மேலாண்மை முறைகள்

வழக்கமான விவசாய நடைமுறைகளின் மூலம், பூச்சிகளை அழித்தல் அல்லது குறைவான பொருளாதார இழப்பு ஏற்படுத்தும் வகையில் பூச்சிகளை கட்டுபடுத்துவதே மேலாண்மை முறை ஆகும். பல்வேறு மேலாண்மை முறைகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

செடி கொடி கழிவுகளை நீக்குதல், வரப்புகளை சீர்படுத்துதல், மண் தயாரிப்பு மற்றும் பல நிலையில் உள்ள பூச்சிகளைக் கொல்லக்கூடிய கோடைகால ஆழ உழுதல் முதலிய முறைகளை கையாண்டு பூச்சி தாக்குதலை தவிர்க்கும் வண்ணம் நாற்றங்கால் அல்லது நடவு வயலை தயார் செய்யவேண்டும். வயலில் முறையான வடிகால் அமைப்பு இருக்க வேண்டும்.

மண் பரிசோதனை மூலம் சத்து பற்றாக்குறையை அறிந்து, அதன் அடிப்படையில் தேவையான உரமிட வேண்டும்.

சுத்தமான மற்றும் சான்றளிக்கப்பட்ட விதைகளை பூஞ்சைக்கொல்லி மற்றும் உயிரி பூச்சிக்கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்தால் விதையின் மூலம் பரவும் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

பூச்சித் தாக்குதலை எதிர்க்கும் அல்லது தடுக்கும் வகையிலான விதை இரகங்களைத் தேர்ந்தெடுப்பது பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கும் பருவகாலங்களை தவிர்க்கும் வகையில் விதைத்தல் மற்றும் அறுவடையினைத் திட்டமிடவேண்டும்.

பூச்சிக்கு உணவு ஆகாத மாற்று பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி முறையைக் கையாள வேண்டும். இது மண் மூலம் பரவும் நோயைத் தடுக்கும்.

செடிகளுக்கு இடையே போதிய இடைவெளி, பயிர்களுக்கு ஆரோக்கியத்தை தந்து பூச்சித் தாக்குதலையும் தவிர்க்கும்.

போதிய உரம் இடவேண்டும். தொழு உரம் மற்றும் உயிரி உரம் பயன்படுத்துதல் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

சிறந்த நீர் மேலாண்மை (சுழற்சியாக நீர்ப்பாய்ச்சல் மற்றும் வயலை உலர்த்துதல்) முறையைக் கையாள வேண்டும். ஏனெனில் அதிக காலத்திற்கு வயலில் ஈரம் இருந்தால் அது பூச்சிகளுக்கு (குறிப்பாக மண் மூலம் பரவும் நோய்களுக்கு) ஏற்ற சூழலை உருவாக்கும்.

சிறந்த களை மேலாண்மை வேண்டும். எனெனில் களைச்செடிகள் பயிர்களுக்கான சத்துக்களை உறிஞ்சுவது மட்டுமல்லாமல் பல பூச்சிகளுக்கு புகலிடம் அளிக்கின்றன.

வெள்ளை ஈ மற்றும் அசுவினிகளைப் பிடிக்க மஞ்சள் நிறத்திலான ஒட்டுப் பொறிகளை பயிர் உயரத்திற்கு மேல் அமைக்கவேண்டும்.

பரந்த நிலப்பரப்பில் ஒரே நேரத்தில் விதைக்க வேண்டும். இத்தகைய கூட்டுமுயற்சியின் மூலம் பூச்சிகளின் பெருக்கத்திற்கு பெரிதும் உதவும் ஒரே சமயத்தில் பல பருவநிலையில் உள்ள பயிர்கள் அமைவது தடுக்கப்படும். மேலும் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்துதலும் எளிது.

வரப்புகளிலும் வயல் எல்லைகளிலும் பொறி பயிர்களை வளர்க்க வேண்டும். பூச்சிகள் பெரிதும் விரும்பும் இத்தகைய பயிர்கள் பொறி பயிர்கள் எனப்படுகின்றன இத்தகைய பயிர்களை வரப்புகளில் வளர்ப்பதன் மூலம் பூச்சிகொல்லிகள் மூலமோ அல்லது அவற்றின் இயற்கை எதிரிகளை ஊக்குவிப்பதன் மூலமோ இவற்றை அழிக்கலாம்.

பூச்சி தாக்கக் கூடிய பகுதிகளில், வேரினை நனைத்தல் அல்லது இள நாற்றுகளை நேர்த்தி செய்ய வேண்டும்.

எங்கெங்கு சாத்தியப்படுமோ அங்கெல்லாம் ஊடுபயிர் அல்லது பல பயிர்முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஒரே பூச்சியினம் அனைத்து பயிர்களையும் தாக்காது. மேலும் சில பயிர்கள் அவற்றிற்கு எதிர்ப்பாக செயல்படும். இதன் மூலம் பூச்சி தாக்குதல் குறைந்து, பயிர்களின் பாதிப்பு தவிர்க்கப்படும்.

அறுவடை செய்யும் போது நிலத்தை ஒட்டி பயிர்களை அறுக்கவேண்டும். ஏனெனில் சிறிது வளர்ந்த நிலையில் உள்ள பூச்சிகள், அடுத்த சாகுபடியின்போது பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே அடியை ஒட்டி அறுவடை செய்வது அடுத்த போகத்தில் பூச்சித் தாக்குதலை குறைக்கும்.

பயிர்களை நடுவதற்கு முன் நாற்றுகளை தாமிர /உயிரி பூச்சிகொல்லி கரைசலில் நனைக்கவேண்டும். இது மண் மூலம் வரும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.

பழ மரங்களில் கிளைகளை கத்தரிக்கும்போது அடர்த்தியான, உடைந்த, காய்ந்த, பூச்சி தாக்கிய கிளைகளை நீக்கி அழித்துவிடவேண்டும். இவற்றை பழத் தோட்டத்தில் குவித்து வைக்காதீர்கள் ஏனெனில் இவை பூச்சிகளுக்கு ஆதாரமாக செயல்படும்.

பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த கிளைகளை வெட்டும்போது ஏற்பட்ட பெரிய வடுக்களை போர்டாக்ஸ் (Bordeaux) பூச்சு கொண்டு மூட வேண்டும்.

சிறப்பான பழங்கள் அமைய, மகரந்த அதிகம் கொடுக்கும் பயிர்களை போதிய அளவில் தோட்டத்தில் நிறுவுங்கள்.

தேன்கூடு அமைத்தல் அல்லது மலர் தொகுப்பு அமைத்தல் மூலம் மகரந்தச் சேர்க்கையை அதிகரித்து பழ விளைச்சலைப் பெருக்கலாம்.

இயந்திர முறைகள்

பூச்சிகள் மற்றும் அவற்றின் முட்டைகள், கூட்டுபுழுக்கள், கூடுகள் மற்றும் பாதிப்படைந்த பாகங்களை நீக்கி அழிக்கவேண்டும்.

மூங்கிலால் ஆன கூடு மற்றும் பறவை அமரக்கூடிய குச்சிகள் அமைத்து பூச்சிகளின் இயற்கை எதிரிகளை ஊக்குவிக்க வேண்டும்.

ஒளிபொறிகளைக் கொண்டு பூச்சிகளை பிடித்து அழிக்கலாம்.

கயிறு மூலம் இலைகளில் காணப்படும் புழுக்களை கீழே விழச்செய்து, அவற்றை அழித்தல். உதாரணம். நெல் இலைசுருட்டுப்புழு மற்றும் கூட்டுப்புழுக்கள்

தேவைப்படும் இடங்களில் பறவைகளைத் அச்சுறுத்தும் அமைப்புகளை நிறுவ வேண்டும்.

பறவை அமரக்கூடிய குச்சிகள் அமைத்து அவை அவற்றில் அமர்ந்து பூச்சிகள் மற்றும் அவற்றின் முட்டைகள், கூட்டுபுழுக்கள், கூடுகளை உண்ணும்படி செய்யவேண்டும்.

இனக்கவர்ச்சி பொறி கொண்டு பூச்சி இனப்பெருக்கத்தை தடுத்து பூச்சி தாக்குதலின் அளவை கட்டுப்படுத்தலாம். மேலும் பெரிய அளவில் பூச்சிகளை அழிக்கவேண்டும்.

மரபியல் முறைகள்

பூச்சியை எதிர்க்கும்/தாக்குபிடித்து வளர்ந்து, குறிப்பிடத்தக்க விளைச்சலை அளிக்ககூடிய, பயிர்வகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒழுங்கு முறைகள்

இத்தகைய வழிமுறைகளில் அரசு இயற்றியுள்ள ஒழுங்குமுறை விதிகள் பூச்சி தாக்கிய பயிரின் விதைகள் மற்றும் செடிகளை நாட்டிற்குள் நுழைவதையோ அல்லது ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு எடுத்துச் செல்வதையோ கட்டுப்படுத்துகின்றன. இத்தகைய கட்டுப்பாட்டுமுறை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கட்டுபாடுகள் என இருவகைப்படும்.

உயிரியல் முறைகள்

உயிரி முறையில் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலைக் கட்டுப்படுத்துதல் ஐபிஎம் இன் மிக முக்கிய கூறாகும். இங்கு ஒரு உயிரினத்தை வைத்து பாதிப்பு உண்டாக்கும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

உயிரிகட்டுப்பாட்டு முறைகளின் அங்கங்கள் சில

பாரசிட்டாய்ட்டுகள்

இத்தகைய உயிரினங்கள் தனக்கு தங்கி இடம் அளித்த உயிரினத்தின் உடல் மீது முட்டையிட்டு தங்கள் ஆயுள் சுழற்சியை அங்கேயே முடித்துக்கொள்ளும் அதனால் தங்க இடமளித்த உயிரினம் கொல்லப்படும். தங்க இடமளித்த உயிரினத்தின் வளர்ச்சி நிலையின் அடிப்படையில் பாரசிட்டாய்ட்டுகள் பல வகைப்படுத்தப்படும் முட்டை, இளம்புழு, முதிர்ந்த கூட்டுப்புழு, முட்டை-புழு அல்லது இளம்புழு-கூட்டுப்புழு பாரசிட்டாய்ட்டுகள் எனப் பல வகைப்படும். உதாரணம்:. டிரைக்கோகிராமா, அபன்டெலிஸ், ப்ரகான், சிலொனஸ், ப்ரசெமெரியா மற்றும் சுடோக்னோடொபஸ் முதலியன.

கொன்று தின்னிகள்

இத்தகைய உயிரினங்கள் மற்ற உயிரினங்களை உணவாகக் கொள்ளும். உதாரணம்: பல வகையான சிலந்திகள், தட்டான்பூச்சிகள், ஊசிதட்டான் மற்றும் பொறி வண்டுகள், க்ரிஸொபா இனங்கள் மற்றும் பறவைகள் முதலியவை.

நோய்க் கிருமிகள்

இத்தகைய நோய்க் கிருமிகள் பிற உயிரினங்களில் நோயை ஏற்படுத்தி அவற்றை அழிக்கின்றன. பூஞ்சானங்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஆகியன முக்கியமான நோய்ப் பரப்பும் கிருமிகளாகும் சில வகை நூற்புழுக்களும் பூச்சிகளுக்கு நோயை உண்டாக்குகின்றன .

- முக்கியமான பூஞ்சானங்கள் சில : பல வகையான ஹிர்சுடெல்லா, ப்யூவெரியா, நொமுரெ மற்றும் மெட்டாரைசியம்

- முக்கியமான வைரஸ்கள் சில : நியூக்ளியர் பாலிஹெட்ரொஸிஸ் வைரஸ் (NPV) மற்றும் க்ரானுலொலிஸ் வைரஸ்.

- முக்கியமான பாக்டீரியாக்கள் சில : பெசில்லஸ் துரிங்கென்ஸிஸ் (B.t.) மற்றும் B. பெசில்லஸ் பொப்பில்லே.

உயிரி கட்டுப்பாட்டு முறைகள்

பூச்சிகளுக்கு எதிராக நோயை ஏற்படுத்தும் உயிரினங்களை நீரிலோ அல்லது பொடி வடிவத்திலோ குறைந்த செலவில் ஆய்வகத்தில் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தகைய வழிமுறைகள் உயிரிபூச்சிகொல்லிகள் எனப்படும். அவற்றை மற்ற இரசாயன பூச்சிகொல்லியை பயன்படுத்துவது போலவே தெளிக்கலாம். பல்வேறு உயிரி பூச்சி கட்டுப்பாட்டு முறைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன:-

அறிமுகம்

இம்முறையில் ஒரு புதிய வகை எதிர்ப்பு உயிரினம் பூச்சிகளை எதிர்த்து வளர அப்பகுதியில் விடப்படும். முழுமையான ஆய்வகப் ஆராய்ச்சி மற்றும் கள ஆய்விற்கு பின்பே இம்முறை செயல்படுத்தப்பட வேண்டும்.

அதிகரித்தல்

இம்முறையில் பூச்சிகளின் இயற்கையான எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படுகிறது. ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட அல்லது களத்தில் சேகரிக்கப்பட்ட உயிரி எதிர்ப்பான்கள் தேவையான வயல்களில் இடப்படுகின்றன. இத்தகைய ஒரே வகையைச் சேர்ந்த உயிரி எதிர்ப்பான்கள் அப்பகுதியில் உள்ள பூச்சிகளை எதிர்க்கும்படி போதிய அளவில் அமையவேண்டும்.

