முருங்கை உள்ளிட்ட தாவர வகையிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டுப் பொருள்களின் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் முன்னணியில் உள்ளது முருங்கையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் உட்பட மதிப்புக் கூட்டப்பட்ட தாவர மற்றும் ஊட்டச்சத்துமிக்கப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர் தாவரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மூலிகை மற்றும் ஊட்டச்சத்துமிக்க பொருட்களின் ஏற்றுமதிக்கு உதவிடும் வகையில், சிறப்பு வகைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் முருங்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறினார். இயற்கை முறையிலான உடல் ஆரோக்கியத்திற்கான தேவைகள் உலக அளவில் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய மூலிகைத் தாவரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் முருங்கையை அடிப்படையாகக் கொண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதாகவும் இவற்றின் சாகுபடி, பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கான மையமாக கரூர் உருவெடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள கரூர் மாவட்டம் உட்பட நாடு முழுவதும் பிரதமரின் சிறு அளவிலான உணவுப்பதப்படுத்துல் நிறுவனங்களுக்கான உதவித் திட்டத்தின் கீழ், இத்துறையில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை தமிழ்நாட்டில் இத்துறையில் 49,048 நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவற்றுக்கு 538.50 கோடி ரூபாய் மானியத்தொகை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் திர ரவ்னீத் சிங் தெரிவித்துள்ளார். முருங்கை இலையிலிருந்து தயாரிக்கப்படும் பொடி, உணவுக் கட்டுப்பாட்டுப் பொருட்கள், மூலிகைத் தேநீர் உள்ளிட்ட பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கான வலுவான சூழல் இப்பகுதியில் நிலவி வருவதாக அமைச்சர் தெரிவித்தார். பிரதமரின் வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் கடந்த 2017-18-ம் ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்த குளிர்சாதனக் கருவிகள் மற்றும் மதிப்புக் கூட்டு நடவடிக்கைக்கான உள்கட்டமைப்பு வசதிகள், உணவுப் பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதற்கான வசதிகள், பசுமை செயல் திட்டம் வேளாண் தொகுதிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளின் உருவாக்கம், பெரிய அளவிலான உணவுப் பூங்கா பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திரு ரவ்னீத் சிங் தெரிவித்தார். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்