வாழை

வாழைப்பழத்திற்கு: ரோபஸ்டா, கோ.1 மட்டி மற்றும் சன்ன செங்கதலி. காவன்டிஷ் இரகங்கள் ஏற்றுமதிக்கு உகந்ததாகும்.

வாழைக்காயாக உபயோகப்படுத்துவதற்கு: மொந்தன், நேந்திரன், வயல் வாழை மற்றும் சாம்பல் நிற மொந்தன்.

மலைப்பகுதிக்கு ஏற்ற இரகங்கள்:விருப்பாட்சி, சிறுமலை, செவ்வாழை, மனோரஞ்சிதம், நமரை மற்றும் நாடன்.

மண்ணும் தட்பவெப்பநிலையும்:

நல்ல வடிகால் வசதியுள்ள இரும்பொறை மண் உகந்தது. காரமண் மற்றும் உப்ப மண் உகந்ததல்ல.

நடவு செய்யும் பருவம்

நன்செய் நிலங்களுக்கு:

பிப்ரவரி - ஏப்ரல் : பூவன், ரஸ்தாளி, மொந்தன் மற்றும் கற்பூரவள்ளி,

ஏப்ரல் - மே: நேந்திரன் மற்றும் ரோபஸ்டா.

தோட்டக்கலை நிலங்களுக்கு : ஜனவரி - பிப்ரவரி மற்றும் நவம்பர் – டிசம்பர்

படுகை மற்றும் நீர்ப்பாசன வகதியுள்ள இடங்களுக்கு: ஜனவரி - பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்கள் உகந்தது.

மலைவாழை: ஏப்ரல் - மே (கீழ்ப்பழனி மலைப்பகுதி) ஜீன் – ஜீலை (சிறுமலை)

கன்றுகள் தேர்வும் நேர்த்தியும் சீரான வளர்ச்சிக்கும், நல்ல மகசூல் பெறவும் தரமான கன்றுகளைத் தேர்வு செய்து நடுதல் வேண்டும். தாய் மரத்திற்கு அருகாமையில், கிழங்கிலிருந்து வளரும், 2 முதல் 3 அடி வரை உயரம் உள்ள சுமார் 3 மாத வயதான ஈட்டிக் கன்றுகளே சிறந்தவை. கன்றின் எடை 1.5 முதல் 2.0 எடையுள்ளதாகவும், பூச்சி மற்றும் நோய் தாக்காத கிழங்குகளாகவும் இருக்கவேண்டும். கிழங்கின் அடிப்பகுதியுள்ள வேர்களை நீக்கிடவேண்டும். கிழங்கின் மேல் பகுதியுள்ள தண்டுப்பகுதி 20 செ.மீ இருக்குமாறு தேர்ந்துதெடுக்கவும். வாடல் நோயைத் தவிர்க்க கிழங்குகளை 5 நிமிடம் 0.1 சதம் எமிசான் கரைசலில் ( 1 கிராமினை 1 லிட்டர் தண்ணீரில் கரைக்கவேண்டும்) நனைத்து நடவு செய்யவேண்டும். வாடல் நோய் எதிர்ப்புத்திறன் இல்லாத இரகங்களாகிய ரஸ்தாளி, மொந்தன், நெய் வண்ணன் மற்றும் விருப்பாட்சி போன்ற இரகங்களுக்கு இவ்வாறு செய்யவேண்டும்.

நூற்புழு தாக்குதலைத் தவிர்க்க, தோல் சீவிய கன்றுகளை சேற்றுக் குழம்பில் நனைத்து அதன் மீது கார்போ புயூரான் குருணை மருந்தை ஒரு கிழங்கிற்கு 40 கிராம் என்ற அளவில் தூவி நடவேண்டும். அல்லது 0.75 சதம் மோனோகுரோட்டோபாஸ் கரைசலில் கிழங்குகளை தோய்த்து நிழலில் சுமார் 24 மணி நேரம் உலர்த்தி நடவேண்டும்.

5-6 இலைகள் உள்ள திசு வளர்ப்பு கன்றுகளை நடவு செய்யலாம். நடவின் பொது ஒரு கன்றுக்கு 25 கிராம் சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் இடவேண்டும்.

மேலும் சணப்பை போன்ற பசுந்தாள் உரங்களை 45 நாள் வளர்த்து உழுதல் வேண்டும். இதன் மூலம் நூற்புழு எண்ணிக்கையினை குறைக்கலாம்.

நிலம் தயாரித்தல்

நன்செய் நிலங்களுக்கு: லேசாக மண்ணைப் பறித்து அதன்மேல் நேர்த்தி செய்த கன்றுகளை நட்டுப்பின் மண் அணைக்கவேண்டும்.

தோட்டக்கால் நிலங்களுக்கு: 2 முதல் 4 தடவை நன்கு உழவேண்டும்.

படுகை நிலங்களுக்கு: மண்வெட்டியால் ஒரு டஅடி ஆழமாகத் கொத்திடவேண்டும்.

மலைப்பகுதிகளுக்கு: வனப்பகுதியை சரி செய்து சம உயர வரப்பு அமைக்கவேண்டும்.

குழியெடுத்தல்

தோட்டக்கால், படுகை மற்றும் மலை வாழைகளுக்கு 45 கன சென்டிமீட்டர் அளவுள்ள குழிகளை எடுத்து ஒவ்வொரு குழிகளிலும் 10 கிராம் தொழு உரம், 250 வேப்பம் புண்ணாக்கு, 50 கிராம் லிண்டேன் ஆகியவற்றை இட்டு மேல் மண்ணோடு நன்கு கலக்கி, குழியின் நடுவில் நேர்த்தி செய்யப்பட்ட கன்றுகளை வைத்து மண்ணால் மூடி சுற்றிலும் நன்கு மிதித்துவிடவேண்டும்.

நீர் நிர்வாகம்

நடவு செய்த உடனே நீர்ப்பாய்ச்சவேண்டும். அதற்குப்பிறகு 4 நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர், வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து தோட்டக்கால் நிலத்திற்கு மற்றும் 10-15 நாட்களுக்கு ஒரு முறை நஞ்சை பகுதிகளுக்கும் நீர்ப்பாய்ச்சவேண்டும். உரமிட்ட பிறகு அதிக அளவு நீர்ப்பாய்ச்சவேண்டும்.

வாழ்நாள்:

கன்று நட்டு 12 முதல் 15 மாதங்கள் கழித்து அறுவடைக்குத் தயாராகிவிடும்.

அறுவடை

மண், இரகங்கள் ஆகியவற்றைப் பொறுத்து பூ பூத்த 90 முதல் 150 நாட்கள் கழித்து தார்களை அறுவடை செய்யலாம்.

பப்பாளி

இரகங்கள் :கோ.1, கோ.2, கோ.3, கோ.4, கோ.5, கோ.6, கோ.7 மற்றும் கூர்க்கனிடியூ மற்றும் சூரியா இவற்றுள் கோ.2, கோ.5 மற்றும் கொ.6 பப்பெயின் எடுப்பதற்கும், உண்பதற்கும் உகந்தது. கோ.3, கோ.7 இருபால் இரகங்கள்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

பப்பாளிப் பயிர் பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக்கூடியது. எனினும் களிமண் பூம சாகுபடி செய்ய உகந்ததல்ல. சமவெளிப் பகுதிகளில் மிதமானது முதல் சற்றே வெப்பம் அதிகமாக நிலவும் இடங்களில் நன்கு வளரும். மலைப் பகுதிகளில் சுமார் 1200 மீட்டர் உயரம் வரை வளரும்.நல்ல வடிகால் வசதி இருப்பதன் மூலம் தண்டுப் பகுதியில் ஏற்படும் அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

பருவம்:வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். இருந்தாலும் ஜீன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலங்கள் மிகவம் ஏற்றது. நடவுப் பருவத்தில் அதிக மழை இல்லாமல் இருப்பது நல்லது.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது சமன் செய்து கொள்ள வேண்டும். பிறகு 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ நீளம், 45 செ.மீ அகலம் மற்றும் 45 செ.மீ ஆழத்தில் குழகள் எடுக்கவேண்டும். பின்பு குழிகளில் மண் மற்றும் தொழு உரம் நிரப்பி நாற்றுக்களை குழியின் மத்தியில் நடவேண்டும்.

விதையும் விதைப்பும்

விதைப்பு :ஒரு எக்டருக்கு 500 கிராம் விதைகள்

நாற்றாங்கால் :ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். நேர்த்தி செய்த விதைகளை தொழு உரம் மற்றும் மண் நிரப்பிய பாலித்தீன் பைகளில் ஒரு செ.மீ ஆழத்தில் விதைக்கவேண்டும். ஒரு பாலித்தீன் பையில் நான்கு விதைகள் விதைக்கவேண்டும். பிறகு பைகளை நிழல்படும் இட்தில் வைத்து பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்றவேண்டும். நாற்றுக்கள் 60 நாட்களில் நடவுக்குத் தயாராகிவிடும்.

நீர் நிர்வாகம்

வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்சவேண்டும். செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

ஆண்பெண் செடிகளை நீக்கியவுடன் செடி ஒன்றிற்கு 50 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இரண்டு மாதத்திற்கு ஒர முறை கொடுக்கவேண்டும். மேலும் செடி ஒன்றிற்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியா கொடுக்கவேண்டும். உரம் இட்ட பின் நீர்ப் பாய்ச்சவேண்டும். நுண்ணோட்டச் சத்து : துத்தநாக சல்பேட் (0.5 %) + போரிக் அமிலம் (0.1 %) கலவையினை நடவு செய்த 4வது மற்றும் 8வது மாதத்தில் தெளிப்பதன் மூலம் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கின்றது.

பின்செய் நேர்த்தி

செடிகள் பூக்க ஆரம்பிக்கும் போது, 15 முதல் 20 பெண் செடிகளுக்கு ஒரு ஆண் செடியைவிடவேண்டும். ஒரு குழியில் ஒரு பெண் செடியை விட்டு விட்டு இதர ஆண், பெண் செடிகளை நீக்கவேண்டும். கோ.3 மற்றும் கோ.7 போன்ற இருபால் இரகங்களில் இருபால் பூக்கள் கொண்ட மரங்களை மட்டும் வைத்துக்கொண்டு,பெண் மரங்களை நீக்கிவிடவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

நூற்புழு :நாற்றாங்காலில் நூற்புழு தாக்குதலைத் தடுக்க ஒரு பாலித்தீன் பையில் ஒரு கிராம் கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்தை இடவேண்டும்.

வேர் அழுகல் நோய் : செடியின் மேல் பாகத்தைச் சுற்றி தண்ணீர் தேங்கி நின்றால் இந்நோய் பரவும். இந்நோய் தாக்கிய செடிகள் வாடி இறந்துவிடும்.

கட்டுப்பாடு :இதனைக் கட்டுப்படுத்த 0.1 சத போர்டோக் கலவை அல்லது 0.2 மயில்துத்ததம் கரைசலை வேர்கள் நனையுமாறு ஊற்றவேண்டும். 15 நாட்கள் இடைவெளியில் 2 அல்லது 4 முறை உபயோகிக்கவேண்டும்.

அறுவடை

பழங்களின் தோல் சற்றே மஞ்சள் நிறமாக வரும் போது அறுவடை செய்யவேண்டும்.

வயது : 24 -30 மாதங்கள்

மா - முறையான காய்ப்புக்கான தொழில்நுட்பங்கள்

மாவில் பூக்கும் தன்மையானது ஒரு சிக்கலான விசயம். பொதுவாக, மா ஒரு வருடம் வெகு அதிகமாகவும், அதனை தொடர்ந்து வரும் வருடம் மிக குறைவாக அல்லது பூக்காமல் இருந்து விடும். அடுத்த வருடம் மிக அதிகமான மகசூலை அளிக்கும்.

எனவே மாவில் காய்க்கும் தன்மை முறையற்ற ஒன்று எனலாம். இதற்கு காரணம், இரகங்களின் தன்மை மற்றும் சூழ்நிலை அமைப்புகள் என்று ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் கூறுகிறது. மேலும் கவாத்து, ஊட்டச்சத்து, பாசனம் மற்றும் பயிர் பாதுகாப்பு போன்ற சாகுபடி முறைகளும் இந்த தன்மைக்கு காரணிகள் என்று கூறுகின்றனர்

சீரற்ற காய்ப்புக்கான காரணங்கள்

1.இரகங்கள்

தென் இந்தியாவில் பயிரிடப்படும் வணிக நோக்கான இரகங்களில் நீலம் (கழலாடு), பங்கனபள்ளி (சப்பட்டை), பெங்களுரா (கிளிமூக்கு, தொட்டா பூரி), கலிபேட் மற்றும் செந்தூரா (சின்ன சுவர்ண ரேகா) ஆகிய இரகங்கள் அதிக மகசூல் தரக்கூடிய ஒரளவு சீராக காய்க்க கூடியவைகள் ஆகும். அல்போன்சா (குண்டு), இமாம் பசந்து (ஹிமாயூதின்), மல்கோவா, பீட்டர் (பாயிரி, நடுசாலை) ஆகிய விலையுயர்ந்த இரகங்கள் பெரும்பாலும் சீறற்ற காய்க்கும் தன்மையுடையவை.

2.வானிலை காரணிகள்

மா கடினமான மரம் என்றாலும், வானிலை காரணிகள் அதிகம் காய்க்கும் வருடத்தை காய்க்காமல் செய்துவிடும்.

குறைவான மழை 2010-ஆம் ஆண்டு பெரும்பாலும் எல்லா இரகங்களும் தமிழ்நாட்டில் பூக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் போன வருடத்தை விட இந்த வருடம் 300மி.மீ மழை குறைவாக பெய்ததே காரணமாகும்.

கிளை, பூ மொட்டாக வேறுபாடு அடையும் போதும் (அக்டோபர் -நவம்பர்) மற்றும் பூக்கும் போதும் (ஜனவரி) அடிக்கடி மழை மற்றும் அதிகமான பணி காணப்பட்டால், பூக்கள் அதிகமாக பாதிக்கப்படும்.

வறண்ட மற்றும் குளிர் வானிலை நிலையுடன், தோராயமாக பகல்/இரவு வெப்பம் 20 அல்லது 150 C இருந்தால், இது பூப்பதை அதிகப்படுத்தும்.

சீரான காய்ப்பை தூண்டும் மேலாண்மை செயல்கள்

முறையான காவாத்து அவசியம்

மண் பரிசோதனை பரிந்துரைப்படி, தேவையான உரம் இடுதல் அவசியம்.

அக்டோபர் மாதத்தில் கீழ்கண்ட கலவையை தெளித்தல்- பொட்டாசியம் நைட்ரேட் (2 % ) + NAA (40 ppm) அல்லது பொட்டாசியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட் (1%) + பொட்டாசியம் நைட்ரேட் (1 %)

ஜனவரி வரை மரங்கள் பூக்கவில்லையென்றால், 0.5 % யூரியா கரைசலை தெளித்தல்

பாசன வசதிக் கொண்ட தோட்டத்தில் மண்ணை பேக்லோ பூட்ரசால் (1 மீலி/சதுரமீட்டருக்கு) கொண்டு நனைத்தல்

மாதுளை

இரகங்கள் :ஜோதி, கணேஷ், கோ.1, ஏற்காடு , ருத்ரா, ரூபி, மற்றும் மிருதுளா.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

இது எல்லாவகை மண்களிலும் விளையும். வறட்சி, கார மற்றும் அமிலத் தன்மைக் கொண்ட நிலங்களிலும் ஓரளவு தாங்கி வளரும். இது மலைப் பகுதிகளில் 1800 மீட்டர் உயரம் வரை வளரும். சிறந்த வகை மாதுறை இரகங்களைப் பனிக்காலத்தில் குளிர் அதிகமாகுவம் கோடைக்கால்த்தில் உஷ்ணம் மிகுந்துள்ள பகுதிகளில் மட்டும் வளர்க்க முடியும்.

விதையும் விதைப்பும்

நடவு செய்தல் :  வெர் வந்த குச்சிகள் அல்லது 12 முதல் 18 மாதங்கள் வரை ஆன பதியன்கள் மூலம் பயிர் செய்யலாம். 60 செ.மீ ஆழம், 60 செ.மீ அகலம், 60 செ.மீ நீளம் உள்ள குழிகளை 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் இடைவெளியில் எடுக்கவேண்டும். குழிகளில் தொழு உரம் மற்றும் மேல் மண் கலந்து நிரப்பி, ஒரு வாரம் கழித்து குழியின் மத்தியில் வேர் வந்தக் குச்சிகளை நட்டு நீர்ப்பாய்ச்சவேண்டும்.

நீர் நிர்வாகம்

மாதுளையில் பழங்கள் உருவாகும்போது நன்கு நீர் பாய்ச்சவேண்டும்.

பின்செய் நேர்த்தி

மாதுளை சாதாரணமாக பிப்ரவரி - மார்ச் மாதத்தில் பூ விட்டு ஜீலை - ஆகஸ்ட் மாதங்களில் பழங்கள் அறுவடைக்கு வரும். எனவே டிசம்பர் மாதத்தில் கவாத்து செய்யவேண்டும். உலர்ந்த, இறந்த, நோய் தாக்கிய கிளைகளை வெட்டிவிடவேண்டும். மேலும் செடியின் அடித்தூரில் இருந்து வளரும் புதுத் துளிர்களை வெட்டி எறியவேண்டும்.