பாதுகாப்பு

இம்முறை உயிரி கட்டுப்பாட்டு முறைகளிலேயே மிக முக்கிய வழிமுறை மற்றும் பூச்சியைக் கட்டுப்படுத்துதலில் முக்கியமானது. இயற்கையாக உள்ள பூச்சிகளின் எதிரிகள் அழிவிலிருந்து காப்பாற்றப்படுகின்றன. இயற்கை எதிரிகளைக் காப்பாற்றுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாரசிட்டாய்ட்டுகளின் முட்டையைச் சேகரித்து மூங்கிலால் ஆன கூடுகளிலும் மற்றும் பறவை அமரக்கூடிய கூச்சிகள் அமைத்து பாரசிட்டாய்ட்டுகளை வளர்க்க வேண்டும்.

பூச்சிகள் மற்றும் பயிர் பாதுகாவலன் ஆகியவற்றை பிரித்தரியும் விழிப்புணர்வு மற்றும் தெளிப்பான்கள் பயன்படுத்தும்போது அவற்றை தவிர்த்தல்.

பூச்சி மற்றும் அவற்றின் எதிர் உயிரிகளின் விகிதம் மற்றும் பொருளாதார வரம்புகளை அறிந்த பின்னர் இரசாயன தெளிப்புகளை கடைசி முயற்சியாகவே கையாளவேண்டும்.

பல வகையான பூச்சிகளையும் கொல்லும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தேவைப்படும் இடங்களில் மட்டும் தேர்ந்தெடுத்த மற்றும் சூழலுக்கு ஒரளவே பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லிகளைப் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

முடிந்த அளவு பாதிக்கப்பட்ட இடங்களில் சிறு பகுதியாகவோ குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தவேண்டும்.

பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கும் பருவகாலங்களை தவிர்க்கும் வகையில் விதைப்பு மற்றும் அறுவடையினைத் திட்டமிடவேண்டும்.

விதைக்கும் முன்பே வரப்புகளிலும் வயல் எல்லைகளிலும் தடுப்பு தாவரங்கள் வளர்க்க வேண்டும். இது பூச்சிகளின் இயற்கை எதிரிகளை ஊக்குவிக்கும்.

பூச்சி தாக்குதல் அபாயம் உள்ள பகுதிகளில் வேரினை நனைத்தல் அல்லது இள நாற்றுகளை நேர்த்தி செய்ய வேண்டும் .

ஊடுபயிர் அல்லது பல பயிர்முறைகள் பயிருக்கு பாதுகாவலாக இருக்கும் உயிரினங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

பரிந்துரைத்த அளவு மற்றும் விரீயத்துடன் மட்டுமே பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தவேண்டும்

இரசாயன முறைகள்

அனைத்து பிற வழிமுறைகளும் பயன்தராவிடில் பூச்சி தாக்குதல் விகிதம் மற்றும் பொருளாதார வரம்புகளை (ETL)அறிந்த பின்னர் இரசாயன பூச்சிக்கொல்லிகளை தேர்ந்த அளவில் தேவைப்படும் கடைசி முயற்சியாகவே கையாளவேண்டும். இவ்வாறு கடைபிடிப்பது செலவுகளைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் இதர பிற பிரச்சனைகளையும் தவிர்க்கும். இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்து முன் கீழ் கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி என்ன தெளிக்க வேண்டும், எவ்வாறு தெளிக்கவேண்டும் எனபதை தீர்மானிக்க வேண்டும்.

பொருளாதார வரம்புகள் (ETL) மற்றும் பூச்சிகள் மற்றும் அவற்றின் எதிர் உயிரிகளின் விகிதம்.

வேம்பு அல்லது உயிரி பூச்சிக்கொல்லிகள் போன்ற பாதுகாப்பான பூச்சிக்கொல்லிகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

பூச்சி தாக்குதல் சில இடங்கள் அல்லது பகுதியில் மட்டுமே இருந்தால் வயல் முழுவதும் பூச்சிக்கொல்லியைத் தெளிக்கக் கூடாது.

மக்களால் நேரடியாக உட்கொள்ளப்படுவதால் பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதிக நச்சுத்தன்மை உள்ள மற்றும் பல தீய பின்விளைவுகளை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லிகளைப் பரிந்துரைக்கக் கூடாது. அதிக இலாபம் ஈட்டும்பொருட்டு விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளின் நச்சுத்தன்மை குறையத் தேவையான கால இடைவெளிக்கு முன்னரே பயிர்களை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு செல்கிறார்கள். இது நச்சுத்தன்மை, நீண்ட நாள் பாதிப்பு மற்றும் சில நேரங்களில் மரணத்தைக்கூட ஏற்படுத்தலாம். எனவே பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது அதிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவேண்டும்.

மூலம்: பயிர்ப்பாதுகாப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு இயக்ககம்