முன்னுரை 7.5மீ முதல் 9மீ இடைவெளியில் பயிரிடப்பட்டுள்ள தென்னங்கன்றுகளுக்கு இடையேயான நீண்ட இடைவெளியானது மற்ற பயிர்கள் பயிர் செய்வதற்கு வழி வகுக்கிறது ஓராண்டு அல்லது பல்லாண்டுத் தாவரங்களை ஊடுபயிராகவோ (அ) கலப்புப் பயிராக பயிரிடுவதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் இலாபம் கிடைக்கிறது. இந்த ஊடுபயிர் (அ) கலப்புப்பயிர் சாகுபடி முறையில் தென்னங்கன்றிலிருந்து சுமார் 2 மீட்டர் வரை மற்ற பயிர்கள் மற்றும் களைப் பயிர்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதன் மூலம் உரமிடுதல் மற்றும் பிற சாகுபடி முறையில் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். வெவ்வேறு வகையான பயிர்களை உள்ளடக்கிய பயிர் சாகுபடி முறையின் மூலம் ஓராண்டு (அ) பருவகாலப் பயிர்களை பயிரிடுவதால் நமக்கு பணம், உணவு, பழங்கள், எரிபொருள், தீவனம் ஆகியவை கிடைக்கிறது. இதற்கு ஊடுபயிர் சாகுபடி முறை என்று பெயர். கலப்பு பயிர் மற்றும் ஊடு பயிர் இரண்டையும் சேர்த்து பயிரிடும் முறைக்கு பல அடுக்கு பல பயிர் சாகுபடி முறை என்று பெயர். தென்னை மரங்களின் வயது மற்றும் மரத்தின் மேல் கட்டு அமைப்பின் பரவல் தன்மை ஆகியவற்றை பொறுத்து கலப்பு பயிர் மற்றும் ஊடு பயிர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. தென்னையில் ஊடுபயிர் சாகுபடி முறை தமிழ்நாடு கலப்பு பயிர் (அ) ஊடுபயிர் சாகுபடி முறையானது அப்பயிர்களுக்குத் தேவையான கால நிலைகள், நீர்ப்பாசன வசதி மற்றும் மண்ணின் தன்மையைப் பொறுத்து செய்யப்படுகிறது. தென்னை மரங்களின் மேல்கட்டு அமைப்பின் பருமன், தென்னை மரங்களின் வயது மற்றும் தென்னை மரங்களுக்கிடையேயுள்ள இடைவெளி ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். வியாபாரத் தேவைக்கேற்ப ஊடுபயிர்களை தேர்வு செய்ய வேண்டும். (அ) 7 வயதுக்கு குறைவான வயதுடைய தென்னந்தோப்பு ஐந்து வருடங்களுக்கு மண்ணின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலைக்கேற்ப ஓராண்டுத் தாவரங்களை தென்னை மரங்களின் மேல் கட்டு அமைப்பின் பரவலுக்கு ஏற்ப ஊடுபயிராக பயிரிடலாம். நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் மற்றும் வாழை ஆகியவற்றை ஊடுபயிராக பயிரிடலாம். நெல், மற்றும் கரும்பு ஆகியவை ஊடுபயிராக பயிரிட ஏற்றவை அல்ல. (ஆ) 7-20 வயதுடைய தென்னைகளைக் கொண்ட தென்னந்தோப்பு பசுந்தாள் உரப்பயிர்கள் மற்றும் தீவனம் பயிர்கள் (நேப்பியர் மற்றும் கினியா புல் இரகங்கள் ஏற்றவை. (இ) 20 வயதுக்கு அதிகமான வயதுடைய மரங்களைக் கொண்ட தென்னந்தோப்பு சூரிய ஓளி புகுதலைப் பொறுத்து ஊடுபயிர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. பின்வரும் ஊடுபயிர்களானது மண், மற்றும் தட்பவெப்பநிலைகளைப் பொறுத்து ஊடுபயிராக பயிரிடப்படுகிறது. ஓராண்டுத் தாவரங்கள் நிலக்கடலை, வெண்டை, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, சிறு கிழங்கு, சேனைகிழங்கு, இஞ்சி மற்றும் அன்னாசி. ஈராண்டுத் தாவரங்கள் பூவன் மற்றும் மொந்தன் வாழை இரகங்கள் பல்லாண்டுத் தாவரங்கள் கொக்கோ, மிளகு, பன்னியூர்.1, (அ) பன்னியூர்.2 (அ) பன்னியூர்.5 (அ) கரிமுண்டா, சாதிக்காய் மற்றும் வென்னிலா ஆகியவை. கர்நாடகா மாநிலங்களில் மானாவாரி தென்னந்தோப்பில் மே மாதக் கோடை மழையையும் ஜூன் மாதத்தில் கிடைக்கும் மழையையும் பயன்படுத்தி ஊடுபயிர் பயிரிடப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது முதன்மைப் பயிரான தென்னை மற்றும் ஊடுபயிர்கள் தேவையான மேலாண்மை உத்திகளை பெறுவதோடு இந்த ஊடுபயிர்களின் மகசூலும் அதிகரிக்கிறது. இளம் பருவத்தில் மற்றும் காய்ப்பதற்கு முன் பயிரிட ஏற்ற ஊடுபயிர்கள் முறையே மானாவாரி நெல், சிறு கோதுமை, உருளைக்கிழங்கு பிற கிழங்கு வகை பயிர்களாகும். உற்பத்தி திறன் குறைந்து நீண்டகாலமாக உள்ள தென்னந்தோப்புகளில் பெரும்பாலும் கிழங்கு வகைப் பயிர்களே பயிரிடப்படுகின்றன. கிழங்கு வகைப் பயிர்கள் முறையே சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கருணை கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, இஞ்சி மற்றும் மஞ்சள் ஆகியவை பயிரிடப்படுகிறது. இவற்றுள் சேனைக்கிழங்கு மிகவும் ஏற்ற அதிக மகசூல் தரும் ஊடுபயிராகும். இதைத் தொடர்ந்து இஞ்சி, மரவள்ளிக் கிழங்கு, மஞ்சள், அவரை மற்றும் தீவனப்பயிர்கள் (கம்பு நேப்பியர் வீரிய இரகங்கள், ஸ்டைலோசாந்தஸ் கிேரசிலிஸ்) சூரிய காந்தி மற்றம் ராகி ஆகியவை மானாவாரியாக மானாவாரிப்பகுதியில் ஊடுபயிராக பயிரிடப்படுகிறது. கேரளா தென்னையில் ஊடுபயிர் மற்றும் கலப்புப் பயிர் சாகுபடி மரத்தின் மேல்கட்டு அமைப்பு, மரத்தின் வயது மற்றும் இரு மரங்களுக்கிடையே உள்ள இடைவெளியைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. 8 - 25 வயதுடைய தென்னை மரங்களுள்ள தோப்புகள் ஊடுபயிர் மற்றும் கலப்புப் பயிர் சாகுபடிக்கு ஏற்றதல்ல. இளம் தென்னம்பிள்ளைகளைக் கொண்ட தோப்புகளில் தானியங்கள் மற்றும் மரவள்ளி ஆகியவை சுமார் 3-4 வருடங்களுக்கு ஊடுபயிராக பயரிடப்படுகிறது. மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகியவை நிழலைத் தாங்கி வளரும் சல்லி வேர் கொண்ட பயிர்களாகும். இவை 15-25 வயதுள்ள தென்னை மரங்களைக் கொண்ட தோப்புகளில் ஊடுபயிராக பயிரிடப்படுகிறது. இவ்வாறு செய்வதால் சிறந்த நீர்ப்பாசனம், மண்ணின் ஊட்டச்சத்துகள், அதிக இலாபம் ஆகியவை கிடைக்கிறது. 7.6 மீட்டர் இடைவெளியில் தென்னங்கன்றுகள் நடப்பட்டுள்ள தோப்புகளே ஊடுபயிர் செய்வதற்கு ஏற்றதாகும். ஊடுபயிர்கள் தானியங்கள் நெல் மற்றும் சோளம் நிலக்கடலை, கொள்ளு தட்டைப்பயறு கிழங்கு வகைப் பயிர்கள் மரவள்ளிக் கிழங்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கு சேப்பங்கிழங்கு வாசனைப்பயிர்கள் இஞ்சி மஞ்சள் மிளகாய் மிளகு சாதிக்காய் லவங்கப்பட்டை கிராம்பு பழப்பயிர்கள் வாழை அன்னாசி பப்பாளி (பாலாயக் கோடர்ன் இரகங்கள் குட்டநாடு பகுதியில் அதிகமாக பயிரிடப்படுகிறது. ஒரு குன்றுக்கு மூன்று பக்கக் கன்றுகள் மட்டும் பராமரிக்கப்படுகிறது) திரவியப் பயிர்கள் கொக்கோ தீவனப் பயிர்கள் நேப்பியர் வீரிய இரகங்கள் கினியா புல் ஒவ்வொரு பயிருக்கும் தேவையான அளவு, தனித்தனியாக உரமளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். தீவனப் பயிர்கள் முறையே நேப்பியர் வீரிய இரகங்கள், கினியா புல் இதனுடன் பருப்பு வகை தீவனப் பயிர்களான ஸ்டைலோசான்தஸ் ஆகியவை அதிக இலாபத்தை தருகின்றன. ஒரு ஹெக்டரில் பயிரிடப்படும் தீவனப் பயிர்களானது மூன்று பால் மாடுகளுக்குத் தேவையான தீவனப்பயிரை தருகிறது. இந்த மாடுகளில் இருந்து கிடைக்கும் எருவினை மண்ணில் இடுவதால் மண்ணின் வளம் அதிகரிக்கிறது. இவ்வகையான கலப்புப் பயிர் சாகுபடி முறை அதிக இலாபம் மற்றும் மகசூல் பெறுவதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்