மாதுளையில் பழ வெடிப்பு : சீதோஷ்ண நிலையைப் பொருத்து சிறிய பிஞ்சுகளிலும். நன்கு முதிர்ந்த பழங்களிலும், பூ முனைப் பகுதிகளிலும் வெடிப்புகள் ஏற்படும். இவ்வாறு வெடிப்புகள் ஏற்பிட்ட பின்பு, பூச்சிகளிலும் நோய்களும் அப்பகுதியை தாக்கி சேதம் விளைவிக்கும். பழ வெடிப்பை தவிர்க்க ஜீன் மாதத்தில் ஒரு சத அளவில் கலந்த திரவ மெழுகுக் கரைசலை (ஒரு லிட்டருக்கு 10 கிராம் அளவில் கரைக்கவேண்டும்) 15 நாட்கள் இடைவெளியில் தெளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

கட்டுப்பாடு

சிறிய காய்களில் உள்ள பூ முனைப் பகுதியை நீக்கவிடுவதால் அந்த இடத்தில் தாய் அந்துப்பூச்சி முட்டை இடாதவாறு செய்யலாம். அல்லது சிறிய காய்களையும், பழங்களையும் பாலித்தீன் பை அல்லது சிறிய துணிப் பைகளால் மறைத்து கட்டிவிடவேண்டும்.

வேப்பம் எண்ணெயை 3 சதவிகித அடர்த்தியில் 15 நாட்கள் இடைவெளியில் தாய் பட்டாம் பூச்சிகள் தென்படும் போது தெளிக்கவேண்டும்.

முட்டை ஒட்டுண்ணிகள் எக்டருக்கு ஒரு லட்சம் இடவேண்டும்.

பொருளாதார சேதநிலை அறிந்தது தடுப்பு முறைகளை மேற்கொள்ளவேண்டும்.

எண்டோசல்பான் 35 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது டைமித்தோயேட் 1.5 மி 1 லி தண்ணீர் தெளிக்கவேண்டும்.

மகசூல் : செடிகள் நட்ட நான்காம் ஆண்டு பலன் கொடுக்கத் துவங்கும் என்றாலும் 7 ஆண்டுகளுக்குப் பின்பு முழுப் பலனும் கொடுக்கும். ஒரு ஆண்டிற்கு ஒரு எக்டரில் 20-25 டன்கள் மகசூல் எடுக்கலாம்.

கொய்யா - பழ ஈ தாக்குதல் மேலாண்மை

கொய்யாத்தோட்டங்களில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈ -யினை கட்டுப்படுத்தும் முறையினை விவசாயிகளின் பங்களிப்புடன் பிரபலப்படுத்தப்பட்டது. எத்தனால் 6 பங்கு, மெத்தில் யூஜெனால் 4 பங்கு மற்றும் 1 பங்கு மேலத்தியான் கலந்த இனக்கவர்ச்சி திரவக்கரைசல் தயாரிக்கப்பட்டது. தண்ணீர் உறிஞ்சக்கூடிய 2" X 2" பிளைவுட் துண்டுகளை இக்கரைசலில் ஊறவைத்து, ஒரு பிளாஸ்டிக் ஜாடியில் பொருத்தப்பட்டது (படம் 1). இந்த பிளாஸ்டிக் ஜாடிகளின் மேற்புறத்தில் எதிர் எதிர் திசையில் 1.5 செ.மீ விட்டமுள்ள ஓட்டைகள் போடப்பட்டது. இந்தப்பொறி ஒரு ஏக்கர் கொய்யாப்பழத்தோப்புக்கு ஒன்று வீதம் பொருத்தப்பட்டது.

இவ்வாறு பொருத்தப்பட்டவுடன், முந்தைய அறுவடையின் போது 50-60 சதவிகிதமாக இருந்த பழ ஈக்களின் தாக்குதல், அடுத்த அறுவடையின் போது 10 சதவிகிதம் குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பழ ஈக்களின் தாக்குதலை தடுக்க, விவசாயிகள் உபயோகிக்கும் பூச்சிக்கொல்லிகளின் அளவும் 80-90 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டது.

லூதியானாவில் (பஞ்சாப் மாநிலம்) உள்ள மத்திய அறுவடைக்குப்பின் தொடர்பான பொறியியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் (CIPHET) முயற்சி மற்றும் இந்த இனக்கவர்ச்சி பொறியின் செயல்படும் திறத்தினால், தற்பொழுது அபோகார் பகுதியில் 1500 ஹெக்டேர் நிலப்பரப்பில் இப்பொறியினை பயன்படுத்தப்படுகிறது. இவ் இனக்கவர்ச்சி பொறி கொய்யாப்பழத்தோட்டங்களில் பழ ஈயினைக் கட்டுப்படுத்த ஒரு வரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பழ ஈக்களுக்கான இனக்கவர்ச்சி பொறி (பி.சோனாட்டா மற்றும் பி.கரக்ட்டா)

பி.சோனாட்டா

பி.கரக்ட்டா

ஆதாரம்: CIPHET, லூதியானா