த ரசாயனத்தினை கொம்பு குருத்தின் மீது இரத்தம் வரும் வரை நன்றாக தேய்க்க வேண்டும்.

கொம்பு நீக்கம் செய்யப் பயன்படும் இரம்பம் அல்லது கிளிப்புகள் மூலம் கொம்பு நீக்கம் செய்தல்

வயது முதிர்ந்த அல்லது வயதான மாடுகளுக்கு கொம்பு நீக்கம் செய்யும் போது இந்த முறை பின்பற்றப்படுகிறது.

ஆனால் இம்முறையில் கொம்பு நீக்கம் செய்யும் போது அதிகப்படியாக இரத்தம் வெளியேறும்.

அதிகப்படியாக இரத்தம் வெளியேறுவதைத் தடுக்க கொம்புக்கு செல்லும் கொம்புத் தமனி இரத்தக்குழாயை பருத்தி நூல் அல்லது பட்டு நூலால் கட்டி விட வேண்டும்.

இவ்வாறு தமனியைக் கட்ட அறுவை சிகிச்சையின் போது உபயோகிக்கும் ஊசியை எடுத்துக் கொண்டு அதில் நூலைக் கோர்த்து தமனிக் குழாய் அடியில் குத்தி நூலை வெளியே இழுத்துக் கட்ட வேண்டும்

இம்முறை மூலம் கொம்பு நீக்கம் செய்யும் போது கொம்பின் அடிப்பகுதியினைச் சுற்றி அரை இஞ்ச் அளவிற்கு தோலை எடுத்து விட வேண்டும். இவ்வாறு தோலை எடுத்தால் மட்டுமே கொம்பின் வேர்ப்பகுதியை அடைந்து, கொம்பின் வேர்ப்பகுதியோடு சேர்த்து கொம்பை நீக்க முடியும்.

அதிகப்படியான மடிக்காம்பினை நீக்குதல்

பொதுவாக மாடுகளின் மடியில் சரியான இடைவெளியில், ஒரே அளவுள்ள நான்கு காம்புகள் இருக்கும். சில மாடுகளில் மட்டும் ஒன்று அல்லது இரண்டு அதிகப்படியான காம்புகள் இருக்கும். இவ்வாறு இருக்கும் அதிக எண்ணிக்கையிலான காம்புகள் மூலம் பால் வராது இல்லையேல் சில சமயம் சொட்டுச்சொட்டாக பால் வரும்.

இவ்வாறு அதிகப்படியாக உள்ள காம்புகளை கன்றுகள் 6 மாத வயதை அடைவதற்கு முன்பாக நீக்கி விட வேண்டும்.

கன்றினை நன்றாக கட்டுப்படுத்திய பிறகு, மடிப்பகுதியைக் கழுவி, டிங்சர் அயோடின் மூலம் கிருமி நீக்கம் செய்து, அதிகப்படியாக உள்ள மடிக்காம்புகளை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை கத்தரிக்கோல் மூலம் நறுக்கி விடலாம்.

அதிகப்படியாக உள்ள காம்புகளை நறுக்கிய பிறகு, அந்த இடத்தில் டிங்சர் தடவ வேண்டும். வயதான கிடேரிகளில், காம்புகளை நறுக்கிய இடத்தில் இரத்தம் வருவதைத் தடுக்க தையல் போட வேண்டும்.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்