அங்கக முறையில் பூச்சி மேலாண்மை பயிர்களைத் தாக்கி சேதப்படுத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்திட உலகளவில் ஆண்டொன்றிற்கு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளில் சுமார் ஒரு சதவீத அளவு மட்டுமே பூச்சிகளை அளிப்பதில் பங்கு பெறுகின்றன. மீதமுள்ள 99 சதவீதம் பூமியையும், வளிமண்டலத்தையும் சென்றடைகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் அவை பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கினை விளைவிக்கின்றன. பெரும்பாலான பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுக்கள் மண், நீர், காற்று போன்ற வாழ்வாதாரங்களில் நீண்ட காலத்திற்கு நிலைத்து நின்று தீங்கினை விளைவிக்கும் ஆற்றல் கொண்டவை. பூச்சிக்கொல்லி மருந்துகள் நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்து அழிப்பதால் பூச்சிகளின் எண்ணிக்கை குறுகிய காலத்தில் பல மடங்கு பெருகி சேதத்தை அதிகப்படுத்துகின்றன. மேலும், பூச்சிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்புத்திறனைப் பெற்று விடுவதால் அவை அதிக அளவில் பெருகிட வழிவகுக்கின்றன. பூச்சிக்கொல்லிகளின் நச்சுக்கள் நாம் உண்ணும் உணவுப்பொருட்களிலும், உணவு சங்கிலியிலும் நிலைத்திருப்பதால் மனிதர்களுக்கு ஏற்படும் தீர்க்க முடியாத நோய்களுக்கான காரணிகளாகவும் திகழ்கின்றன. எனவே பூச்சிக்கொல்லிகளற்ற பயிர் உற்பத்தி காலத்தின் கட்டாயமாகும். அங்கக வேளாண்மையில் பூச்சி மேலாண்மை என்பது சுற்றுச்சூழல் சார்ந்த இயற்கை வழி பூச்சிக்கட்டுப்பாடு முறையாகும். பயிர்களில் பூச்சிகளின் எண்ணிக்கை அதிக அளவில் பெருகிய பின் அவற்றைக் கட்டுப்படுத்துவதை விட அவைகளின் எண்ணிக்கை பொருளாதார சேதநிலையை அடையா வண்ணம் பல்வேறு உத்திகளைக் கையாள்வது அங்ககப்பூச்சி மேலாண்மையின் அடிப்படைக் கொள்கையாகும். அறிவு மற்றும் திறன் சார்ந்த தொழில்நுட்பங்களின் உதவியுடனும், எளிதில் கிடைக்கப்பெறும் எளிய பொருட்களைக் கொண்டும், உழவர்களின் ஒன்றுபட்ட கூட்டு முயற்சியினாலும் கீழ்க்கண்ட சில வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் பூச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அவைகள் முறையே, சீரான பயிர் முறைகளையும், பயிர் உற்பத்தி முறைகளையும் கடைப்பிடித்தல். பயிர்ச்சூழலையும், அவற்றில் தோன்றும் பூச்சியினங்களையும், அவற்றின் இயற்கை எதிரிகளையும் நன்கு புரிந்து செயல்படுதல். பூச்சிகளின் வாழ்க்கை முறைகளையும், அவை தோன்றும் பருவங்களையும், அவற்றின் செயல்பாடுகளையும், நன்கு அறிந்து மேலும் அவை பெருகா வண்ணம் அவற்றிற்கான வருமுன் காப்பு முறைகளைக் கையாளுதல். உள்ளூரிலேயே எளிதாகக் கிடைக்கப்பெறும் இயற்கைப்பொருட்களைக் கொண்டு பயிர்களில் தோன்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை முறைகளைக் கடைப்பிடித்தல் அங்கக முறையில் பூச்சி மேலாண்மை முறைகள் - உழவியல் முறைகள் உழவியல் முறை என்பது வழக்கமான பண்ணை நடவடிக்கைகள் மூலமாக பூச்சிகளைக்கட்டுக்குள் வைத்திருப்பதாகும். அதாவது, பூச்சிகளை அழித்து பொருளாதார நட்டம் ஏற்படாமல் பயிர்களைக்காத்தலாகும். பல்வேறு வகையான உழவியல் முறைகள் உள்ளன. அவையாவன: பலதரப்பட்ட பயிர்களை ஒன்றிணைத்தல் இது அங்கக வேளாண்மையின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது. ஒரு நிலத்தில் ஒரே வகையான பயிரினைத் தொடர்ந்து பயிரிடும் போது ஒரு குறிப்பிட்ட பயிர் வளர்ச்சிச் சத்தின் அளவு அந்நிலத்திலிருந்து அதிகளவில் உறிஞ்சப்பட்டு சத்துப் பற்றாக்குறை பயிர்களுக்கு ஏற்படுகின்றது. பயிர்ச்சத்துக் குறைபாடு பூச்சிகளின் எண்ணிக்கையும், அவற்றின் தாக்கத்தையும் ஊக்குவிக்கின்றன. இதனைக் கருத்திற் கொண்டே நம் முன்னோர்கள் கலப்புப்பயிர், ஊடுபயிர் போன்ற முறைகளைக் கடைப்பிடித்துள்ளனர். ஒன்றிற்கும் மேற்பட்ட பயிர்களைக் குறிப்பிட்ட நிலத்தில் பயிரிடும் போது சத்துகள் மறுசுழற்சி அடைகின்றன. இதனால் மண்ணின் வளம் மேம்படுகின்றது. வளமான மண்ணில் வளரும் திடமான பயிர்களில் பூச்சிகள் தாக்கம் குறைந்தே காணப்படும். ஊடுபயிர் செய்யப்பட நிலங்களில் பூச்சிகளால் விருப்பு வெறுப்புகளுக்குள்ளான பயிர்கள் இரண்டும் காணப்படுவதால் அவை பூச்சிகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும் சுற்றுச்சூழலை உருவாக்குகின்றது. உதாரணமாக சோளத்தில் துவரையை ஊடுபயிராகப் பயிரிடும் போது சோளக் கதிர்களைத் தாக்கும் கதிர் நாவாய்ப் பூச்சிகளின் எண்ணிக்கையும் துவரையில் தோன்றும் காய்ப்புழுக்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல் பாசிப்பயிரில் சோளத்தினை ஊடு பயிராகப் பயிரிடும் போது சோளத் தண்டுத் துளைப்பான்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. பயிர் இரகத்தேர்வு நல்ல தரமான விதைகளையும், பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டுள்ள இரகங்களையும், குறுகிய காலங்களில் முதிர்வடையும் இரகங்களையும் தேர்ந்தெடுத்து பயிரிடுவதன் மூலமாக அங்கக வேளாண்மையில் சீரான லாபத்தை ஈட்டிட முடியும். பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட முக்கிய பயிர் ரகங்கள் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. பயிர் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகம் பூச்சி நெல் டி.கே.எம்.6 தண்டு துளைப்பான் மற்றும் புகையான் சோளம் கோ.42, பி.ஒய்.3 ஆணைக்கொம்பன் மற்றும் கதிர்நாவாய்ப் பூச்சி பருத்தி எம்.சி.யூ.-3 தண்டுக்கூன் வண்டு கரும்பு கி.ஓ.சி.661 தண்டு துளைப்பான் விதைக்கும் பருவம் விதைகளை விதைக்கின்ற அல்லது பயிர்களை நடுகின்ற பருவங்களை சிறிதளவு மாற்றத்திற்கு உட்படுத்தப்படும்போது அந்தப்பயிர் ஒரு குறிப்பிட்ட பூச்சியின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும். உதாரணமாக சம்பா பருவத்தில் முன்கூட்டியே நடவு செய்யும் சம்பா பருவத்தில் முன்கூட்டியே நடவு செய்யும் நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழுக்களின் தாக்கம் குறைந்து காணப்படும். செப்டம்பர் மாதத்தில் நடப்படும் நெற்பயிரில் ஆணைக்கொம்பனின் தாக்குதல் அதிகரித்துக் காணப்படும். செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக விதைக்கப்படும் சோளத்தில் குருத்து ஈக்களின் தொந்தரவு குறைந்து காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பயிர் பூச்சி செய்ய / தவிர்க்க வேண்டியவை நெல் இலைச்சுருட்டுப்புழு பருவத்தில் நடுவதால் குறைகிறது. புகையான் சம்பா பருவத்தில், விரைவில் நடவு செய்வதால் குறைகிறது ஆணைக்கொம்பன் செப்டம்பரில் நடுவதைத் தவிர்த்தல் வேண்டும். சோளம் குருத்து ஈ செப்டம்பரில் முன்பாக விதைப்பதின் மூலம் குறைகிறது பருத்தி தத்துப்பூச்சி ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு விதைத்தால் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. பயிர் அடர்த்தி பயிர் விதைப்பின் அடர்த்தியையோ, நடவின் அடர்த்தியையோ சிறிதளவு மாற்றத்திற்கு உட்படுத்தும் போது பூச்சிகளின் எண்ணிக்கையிலும், அவற்றின் தாக்குதலிலும் மாற்றம் ஏற்படுகின்றது. உதாரணமாக கொண்டைக்கடலையில் குறைந்த அடர்த்தி விதைப்பு காய்ப்புழுக்களின் எண்ணிக்கையையும் அதிக அடர்த்தி அசுவினியின் எண்ணிக்கையையும் குறைத்திட உதவிடும். நெல்லில் குறைந்த அடர்த்தி நடவு இலைச்சுருட்டுப்புழு மற்றும் புகையானின் எண்ணிக்கையைக் குறைந்திட வழிவகுக்கும். அதே போல் கரும்பில் குறைந்த அடர்த்தி விதைப்பு தண்டு துளைப்பானைக் குறைத்திட ஏதுவாக அமைந்திடும். பயிர் அடர்த்தியினால் கட்டுப்படுத்தப்படும் பூச்சிகள் பூச்சி மேலாண்மையில் பயிர் அடர்த்தி பயிர் அடர்த்தி கட்டுப்படுத்தப்படும் பூச்சி நெல் குறைந்த அடர்த்தி நடவு இலைச்சுருட்டுப்புழு புகையான் கொண்டைக்கடலை குறைந்த அடர்த்தி விதைப்பு காய்ப்புழு கொண்டைக்கடலை அதிக அடர்த்தி விதைப்பு அசுவிணி கரும்பு குறைந்த அடர்த்தி விதைப்பு தண்டுத்துளைப்பான் வாழும் இடம் மாற்றங்கள் வாழ்விட மாற்றம் என்பது ஒரு சில பயிரில் காணப்படும் பூச்சி அப்பயிர் அறுவடை முடித்ததும் அப்பகுதியிலேயே தன் வாழ்க்கைக்கு ஏற்ற மற்ற பயிர்களின் (வரப்பில் உள்ள களை நச்சுகளை) அடைந்து மீண்டும் தனக்கு சாதகமானபயிர் வரும் வரை காத்திருக்கும் நிகழ்ச்சியே. எனவே முக்கிய பயிர்களில் காணப்படும் களைச்செடிகளையும் இதரச்செடிகளையும் கண்டறிந்து அவைகளை முற்றிலுமாகக் களைத்து பயிர்களின் வாழிடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை ஏற்படுத்தவதாகும். ஏனெனில் அவை பூச்சிகளுக்குப் புகலிடமாகத் திகழ்ந்து பருவ காலங்களில் பயிர்களைத் தாக்கிடும் காரணிகளாகத் திகழ்கின்றன. வயல்களின் வரப்புகளிலும், மூலை முடுக்குகளிலும் பூச்சிகளைக் கவரும் தாவரங்களையும் பூச்சிகளை விரட்டிடும் செடிகளையும் வைத்திருப்பதன் மூலமாக முக்கியப் பயிரில் தோன்றும் பூச்சிகளின் சேதத்தினை ஓரளவிற்குக் குறைத்திடலாம். கவர்ச்சிப்பயிர்கள் ஒரு குறிப்பிட்ட பூச்சிக்கு ஒரு குறிப்பிட்ட பயிர் மிகவும் விரும்பத்தக்க உணவுப் பயிராக விளங்கிடும். அவ்வாறான பயிர்களைக் கவர்ச்சிப்பயிர் என்று அழைக்கின்றோம். கவர்ச்சிப் பயிர்களை முக்கியப் பயிர்களினூடே ஓரிரு வரிசையிலோ, வரப்புகளிலோ பயிரிட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமாக, பூச்சிகள் கவர்ச்சிப் பயிர்களில் முதலில் தாக்குதலைத் துவக்கும். அப்போது அவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் எளிது. இதன் மூலம் முக்கியப் பயிர்களில் பூச்சிகளின் தாக்கத்தை முன்கூட்டியே தடுத்திட முடியும். அங்ககப்பூச்சி மேலாண்மையில் பயன்படுத்தப்படும் கவர்ச்சிப்பயிர்கள் பூச்சி மேலாண்மையில் கவர்ச்சிப்பயிர்கள் முக்கியப்பயிர் கவர்ச்சிப்பயிர் கவரப்படும் தாய்ப்பூச்சி பருத்தி, தக்காளி, துவரை செண்டுமல்லி பச்சைக்காய்ப்புழு பருத்தி, நிலக்கடலை சோளம் குருத்து ஈ, தண்டுத்துளைப்பான் முட்டைக்கோசு, பூகோசு கடுகு வைர முதுகுப் பூச்சி பருத்தி வெங்காயம், பூண்டு இலைப்பேன் பருத்தி, தக்காளி, நிலக்கடலை ஆமணக்கு புருட்டூனியாப் புழு ஆதாரம்: மலரும் வேளாண்மை