அறிமுகம் தேனீ வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டும் என்றால், முதலாவதாகத் தேனீக்களைப் பற்றிய அறிவு மிகவும் அவசியம். தேனீக்களுக்கும் மற்ற வளர்ப்புப் பிராணிகளுக்கும், ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது தேனீ வளர்க்க விரும்புவர்கள் தேனீக்களின் தன்மைகள், அவை வளரும் விதம், அவற்றின் வாழ்க்கை முறை, அவைகளைக் கையாளும் விதம், அவைகளின் வளர்ச்சியைப் பாதிக்கும் சூழ்நிலைகள் மற்றும் அவைகளைத் தாக்கும் எதிரிகள், நோய்கள் ஆகியன பற்றி அவசியம் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அப்பொழுது தான் தேனீக்களின் தேவையை அறிந்து உரிய நேரத்தில் தகுந்த பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள இயலும். தேனீக்களைப் பயமின்றியும், தன்னம்பிக்கையுடனும் பொறுமையாகவும், நிதானத்துடன், கையாளும் கலையைக் கற்றுக் கொண்டுவிட்டால், நாளடைவில் தேனீக்கள் கொட்டிவிடும் என்ற மன அச்சம் அகன்று விடும் தேனீப் பெட்டிகளை முறைப்படி அச்சமின்றி, படபடப்பு இல்லாமல் ஆய்வு செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் கூட்டினுள் என்ன நடக்கின்றது என்பதைக் கண்டு அறிய முடியும் தேனீக்களைப் பற்றி புத்தகங்கள் மற்றும் சமிஞ்கைகள் மூலம் படித்தும், இணைய தளங்களைப் பார்த்தும், பிறரிடமிருந்து கேட்டும் அறிந்து கொள்வதைவிட, நாமே வளர்த்துப் பார்த்துப் பெறும் அறிவு மிகச் சிறந்தது. இந்த அனுபவ அறிவே ஒருவரைத் தேனீ வளர்ப்புக் கலையில் சிறந்த வல்லுனராக்கும் தேனீ வளர்க்க விரும்புவோருக்குக் கூரிய கண் பார்வை மிகவும் அவசியம். அப்பொழுதுதான் அடை அறைகளில் இருக்கும் முட்டைகள், வளரும் புழுக்கள், ராணித் தேனீ மற்றும் செவ்வுண்ணி போன்ற உருவில் சிறிய தேனீக்களின் எதிரிகளையும் காண இயலும். குறைபாடுள்ள கண்களை உடையவர்கள் அவசியம் கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும் தேனீ வளர்ப்பு நுட்பங்களை அனுபவம் மிக்க தேனீ வளர்ப்போரிடமிருந்தோ அல்லது தேனீ வளர்ப்பு பயிற்சிகளில் கலந்து கொண்டோ நன்கு அறிந்து கொள்ள இயலும் தேனீ வகைகள் இந்தியத் தேனீ - ஓர் அறிமுகம் தமிழகத்தில் வணிக ரீதியாக வளர்க்கப்படும் அடுக்குத் தேனீ இனம் இந்தியத் தேனீ இனமாகும். இவை மலைகளிலும் சமவெளிகளிலும் வாழவல்லவை. மழைவாழ் ரகத் தேனீக்களின் குணாதிசயங்கள் சமவெளி ரகத்திலிருந்து சற்று வேறுபடுகின்றன. மழைவாழ் ரகம் இந்தியத் தேனீயின் சிறப்பியல்புகள் நாட்டுத் தேனீ இனம் என்பதனால் பலவிதச் சூழலிலும் வெற்றிகரமாக இயற்கையோடு இயைந்து வாழவல்லவை இருட்டில் வாழ்பவை பல அடைகளை அடுக்கடுக்காகவும் ஒன்றுக்கு ஒன்று இணையாகவும் கட்டுகின்றன பொதுவாக சாந்த குணம் படைத்தவை சினமுற்ற தேனீக்களைப் புகை கொண்டு எளிதாகக் கட்டுப்படுத்த இயலும் கொட்டிய தேனீயில் கொடுக்கு முறிவு சில நேரங்களில் மட்டுமே ஏற்படும் கொட்டினால் ஏற்படும் வலி சற்று குறைவாக இருக்கும் கொட்டிய பின்னர் நேரடியாகப் பறக்காமல் சுற்றி வந்து உள் இறங்கிய கொடுக்கை விட்டு விடாமல் லாவகமாக விடுவித்துக் கொள்கின்றன சட்டங்களை ஆய்வு செய்யும் பொழுது தேனீக்கள் சில நேரங்களில் அடையின் மேல் அங்குமிங்கும் ஓடும் விசிறும் தேனீக்கள் இறக்கைகளைக் கொண்டு விசிறும் பொழுது வயிறு நுழைவு வழியைப் பார்த்த நிலையில் நின்று செயல்படுகின்றன தேனீக் கூட்டத்தின் வளர்ச்சி சிறிய பெட்டிகளில் விரைவாக நடைபெறுகின்றது. புழு அறை பெரிதாக இருக்கும் தேன் அறைகளில் பணித் துவக்கம் தாமதமாகும் கூட்டிற்குள் மகரந்த வரத்து வெகுவாகக் குறையும் பொழுது புழு வளர்ப்புப் பணி தடைப்பட்டுக் கூட்டம் ஓடி விடும் இவை பாதகமான சூழ்நிலையிலிருந்து விடுபட்டு வாழ அடிக்கடி கூட்டை விட்டு ஓடி விடுகின்றன இன விருத்திக்காக இவை அடிக்கடி குடி பெயர்ந்து செல்கின்றன. ஒரு கூட்டில் ஆண்டுக்கு 5 முதல் 6 முறை கூட்டம் பிரிதல் நடைபெறுகின்றது. இதனால் கூட்டத்தின் வலு பெரிதும் குறைகின்றது ராணியற்ற கூட்டத்தில் பணித் தேனீக்களின் உடல் நிறம் சற்று கருமையாக மாறுகின்றது ராணி இழப்பு நேரிட்ட கூட்டத்தில் ஒரு வாரத்தில் பணித் தேனீக்கள் முட்டையிடத் தொடங்குகின்றன மதுர வரத்து காலங்களில் பழைய கறுத்த அடைகளைக் கடித்து புதுப்பிக்கின்றன இவ்வாறு அடையைப் புதுப்பிக்கும் பொழுது அப்பலகையில் விழும் அடைத் துகள்கள் நீக்கப்படாது இருப்பதால் மெழுகுப் பூச்சியின் தாக்குதல் கூடுதலாகக் காணப்படும் இரை பிடிக்க நுழையும் குளவியைக் கூடித் தாக்கிக் கொன்று விடுகின்றன ‘வரோவா’ உண்ணிகளைத் தாக்கியும் நீக்கியும் தங்களைக் காத்துக் கொள்ள வல்லவை பச்சைக் குருவி, கருங்குருவி போன்ற பறவைகளின் பிடியில் எளிதில் சிக்காமல் லாவகமாக, வளைந்து, விழுந்து, எழுந்து, பறந்து தப்பிக்கின்றன கூட்டை நெருங்கும் எதிரிகளைக் கூட்டமாகச் சேர்ந்து ஒரு சீறும் ஒலி எழுப்பி விரட்டுகின்றன புழுக்கள் வைரஸ் நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன உணவுச் செடிகள் குறைவாகவும், பரவலாகவும் உள்ள இடங்களிலும் இவை வாழவல்லவை உணவு வரத்து குறையும் பொழுது அதற்குத் தக்கபடி தேனீக்களின் உற்பத்தியைக் குறைக்கின்றன. மேலும் அத்தகைய தருணத்தில் இடப்படும் எல்லா முட்டைகளும் தேனீக்களாக வளர்க்கப்படுவதில்லை. புரதத் தட்டுப்பாடு தோன்றும் பொழுது முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்களைத் தேனீக்களே உண்டு விடுகின்றன குறைவான வெளிச்சம் இருக்கும் பொழுது வழி அறிந்து புலரும் பொழுதே வெளியில் சென்று உணவு திரட்டி வருகின்றன விடியலுக்கு முன் துவங்கும் உணவு திரட்டும் பணி அந்தி சாயும் நேரம் வரையிலும் தொடர்கின்றது பணித் தேனீக்கள் பிசின் சேகரிப்பது இல்லை பயிரில் கூடுதலாக மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவுகின்றன பணித் தேனீக்கள் மலரின்பால் கூடுதல் விசுவாசம் காட்டுகின்றன வயல்வெளித் தேனீக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று உணவு திரட்டி வருகின்றன வயல் வெளித் தேனீக்கள் ஒரு மணிக்கு 25 கிலோ மீட்டர் தூரம் பறக்க வல்லவை உருவில் சற்று பெரியவை உடல் நிறம் சற்று கூடுதலான கருமையுடன் இருக்கும் பொதுவாக இவை அடைகளை நுழைவு வழிக்கு இணையாகவும் சில நேரங்களில் குறுக்காவும் கட்டும் கொட்டும் தன்மை சற்று கூடுதலாக இருக்கும் கடுங்குளிரிலும் செயலாற்ற வல்லவை தேன் சேகரிக்கும் ஆற்றல் சற்று கூடுதலாக இருக்கும் தேனீ இனங்கள் ஒவ்வொரு தேனீக் குடும்பத்திலும் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள் மற்றும் ஆயரக்கணக்கான பணித் தேனீக்கள் வாழ்கின்றன 1. ராணித் தேனீ ராணித் தேனீ ஒரு பூரண வளர்ச்சியுற்ற பெண் தேனீ. இதனால் மட்டுமே ஆண் தேனீக்களுடன் புணர்ந்து இனவிருத்தி செய்ய இயலும். இத்தேனீ பணித் தேனீயை விட உருவில் பெரியது மகரந்தம் சேகரிக்கும் அமைப்புகள் கால்களில் இல்லாததால் ராணித் தேனீயால் உணவு சேகரிக்க இயலாது. அதே போல் மெழுகுச் சுரப்பிகள் இல்லாததால் ராணித் தேனீயால் கூடு கட்டவும் இயலாது நீண்டும் கூம்பியும் உள்ள வயிற்றின் நுனியினுள் இருக்கும் கொடுக்கை முட்டையிடவும், பிற ராணித் தேனீக்களையும் அவற்றின் வளர்ச்சிப் பருவங்களையும் கொட்டிக் கொல்லவும் பயன்படுத்துகின்றது நன்கு வளர்ச்சி அடைந்த இரு சினைப் பைகள் முட்டைகளை உருவாக்கவும் விந்துப்பை புணர்ச்சியின் பொழுது ஆண் தேனீக்களிடமிருந்து பெறும் விந்தைச் சேமிக்கவும் உதவுகின்றன தாடைச் சுரப்பிகள் இருவித அமிலங்களால் ஆன ராணிப் பொருள் எனப்படும். ஒரு விதக் கவர்ச்சிப் பொருளைச் சுரக்கின்றன. வாய் வழி உணவுப் பரிமாற்றம் மூலம் இப்பொருளை எல்லாப் பணித் தேனீக்களும் பெறுகின்றன கூட்டினுள் பணித் தேனீக்களை ராணித் தேனீயின்பால் ஈர்த்து அதனைச் சுற்றி ஒரு பரிவாரம் அமைய இச்சுரப்பானது உதவுகின்றது. மேலும் இப்பொருள் புதிய ராணித் தேனீ உருவாவதையும் பணித் தேனீக்களின் சினைப் பைகளின் வளர்ச்சியையும் தடை செய்கின்றது. ராணிப் தேனீயானது பணித் தேனீக்கள் அடை கட்டுதல், புழு வளர்த்தல், உணவு சேகரித்தல் போன்ற பணிகளைச் செவ்வனே செய்ய ஊக்குவிக்கின்றது புணர்ந்த நான்கு நாட்களுக்குப் பின் ராணித் தேனீ முட்டையிடத் தொடங்கும். ஆண் தேனீக்களை உருவாக்கக் கருவுற்ற முட்டைகளையும் இடும் ராணித் தேனீயின் வாழ்க்கைக் காலம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும் பணிகள் ராணித் தேனீயானது தேனீக் கூட்டத்தின் அன்னையாகும் ஒரு முட்டையிடும் இயந்திரம் போல அயராது முட்டைகள் இட்டு ராணித் தேனீக்களையும் பணித் தேனீக்களையும், ஆண் தேனீக்களையும் ஈன்று தருகின்றது ராணித் தேனீயால் முட்டையிலிருந்து வரும் புழுக்களுக்கு உணவு தரவோ, அவற்றைப் பேணி வளர்க்கவோ இயலாது ராணித் தேனீ புதிதாகக் கட்டப்பட்ட அடை அறைகளில் விரும்பி முட்டையிடும். கருத்த அடை அறைகளில் ராணித் தேனீ முட்டையிடுவதில்லை துப்பரவு செய்யப்பட்ட புழு வளர்ப்பு அறைகளின் அடியில் ராணித் தேனீ தனித்து முட்டைகளை இடுகின்றது நன்கு பணியாற்றும் ஒரு ராணித் தேனீ அனைத்து அடை அறைகளிலும் இடைவெளி இல்லாமல் சீராக நாளொன்றுக்கு சராசரியாக 500 முதல் 2000 முட்டைகள் வரை இடும் முட்டையிடப் போதிய அறை வசதியில்லாத பொழுது சில நேரங்களில் மட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை ஓர் அறையில் இடும் உடல் ஊனமுற்ற ராணித் தேனீயால் சரிவர முட்டையிட இயலாது புணர்ச்சியில் தோல்வியுற்ற மற்றும் வயது முதிர்ந்த ராணித் தேனீக்கள் கருவுறாத முட்டைகளை மட்டுமே இடும். அத்தகைய முட்டைகளிலிருந்து ஆண் தேனீக்கள் மட்டுமே உருவாக இயலும் ராணித் தேனீ - வாழ்க்கைக் குறிப்புகள் வளர்ச்சிப் பருவங்கள் (நாட்களில்) முட்டை 3 புழு 5 கூட்டுப்புழு 7-8 வளர்ச்சிக் காலம் 15-16 வாழ்நாள் (ஆண்டுகளில்) ஆயுட் காலம் 2-3 சிறப்பான பணிக் காலம் 1.5 2. பணித் தேனீ பணித் தேனீ பூரண வளர்ச்சியடையாத பெண் தேனீ ஆகும் பணித் தேனீக்கள் ராணித் தேனீயை விட அளவில் சிறியவை உடல் முழுவதும் கிளையுடன் கூடிய ரோமங்கள் இருக்கும் வயிற்று நுனியின் மேற்பகுதியில் ஒரு வாசனை சுரப்பி உள்ளது. இச்சுரப்பி ஒவ்வொரு கூட்டிற்குமான தனித் தன்மை பொருந்திய வாசனையைத் தருகின்றது. இந்த வாசனையைக் கொண்டு பணித் தேனீக்கள் தங்களின் கூடுகளை அறிந்து கொள்கின்றன கொடுக்கு வயிற்றின் நுனிப் பகுதியினுள் உள்ளது. தேனீ கொட்டும் பொழுது வெளிப்படும் விஷம் அமிலச் சுரப்பியில் சுரக்கின்றது. விஷத்துடன் வெளிப்படுத்தப்படும் ‘ஐசோபென்டைல் அஸ்டேட்’ என்ற எச்சரிக்கை வேதிப்பொருள் பிற தேனீக்களைக் கொட்டிய இடத்திற்கு ஈர்த்து கொட்டத் தூண்டுகின்றது. கொட்டிய தேனீ செலுத்தப்பட்ட கொடுக்கை எடுக்க இயலாமல் இறுதியில் அதிக நீர் இழப்பு காரணமாக இறக்கின்றது பணிகள் முதல் மூன்று வாரங்கள் கூட்டினுள் இருந்து கொண்டு உட்புறப் பணிகளையும் அதன் பின்னர், வாழ்நாள் முடியும் வரை வயல் வெளித் தேனீயாகி வெளிப்புறப் பணிகளையும் சுறுசுறுப்புடன் செய்கின்றது. இத்தேனீக்களின் பணி அவற்றின் வயதிற்கேற்ப மாறுபடுகின்றது. பணித் தேனீ ஆற்றும் பணிகள் வயது (நாட்கள்) பணிகள் 1-3 அடை அறைகளைத் தூய்மை செய்தல், கூட்டின் வெப்ப நிலையைப் பராமரித்தல் 4-6 வளர்ந்த புழுக்களுக்கு மகரந்த உணவு ஊட்டுதல் 6-12 இளம் புழுக்களுக்கும், ராணித் தேனீக்கும் தேனீப்பால் கொடுத்தல் 13-18 தேனைப் பக்குவப்படுத்துதல், மகரந்தத் தூளை அடை அறைகளில் சேமித்தல், மெழுகு சுரத்தல், அடை கட்டுதல், அடை அறைகளுக்கு மூடி இடுதல் 18-21 கூட்டினுள் காற்றோட்டம் ஏற்படுத்துதல், கூட்டைக் காவல் காத்தல் 22-42 வெளிப்புறப் பணிகள்: மதுரம், மகரந்தம், தண்ணீர் ஆகியவற்றைக் கூட்டிற்குக் கொண்டு வருதல் 3. ஆண் தேனீ ஆண் தேனீ பணித் தேனீயை விட அளவில் பெரியது. ஆனால் ராணித் தேனீயை விட அளவில் சிறியது. புற உறுப்புகள் இரு பெரிய கூட்டுக் கண்கள் தலையின் மேல் பகுதியில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இருக்கும். இவை எப்புறத்திலிருந்தும் எதிர்ப்படும் பொருட்களைக் காண வல்லது தலையில் உள்ள இரு உணர் கொம்புகள் சற்று நீளமாகவும், பல்லாயிரக்கணக்கான நுண்ணிய நுகரும் உறுப்புகளுடனும் இருக்கும் கூரிய பார்வையும், நுகரும் ஆற்றலும் புணர்ச்சிப் பறப்பின் பொழுது ராணித் தேனீயைக் கண்டறிய உதவுகின்றன ஆண் தேனீக்களுக்கு அதிக உணவு தேவைப்படுகின்றது. ஆண் தேனீக்கள் பணித் தேனீக்களினால் உணவு ஊட்டப்படுவதையே விரும்புகின்றன வளரும் விதம் கருவுறாத முட்டைகளிலிருந்து ஆண் தேனீக்கள் உருவாகின்றன புணர்ச்சியுறாத மற்றும் வயது முதிர்ந்த ராணித் தேனீக்கள் இடும் எல்லா முட்டைகளும் கருவுறாது இருப்பதால், அவைகள் அனைத்திலிருந்தும் ஆண் தேனீக்கள் தோன்றுகின்றன சில நேரங்களில், ராணித் தேனீக்கள் இல்லாத கூட்டங்களில் சில பணித் தேனீக்கள் ராணித் தேனீயைப் போல முட்டையிடும். இவற்றிலிருந்தும் உருவில் சிறிய ஆண் தேனீக்கள் உருவாகும் முட்டையிலிருந்து புழுக்கள் மூன்று நாட்களில் வெளிப்படுகின்றன. இவை ஒரு வார காலத்தில் கூட்டுப் புழுவாக மாறுகின்றன. இப்புழுக்களுக்கு முதல் மூன்று நாள் தேனீப் பாலும் கடைசி நான்கு நாட்கள் தேனீ ரொட்டியும் உணவாக வழங்கப்படுகின்றது. புழுக்கள் முழு வளர்ச்சி அடைந்த பின்னர் வளர்ப்பு அறை குவிந்த மெழுகு மூடியால் மூடப்படும். கூட்டுப் புழுக்களின் வளர்ச்சி வேகம் குறைவு. இவை முழு வளர்ச்சி பெற்ற ஆண் தேனீக்களாக மாற இரு வாரங்களாகும் ஆண் தேனீக்கள் வெளிவந்த 12 நாட்களுக்குப் பிறகு இவை ராணித் தேனீயுடன் புணர்ச்சிக்குத் தயாராகின்றன. கேள்வி பதில்கள் தென் இந்திய சுற்றுசூழலுக்கு ஏற்ற வணிகரீதியான தேனீ வகை? தென் இந்திய சுற்றுசூழலுக்கு ஏற்ற தேனீ வகை இந்தியன் தேனீ அல்லது ஆசியன் தேனீ (ஏபிஸ் செரீனா இண்டிகா). தேன் கூட்டில் புகையூட்ட பயன்படுத்தப்படும் பொருட்கள் யாவை? கந்தல் துணிகள் (துணிகளால் முகத்தை மூடிக்கொள்ள) மரத்தூள், கரி, தென்னை நார், கோழி இறகுகள் அல்லது புகையை தூண்டும் பொருட்கள் அனைத்தையும் புகையூட்ட பயன்படுத்தலாம். தேன் கூடு வைக்க பொருத்தமான இடம்? தேனீ வளர்ப்புக்கு பொருத்தமான இடம் ஓதம் இல்லாமல் உலர் இருக்க வேண்டும். உயர் ஒப்புஈரப்பதம், தேனீக்களின் பறத்தல் மற்றும் மலர்த்தேன் கணிதல் போன்றவற்றை பாதிக்கிறது. நீர் ஆதாரங்களை இயற்க்கை மற்றும் செயற்கையாக வழங்கவும். குளிர் பகுதிகளில் காற்று தடுப்பிகலாக சில மரங்கள் கட்டாயம் இருக்கவேண்டும். தேன் கூடுகளை வெயில் படாமல் மரத்தின் அடியிலோ அல்லது கூடாரம் அமைத்தோ வைக்கவும். ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்