அறிமுகம்

விவசாயிகள் குளிர்காலத்தில் நல்ல மகசூல் தரும் பட்டாணி பயிரைத் தேர்வு செய்வதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும்

ரகங்கள்

போனிவில்லி

புளுபேண்டம்

அர்கெல்

அலாஸ்கா லின்கோலின்

அசாத் ரகங்கள்

மண் தட்பவெப்பநிலை

மணல்சாரியான செம்மண் பூமியிலும், களிமண் நிறைந்த நிலங்களிலும் வளர்ந்தாலும், வடிகால் வசதி கொண்ட பொல பொலப்பான இருபொறை மண் நிலங்களில் நன்கு வளரும். களர், உவர் நிலங்களில் வளராது. பட்டாணி குளிர்காலத்தில் சிறந்த வளர்ச்சியும், மகசூலும் தரவல்லது.

பருவம்

பிப்ரவரி – மார்ச்

அக்டோபர் – நவம்பர் மாதங்கள் பயிரிட ஏற்ற பருவம்.

விதையளவு

ஹெக்டேருக்கு 100 கிலோ விதை போதும். 40-க்கு 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 3 அல்லது 4 தடவை மடக்கி உழ வேண்டும். கடைசி உழவில் 20 டன் மக்கிய தொழு உரம் இட்டு உழவேண்டும். பின்பு 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

விதை, விதைப்பு

விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதைக்கும் முன்பு ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது நான்கு கிராம் ட்ரைகோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.

பின்பு 2 கிலோ பாஸ்போ பாக்டீரியத்தை மண்ணுடன் கலக்கவேண்டும். பார்களின் பக்கவாட்டில் விதைகளை 34 செமீ ஆழத்தில் ஊன்றவேண்டும். விதைக்கு விதை 10 செமீ இடைவெளி விட்டு விதையை ஊன்றவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

பார்களின் ஓரங்களில் தழைச்சத்து 60 கிலோ, சாம்பல் சத்து 70 கிலோ கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை அடியுரமாக இடவேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பின்னர் 3 நாள் கழித்து உயிர்த்தண்ணீரும் விடவேண்டும். பின்னர் மண்ணின் தன்மையை அனுசரித்து 5 நாளுக்கு ஒருமுறை தண்ணீர் கட்டவேண்டும். மலைகளில் பயிரிட்டால் பனிக்கட்டி தோன்றும் காலத்தில் நீர் கட்டவேண்டும்.

களை கட்டுப்பாடு, பின்செய்நேர்த்தி

விதைத்த 15 நாளுக்குப் பின்னர் ஒரு களை எடுக்க வேண்டும். பின்னர் தேவைப்படும்போது களைக்கொத்தி களையெடுத்து, விதைத்த 30ஆவது நாளில் 60 கிலோ தழைச்சத்து கொடுக்கும் உரத்தை மேலுரமாக இடவேண்டும்.

காய் துளைப்பான்

15 நாளுக்கு ஒருமுறை ஒரு லிட்டருக்கு 12 கிராம் கார்பரைல் 3 முறை தெளிக்கவேண்டும்.

அசுவினி

மெத்தைல் டெமட்டான் (அல்லது) டைமெத்தோயேட் (அல்லது) பாஸ்போமிடான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மிலி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.

அறுவடை

விதைத்த 75 நாள் கறிப் பட்டாணியை அறுவடை செய்யலாம். பட்டாணிப் பயிரில் காய்கள் தகுந்தபடி முற்றியதும் அறுவடையைத் தொடங்க வேண்டும்.

காய்கறிப் பருவம் அதாவது உண்ணும் பருவத்தைக் கடந்துவிட்டால் காய்களின் தரம் குறைந்துவிடும். அறுவடையின்போது அதிக வெப்பம் இருந்தாலும் தரம் குறைந்துவிடும்.

3 முறை பட்டாணியை அறுவடை செய்யலாம். அறுவடையை காலையிலோ, முற்பகலிலோ செய்யவேண்டும்.

மகசூல்

ஹெக்டேருக்கு 110 நாளில் 8 முதல் 12 டன்கள் வரை மகசூல் பெறலாம்.

ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை