சுரைக்காய்

உடலுக்கு குளிர்ச்சி தரும் சுரைக்காயை விவசாயிகள் பெருமளவில் சாகுபடி செய்து பயன்பெறலாம்

சுரைக்காய் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரும் தன்மை கொண்டது. இதனால் கோடைக் காலத்தில் சுரைக்காயை அதிகளவில் மக்கள் வாங்கி பயன்படுத்துவது வழக்கம்.

சுரைக்காய் வளர்ச்சிக்கு மண்ணின் காரம், அமிலத் தன்மை 6 முதல் 7 சதவீதமாக இருப்பது நல்லது. பொதுவாக இதனை அனைத்து வகையான மண்ணிலும் சாகுபடி செய்யலாம். ஆனால் நல்ல வடிகால் வகைகளும் சாகுபடிக்கு ஏற்றவையாகும்.

இது வெப்ப மண்டலப் பயிராகவும், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. சில பகுதிகளில் மரங்கள், வேலிகளில் படர்ந்தும் வளரும்.

சுரைக்காயின் ரகங்கள்

கோ.1, பூசா சம்மர் பிராலிபிக் லாங், பூசா சம்மர் பிராலிபிக் ரவுண்ட், பூசா நவீன், பூசா சந்தேஷ், பூசா மஞ்சரி போன்ற ரகங்கள் உள்ளன.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 3 முதல் 4 முறை நன்றாக உழுது கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும்.

பின்னர் 2.5 மீட்டர் இடைவெளியில் 60 சென்டி மீட்டர் அகலமுள்ள வாய்க்கால் தயார் செய்ய வேண்டும். அதில் 2.5 மீட்டர் இடைவெளியில் 50 கிராம் கலப்பு உரமிட்டு மேல் மண்ணுடன் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும். இதையடுத்து குழிக்கு 5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும்.

விதையளவு

ஒரு ஹெக்டேருக்கு 3 முதல் 4 கிலோ விதையை விதைக்கலாம்.

பின் செய் நேர்த்தி

சுரைக்காய்க்கு வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். விதை முளைப்புக்கு முன் குடம் வைத்து தண்ணீர் ஊற்றவேண்டும். வளர்ந்த உடன் வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

விதை ஊன்றிய 20 முதல் 30 தினங்கள் கழித்து களைகளை எடுத்து சுத்தம் செய்து ஒரு ஹெக்டேருக்கு 20 கிலோ தழைசத்தை மேலுரமாக இட்டு மண் அனைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

கொடிகள் நிலத்தில் படருவதால் மழைக்காலங்களில் பாதிப்பு இல்லாமல் இருக்க சின்ன குச்சிகளை ஊன்று கோலாக பயன்படுத்தி நிலத்தில் படாமல் பாதுகாக்கலாம். இதன் மூலம் அழுகல் நோய் வராமல் தடுக்கலாம்.

அறுவடை

சுரைக்காய் முற்றுவதற்கு முன்பாகவே அறுவடை செய்து விட வேண்டும். விதை ஊன்றி 70 நாள்களில் முதல் அறுவடை செய்யலாம்.

மகசூல்

இந்த வழிமுறைகளில் சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 35 டன் வரை அறுவடை செய்யலாம்

ஆதாரம்: தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை