அறிமுகம்

நாகரீகம் வளர்ந்தது. மக்கள் தொகை பெருக்கம் காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. அவற்றை சமாளிக்க சமவெளிகளில் உள்ள மரங்களை வெட்டி பயிர் செய்தார்கள். மரங்கள் விரகுக்காகவும், விவசாய கருவிகள் செய்யவும், வீடுகள் கட்டவும் தேவை பட்டன. இயற்கையுடன் ஒன்றி இருந்த மனிதன் இயற்கையுடன் போரிட ஆரம்பித்தான். மக்கள் தொகை பெருக்க சதவிகிதமும் அதிகமானது.

திடீரென ஒரு பஞ்சம். அதை சமாளிக்க சுமார் 30 முதல் 50 அடி ஆழ கிணறு தோண்டி மாடுகள் வைத்து நீரை இறைத்து பஞ்சத்தை ஒரு போகத்திற்கு சமாளித்தார்கள். காலம் ஓடின, 20 ஆம் நூற்றாண்டு பிறந்தது. மக்கள் தொகை பெருக்கத்தை அரசு கண்டு கொள்ளவே இல்லை. மனிதனிடம் விழிப்புணர்வும் இல்லை.

அதனால் மீண்டும் உணவு தட்டுப்பாடு. விளைவு, மனிதன் சற்று மலை சார்ந்த குறிஞ்சி பகுதிகளை அழித்து அதில் விவசாயம் செய்ய முற்பட்டான். மழையின் அளவும் குறைந்து கொண்டே வந்தது, விஞ்ஞான வளர்ச்சியில் மின்சாரம் வந்தது. விளைவு மோட்டார் கண்டுபிடித்து மாடுகளுக்கு மாற்றாக பயன்படுத்தினார்கள் கிணறுகளை தண்ணீர் பஞ்சம் ஏற்படும் போதெல்லாம் ஆழ படுத்தினார்கள். நிலத்தடி நீர் 100 அடி எட்டியது.

நிலைமையை சமாளிக்க அரசாங்கம் அணைகள் நிறைய கட்டி நீரை அடிமடையில் தேக்கி பாசன பகுதிகளை அதிகப்படுத்தியது. பாசனம் இன்றி பலநூறு வருடங்களாக உணவுக்கு பெயர்போன பகுதிகள் பாலைவனம் ஆக தொடங்கின. விளைவு இயற்கையில் மாற்றங்கள் ஏற்பட்டு பருவ மழை தவறின. விளைச்சல் பாதிக்கப்பட்டது. மக்கள் தொகை கட்டுக்கடங்கவில்லை. உணவு தேவை அதிகரித்தது. தொழிற்சாலைகள் வந்தன. நீர் மாசுபட்டது. போதாததற்கு குளிர்பான ஆலைகள். வெளி நாட்டவர் தங்கள் நீரை சேமிக்க நம்மை பலிகடா ஆக்கினார்கள். 20 நூற்றாண்டில் மக்கள் தொகை 1 கோடியை தாண்டிவிட, மனிதனின் நீரின் தேவை அதிகரிக்க ஆழ்துளை கிணறுகள் தோண்டி நீரை எடுப்பதிலேயே முனைப்புடன் இருந்தார்களே அன்றி எடுக்கும் நீரின் அளவு, நீரை மழை காலங்களில் சேமிக்க வேண்டும் என்ற யோசனை இல்லாமல் தான்தோன்றி தனமாக செயல்பட்டு இன்று இந்த நிலைக்கு நாம் தல்லப்பட்டோம்.

நம்மில் 90% இன்றளவும் நீரை பற்றி கவலைப்பட்டது இல்லை. இனி நாம் ஒவ்வொருவரும் நீரை பற்றி சிந்தித்து அடுத்த தலைமுறைக்கு இதை விட கீழே போகாமல் விட்டு செல்லவேண்டும் என்பதே தாழ்மையான வேண்டுகோள்.

விவசாயத்தில் நீர் பயன்பாடு மற்றும் பாசன முறைகள்

விவசாயத்தில் நீரின் பயன்பாடு அதிகமாக தேவைப்பட்ட நிலையில் மக்களை இன்றளவும் காத்து வருவது இந்த பாசன முறைகள்.

விஞ்ஞான வளர்ச்சி காரணமாக நாம் அதிக ஆழத்தில் இருந்து நீரை உறிஞ்சி எடுத்தாலும் அவற்றை சில பாசன முறைகள் மூலம் பயிர்களுக்கு கொடுப்பதால் இன்னும் இயங்கிக்கொண்டு இருக்கிறோம்.

நேரடி பாசனம் விட்டு நாம் தெளிப்பு நீர், சொட்டு நீர் என மற்ற வழிகளை கடைபிடிப்பதில் முனைப்புடன் இருப்பதால் இவ்வளவு பஞ்சத்திலும் நாம் விவசாயம் செய்ய முடிகிறது.

சிக்கன முறைகள்

மண்ணின் தன்மை, சீதோஷன நிலை, காற்றின் வேகம் இவற்றை எல்லாம் கணக்கிட்டு பயிர்களுக்கு தேவையான நீரை மட்டும் கொடுக்கும் அளவுக்கு நமது விஞ்ஞான வளர்ச்சி உதவுகிறது.

மேலும் ஒவ்வொரு பயிருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவை என்பதையும் நாம் துல்லியமாக கணக்கிடுகிறோம்.

பாசனம் அதிகாலையிலோ அல்லது மாலையிலோ செய்யும் போது நீர் சிக்கனம் ஆகிறது.

தெளிப்பு நீர் பாசனம், சொட்டு நீர் பாசனம், மூடாக்கு போன்ற சில யுக்திகளை கையாளும் போது நாம் பாசனத்தில் சிக்கனத்தை கடைபிடிக்கிறோம்.

மழை நீர் சேகரிப்பு முறைகள்

மழை நீரை நாம் பல வழிகளில் சேமிக்கலாம்.

சிறு ஓடைகளில் குறுக்கே தடுப்பனைகள் கட்டி மழை நீரை சேமிக்கலாம்.

மேட்டு பகுதியில் இருந்த வரும் நீரை கிணற்றிற்கு முன்பாகவே ஒரு குழி எடுத்து அதில் தேக்கி வைப்பதன் மூலம் நிலத்தடி நீரை நாம் உயர்த்தலாம்.

பாய்ச்சும் நீர் ஆவியாவதை தடுப்பதன் மூலம் நீரை சேமிக்கலாம்.

தற்சமயம் நிறைய ஆழ்துளை கிணறுகள் நீரின்றி இருப்பதால் நீரை அதனுள் விட்டு நிலத்தடி நீரை உயர்தலாம்.

எதிர்காலத்தில் நீரின் பயன்பாடு

எதிர்காலத்தில் நீரின் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் நாம் இயற்கையுடன் ஒன்றி போகும் போது மழை பொழிவை அதிகரித்தும் விஞ்ஞான வளர்ச்சி மூலம் மிக குறைந்த நீரில் விவசாயம் செய்தும் நாம் நீரின் பயன்பாட்டை கணிசமாக குறைக்கலாம்.

நம்மில் ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட்டு மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் பட்சத்தில் நாம் நீரின் பயன்பாட்டை கட்டுக்குள் வைக்கலாம்.

நீர் மாசுபடுதலை தவிர்க்கும் முறைகள்

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று 1000 வருடங்களுக்கு முன் சொல்லி சென்று இருந்தாலும் நாம் ஒழுக்கம் தவறி நடப்பதால் 50% நீர் மாசுபடுகிறது.

என்னதான் மாசு கட்டுப்பாடு வாரியம் இருந்தாலும் நாம் ஒவ்வொருவரும் நீரை மாசுபடுத்தும் போது நம்மை போன்ற ஒரு மனிதனையும் பாதிக்கிறது என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.

தொழிற்சாலைகள் சரியான கட்டுப்பாடு முறைகளை பின்பற்ற வேண்டும்.

விவசாயிகள் பூச்சிக்கொல்லி, களை கொல்லி, ரசாயன உரங்களை தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தமது குடியிருப்புகளில் மாசு கட்டுப்பாடு விதிகளை கடைபிடிக்கவேண்டும்.

நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தும் முறைகள்

மேலே சொன்ன மழை நீர் சேகரிப்பு முறைகளை சரிவர கடைபிடித்து வந்தால் நமது நிலத்தடி நீர் தானாக உயரும். மேலும் நாம் நீரை சிக்கனமாக பயன்படுத்த நிலத்தடி நீர் உயரும்.

நதிநீர் இணைப்பு சாத்தியமே. அப்படி நடந்தால் நீரின் பகிர்ந்தளிப்பு சுலபமாக இருக்கும். ஆனால் இயற்கையை மீறி நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் எதிர்வினையை உண்டாக்கும். பருவநிலையில் ஒரு அபரிவிதமான மாற்றங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது. என்ன நடக்கும் என்பது நமக்கு தெரிவதில்லை. அதனால் சில செயல்கள் தவறாக முடிகிறது. அப்படி நடந்துவிட்டால் மழை பெய்யும் இடத்தில் பெய்யாமல் போய்விட்டால் பிறகு என்ன செய்வது? பூகம்பம் ஏற்படலாம். இப்படி எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் அவரவர் பகுதிகளை செழுமையாக இருக்க அங்குள்ள நீரை சேமித்து மரங்கள் வளர்த்து மழை பொழிவை அதிகரிக்க செய்வதே நிரந்தர தீர்வாக இருக்கும்.

