அறிமுகம்

நாட்டின் மொத்த பரப்பளவில் கொய்யா உற்பத்தி 2.5 லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு சுமார் 2.27 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஆப்பிள் பழத்திற்கு நிகரான சத்துக்களை பெற்று சுவையாக இருப்பதால் ‘ஏழைகளின் ஆப்பிள்‘ எனப்படுகிறது. கொய்யா சாகுபடியில் சில உத்திகளை கடைபிடிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.

மண்வளம் மற்றும் தட்பவெப்பம்

கொய்யா இந்தியா முழுவதும் பயிரிடப்படும் வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல பயிராகும். இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரத்து 500 மீட்டர் வரை உள்ள பகுதிகளில் வளரும். ஆண்டின் மழையளவு ஆயிரம் மி.மீ வர உள்ள இடங்களில் மரத்தின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இந்த மரம் தனது கடின தன்மையால் வண்டல் மண்ணில் இருந்து அனைத்து வகையான மண் மற்றும் காலநிலைகளில் சிறந்து வளர்கிறது. மேலும், நல்ல வடிகால் வசதி உடைய நிலங்களில் சாகுபடி செய்யலாம். இதற்கு மண்ணின் கார அமிலத்தன்மையானது 4.5 முதல் 7.5 என்ற அளவில் இருக்க வேண்டும். இளஞ்செடிகள் வறட்சி மற்றும் குளிர்ச்சியை தாங்காது.

ரகங்கள்

லக்னோ 49, அலகாபாத் சபேதா, அரிஜா, ஆப்பிள், பனாராசி, அர்கா, மிர்துளா, அர்கா அமுல்யா, சிட்டிடார், ரெட்பிளஸ், சபேத் ஜாம், கோகிர் சபேதா, லலித், ஸ்வேதா போன்ற ரகங்களை பயிரிடலாம்.

நிலம் தயார்படுத்துதல்

கொய்யா பயிரிட இருக்கும் நிலங்களை இரண்டு முதல் நான்கு முறை உழுது 0.6 மீ ஆழம் மற்றும் அகலம் என்ற அளவில் குழிகளை தோண்டி மேல் மண்ணுடன் 20 கிலோ தொழுஉரம், 500 கிராம் சூப்பர் பாஸ்பேட் கொண்டு நிரப்ப வேண்டும். கன்றுகளை குழியின் நடுவே நட்டு மண்ணால் அணைப்பு செய்யப்பட வேண்டும். பருவமழை தொடங்கும் போது நடவு செய்ய வேண்டும்.

அடர்த்தி நடவு

நிலத்தின் தன்மை, மண்வளம், நடவுமுறை பொறுத்து நடவு இடைவெளியானது 6க்கு 6 மி.மீ, அதாவது ஏக்கருக்கு 112 செடிகள் வரை நடலாம். எனினும், இது பொதுவாக 3.6 மீட்டரில் இருந்து 5.4 மீட்டர் இடைவெளியில் நடப்படுகிறது. இதில் பழத்தின் எடை மற்றும் அளவு குறைவாக இருந்தாலும் ஒரு மரத்தின் பழங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

நீர் மேலாண்மை

பொதுவாக, கொய்யா மரங்களுக்கு நீர் பாசனம் தேவையில்லை. ஆனால், தொடக்க நிலையில் இளஞ்செடிகளுக்கு ஒரு ஆண்டுக்கு 8 முதல் 10 முறை நீர்ப்பாசனம் அவசியம். முழு வளர்ச்சி தாங்கிய மரங்களுக்கு மேஜுலை மாதத்தில் வாராந்திர இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர் பாசனம் மூலம் 60 சதவிகிதம் தண்ணீர் சேமிப்பதுடன் பழத்தின் எடை மற்றும் அளவு கணிசமாக அதிகரிக்கும்.

உரம் மற்றும் சத்து மேலாண்மை

100 கிராம் தழைச்சத்து, 40 கிராம் மணிச்சத்து மற்றும் 40 கிராம் பொட்டாஷ் ஆகிய உரங்களை நட்ட 6 வது ஆண்டில் கொடுக்க வேண்டும். தழைச்சத்து, பொட்டாஷ் மற்றும் சாம்பல் சத்தினை இரண்டு பாகங்களாக முறையே ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அளிக்க வேண்டும்.

நுண்ணூட்ட சத்துக்கள்

பூக்கள் பூப்பதற்கு முன் போரிக் அமிலம் (0.1) மற்றும் ஜிங்க் சல்பேட் போன்ற கலவைகளை இலை வழியாக தெளிப்பதன் மூலம் பழத்தின் அளவு மற்றும் மகசூலை அதிகரிக்க முடியும். காப்பர் சல்பேட்(0.20.4) தெளிப்பதன் மூலம் தாவரங்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கலாம்.

