பாதுகாப்பான சூழ்நிலையில் பயிர்களை வளர்ப்பதற்காக உப்பிப்பெருத்த உள்ளுறைச் சட்டங்களின் மேல் ஒளிபுகும் இயல்புள்ள பொருளை மூடாக்காகப் பயன்படுத்தி உருவாக்கப்படும் கட்டமைப்புகளே பசுமைக்கூடங்களாகும். வருடம் முழுவதும் அல்லது தேவைக்கேற்ற பயிர் உற்பத்திக்கு வித்திடும் ஏதுவான நுட்ப காலநிலையினை உருவாக்குவதற்கே பசுமைக்கூடம் போன்ற பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் பயிர் சாகுபடி செய்யும் நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பமானது வெளிப்பரப்பில் உற்பத்திக்கு ஏதுவற்ற ஆபரணச் செடிகளின் பருவம் மாறிய உற்பத்திக்கும் குளிர்ப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் அதிக மதிப்புடைய உணவுப் பயிர்களின் உற்பத்தியிலும் பங்களிக்கின்றது. முதன்மையாக சுற்றுப்புறத்திற்கு தேவையான வெப்பத்தை அளித்து கடுங்குளிர்ச்சி நிலையானது தவிர்க்கப்படுகின்றது. மேலும் வெப்பம், வெளிச்சம், கரியமிலவாயு அளவு, காற்றின் ஈரப்பதம், நீர்த் தேவை, பயிர் சத்துக்களின் தேவை மற்றும் பூச்சிக் கட்டுப்பாடு போன்றவையும் கட்டுப்படுத்தப்படுகின்றது. உபயோகத்திற்கு ஏதுவான மற்றும் விலைக்கேற்ற பசுமைக்கூடங்களின் வகைப்பாடு குறைந்த மதிப்பு அல்லது குறைந்த நுட்ப பசுமைக்கூடம் குறைந்த மதிப்பு பசுமைக்கூடமானது உள்ளூரில் கிடைக்கும் மூங்கில், மரக்கட்டை போன்றவற்றைக் கொண்டு சாதாரணமாக கட்டமைக்கப்படுவதாகும். மெல்லிய புறஊதா சவ்வுகள் மூடாக்கு பொருளாகப் பயன்படுகின்றது. இதில் உயர் நுட்ப பசுமைக்கூடங்களில் உள்ளது போல் சுற்றுப்புற அளவுப் பண்புகளை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு கருவிகள் ஏதுமில்லை. எனினும் வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றை குறைக்கவும் அதிகப்படுத்துவதற்கும் எளிய நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் வலைகள் போன்ற நிழல் தரும் பொருட்களைப் பயன்படுத்தி வெளிச்சத்தின் அடர்வினைக் கூட குறைக்கலாம். கோடைக்காலத்தில் பக்கத் தடுப்புகளை திறந்து விடுவதன் மூலம் வெப்பம் குறைக்கப்படுகின்றது. பயிர் சாகுபடியின்போது இத்தகைய அமைப்புகள் மழைக் காப்பிடமாகத் திகழ்கின்றது. பசுமைக்கூடத்தின் அனைத்து பக்கமும் பாலித்தீன் சவ்வினால் மூடப்பட்டிருந்தால் உட்புற வெப்பநிலை அதிகரித்து விடும். இத்தகைய பசுமைக்கூடங்கள் குளிர் கால நிலை மண்டலத்திற்கு ஏற்ற வகையாகும். மிதநுட்ப பசுமைக்கூடம் பசுமைக்கூட உபயோகிப்பாளர்கள் குறைந்த முதலீட்டிற்கு வித்திடுகின்ற உடலால் இயக்கப்படுகின்ற அல்லது பகுதி தானியக்க கட்டுப்பாடு அமைப்புகளையே விரும்புகின்றனர். இவ்வகை பசுமைக்கூடங்கள் துத்தநாகம் பூசிய இரும்புக் குழாய்களைக் கொண்டு அமைக்கப்படுகின்றன. மேல் மூடாக்கானது திருகாணி மூலம் கட்டமைப்புடன் இணைக்கப்படுகின்றது. கட்டமைப்பானது காற்றின் பாதிப்பினை தாங்கிக்கொள்வதற்காக நிலத்தில் திடமாகப் பொருத்தப்படுகின்றது. வெப்பச்சீர் நிலைக் கருவியுடன் வெளியேற்றும் விசிறியும் பயன்படுத்தப்பட்டு தட்பவெப்பநிலைக் கட்டுப்படுத்தப்படுகின்றது. ஏதுவான காற்றின் ஈரப்பதத்தினைப் பசுமைக்கூடத்தில் பராமரிப்பதற்கு ஆவியாக்கிக் குளிர் தண்டுகள் மற்றும் மென்பனி அமைவு முறைகள் பொருத்தப்படுகின்றன. இம்முறைகள் பகுதி தானியக்க கட்டுப்பாட்டினைக் கொண்டுள்ளதால் மிகுந்த ஈடுபாடும் கவனமும் தேவை. மேலும் பயிர்காலம் முழுவதும் ஒரே சீரான சுற்றுப்புறச் சூழ்நிலையை பராமரிக்கவும் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. இப்பசுமைக்கூடங்கள் வறண்ட மற்றும் கலப்பு காலநிலை மண்டலங்களுக்கு ஏற்ற வகையாகும். உயர் நுட்ப பசுமைக்கூடம் மிதநுட்ப பசுமைக்கூடத்தில் உள்ள ஒரு சில இன்னல்களிலிருந்து மீள்வதற்கும் அனைத்து கருவிகளும் தானியக்க முறையில் இயங்கி சுற்றுப்புற அளவுப்பண்புகளைக் கட்டுப்படுத்தவும் உயர்நுட்ப பசுமைக்கூடம் அமைக்கப்படுகின்றது. விசிறி மற்றும் தண்டு ஆகியவை இல்லாத குறைந்த மதிப்பு பசுமைக்கூடம் - ரூ.300 முதல் 500 வரை / சதுரம் தானியக்கி வசதியில்லாத விசிறி மற்றும் தண்டுடன் கூடிய மித மதிப்பு பசுமைக்கூடம் - ரூ.800 முதல் 1100 வரை / சதுரம் முழுமையான தானியக்கி கட்டுப்பாட்டு முறையினைக் கொண்ட அதிக மதிப்புடைய பசுமைக்கூடம் - ரூ.2000 முதல் 3500 வரை / சதுரம் பிற வகைப்பாடுகள் பசுமைக்கூடமானது கட்டமைப்பு வகை, மூடாக்கு வகை, நீட்டங்களின் எண்ணிக்கை, சுற்றுப்புறக் கட்டுப்பாடு ஆகியவற்றைப் பொறுத்தும் பலவாறு வகைப்படுத்தப்படுகின்றது. இத்தகைய வகைகள் பின்வருமாறு: கட்டமைப்பு வகையினைப் பொறுத்த வகைப்பாடு அ. க்யோன்செட் வகை (Quonset type) ஆ. வளைவான மேற்கூரை வகை (Curved roof type) இ. கேபில் மேற்கூரைவகை (Gable roof type) மூடாக்கினைப் பொறுத்த வகைப்பாடு அ. கண்ணாடி மூடாக்கு ஆ. நாரிழைக் கண்ணாடி வலுவூட்டிய பாலிதீன் மூடாக்கு i) சமபரப்பு தாள் ii) நெளிவான தாள் இ. பாலிதீன் சவ்வு i) புறஊதா நிலைப்படுத்திய குறைந்த அடர்வு பாலி எத்திலின் ii) சில்பாலின் (Silpaulin) நீட்டங்களின் எண்ணிக்கையைப் பொறுத்த வகைப்பாடு அ. இயல்பான நிலை அல்லது ஒற்றை நீட்டம் (Free standing or single span) ஆ. பல நீட்டம் அல்லது வரப்பும் வாய்க்காலும் அல்லது வடிநீர்க்கால் இணைக்கப்பட்டது (Multispan or ridge and furrow or gutter connected) சுற்றுப்புற கட்டுப்பாட்டை பொறுத்த வகைப்பாடு அ. இயற்கைக் காற்றோட்டம் (Naturally ventilated) ஆ. உயிர்ப்பற்ற காற்றோட்டம் (Passive ventilation) பாலிதீன் கூடம் திறந்த வயல்வெளிகளில் வளரும் பயிர்கள் பல சுற்றுப்புற இன்னல்கள் மற்றும் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல்களுக்கு உட்படுகின்றன. ஆனால் பாலிதீன் கூடமானது ஒரு நிலையான சுற்றுப்புறத்தினை அளிக்கின்றது. பாலிதீன் கூடமானது இரண்டு வகைப்படுகின்றது. அ. இயற்கைக் காற்றோட்டமுள்ள பாலிதீன் கூடம் போதுமான காற்றோட்டம் மற்றும் நீர்த்தி வலைத் தெளிப்பான் முறையைத் தவிர, தட்ப வெப்ப நிலை பிறழ்ச்சி மற்றும் பிற இயற்கை செயலிகளால் ஏற்படும் பாதிப்பினைத் தடுப்பதற்கு வேறு எவ்வித சுற்றுப்புற கட்டுப்பாடு முறைகளும் இப்பாலிதீன் கூடத்தில் அமையப்பெறவில்லை. ஆ. சுற்றுப்புறநிலை கட்டுப்பாடுடைய பாலிதீன் கூடம் வெளிச்சம், தட்ப வெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம், கரியமிலவாயு அளவு மற்றும் வேர்வளர்ச்சிக்கான ஊடகத்தின் இயல்பு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் பயிர் வளர்ச்சிப் பருவத்தினை நீட்டிப்பதற்கும் பருவமில்லா காலத்தின் உற்பத்திக்கும் இப்பாலிதீன் கூடம் உதவுகின்றது. நிழற்கூடம் நிழற்கூடமானது வெப்பமான கால நிலைகளிலும் கோடைக் காலங்களிலும் பயிர் செய்வதற்கு பயன்படுகின்றது. ஹைட்ரான்றியா மற்றும் அஜேலியா போன்ற ஆபரணச் செடிகளை இக்கூடங்களில் வளர்ப்பர். இதைத் தவிர ஆர்கிட் போன்ற மலர் பயிர்களும் நிழற் கூடங்களில் சாகுபடி செய்யப்படுகின்றன. நிழல்கூடங்கள் பெரும்பாலும் கொம்புகளின் துணையுடனே கட்டமைக்கப்பட்டு மென்மரப்பட்டிகை அல்லது பாலிப்புரப்பிலீன் நிழல் போர்வையினை கொண்டு மேற்போர்வையிடப்படுகின்றது. வெவ்வேறு காற்றோட்ட சதவிகிதங்களைக் கொண்ட பாலிப்புரப்பிலீன் நிழல்வலைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிறமுடைய வலைகள் பயன்படுத்தப்பட்டாலும் வெப்பத்தினை கூடத்தின் வெளிப்பகுதியிலேயே பிடித்து நிறுத்தும் கருப்பு நிற வலைகளே பெரும்பாலும் விரும்பப்படுகின்றது. ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்