மழைக் காலங்களில் கூட்டங்களைப் பராமரித்தல்

கடும் மழையினால் தேனீப் பெட்டிகள் எதுவும் கீழே விழுந்துள்ளனவா எனப் பார்க்க வேண்டும்

தேனீப் பெட்டியினுள் மழை நீர் புகாதபடி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

மழைக்காலங்களில் தேனீக்களின் உணவு தேடும் பணி பாதிக்கப்படும்

மழையால் மலர்களிலிருந்து சுரக்கப்படும் மதுரம் நீர்த்துவிடும்

மகரந்தமும் மழையால் அடித்துச் செல்லப்படும்

மழையில் சிக்கிய பணித் தேனீக்கள் கூடு திரும்பாது. இதனால் கூட்ட வலு குறையும்

தேனீக்களுக்கு சர்க்கரைப்பாகு கொடுக்க வேண்டும்

மழைக்கு பின் எறும்புத் தொந்தரவு கூடுதலாக வாய்ப்புள்ளது. எனவே எறும்புகள் தேனீப் பெட்டியில் ஏறியுள்ளனவா எனப் பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மெழுகுப் பூச்சியின் தாக்குதலைத் தவிர்க்க அடிக்கடி அடிப் பலகையைச் சுத்தம் செய்ய வேண்டும்

உணவு ஊட்டுதல்

தேனீக் கூட்டத்திற்கு மதுர வரத்து இல்லாத பொழுதும் குறைவாக இருக்கும் காலங்களிலும் தேவையின் அடிப்படையில் செயற்கை உணவு கொடுத்தல் அவசியம். உணவு அடைகளில் போதிய அளவு தேன் சேமிப்பு இல்லையென்றாலும், புழு அடையில் உள்ள தேன் அறைகள் அனைத்தும் காலியாக இருந்தாலும் தேனீக் கூட்டங்களுக்குச் சர்க்கரைப் பாகு கட்டாயம் கொடுக்க வேண்டும். பொதுவாகத் தேனீ வளர்ப்பவர்கள் தேனீக்கள் சேமித்து வைத்துள்ள தேனை முழுவதும் எடுத்துவிடும் தருணத்தில் தேனீக்களின் சக்திக் தேவையை நிறைவு செய்ய சர்க்கரைப் பாகு அவசியம் கொடுக்க வேண்டும்.

ஏன் உணவு ஊட்ட வேண்டும்?

தேனீக்களைப் பட்டினிச் சாவிலிருந்து காக்க

உணவுத் தட்டுப்பாட்டினால் கூட்டம் ஓடாது தடுக்க

புதிதாகப் பிடித்த இயற்கை கூட்டம் மற்றும் பிரிந்து வந்த கூட்டம் நிலைபெற

மெழுகு சுரத்தலைத் தூண்டி, தேனீக்களை அடைகட்ட வைக்க

ராணித் தேனீயை முட்டையிடத் தூண்ட

மோசமான கால நிலையினால் தேனீக்கள் வெளியில் சென்று உணவு திரட்டி வர இயலாது போகும் பொழுது

வயல்வெளித் தேனீக்களை சுறுசுறுப்புடன் பணியாற்றச் செய்ய

பூச்சிக்கொல்லிப் பாதிப்பிற்கு இலக்கான கூட்டங்கள் பாதிப்பிலிருந்து மீண்டு விரைந்து வளர்ச்சி பெற

நோயுற்ற கூட்டங்களுக்கு பாகுடன் மருந்து கலந்து கொடுக்க

மதுர வரத்திற்கு முன் தேனீக் கூட்டத்தின் வலுவைக் கூட்ட

சில குறிப்புகள்

அஸ்கா சர்க்கரை கொண்டுதான் பாகு தயாரிக்க வேண்டும். நாட்டுச் சர்க்கரை ஏற்றது அல்ல. அஸ்கா சர்க்கரையுடன் குளுக்கோஸ் (10:1) கலந்து கொடுத்தால்தேனீக்கள் விரைந்து அடைகட்டும்

அஸ்கா சர்க்கரையைச் சுடு நீரில் நன்கு கரைத்துப் பின்னர் ஆற வைத்துக் கொடுக்க வேண்டும். ஒரு கிலோ சர்க்கரையை ஒரு லிட்டர் சுடுநீரிலி (1:1) கரைத்துப் பாகு தயாரிக்க வேண்டும். ராணித் தேனீயை முட்டையிடத் தூண்ட நீர்த்த பாகு (1:2) கொடுக்க வேண்டும் (அரைக் கிலோ அஸ்கா விறகு ஒரு லிட்டர் நீர்)

சர்க்கரைப் பாகைத் தொட்டியிலோ அல்லது ரப்பர் பால் சேகரிக்கப் பயன்படும் பிலாஸ்டிக் தேங்காய் தொட்டியிலோ ஊற்றி, புழு அறைச் சட்டங்களின் மேல் வைத்துப் பின்னர் ஒரு காலித் தேன் அறை கொண்டு அதனை மூடிக் கொடுக்கலாம். இவ்வாறு பாகைத் தேனீப் பெட்டியினுள் வைத்துக் கொடுப்பதால் தேன் திருட்டைத் தவிர்க்கலாம்

ஓர் உருளை வடிவ பிளாஸ்டிக் டப்பாவில் பாகினை ஊற்றி, டப்பாவின் வாயை ஒரு கெட்டியான துணி கொண்டு ரப்பர் வளையத்தால் இறுக்க மூடி, டப்பாவைத் தலை கீழாகக் கவிழ்த்து, புழு அறைச் சட்டங்களின் மேல் வைத்தும் கொடுக்கலாம்

ஓர் எவர்சில்வர் டப்பாவில் பாகினை ஊற்றி பல சிறு துளைகளுடன் கூடிய மூடியால் நன்கு மூடி, டப்பாவைத் தலைகீழாகத் திருப்பி புழு அறைச் சட்டங்களின் மேல் வைத்தும் கொடுக்கலாம்

சர்க்கரைப் பாகினை காலி அடைகளில் ஊற்றியும் கொடுக்கலாம்

சர்க்கரைப் பாகு கொடுக்கும் பொழுது, பாகு கீழே சிந்தக் கூடாது. அவ்வாறு சிந்தினால் எறும்புத் தொல்லை ஏற்படும்

தேனீக் கூட்டங்களுக்கு மாலை நேரத்தில் மட்டுமே உணவு கொடுக்க வேண்டும்

தேன் திருட்டைத் தவிர்க்க ஒரு தேனீப் பண்ணையில் உள்ள எல்லாத் தேனீக் கூட்டங்களுக்கும் பாகு கொடுக்க வேண்டும்

தேனீக் கூட்டத்தின் வலுவிற்கு ஏற்றபடி தேவைக்கு மிகாமல், பாகு கொடுக்க வேண்டும். ஒரு புழு அடைக்கு 100 மில்லி என்ற அளவில் ஒரு தேனீப் பெட்டியில் உள்ள புழு அறையில் எத்தனை புழு அடைகள் இருக்கின்றதோ அதற்கும் தக்கவாறு பாகு கொடுக்கலாம்

தேவைக்கு அதிகமாக சர்க்கரைப் பாகு கொடுக்கும் பொழுது, தேனீக்கள் புழு அடைகளின் மையப் பகுதியிலும் பாகினைச் சேமிக்கின்றன. இதனால் ராணித்தேனீக்கு முட்டையிட இட வசதி இல்லாது போய் விடும். இத்தகைய தருணத்தில் சர்க்கரைப் பாகு கொடுப்பதை உடனே நிறுத்தி விட்டு, ராணித் தேனீ முட்டையிடக் காலி அடைகள் கொடுக்க வேண்டும்

மதுர வரத்து துவங்கு முன் கூட்டங்களுக்குச் சர்க்கரைப் பாகு கொடுத்து கூட்ட வளர்ச்சியைத் துரிதப்படுத்த வேண்டும். மதுர வரத்து துவங்கி, தேனீக் கூட்டத்திற்குத் தேன் அறை கொடுத்த பின்னர் கண்டிப்பாகப் பாகு கொடுக்கக் கூடாது. அவ்வாறு கொடுத்தால் தேனின் தரம் குறைய நேரிடும்

நோய் இல்லாத கூட்டங்களிலிருந்து பெறப்பட்ட தேனையும் தேனீக்களுக்கு உணவாகக் கொடுக்கலாம்

மகரந்தத் தட்டுப்பாடு தோன்றும் பொழுது தேனீக் கூட்டங்களை தென்னந்தோப்பில் வைப்பதால் மகரந்தப் பற்றாக்குறையைப் போக்கலாம்

ஓடிப் போகுதல்

ஓடுவது ஏன்?

இந்தியத் தேனீ இனத்தில் ஓடிப் போகும் தன்மை கூடுதலாகக் காணப்படுகின்றது. தேனீக் கூட்டங்கள் கூட்டை விட்டு ஓடுவதற்கு முக்கிய காரணம் உணவுத் தட்டுப்பாடு தோன்றுவதே ஆகும். இந்த சுபாவம் பாதகமான சூழ்நிலையிலிருந்து விடுபடவும் தேனீ இனம் அழிவுபடாமல் நிலை பெற்று வாழவும் வழி வகை செய்கின்றது.