சர்வதேச பால் தினம் பாலின் அனைத்து அம்சங்களையும் கொண்டாடுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் (FAO), ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 01 அன்று, உலக பால் தினம் கொண்டாடப்படுகிறது. முதல் உலக பால் தினம் 2001 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. நோக்கம் பால் மீது கவனம் செலுத்தவும், பால் மற்றும் பால் தொழில் தொடர்பான செயல்பாடுகளை விளம்பரப்படுத்தவும் இந்த நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. பல நாடுகள் ஒரே நாளில் இதைச் செய்யத் தேர்ந்தெடுப்பது தனிப்பட்ட தேசிய கொண்டாட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கிறது மற்றும் பால் ஒரு உலகளாவிய உணவு என்பதைக் காட்டுகிறது. ஜூன் 01 ஆம் தேதி உலக பால் தினத்திற்காகத் ததேர்ந்தெடுக்கப்பட்ட காரணம், பல நாடுகள் ஏற்கனவே இந்த நாளில் அல்லது அதைச் சுற்றிய காலகட்டத்தில் தேசிய பால் தினத்தைக் கொண்டாடி வந்தன. தேசிய பால் தினம் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை சார்பில் தேசிய பால் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் வர்கீஸின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்த பால் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தநாள், பால் துறையில் நம் நாட்டின் சாதனைகளை எடுத்துக்காட்டுவதற்காகக் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வின்போது, புதுமையான தொழில்நுட்பங்கள், கால்நடைப் பொருட்கள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தும் கண்காட்சி மற்றும் தீவனத்தை மையமாகக் கொண்ட தொழில்நுட்ப அமர்வு ஆகியவையும் இடம்பெறுகின்றன. பால்வளத்துறையில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு வழங்கப்படும், மதிப்புமிக்க தேசிய கோபால் ரத்னா விருதுகளும் இந்த நிகழ்வில் வழங்கப்படும். இந்தியாவின் பால் புரட்சி உலக அளவில் இந்தியா பால் உற்பத்தியில் ஆண்டுக்கு 230.58 மில்லியன் டன்களுடன் முதலிடத்தில் உள்ளது. மேலும் இது உலக பால் உற்பத்தியில் 25% ஆகும். இது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது. 1964 ஆம் ஆண்டு பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்திற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) 1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது நாடு முழுவதும் ஆபரேஷன் ஃப்ளட் (OF) மூலம் ஆனந்த் பாணி பால் கூட்டுறவுகளை உருவாக்குவதை ஆதரிக்கும் ஒரு ஆணையுடன் உருவாக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள பால் பண்ணைகளில் ஆனந்த்-வடிவ கூட்டுறவுகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தைத் தொடங்குவதற்கான பணிகளை NDDB-யின் முதல் தலைவரான வர்கீஸ் குரியன் தனது குழுவுடன் தொடங்கினார். பால் கூட்டுறவுகளால் உற்பத்தி செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படும் பால், அங்கிருந்து நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்