அறிமுகம்

சாக்லேட் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான கோகோவை, தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்து, அதிக லாபம் ஈட்டலாம். சாக்லேட் விற்பனை அதிகரித்து வருவதால், கோகோவின் பயன்பாடும் ஆண்டுதோறும் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. கோகோ உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 0.3 சதவீதம் மட்டுமே. தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 200 டன் கோகோ உற்பத்தி செய்யப்படுகிறது.

கோகோவின் தேவை அதிகம் உள்ளதால் இதைச் சந்தைப்படுத்தும் வாய்ப்பு எளிது.

நடவு முறைகள்

முதல்கட்டமாக ஏக்கருக்கு 200 செடிகள் வீதம், 5 ஏக்கர் தென்னந்தோப்பில் கோகோ செடிகளை நடவு செய்யலாம்.

இடுபொருட்கள், நுண்சத்துகளை முதல் 3 ஆண்டுகளுக்கு சாக்லேட் நிறுவனமே வழங்கும். கோகோ மரத்தில் மூன்றாவது ஆண்டில் பூக்கத் தொடங்கி, 170 நாட்களில் கோகோ பழங்கள் அறுவடைக்கு வந்துவிடும்.

சிறிய தேங்காய் வடிவிலான கோகோ பழங்களைப் பறித்து, 2 நாட்கள் முட்டுபோட்டு வைத்து பின்னர், பழங்களை உடைத்து, விதைகளை நொதிக்க வைத்து, சாக்லேட் நிறுவனத்திடமே அவற்றை விற்றுவிடலாம்.

முதல் ஆண்டில் ஒரு மரத்துக்கு அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை கோகோ விதைகள் கிடைக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒன்றரை கிலோ வரை கிடைக்கும். 40 ஆண்டுகள் வரை காய்ப்பு இருக்கும்.

முதல் ஆண்டில் 100 கிலோ கோகோ விதைகள் கிடைத்த நிலையில், 2-ம் ஆண்டிலிருந்து 300 கிலோ வரை கிடைக்கும். ஒரு கிலோ கோகோ விதை சராசரியாக ரூ.200-க்கு விற்பனையாகிறது. ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வீதம், 5 ஏக்கருக்கும் ரூ.3 லட்சம் வருவாய் கிடைக்கும். தென்னையுடன் சேர்த்து கோகோ செடிகளையும் பராமரித்தால், இரண்டுக்கும் சேர்த்து ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். 5 ஏக்கருக்கு சுமார் ரூ. 2.5 லட்சம் நிகர லாபம் கிடைக்கும்.

வயலில் 50 முதல் 75 சதவீதம் நிழல் படர்ந்துள்ள பகுதியில், ஈரத்தைப் பிடித்து வைக்கும் தன்மையுள்ள மண்ணில் கோகோ நன்கு வளரும். எனவே, தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்ய கோகோ மிகவும் உகந்தது. தென்னை வரிசைகளில் மையப் பகுதியில் 2-க்கு 2 அடி என்ற அளவில் குழி தோண்டி, 10 அடி இடைவெளியில் கோகோ செடிகளை நடவு செய்ய வேண்டும்.

ஆதாரம்: விவசாயி ஞானசேகரன், திருவாரூர் மாவட்டம்