மழை பொழிவு குறைந்ததற்கு காரணமும் அதை நிவர்த்தி செய்யும் வழிகளும்

மழை பொழிவு குறைவுக்கு முக்கிய காரணம் பூமி வெப்பமையம் அடைவது. மீண்டும் இதில் பாதகமாக தோன்றுவது விஞ்ஞான வளர்ச்சியே.

பூமி வெப்பம் அடைவதை தடுக்க போதிய மரங்கள் நம்மிடம் இல்லை. அதனால் இப்போது உள்ளது போல் 3 மடங்கு மரங்கள் வளர்க்க வேண்டும். நீர் ஆதரங்களை கண்டறிந்து அவற்றிற்கு நீர் வரும் வழிகளை சரிசெய்யவேண்டும். மரங்களும் நீர் ஆதாரங்களும் நிறைய இருக்கும்போது காற்றில் ஈர பதம் அதிகரிக்கும். ஈரப்பதம் அதிகமானால் மேகங்கள் கவரப்பட்டு மழை பொழியும். வரப்பு ஓரங்களில் வெட்டி வேர் பயிரிடலாம். தண்ணீரை சுத்தப்படுத்துவதோடு, மண் அரிப்பை தடுக்கும், நிலத்தில் தண்ணீரை அதிகளவில் தேக்கிவைக்கும். மேலும் ஒராண்டுக்கும் மேல் அறுவடை செய்யும்போது வருமானம் கிடைக்கும். வரப்பு ஓரங்களில் களை முளைக்காமல் தடுக்கப்படுகிறது. சுத்தமான தண்ணீர் கிடைக்கின்றது.

சுற்றுச்சூழலியலாலர்களின் கருத்துப்படி மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகத்தான். இதைக்கருத்தில் கொண்டே வளர்ந்த நாடுகள் யாவும் தங்கள் நீர்ஆதாரங்களை பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டு தங்கள் தேவைகள் அனைத்தையும் இறக்குமதி செய்து கொள்கின்றன.

இதையறியாத மூன்றாம் தர நாடுகள் ”அன்னியச்செலாவணி” மோகத்தில் தங்கள் சொந்த நாட்டு மக்களைப் பாராமல் ஏற்றுமதி செய்து பற்றாக்குறையில் பரிதவிக்கிறது.

இயற்கை என்றும் இயற்கையாகவே இருக்க வேண்டும். அது இயல்பாக இருக்க வேண்டுமெனில் மண்ணும் மணலும் தேவை. தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால் இந்த நூற்றாண்டிலேயே உற்பத்தி நின்று விடுமோ என்ற அச்சம் ஆராய்ச்சியாளர்களிடம் ஏற்பட்டதால், உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக மண் தினம் அறிவிக்கப்பட்டது. பூமியின் மேற்பரப்பில் உள்ள பாறைகள் சிதைவு அடைந்து மணல், மண்ணாகவும் உருமாறுகிறது. மேற்பரப்பில் அமைந்துள்ள 4.8 சதவீத மலை, குன்று, ஆறுகளும் பூமியில் வாழும் உயிர்களுக்கு உணவையும், நீரையும் தருகின்றன. மொத்த பரப்பளவில் 5 சதவீத்த்திற்கும் குறைவான நிலப்பரப்பு நீர் சேமிப்பு கலனாகும். இவற்றிலிருந்து ஆழ்குழாய் & கிணறு மூலம் தண்ணீர் பெறும் நாம் எதிர்கால சந்ததியினர்களை கருத்தில் கொண்டு மேற்கண்ட 5% பரப்பளவை பாதுகாக்க வேண்டும். மண்ணில் உயிர் இருப்பதால் விதைத்த விதையை உயிர்ப்பிக்கிறது. பூமியில் 29% நிலமும், 71% பகுதியில் கடல் உள்ளதாலும் நிலமும், நீரும் அவசியம். அதில் உயிருள்ள மண்ணை காக்க இரசாயண உரத்தை தவிர்த்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து நீர் மேலாண்மை மற்றும் மண்வளத்தை காக்க அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். மண்ணை உருவாக்குவதில் நீரின் பங்கு அதிகம். மண்ணில் 7000 வகை உள்ளதாக கண்டறியப்பட்டது. மண்ணின் தன்மையை தரத்திற்கேற்ப பாதுகாப்பது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும். நிலத்தையும் மண்ணையும் பாதுகாத்து நமது வாழ்வை மேம்படுத்துவோம்.

ஆதாரம்: உயிர்நாடி விவசாயம் மாத இதழ்