அறிமுகம்

டிசம்பர் முதல் செப்டம்பர் வரையிலான நெல் பயிரிடாத காலங்களில் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.

ரகங்கள்

அர்கா மானிக்

அர்கா ஜோதி

டி.கே.எம். 1

சுகர்பேபி

அசாகியமாடோ

சார்லஸ்டன் கிரே

அம்ரூத்

பூசா பேடானா

போன்ற வீரிய ஒட்டு ரகங்களை சாகுபடி செய்யலாம்.

விதை நேர்த்தி

3 முதல் 4 கிலோ வரை நல்ல தரமான விதைகளாகத் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். விதைகளையும், இளம் செடிகளையும் நோய், பூச்சிகள் தாக்காமல் பாதுகாக்கும் வகையில் ஹெக்டேருக்கு விதையுடன் 4 கிராம் டிரைகோடர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற பூஞ்சாணக் கொல்லி அல்லது 2 கிராம் கார்பண்டாசிம் அல்லது திரம் என்ற பூஞ்சாண மருந்தில் ஏதேனும் ஒன்றைக் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்.

நிலத்தைப் பண்படுத்துதல்

நெல் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்ய உழவில்லா குழி நடவு முறையைப் பின்பற்றலாம். இம்முறையில், நெல் தரிசு நிலத்தில் உள்ள நெற்பயிர் அடித்தாள், உளுந்துப் பயிரின் அடிச் சக்கையை நன்கு சேர்த்து சுத்தப்படுத்த வேண்டும். இவற்றை தர்ப்பூசணிக்கு மண் போர்வையாக அல்லது மண்புழு உரமாகப் பயன்படுத்தலாம். இவ்வாறு சுத்தப்படுத்திய நிலத்தில் 15- க்கு 15 மீட்டர் இடைவெளியில் 50- 50- 50 செ.மீ. குழி எடுக்க வேண்டும். இதிலுள்ள மண்ணை கடப்பாரை, மண்வெட்டி போன்ற கருவிகளால் கொத்தி, விதை நடவுக்கேற்ப தயாரிக்க வேண்டும். இந்தக் குழிகளில் அடிஉரம் இட்டு குழிக்கு 5 விதை வீதம் நடவேண்டும். ஒவ்வொரு குழியிலும் நட்டதும், 3 நாள் இடைவெளியில் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

உர மேலாண்மை

ஹெக்டேருக்கு 25 டன் தொழு உரத்துடன் 30: 65: 85 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துகளை இடவேண்டும். இதில் பாதியளவு தழை, முழு அளவு மணி, சாம்பல் சத்துகளை உழவில்லா சாகுபடி முறையில் குழியமைக்கும் போதும், மீதமுள்ள தழைச்சத்தை 2 பகுதியாக நடவு செய்த 30, 60 நாளில் இடுதல் வேண்டும். தொழு உரத்துக்கு பதிலாக 25 டன் மக்கிய அல்லது சாண எரிவாயுக்கு பயன்படுத்திய கரும்பு ஆலைக் கழிவு அல்லது 2.5 டன் மண்புழு உரம் அல்லது 12.5 டன் செரிவூட்டப்பட்ட தாவரமக்கு அல்லது 2.5 டன் செரிவூட்டப்பட்ட தென்னை நார்க்கழிவு மக்குகளைப் பயன்படுத்தலாம்.

நீர்ப்பாசனம்

தர்ப்பூசணிக்கு தகுந்த நீர்ப்பாசன முறையைப் பயன்படுத்துவது முக்கியம். காரணம், அப்பருவத்தில் பாசன நீரின் அளவு மிகக் குறைவு. ஆழ்துளை கிணற்றுப் பாசன வசதியுள்ளோர் நல்ல முறையில் தர்ப்பூசணி சாகுபடி செய்யலாம். பாத்தி அல்லது சொட்டு நீர் அல்லது தெளிப்புநீர்ப் பாசனம் என வசதிக்கேற்ப பயன்படுத்தலாம். கிணற்றுப் பாசன வசதியில்லாத நிலையில் அருகே வடிகால் வாய்க்கால் நீரைக் குடிநீர்ப் பாசன முறையில் பயன்படுத்தலாம். களைகளை அவ்வப்போது நீக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

இலை வண்டு, புழுக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 50 இசி 1 மிலி அல்லது மிதைல் டெமடான் 25 இசி 1 மிலி தெளிக்கவும், சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த 1 மிலி டினோகாப் அல்லது கார்பண்டாசிம் 0.5 கிராம் லிட்டர் என்ற அளவில் நட்ட 10 நாள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.

அறுவடை

பூ மகரந்தச் சேர்க்கை அடைந்ததிலிருந்து 40 நாளில் பழங்களை அறுவடை செய்யலாம். பழங்களை மட்டுமே அறுவடை செய்ய வேண்டும். பழக்காம்பு காய்தல், பழத்தைத் தட்டினால் ஏற்படும் சப்தம், பழம் மண்ணில் படும் இடங்கள் பச்சை நிறத்திலிருந்து வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்றவற்றைக் கண்டறிந்து பழம் முதிர்ச்சியை அறிந்து அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டேருக்கு 50 முதல் 60 டன் வரை மகசூல் பெறலாம்.

ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை