அறிமுகம்

காபி பயிரில் அராபிகா, ரொபஸ்டா ஆகிய இரண்டு இரகங்கள் உள்ளன. இரகங்களுக்கு ஏற்ப நான்கு தவணைகளில் முதலில் பூக்கும் முன்னர் பிப்ரவரி - மார்ச் மாதங்களிலும், இரண்டாம் முறையாக பூத்த பின்பு மே, ஜூன் மாதங்களிலும், மூன்றாவது முறையாக பருவமழையின் போது செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலும், நான்காவது முறையாக பருவமழைக்கு பின்னரும் உரங்கள் இடல் வேண்டும்.

அராபிகா

முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தலை - மணி - சாம்பல் சத்து 20 - 10 - 20 கிராம் வீதம் அளிக்கும் உரங்களை ஒரு காபிசெடிக்கு இடல் வேண்டும். பின்னர் காய்க்கும் வரை 25-15-25 கிராம் வீதம் உரம் இடல் வேண்டும்.

ரொபஸ்டா

முதல் மூன்று ஆண்டுகளுக்கு 38-28-38 கிராம் ஒரு செடிக்கு இடல் வேண்டும். தழைச்சத்து இலை வளர்ச்சிக்கும், மணிச்சத்து வேர் வளர்ச்சிக்கும், சாம்பல் சத்து காய் வளர்ச்சிக்கும், பூச்சி நோய், வறட்சி தாங்கிடவும் உதவுகிறது.

மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கிய குப்பையை இடல் வேண்டும். சுண்ணாம்பு இட்டநிலங்களுக்கு 1 மாதம் கழித்து உரமிடல் வேண்டும்.

விளைச்சலுக்கு ஏற்ப உரமிடல்

ஒரு எக்டருக்கு 500 கிலோ விளைச்சல், 750 கிலோ விளைச்சல், 1000 கிலோ விளைச்சல் என விளைச்சலுக்கு ஏற்ப உரமிடும் அளவும் இரகத்திற்கு ரகம் மாறுபடுகிறது. இரகம் வாரியான உர அளவுகள் அறிந்து உரமிடல் வேண்டும்.

கார அமில நிலைக்கேற்ற உரமிடல்

கார அமிலநிலை (பி.எச்.) 5 க்கும் குறைவாக உள்ள நிலங்களுக்கு தழைச்சத்து அளிக்க யூரியா இடல் வேண்டும்.

அம்மோனியம் சல்பேட் இடல் கூடாது. மணிச்சத்து "ராக்பாஸ்பேட்" உரம் மூலம் அளித்திடல் வேண்டும்.

பி.எச் 5 முதல் 5.5 உள்ள நிலங்களுக்கு நைட்ரோ பாஸ்பேட் ( சுபாலா ) உரங்கள் இட வேண்டும்.

பி.எச் 6 க்கும் அதிகமாக உள்ள நிலங்களுக்கு டி. ஏ.பி., சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களை இடல் வேண்டும்.

வ.

எண்

குறிக்கோள் விளைச்சல் / எக்டர்

உர அளவு (கிராம்) காபி செடி

அராபிகா ரகம்

ரொபஸ்டா ரகம்

மணி

தழை

சாம்பல்

தழை

மணி

சாம்பல்

1.

500 கிலோ/ எக்டர்

60

45

60

40

30

40

2.

750 கிலோ /எக்டர்

90

60

90

60

40

60

3.

1000 கிலோ / எக்டர்

120

90

120

60

60

90

நீர் நிர்வாகம்

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இளஞ்செடிகளுக்கு ஒரு செடிக்கு மூன்று முதல் ஆறு லிட்டர் நீர்ப்பாய்ச்சுதல் வேண்டும்.

வளர்த்த தோட்டங்களுக்கு ஒரு செடிக்கு நான்கு முதல் எட்டு லிட்டர் நீர் தேவை. உரமிடும்போது போதிய அளவு ஈரம் இருந்திடல் அவசியம்.

நிலத்திற்கேற்ற உரங்களை இரகத்திற்கேற்ப எதிர்பார்க்கும் விளைச்சளுக்குத் தக்கவாறு இட்டு காபியில் உற்பத்தியை அதிகரிப்போம்.

ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை