மெண்டப்பள்ளியில் பருப்பு மில் மூலம் ஊட்டச்சத்து பாதுகாப்பு

ஆந்திராவின் மெஹபூப்நகர் மாவட்டத்தின், மெண்டப்பள்ளி கிராமம், வறண்ட கிராமம் ஆகும். ஒரு ஆண்டில் ஜீன் முதல் செப்டம்பர் வரை 650 மி.மீட்டர் மழைபெறும் ஒரு சாதாரண பகுதி இது. இக்கிராமத்தில் சிறு நில, குறு நில விவசாயிகளே அதிகம். ஒரு ஆண்டில் ஒரு பருவத்தில் மட்டுமே பயிர் சாகுபடியை மேற்கொள்கின்றனர். வறட்சி நிலவும் காலங்களில் வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் வேலை தேடி செல்கின்றனர்

சோளம், மக்காச்சோளத்துடன் துவரை முக்கியப் பயிராக விவசாயிகள் இப்பகுதியில் சாகுபடி செய்கின்றனர். மண் மூலம் பரவும் பேக்டீரியல் வாடல் நோய் ஒரு முக்கிய நோய். இதனால் விளைச்சல் இழப்பு அதிகம் ஏற்படும். ஹைத்ராபாத் இக்ரிசாட் மையத்தின் உதவியுடன், இப்போது விவசாயிகள் வாடல் நோயைத் தாங்கி வளரக்கூடிய ‘ஆஷா’ என்ற துவரை இரகத்தை சாகுபடி செய்து அதிக விளைச்சல் எடுத்து வருகின்றனர். உள்ளுர் இரகங்களைக் காட்டிலும் இந்த இரகம் 20-30 சதம் அதிக விளைச்சல் கொடுத்துள்ளதாம்.

துவரை அறுவடை செய்த பிறகு, கையால் இயக்கப்படும் கல் இயந்திரத்தின் மூலம், ஆண்கள் பருப்பை உடைப்பார்கள். ஆனால் ஆண்கள் கிராமங்களிலிருந்து நகர்புறங்களை நோக்கி வேலைக்காக செல்லத்துவங்கியபின் இப்பணி செய்யப்படாமலே போய்விட்டது. எனவே, மெண்டப்பள்ளி கிராமத்தில் உற்பத்தி செய்யப்பட்ட துவரை சந்தையில் ஒரு கிலோ 12-14 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு, அவர்கள் உபயோகத்திற்கு, உடைத்த பருப்பை ஒரு கிலோ 22 ரூபாய்க்கு வாங்கி வருவார்கள்.

குறைந்த விலைக்கு விற்று, அதிக விலைக்கு வாங்குவதைத் தடுத்து நிறுத்த மெண்டப்பள்ளி கிராம மக்களுடன் இக்ரிசாட் மையத்தின் நீர்வடிப்பகுதி உறுப்பினர்கள் கலந்துரையாடல் செய்தனர். கிராம மக்களும் நீர்வடிப்பகுதி உறுப்பினர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்தனர். அதாவது தங்களுடைய சொந்த தேவைக்கான துவரை உடைத்து பயன்படுத்த சம்மதித்தனர். SDDPA என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் இதற்கு உறுதுணையாக இருந்தது. மெண்டபள்ளி கிராம மகளிர் சுய உதவிக் குழுவினரை ஊக்குவித்து இப்பணியை மேற்கொள்ள இந்நிறுவனம் உறுதுணையாக இருக்கிறது. இந்த கிராமத்தில் ஒரு சிறிய சாதரண பருப்பு மில் ஆலை நிறுவப்பட்டுள்ளது. நிறுவப்பட்டபின் அந்த இயந்திரங்களை இயக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது.

மகளிர் சுய உதவிக்குழு மின்சார செலவிற்குத் தேவையான பணத்தை சேகரித்து வழங்கியது. ஒரு கிலோ பருப்பை உடைக்க எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதையும் நிர்ணயம் செய்தது. இப்படியாக கிராம மக்கள் தங்களது துவரம் பருப்பை நியாயமான விலையில உடைத்து பயன்படுத்தினர். உடைத்த பிறகு கிடைக்கும் கழிவு கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தப்பட்டது.

கிராமத்தில் அமைக்கப்பட்ட இந்த சிறிய பருப்பு ஆலைகளில் உடைக்கப்பட்ட துவரம்பருப்பு சாதாரணமாகவே இருந்தது. நல்ல பளபளப்பா இல்லை. இதனால் உள்ளூரில் மட்டுமே இந்த துவரம்பருப்பு பயன்படுத்தப்பட்டது. “ஆஷா ”- துவரை இரகம் மொழு மொழுப்பான பருப்பாகவும் சமைப்பதற்கு ஏற்றதாகவும் இருந்ததால் கிராமப்புற பெண்டிர் இதையே பயன்படுத்தினர்.

தற்போது இந்த பருப்பு ஆலை நல்ல முறையில் இயங்கி வருகிறது. மெண்டபள்ளி துவரையை, பயன்படுத்துவதற்கு உகந்த பருப்பாக மாற்றப்படுவதால் (சுமார் 90 சதம் பருப்பு கிடைக்கிறதாம்) கிராமவாசிகளின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். அதாவது அவர்கள் தனது குடும்பத்தினர் சாகுபடி செய்த துவரையையே சமைக்கிறோம், சாப்பிடுகிறோம் என்பதால் மகிழ்ச்சி அடைகின்றனர். பருப்பு ஒன்றே புரதச்சத்துக்கு முக்கிய ஆதாரமாக இருப்பதால் அந்த கிராம மக்கள் சத்துக்கள் செறிந்த உணவு தங்களுக்கு எளிதில் கிடைப்பது சந்தோஷத்தை அளிக்கிறது என்கின்றனர்.

வெற்றியும் விரிவாக்கமும்

சிறிய பருப்பு ஆலை வெற்றிகரமாக இயங்க மூன்று காரணிகள் முக்கியமானவை. முதலில் ஆலை இயக்குதல் என்பது மிக எளிதாக இருக்கிறது. இரண்டாவது துவரையை பிரித்தெடுப்பது- கிராம வாசிகள் செய்வது போலவே இருந்தது (அதாவது துவரையை ஓரிரவு தண்ணீரில் ஊற வைத்து 2-3 நாட்கள் வெயிலில் காய வைத்து பின் உடைப்பது). மூன்றாவது சாதாரண வீட்டு மின் இணைப்பிலேயே இந்த பருப்பு ஆலையை இயக்குவது என்பது எளிமையாக இருக்கிறது.

மெண்டப்பள்ளி கிராமத்தில் வெற்றிகரமாக இயக்கப்படும் பருப்பு ஆலை மற்ற கிராமங்களுக்கும் வேகமாக பரவிவருகிறது. மற்ற கிராம மக்களும் தங்களது துவரையை மெண்டபள்ளி கிராமத்தில் உடைத்து பருப்பாக்கி பயன்படுத்துகின்றனர்.

அகில உலக வெப்பமண்டல பயிர் ஆராய்ச்சி நிலையத்தினர் திட்ட செலவில் நிறுவியுள்ள ஆலையை வேறு கிராமத்திற்கு மாற்ற இருப்பதால், மெண்டப்பள்ளி மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்களது கிராமத்திற்கு ஒரு பருப்பு ஆலை வாங்க திட்டமிட்டுள்ளனர். இத்திட்டம் வெற்றி அடைந்துள்ளதால் இந்த பருப்பு ஆலைத்திட்டம், துவரை அதிகம் சாகுபடியாகும் கர்னூல் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் விரைவாக பரவி வருகிறது.

மூலம்: LEISA India, Vol 6-3