பின்செய் நேர்த்தி

களைகள் பெரும்பாலும் பாதிப்பை ஏற்படுத்தி 30 முதல் 40 சதவிகிதம் வரை மகசூலை குறைக்கிறது. களைக்கொல்லியாக கிராமக்சோன் தெளிக்க வேண்டும். பழத்தோட்டத்தில் மண் வளத்தை மேம்படுத்த 2 முதல் 3 முறை நிலத்தினை உழ வேண்டும். மேலும், ஆண்டுக்கு 2 முறை மூடாக்கு காகித விரிப்பு மூலம் களைகள் மற்றும் மண்ணின் ஈரத்தன்மையை பாதுகாக்கலாம்.

ஊடுபயிர்கள்

பயறு வகை பயிர்களான பச்சை பயிர், உளுந்து, தக்காளி மற்றும் பீட்ரூட் ஊடுபயிர்களாக தொடக்க காலகட்டங்களில் பயிரிடுவதன் மூலம் அதிக வருமானம் பெறலாம். சாம்பல் பூசணி, வெள்ளரி, அன்னாசி, பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற பயிர்களை ஊடுபயிராக பயிரிடலாம்.

கவாத்து மற்றும் சீரமைப்பு

கொய்யா மரங்களில் கவாத்து செய்வதன் மூலம் பழத்தின் தரம் மற்றும் மகசூலை அதிகரிக்க முடியும். காய்களை தாங்குவதற்கு ஏற்ப கிளைகளின் வலுவான கட்டமைப்பை உருவாக்குகிறது. இதற்காக, தரைமட்டத்தில் இருந்து வெளியே வரும் தளிர்களை 30 செ.மீ வரை துண்டிக்க வேண்டும். மேலும், 4 தூக்கு கிளைகளை வளரவிட்டு நடுப்பகுதியை திறக்க வேண்டும்.

பயிர் ஒழுங்குபடுத்தல்

பருவ கால பயிர் ஒப்பிடுகையில் குளிர்காலத்தில் பயிர்கள் தரம் உயர்ந்தும், அதிக விலைக்கும் போகும். எனவே, விவசாயிகள் பெரும்பாலும் பூக்களை கிள்ளி விடுவது மூலம் பருவ கால பயிர்களை தவிர்க்கின்றனர். இதற்காக, மாலிக் அமிலம், நாப்தாலிக் அமிலம் மற்றும் 2.4 டி (30 பிபிஎம்) ஆகியவற்றை பயன்படுத்தலாம். மேலும், வேர்களை கவாத்து செய்வதன் மூலமும், வேர்களை வெளியே எடுத்து விடுவதன் மூலமும், சில சமயம் கிளைகளை வளைத்து விடுவதன் மூலமும், தேவையற்ற இலைகளை வெட்டி விடுவதன் மூலமும் பூக்களை அரும்ப செய்யலாம்.

பயிர் பாதுகாப்பு

பழ ஈக்களை கட்டுப்படுத்த மாலத்தியான் ஒரு லிட்டருக்கு பாஸ்போம்டான் 0.5 மி.லி. மருந்தினை நீரில் கலந்து தெளிக்க வேண்டும். மாவுப் பூச்சியை அழிக்க மாலத்தியான் ஒரு லிட்டருக்கு 2 மி.லி மரத்தை சுற்றி பாலித்தின் பையை கட்டிவிடுவதன் மூலம் தடுக்கலாம். நோயை பொறுத்த வரையில் வேரழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய் அதிக சேதத்தை விளைவிக்கிறது. இதனை கட்டுப்படுத்த குயினால் சல்பேட்டை ஊசி மூலம் செலுத்தியும், காப்பர் ஆக்சிகுளோரைடையும் ஒரு லிட்டருக்கு 2 மிலி பயன்படுத்தலாம்.

அறுவடை

பதியன், காற்றடுக்குதல் மற்றும் ஒட்டு கட்டுதல் மூலம் நடப்பட்ட மரங்கள் 2 முதல் 3 ஆண்டில் காய்க்க தொடங்கும். பொதுவாக, பழங்களை பழுக்கும் நிலையில் மரத்தில் தக்க வைக்க கூடாது. அடர்பச்சை நிறத்தில் இருந்து வெளிரிய பச்சை அல்லது மஞ்சள் கலந்த பச்சை நிறமாக மாறும் போது அறுவடை செய்ய உகந்தது. ஒட்டு கட்டிய ஒரு மரத்தில் இருந்து 350 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஐந்தில் இருந்து 7 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் கிடைக்கும். நாற்றுக்கள் மூலம் சாகுபடி செய்யப்படும் ஒரு மரத்தில் இருந்து 90 கிலோ பழங்கள் கிடைக்கும்.

ஆதாரம்: வேளாண்மை நீர் மேலாண்மை நிலையம்