ஆகாய தாமரை எனப்படும் செடியானது, ஏரிகளிலும், குளங்களிலும் நிறைய காணப்படுகிறது. இந்த செடி வந்துவிட்டால், ஏரி முழுவதும் பரவி, நீரே தெரியாதவாறு மூடி விடும். நீரும் கெட்டு விடும்.

ஆகாயத்தாமரை பற்றிய ஆராய்ச்சி மூலம் கற்பூரவல்லி இலையை பயன்படுத்தி கட்டுப்படுத்துவது பற்றிய செய்தியை முன்பே படித்து உள்ளோம். ஆகாயத்தாமரை எப்படி இயற்கை உரம் உருவாக்கலாம் என்பதையும் படித்து உள்ளோம்.

நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அழிப்பது எப்படி?

நீர்நிலைகளில் தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ, ஆகாயத்தாமரைகள் மட்டும் செழித்து வளர்ந்திருக்கும். மடைகளிலும், மதகுகளையும் அடைத்தபடி வளர்ந்திருக்கும் இவற்றை அழிப்பது சவாலான விஷயம்.

நிலத்தில் பயன்படுத்தக்கூடிய களைக்கொல்லிகளை நீர்நிலைகளில் பயன்படுத்தினால் ஆகாயத்தாமரைகள் இறந்துவிடும். அதில் மீன்கள் வளர்க்க முடியாது. அப்படியே வளர்த்தாலும் திசுக்கள் மாறுபாடு என்பது பிரச்னையாக இருக்கும்.

மாடுகளுக்கு பசுந்தீவனமாக இவற்றை கொடுக்கும் போது வயிறு உப்புசம் ஆகிவிடும். மாட்டுத்தீவனத்துடன் 10 சதவீதம் கலந்து கொடுக்கும் போது அவற்றின் ரத்தத்திலோ, செல்களிலோ பிரச்னை இருப்பதில்லை.

இலைகளை மட்கச் செய்து உரமாக்கியும், பசுந்தாள் உரமாகவும் நிலத்தில் பயன்படுத்தலாம்.

கூன்வண்டு, புல்கெண்டை மீன் ஆகாயத்தாமரை இலைகளின் மெழுகு போன்ற பகுதியை கூன் வண்டுகள் அரித்து தின்றுவிடும். நீர்நிலைகளில் 10 - 15 நாட்களுக்கு கூன்வண்டுகளை விட வேண்டும்.

அதன்பின் கற்பூரவல்லி இலையை பவுடராக்கி அதன் சாற்றை 30 சதவீதம் தெளிக்க வேண்டும். இதன் வேதிக்குணம் ஆகாயத்தாமரை வேர் வழியாக இலைக்குள் எளிதாக சென்று நுண்ணுாட்டச் சத்துக்களை வெளியேற்றி சுருங்கி கருகச் செய்து விடும். புல்கெண்டை மீன்கள் மூலமும் இலைகளை கட்டுப்படுத்தலாம்.

நானோ இழை தயாரிப்பு

தாவரங்களில் செல்லுலோஸ் எனும் பொருளில் இருந்து நானோ இழைகள் தயாரிக்கப்படுகிறது. ஆகாயத்தாமரை இலைகளில் அதிகபட்சமாக 64 சதவீதம் செல்லுலோஸ் உள்ளது. ஒரு மில்லிமீட்டரில் லட்சத்தில் ஒரு பகுதி தான் நானோ மீட்டர். இந்த இலையில் இருந்து 5-50 நானோமீட்டர் தடிமனுள்ள நானோ இழைகள் தயாரிக்கலாம்.

ஆதாரம்: தினமலர்