அறிமுகம்

மருந்துப் பயிர்களை பல்வேறு வகையான இலையைத் தின்னும் புழுக்களும், சாறு உறிஞ்சும் பூச்சிகளும், துளைப்பான்களும் தாக்கி அதிகமாக சேதம் விளைவிக்கின்றன. பல்வேறு வகையான மருந்துப் பயிர்களை தாக்கும் பூச்சிகளையும், அவற்றின் மேலாண்மை வழிமுறைகளையும் காண்போம்.

செங்காந்தள்

செங்காந்தள் செடியை தாக்கும் இலைப்பேன் மஞ்சள் கலந்த அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும். காந்தள் மலர்ச்செடியில் இப்பேன்கள் கொண்டைக் கருகல் நச்சுயிரி நோயைப் பரப்புகின்றன. நச்சுயிரி தாக்க்ப்பட்ட செடிகள் பழுப்பு நிறத்தில் நிறமாற்றம் அடைந்து பின்னர் கருகிவிடும். நச்சுயிரி தாக்கிய செடிகளே நோய் பரவுவதற்கு முக்கிய காரணியாக உள்ளதால் அவற்றை அகற்றி அழிப்பதன் மூலம் நச்சுயிரி பரவுவதைத் தடுக்கலாம். கொண்டைக்கருகல் தாக்குதல் இல்லாத இடங்களில் மூன்று சதவிகித வேப்பெண்ணெய் கரைசலை பதினைந்து நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிப்பதன் மூலம் செங்காந்தள் பேன்களை கட்டுப்பாட்டில் வைக்கலாம். நோய் தாக்குதல் உள்ள இடங்களில் பிஃப்ரோனில் மருந்தினை எக்டருக்கு 750 மி.லி என்ற அளவில் பதினைந்து நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிப்பதன் மூலம் இப்பேன்களை முற்றிலுமாக கட்டுப்படுத்தி, செங்காந்தள் மருந்துச் செடிகள் கொண்டைக் கருகல் நோய் பரவுவதைத் தடுக்கலாம்.

லில்லி புழுக்கள்

லில்லி புழுக்கள் கருமை நிறத்தில் இளஞ்சிவப்பு மற்றும் வெண்மை நிறத்திட்டுகளுடனும் பழுப்பு நிறத் தலையுடனும் காணப்படும். இப்புழுக்கள் இளம் செடியிலிருந்து முதிர்ந்த காய்கள் வரை அனைத்து பாகங்களையும் தாக்கி அதிகளவில் சேதத்தை ஏற்படுத்துகின்றன. செடிகளில் மூன்று புழுக்களுக்கும் அதிகமாக காணப்படும் பொழுது இலைகளிலுள்ள பச்சையம் முழுவரையும் தின்பதுடன், நுனிக் குருத்தை முழுவதுமாக தின்றுவிடுகிறது.

காவடிப் புழுக்கள்

காவடிப் புழுக்கள் இளம் பச்சை நிறத்தில் இலையின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு, இலைகள் முற்றிலுமாக தின்று சேதத்தினை ஏற்படுத்துகின்றன.

புரோடீனியா புழுக்கள்

இப்புழுக்கள் இரவு நேரங்களில் அதிகமாக சேதத்தை ஏற்படுத்தி, பகலில் வரப்புகளிலும், சருகுகளுக்கு அடியிலும் மறைந்திருக்கும்.

புழுக்கள் மேலாண்மை

மேற்கூறிய புழுக்களின் முட்டைகள், புழுக்கள், கூட்டுக்புழுக்கள், தாக்கப்பட்ட பயிர் பாகங்களை சேகரித்து அழிப்பதன் மூலமாக, பெருக இருக்கும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. தாய் அந்துப் பூச்சிகளை விளக்குப் பொறி வைத்தும், புரோடீனியா போன்ற புழுக்களின் தாய்ப் பூச்சிகளை, இனக்கவர்ச்சி பொறிகள் வைத்தும், கவர்ந்து அழிக்கலாம். இப்புழுக்களின் எண்ணிக்கை மிகப் குறைவாக, இளம் புழுக்களாக இருக்கும் பொழுதே, ஐந்து சத வேப்பங்கொட்டை பருப்பு சாறு கரைசலையோ அல்லது மூன்று சத வேப்பெண்ணெயையோ தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மருந்துக் கூர்க்கன்

நூற்புழுக்கள்

வேர் முடிச்சு நூற்புழுவின் தாக்குதலினால் செடிகளின் வளர்ச்சி குன்றி குட்டையாக காணப்படும். கோடை காலங்களில் செடிகள் வாடி காய்ந்துவிடும். செடிகளின் வேர் பகுதியை பிடுங்கிப் பார்த்தால் வேர்களில் ஆங்காங்கே சிறிய மற்றும் பெரிய முடிச்சுகள் போன்று காணப்படும். நூற்புழுக்கள் நுனி முலம் உட்ச்சென்று வேரின் நுனிப்பகுதியில் அசையாமல் இருந்து சத்துப்பொருட்களை உண்பதால், சத்துக்கள் மேலே செல்ல முடியாமல் செடிகள் வாடி காய்ந்து விடுகின்றன. மேலும், நூற்புழு உள்ள இடங்களில் செல்கள் நீண்டு வளர்ந்து, எண்ணிக்கையும் அதிகமாவதால், வேர்களில் முடிச்சுகள் போன்ற வீக்கம் காணப்படுகின்றது. இதனால் பயிர் எண்ணிக்கை குறைந்து விளைச்சல் குறைவதோடன்றி கிழங்குகள் பெருக்காமல் பெருமளவு விளைச்சல் குறையும்.

மேலாண்மை

கோலியஸ் சாகுபடி செய்த நிலத்தில் பயிர்ச் சுழற்சி முறையில் சோளம், மக்காச்சோளம் போன்ற நூற்புழு தாக்காத பயிர்களை ஆண்டிற்கு ஒரு முறை பயிர் செய்வது நல்லது. சென்டுமல்லி பூச்செடியின் வேரில் இருந்து வரும் திரவம் வேர் முடிச்சு நூற்புழுக்கள் அழிக்க வல்லது. ஆதலால் செண்டுமல்லி செடிகளை பார் மற்றும் வாய்க்கால் ஓரங்களில் உடுப்பயிராக நடவு செய்து பராமரிக்கலாம். ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு நடவுக்கு முன் இட்டு வயலை நன்கு உழ வேண்டும்.

இலை சுருட்டும் புழுக்கள் மற்றும் இலை மடக்கும் புழுக்கள்

இப்புழுக்கள் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பயிரைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றன. இப்புழுக்கள் இலைகளில் இரு ஓரங்களையும், மெல்லிய நூலிழை கொண்டு பிணைத்து விடும். புழுக்கள் இலை மடிப்பின் உள்ளே இருந்து கொண்டு பச்சையத்தைச் உண்ணும். பாதிக்கப்பட்ட இலைகள் காய்ந்து விடுகின்றன.

மாவுப்புச்சி

இளம் மற்றும் வளர்ந்த மாவுப்புச்சிகள் இலையின் அடிப்பகுதி மற்றும் தண்டு, குருத்துப் பகுதிகளில் அடர்த்தியாய் இருந்து கொண்டு சாறை உறுஞ்சுவதால், இலைகளில் மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றுவதுடன், செடியின் வளர்ச்சி வெகுவாகக் குறைந்துவிடுகிறது.

மேலாண்மை

மேற்கூறிய இப்புழுக்கள் மற்றும் மாவுப் புச்சியை கட்டுப்படுத்த, பூச்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போதே மூன்று சத வேப்பெண்ணெய் அல்லது ஐந்து சத வேப்பங்கொட்டை பருப்புச்சாறு தெளிக்க வேண்டும்.

சர்க்கரை கொல்லி

மாவுப்பூச்சி

இளம் மற்றும் முதிர்ந்த மாவுப்பூச்சிகள் இளம் தளிர்களிலும், இலையின் அடிப்பகுதியிலும் அடர்த்தியாய் இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சி சேதம் உண்டு பண்ணுகின்றன. இதனால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி சிறுத்து, காய்ந்து, உதிர்ந்து விடுகின்றன. மாவுப்பூச்சி வெளியேற்றும் தேன் போன்ற திரவம் இலைகளில் மேல் கரும் பூஞ்சாணத்தை உருவாக்குகிறது.

அசுவினி

இளம் தளிர்களில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். இளம் மற்றும் முதிர்ந்த இலையின் அடிப்பாகத்திலும், குருத்துப் பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். இலைச் சாற்றை அறிஞ்சுவதால் தாக்கப்பட்ட இளங்குருத்து மற்றும் இலைகள் சிறுத்தும் சுருங்கியும் தடித்தும் வளைந்தும் காணப்படும். தாக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும்.

சாறு உறிஞ்சும் பூச்சிகள் மேலாண்மை

இயற்கை எதிரிகளான சிம்ளஸ் மற்றும் கிரிப்போலிமஸ் மான்ட்ரோசெரி எனப்படும் பொறி வண்டுகள் மற்றும் அதன் புழுக்கள் மாவுப்பூச்சிகளை அதிகளவில் அழிக்கின்றன. இப்பொறிவண்டினைத் தவிர, அசிரோபேக்ஸ் பப்பாயே எனப்படும் ஒருவகை ஒட்டுண்ணியை ஒரு சிறிய கிராமத்திற்கு 100 ஒட்டுண்ணியை என்ற அளவில் விட்டும் சர்க்கரைக் கொல்லியைத் தாக்கும் பப்பாளி மாவுப்பூச்சியினை எளிதில் கட்டுப்படுத்தலாம். மேலும், இப்பூச்சிகளைப் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை பருப்பு சாறு 5 சதம் அல்லது வேப்பெண்ணெய் மூன்று சதம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் போது ஏக்கருக்கு 400 மி.லி. மீதைல் டெமெட்டான் அல்லது டைமீத்தோயேட் மருந்தை தெளிக்க வேண்டும்.

இலைப்புழுக்கள்

இதன் புழுக்கள் இலைகளை உண்டு அதிகளவு சேதத்தை விளைவிக்கின்றன. புழுக்கள் இளம் பச்சை நிறத்தில் காணப்படும்.

காவடிப்புச்சி

இதன் புழுக்கள் இலைகளை அதிகளவில் உண்டு சேதம் விளைவிக்கின்றன. அந்துப் புச்சிகள் வெளிறிய நீல நிற இறக்கைகளோடு காணப்படும்.

இலை உண்ணும் புழுக்கள் மேலாண்மை

பூச்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போதே மூன்று சத வேப்பெண்ணெய் அல்லது ஐந்து சத வேப்பங்கொட்டை பருப்புசாறு தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மணத்தக்காளி

அசுவினி

தளிர் இலைகள் சிறிதாக தோன்றுவதில் இலைகள் கீழ் நோக்கி கிண்ணம் போல் குவிவதும், இலைகளின் மீது எறும்புகள் நடமாடுவதும் அப்பயிரில் அசுவினி தாக்கியுள்ளதைக் குறிக்கும். சிறிய கருஊதா நிற அசுவினியின் இயற்கைகள் அற்ற குஞ்சுகள், இயக்கைகள் கொண்ட முழுவளர்ச்சிப் பெற்ற அசுவினிகள் கூட்டமாக இலைகளின் அடியிலிருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சி சேதம் விளைவிக்கின்றன.

மாவுப்புச்சி

இப்புச்சிகள் இளந்தளிர் பகுதியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி செடியின் வளர்ச்சியை வெகுவாக குறைக்கின்றன.

புரோடீனியா புழு

அபுழுக்கள் செடிகளின் இலைகளைக் கடித்து உண்டு சேதப்படுத்தும். இப்புழுக்களின் சேதம் இரவு நேரங்களிலேயே அதிகம். புகலில் வரப்புகளிலும், நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் சருகுகளுக்கு அடியிலும் மறைந்திருக்கும்.

இனக் கவர்ச்சிப் பொறிகள் வைத்தும், விளக்குப் பொறிகளில் அந்துப் பூச்சியைக் கண்காணித்தும், பயிரைச் சுற்றி ஆமணக்கை பயிரிட்டு முட்டைக் குவியல்களையும் சேகரித்து அழித்தும், புரோடீனியாவைக் கட்டுப்படுத்தலாம்.

இலை புள்ளி வண்டு

கத்திரியைத் தாக்கும் பொறிவண்டின் புழப்பருவம், மணத்தக்காளி இலைகளையும் தாக்கி சேதம் விளைவிக்கின்றன. மேற்கூறிய புச்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போதே மூன்று சத வேப்பங்கொட்டை பருப்பு சாறு தெளித்து கட்டுப்படுத்தலாம்.

நிலாவாரை

பச்சைப் புழுக்கள் (வெள்ளை மற்றும் மஞ்சள் பட்டாம்பூச்சி)

இப்புழுக்கள் இளம் இலைகளைக் கடித்து உண்டு அதிக அளவில் சேதத்தை உண்டாக்குகினறன. புழுக்கள் உருண்டையாக பச்சை நிறத்தில் மஞ்சள் நிற வளையங்களோடு காணப்படும்.

மேலாண்மை

தாக்கப்பட்ட இலைகள் மற்றும் புழுக்கள் கைகளால் அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். வயல்களில் ஆங்காங்கே குச்சிகளை நட்டு பூச்சி உண்ணும் பறவைகளை ஊக்குவிக்கலாம். டிரைக்கோகிரம்மா கைலோனி மற்றும் அபான்டிலஸ் ஒட்டுண்ணிகளை வயல்களில் விட்டும் கட்டுப்படுத்தலாம். பேசில்லஸ் வகை பாக்டீரியா லிட்டருக்கு இரண்டு கிராம் அல்லது வேப்பங்கொட்டை பருப்பு சாறு ஐந்து சதவிகிதம் அல்லது வேப்பெண்ணெய் மூன்று சதவிகிதம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

புகையிலை வண்டு

இவ்வண்டுகள் சேமிக்கப்படும் இலைகள் மற்றும் விதைகளைத் தாக்குகின்றன. இவ்வண்டு நீள்வட்ட வடிவத்தில், 2-3 மி.மீ நீளத்துடன், இளம் காவி நிறத்தில் காணப்படும்.

மேலாண்மை

மூட்டைகளை தரையில் வைக்காது கட்டைகள் மற்றும் மூங்கில் பாய்களின் மீது அடுக்க வேண்டும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு பரிந்துரை செய்யப்படுகின்ற குழாய் வடிவ பொறிகளையும், ஊதாக்கதிர் விளக்குப் பொறிகளையும் பயன்படுத்தி புகையிலை வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.

ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை