உயிரியல் முறையில் பூச்சிகள் மற்றும் நோய்கள் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம்

இன்றைய வேளாண்மையில் இரசாயனப் பூச்சி மற்றும் பூசணக் கொல்லிகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு மட்டுமன்றி பூச்சிகள் மற்றும் நோய் காரணிகளின் எதிர்ப்புசக்தி தோன்ற வழிவகுக்கிறது. அத்துடன் உணவுப்பொருள்களில் குறிப்பாக தானியப்பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் நச்சுத்தன்மை தங்கி உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. ஆனால் உயிர் எதிர்கொல்லிகளை பயன்படுத்துவதால் அத்தகைய சூழ்நிலை சீர் கேடு ஏற்படுவதில்லை. அதுமட்டுமன்றி பூச்சி மற்றும் நோய் காரணிகளில் எதிர்ப்பு சக்தியும் தோன்றுவதில்லை. ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேலாண்மையில் உயிர் எதிர்கொல்லிகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. உயிரியல் முறை பயிர் பாதுகாப்பில் பூசணம் மற்றும் பாக்டீரியா என்ற இரண்டு வகையான உயிர் எதிர் கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு வகையில் பாக்டீரியா வகையைச் சார்ந்த சூடோமோனாஸ் அதிக அளவில் உயிர் எதிர் கொல்லியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாக்டீரியா, நோய்காரணிகள், நூற்புழுக்கள் மற்றும் சில பூச்சிகளை சிறப்பாகக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நன்மை செய்யும் மற்ற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் சுற்றுப்புற சூழ்நிலையைப் பாதுகாக்கிறது. அத்துடன் இந்த வகை பாக்டீரியா பயிர் வளர்ச்சியையும் அதிகரித்து விளைச்சலையும் அதிகரிக்கிறது.

சூடோமோனாஸ்

இன்றைய பயிர் மேலாண்மையில் சூடோமோனாஸ் என்ற பேரினத்தில் வெவ்வேறு வகை சிற்றினங்களான சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ், சூ.ஆறுஜினோசா, சூ.புடிடா, சூ.குளோரோராப்பிஸ், சூ.அஜிலோமெரேன்ஸ், சூ.சீப்பாசியா மற்றும் ஆரியோபேசியன்ஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில் பயிர் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை துாண்டுவதில் ப்ளோரசன்ஸ் வகை முக்கியப் பங்கு வகிக்கிறது. இது ஒரு செல்லுடைய, நேராகவும் அல்லது சற்று வளைந்தும், கிராம் என்ற நிறம் ஏற்பியற்றதாகவும், இரும்பு அயனிகளின் பற்றாக்குறையின் போது பச்சை, நீலம், ஊதா, மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு போன்ற ப்ளோரசன்ஸ் வகை நிறமிகளை உற்பத்தி செய்யக்கூடியதாகவும் மற்றும் இரும்பு அயனிகளை குறைக்கும் சிடரோஃபோரை உற்பத்தி செய்யும் தன்மையையும் கொண்டது.

நோய் கட்டுப்பாட்டில் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்

சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் மண்ணின் மூலம் பரவும் நோய்களான வேரழுகல், வாடல் நோய், நாற்றழுகல் நோய் மற்றும் குண்டாந்தடி வீக்க வேர் நோய் போன்றவற்றை கட்டுப்படுத்துவதுடன் இலைவழி மூலம் பரவும் பூசண நோய்களான குலை நோய், இலையுறை கருகல் நோய், இலைப்புள்ளி நோய் மற்றும் ஆன்த்ராக்னோஸ் ஆகியவற்றின் பாதிப்பையும் குறைக்கிறது. இவற்றுடன் பயிர்களைத் தாக்கும் மற்ற பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. இந்த பாக்டீரியம் நோய்களை கட்டுப்படுத்துவதுடன் நெல்லின் இலைச்சுருட்டு புழு, தண்டுதுளைப்பான் ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்பையும் குறைக்கிறது. மேலும் வாழையில் வேர்குடையும் நுாற்புழு, வேர்முடிச்சு நுாற்புழு மற்றும் சுருள் நுாற்புழு, காய்கறிகளில் வேர்முடிச்சு நுாற்புழு போன்ற பல்வேறு நுாற்புழுவினால் ஏற்படும் பாதிப்பை குறைக்கிறது. இந்த பாக்டீரியம் மற்ற உயிர் எதிர் காரணிகளான பேசில்லஸ் சப்டில்லிஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி போன்றவைகளுடனும் நன்கு ஒப்புமை உடையதாக உள்ளதால் இதை மற்ற உயிர் எதிர் காரணிகளுடன் கூட்டாக பயன்படுத்தும் போது நோய் கட்டுப்படுத்தும் திறன் அதிகரிக்கிறது.

சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் பயிர் நோய்களை நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்துகிறது. இது 2,4-டை அசிட்டைல் ப்ளோராகுளுசினால், பினாசின், பையோலூட்ரின் மற்றும் பைரால்நைட்ரின் போன்ற நோய் எதிர்ப்பு பொருள்களை உற்பத்தி செய்து பயிர் நோய்களை நேரடியாக கட்டுப்படுத்துகிறது. அத்துடன் இந்த வகை பாக்டீரியம் சிடரோஃபோர் என்ற இரும்பு அயனியை உட்கிரகிக்கும் வல்லமை உடையது. இதன் மூலம் மற்ற நோய் உண்டாக்கும் பூசணங்களுக்குத் தேவையான இரும்புச் சத்தை குறைத்து அதன் வளர்ச்சியை தடுக்கிறது. சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் மறைமுக நோய் எதிர்ப்பு முறையில் நேரடியாக நோய்களை உண்டாக்கும் காரணிகளை தாக்காமல் மற்ற நோய் எதிர்ப்பு நொதிகளான பெராக்ஸிடேஸ், பாலிபீனால் ஆக்ஸிடேஸ், பினைல் அலனின் அம்மோனியா லையேஸ், குளுக்கேனேஸ் மற்றும் கைட்டினேஸ் போன்றவற்றை தாவரத்தில் அதிக அளவில் சுரக்க வழிவகை செய்து அதன்மூலம் நோய் காரணிகளின் வளர்ச்சி வீதத்தைக் குறைக்கிறது.

மேலும் இந்த வகை பாக்டீரியம் நோய்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்களான ஆக்ஸின், ஜிப்ரலின் மற்றும் இன்டோல் அசிடிக் அமிலம் ஆகியவற்றை சுரந்து பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது

சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் - பவுடர் முறையில் தயாரித்தல்

முதலில் சூடோமோனாஸை கிங்ஸ் ஊடகத்தில் அறை வெப்ப நிலையில் 48 மணிநேரம் வளர்க்க வேண்டும். பின்பு ஒரு மில்லி திரவ ஊடகத்தில் 9 x 108 பாக்டீரிய செல்கள் இருக்கும் நிலையில் ஊடகத்துடன் டால்க் பவுடரை கலக்க வேண்டும். அதாவது 400 மில்லி பாக்டீரியதிரவ ஊடகத்துடன் ஒரு கிலோ டால்க் பவுடர் மற்றும் 15 கிராம் கால்சியம் கார்பனேட் மற்றும் கார்பாக்சி மீத்தைல் செல்லுலோஸ் சேர்த்து கலக்க வேண்டும். பின்பு இந்த கலவையை இரவு முழுவதும் உலர வைத்து பாலித்தீன் பைகளில் அடைக்க வேண்டும். அதாவது பாக்டீரியல் காலனிகள் 2.5லிருந்து 3x 108 காலனி / கிராம் டால்க் பவுடரில் இருக்குமாறு பார்த்து வயலில் இடவேண்டும்.

சூடோமோனாஸை பயன்படுத்தும் முறைகள்

தானியப் பயிர்கள் & நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் கலவை என்ற விகிதத்தில் கலந்து தேவையான அளவு தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து பின்னர் தண்ணீரை வடிக்க வேண்டும். வடித்த தண்ணீரை நாற்றங்காலில் ஊற்றி விடவும்.

நாற்று நனைத்தல்

சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 2.5 கிலோவை 25 சதுர மீட்டர் நாற்றங்காலில் உள்ள தண்ணீரில் கலந்து பின்னர் ஒரு எக்டருக்கு தேவையான நாற்றுகளை குறைந்தது அரை மணி நேரம் ஊற வைத்து நட வேண்டும். நீண்ட நேரம் ஊற வைப்பதால் அதன் செயல் திறன் கூடுகிறது

வயலில் இடுதல்

நாற்று நட்ட 30 நாட்கள் கழித்து ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து இடவேண்டும்.

தெளிப்பு முறை

சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.5 சத கரைசலை நடவுக்கு பின் னர் 45 நாட்கள் கழித்து நோய்களின் தீவிரத்தைப் பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும்.

கேழ்வரகு - குலை நோய்

விதை நேர்த்தி

சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் கலந்து விதைக்கவும்.

தெளிப்பு முறை

சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.2 சத கரைசலை நோயின் தீவிரத்தைப் பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும்.

நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பருத்தி மற்றும் பயறு வகைப் பயிர்கள் வேரழுகல் மற்றும் வாடல் நோய்

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை என்ற விகிதத்தில் நன்கு கலந்து பின்னர் விதைக்கவும்.

வயலில் இடுதல்

ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் நிலத்தில் இடவேண்டும்.

தோட்டக்கலை பயிர்கள் காய்கறி பயிர்கள் - நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல்

விதை நேர்த்தி

காய்கறி பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய், பாகற்காய் மற்றும் பூசணி பயிர்களில் தோன்றும் நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை கலந்து பின்னர் விதைக்க வேண்டும்.

காய்கறிப் பயிர்கள் - வேரழுகல் மற்றும் வாடல் நோய்

ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் நிலத்தில் இடவேண்டும்.

முட்டைகோசு மற்றும் காலிபிளவர் - குண்டாந்தடி வீக்க வேர் நோய்

விதை நேர்த்தி

பத்து கிராம் சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை ஒரு கிலோ விதையுடன் நன்கு கலந்து பின்னர் விதைக்கவும்.

நாற்று நனைத்தல்

சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 2.5 கிலோவை தேவையான அளவு தண்ணீரில் கலந்து, ஒரு எக்டருக்குத் தேவையான நாற்றுகளை அந்த கலவையில் குறைந்தது 30 நிமிடம் நனைத்து பின்னர் நடவேண்டும்.

வயலில் இடுதல்

ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து நடுவதற்கு முன் நிலத்தில் இடவேண்டும்.

வாழை - வாடல் மற்றும் பழ அழுகல் நோய்

வாழைக் கன்று நேர்த்தி

வாழைக் கன்றில் உள்ள வேர்களை அகற்றி, களிமண் கலவையில் நனைத்து பின்னர் அந்தக் கிழங்குகளின் மீது 10 கிராம் சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை தெளித்து நடவேண்டும்.

வயலில் இடுதல்

ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து கன்று நடுவதற்கு முன் நிலத்தில் இடவேண்டும்

பொதியுறை முறை

ஐம்பது மில்லி கிராம் சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை பொதியுறை அல்லது மருந்துறையில் நிரப்பி மூன்று மாத பயிரின் கிழங்குப் பகுதியில் 45° கோணத்தில் பொதியுறை இடுங்கருவி மூலம் துளையிட்டு பின்னர் சூடோமோனாஸ் பொதியுறையை இட்டு களிமண் கொண்டு துளையை மூடிவிட வேண்டும். இதே போன்று மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

வாழைத் தாரில் தெளித்தல்

0.5 சதவீத சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை கடைசி வாழை தார் வெளிவந்த பின்னர் தெளிக்கவும். இதே போன்று 30 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யும் வரை தெளிக்க வேண்டும்.

மாம்பழத்தில் ஆன்ந்த்ரக்னோஸ், பழ அழுகல் நோய்

0.5 சதவீத சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை காய் பிடித்து 15 நாட்கள் கழித்து தெளிக்கவும். இதே போன்று 30 நாட்களுக்கு ஒரு முறை என்ற அளவில் அறுவடை வரை தெளிக்க வேண்டும்.

கவனிக்க வேண்டியவை

சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை மற்ற பூசணக் கொல்லிகள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளுடன் கலத்தல் கூடாது.

இந்த பாக்டீரியா கலவையை தயாரித்த நான்கு மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

இந்த பாக்டீரியா கலவையைமற்ற உயிர் உரங்களுடன் கலந்து இடலாம்.

இந்த பாக்டீரியா சில பூச்சிகளை மட்டுமே கட்டுப்படுத்தும்

இது ஒரு சிக்கனமான முறை. இது பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கச் செய்கிறது.

இது விதை மற்றும் மண் மூலம் பரவும் பூசணத்தைக் கட்டுப்படுத்துகிறது.

இது பயிர்களின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்கிறது.

இது மண்ணிலுள்ள கனிம பொருட்களைப் பயன்படுத்தி பல மடங்காக பெருகி செடிகளுக்கு பாதுகாப்பை நீண்ட காலத்திற்கு தருகிறது.

இது இதர உயிரினங்களுக்கும், தோட்டத்தில் உள்ள மண்புழுக்களுக்கும் தீமை விளைவிப்பதில்லை.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்