அறிமுகம்

குறுகிய கால மருந்து பயிர்களில் மருந்து கூர்க்கன் அல்லது கூர்க்கன் கிழங்கு (கோலியஸ்) தற்போது தமிழ்நாட்டிலும் பயிரிடப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட பகுதிகளில் அதிகம் பயிரிடப்பட்ட இந்த மருந்து கூர்க்கன், தற்போது வட தமிழ்நாட்டு பகுதிகளிலும் பயிரிடப்பட்டு வருகிறது. அரக்கோணம் வட்டம், நெமிலி வட்டாரத்தில் பெரப்பேரி கிராமத்தில் பலர் மருந்து கூர்க்கனை பயிரிட்டு அதிக லாபம் பெற்று வருகின்றனர்.

பயன்கள்

கூர்க்கனின் வேர்க் கிழங்குகள் மருந்துப் பொருள்களாக அதிகம் பயன்படுகின்றன. வேர்கள் கேரட்டை போல் பருமனாகவும், 30 செ.மீ. வரை நீளமாகவும் இருக்கும். வேர்கள் இளமஞ்சள் நிறத்துடனும் வாசனைத் தன்மையுடனும் இருக்கும். இவற்றில் ரத்த அழுத்தத்தை சீர் செய்யப் பயன்படும் போர்ஸ்கோலின் எனும் மூலப்பொருள் உள்ளது. இது கிளக்கோமா எனும் கண்கோளாறு நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.

மருந்து கூர்க்கனில் மங்கானிபெரு, கார்மாய் எனும் இரு ரகங்கள் உள்ளன. மங்கானிபெரு கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் பயிரிடப்படுவதும் மங்காணிபெரு ரகம் தான். இந்த மருந்து கூர்க்கனை செம்மண் அல்லது மணல் செம்மண் அல்லது சரளை வகை மண் உள்ள இடங்களில் சாகுபடி செய்யலாம். வேரின் வளர்ச்சிக்கு மண்ணின் தன்மை கடினமாக இருக்கக் கூடாது. வடிகால் வசதி உடைய மணற்பாங்கான மண் வகைகள் மிகவும் ஏற்றவை. நீர் தேங்கும் மண் வகைகள் இதன் சாகுபடிக்கு ஏற்றதல்ல. ஆண்டுக்கு 70 செ.மீ. மழையளவு உள்ள சமவெளிப் பகுதிகள் மருந்து கூர்க்கன் சாகுபடிக்கு ஏற்றவை. தாழ்வான மலைச் சரிவுகளிலும் நன்றாக வளரும். தமிழ்நாட்டில் நீர்ப்பாசன வசதியுடன் இதை சாகுபடி செய்யலாம்.

பயிரிடும் முறைகள்

நுனித் தண்டுகள் மூலம் கிழங்குகளை பயிர்பெருக்கம் செய்யலாம். மூன்று அல்லது நான்கு கணுக்களை உடைய 10 செ.மீ. நீளமுள்ள நுனித் தண்டுகளை மட்டுமே நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.

நிலத்தை உழுது ஹெக்டேருக்கு 15 டன் தொழுஎரு இட்டு மண்ணை பயன்படுத்த வேண்டும். பிறகு 60 செ.மீ. இடைவெளியில் பாத்திகள் பிடிக்க வேண்டும்.

பயிர்களின் பக்கவாட்டில் தண்டுகளை ஜூன் - ஜூலை அல்லது செப்டம்பர் -அக்டோபர் மாதங்களில் நடவு செய்ய வேண்டும். 60 செ.மீ. இடைவெளியில் அமைக்கப்பட்ட பாத்திகளில் 45 செ.மீ. இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒரு ஹெக்டேரில் நடவு செய்ய 37,030 செடிகள் தேவைப்படும். சற்றே வளம் குறைந்த நிலங்களில் செடிகளை 30 செ.மீ. இடைவெளியில் நடவு செய்யலாம். இந்த முறையில் ஹெக்டேருக்கு 55,000 செடிகள் நடுவதற்கு தேவைப்படும்.

ஒரு ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச் சத்து, 60 கிலோ மணிச் சத்து மற்றும் 50 கிலோ சாம்பல் சத்து உரங்களை செடிகள் நட்ட 30-ஆவது நாளிலும், பிறகு 45 ஆவது நாளிலும் சமமாகப் பிரித்து இட வேண்டும். நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை உள்ள நிலங்களுக்கு ஹெக்டேருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணூட்டச் சத்து உரத்தை அடியுரமாக இடுவது அவசியம்.

செடிகளை நட்ட முதல் மாதத்தில் வாரம் ஒரு முறையும், பிறகு பத்து நாள்கள் இடைவெளியிலும் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். கிழங்குகளை அறுவடை செய்வதற்கு 10 நாள்கள் இருக்கும்போது கடைசி பாசனத்தை நிறுத்தி விடவேண்டும்.

செடிகளை நட்ட ஆறு முதல் ஏழு மாதங்களில் கிழங்குகள் அறுவடைக்குத் தயாராகின்றன. இந்த தருணத்தில் செடிகளை தாழ் அறுத்து மண்ணில் போதிய அளவு ஈரம் இருக்குமாறு மண்ணைத் தோண்டி, கிழங்குகளை சேதமின்றி எடுக்க வேண்டும். இதற்கு உழவு கலப்பை கொண்டு மேலாக உழுது கிழங்குகளை சேதமின்றி எடுக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 15-20 டன் பச்சை வேர்கள் அல்லது 2000-2200 கிலோ உலர்ந்த வேர்கள் மகசூலாக கிடைக்கும்.

பச்சை கிழங்குகளை நீளவாக்காகவும், குறுக்காகவும் சிறிய துண்டுகளாக கத்திகொண்டு வெட்டி, பிறகு வெயிலில் சீராக உலர்த்த வேண்டும்.

தகவல் அறிய

விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

ஆதாரம்: வட்டாரத் தோட்டக்கலைத்துறை, அரக்கோணம்